என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, July 30, 2012

நாணயம்


(இந்த வார தினமலர்-வார மலரில் வெளியான எனது சிறுகதை)

  
நாளைக்கு பீசு கொண்டாரலைன்னா டியூசனுக்கு வர வேண்டாம்னு சார் சொல்லிட்டார்

ஏழு வயது தங்கராசு அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி வருத்தத்தோடு காலண்டரைப் பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில் அட்வான்சாக இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு எசமான் வேலைக்கு சேரும் போதே அட்வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார்.

அவள் கணவன் குடிகாரன். ஜேப்படித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாதமாகும். ஆனால் வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாகப் போகிறதில்லை. அவனுக்கும் சேர்த்து அவள் தான் செலவு செய்ய வேண்டும். ஒரே மகன் தங்கராசு படிப்பில் கொஞ்சம் மக்கு. டியூசன் போனால் நல்ல மார்க் வாங்குகிறான். போகா விட்டால் எல்லா பாடங்களிலும் நாற்பதைத் தாண்டுவதே கஷ்டம் தான். அவனாவது நன்றாகப் படித்து உருப்பட வேண்டும் என்று அவளும் படாத பாடு படுகிறாள். ஆனால் மொத்த மாதவருமானத்தில் கிட்டத்தட்ட பாதி வீட்டு வாடகைக்கே போய் விடுகிறது. மீதியில் வீட்டு செலவை சமாளிக்க இன்றைய விலைவாசி ஒத்துழைக்க மறுக்கிறது.

ஒன்றாம் தேதி தர வேண்டிய டியூசன் பீசு நூறு ரூபாயை இருபத்தைந்தாம் தேதி வரை தரா விட்டால் அந்த டியூசன் வாத்தியார் தான் என்ன செய்வார் பாவம். அவருக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதே என்றும் அருக்காணிக்குத் தோன்றியது. அவர் மேல் தப்பு சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.

“இந்தப் பாழா போன மனுசன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி ஒவ்வொண்ணுக்கும் நான் கஷ்டப்பட வேண்டியதில்லைஎன்று விரக்தியுடன் வாய் விட்டுச் சொன்னாள்.

தங்கராசு இந்தக் காலக் குழந்தைகளுக்கே உரிய சுட்டிப்புடன் அவளைக் கேட்டான். “நான் நாளைக்கு டியூசன் போகலாமா வேண்டாமா அதை சொல்லு முதல்ல

அருக்காணி பெருமூச்சு விட்டாள். வேறு வழியில்லை. அட்வான்ஸ் தர முடியாது என்று சொன்ன அந்த மூன்றாவது வீட்டுக்கார எசமானைத் தான் ஏதாவது மன்றாடி அட்வான்ஸ் பணம் வாங்கி இவனை நாளைக்கு டியூசனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இரண்டு வருஷமாய் அவர் வீட்டில் வேலை பார்க்கிறாள். இந்த ஒரு தடவையாவது அவர் உபகாரம் செய்தால் நன்றாக இருக்கும். அவரைக் காட்டிலும் அவருடைய மனைவி கொஞ்சம் நல்ல மாதிரி. ஆனால் அந்த அம்மாள் ஊரிற்குப் போயிருக்கிறாள். இப்போது போய் அந்த வீட்டில் பாத்திரம் கழுவி விட்டு வர வேண்டும். எதற்கும் பையனையும் அழைத்துக் கொண்டு போய் கேட்டுப் பார்க்கலாம், பிஞ்சு முகத்தைப் பார்த்தால் அந்த மனிதர் சிறிது இரக்கம் காண்பித்தாலும் காண்பிக்கலாம் என்று அருக்காணிக்குத் தோன்றியது.  மகனையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குக் கிளம்பினாள்.

போகும் போதே தங்கராசு கேட்டான். “அந்த ஆள் தர மாட்டேன்னு சொன்னா என்ன செய்யறது?

“சனியனே. வாயை மூடிட்டு வாடா. போறப்பவே அபசகுனமாய் பேசாதடா

அந்த வீட்டு சொந்தக்காரர் வராந்தாவில் உட்கார்ந்து அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவள் தங்கராசுவைக் கூட்டிக் கொண்டு வந்ததைப் பார்த்தவுடனேயே அவர் முகம் சுளித்தார். “உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது பையனை எல்லாம் கூட்டிகிட்டு வரக் கூடாதுன்னு

இல்லை எசமான். ஒரு ஓரமா சும்மா உக்காந்துக்குவான். குறும்பு செய்ய மாட்டான்.

வேண்டா வெறுப்பாய் அவர் தலையசைத்தார். மகனை வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்று அவனை ஒரு இடத்தில் தரையில் உட்கார வைத்தாள். சமையலறையில் இருந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் இரண்டு காபி தம்ளர்களைக் கழுவப் போட அந்த வீட்டுக்காரர் உள்ளே வந்தார். தனியாகப் பேசக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் அருக்காணி மெல்ல கேட்டாள். “எசமான். ஒரு சின்ன உதவி

“என்ன?

“அட்வான்சா ஒரு நூறு ரூவா குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும். பையனுக்கு டியூசன் பீசு தரணும்

“ஆமா உன் பையன் படிச்சு பெரிய கலெக்டர் ஆகப் போறான். டியூசன் ஒண்ணு தான் குறைச்சல். நான் முதல்லயே உன் கிட்ட சொல்லி இருக்கேன். அட்வான்சு, கடன்னு எல்லாம் என் கிட்ட கேட்கக் கூடாது, மாசம் முடியாம ஒரு நயா பைசா நான் தர மாட்டேன்னு.....அவர் நிற்காமல் சத்தமாகச் சொல்லிக் கொண்டே போய் விட்டார்.

அருக்காணிக்கு அவர் பேசினது வேதனையாக இருந்தது. இத்தனை பெரிய பங்களாவில் வசிக்கிற அந்த மனிதருக்கு மனம் தான் சிறுத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். எதிர்காலத்தின் மீதிருந்த நம்பிக்கை முழுவதும் அவளுக்கு அவள் மகனை வைத்துத் தானிருந்தது. அதனால் பணம் தராததை விட அவள் மகன் படித்து ஒன்றும் சாதித்து விடப் போவதில்லை என்கிற விதமாய் அவர் சொன்னது அவளுக்குத் தாங்கவில்லை. ஆனால் அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் பாத்திரம் கழுவி முடித்தாள்.

மகனை அழைத்துக் கொண்டு அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள். போகிற வழியில் அவள் கண்களைத் துடைத்துக் கொண்ட போது தங்கராசு கேட்டான்.

“அழறியாம்மா?

“இல்லடா. கண்ணுல தூசி

“நீ எதுக்கும்மா கவலைப்படறே. இதைப் பாத்தியா?என்ற தங்கராசு நூறு ரூபாய் தாள் ஒன்றை அவளிடம் காண்பித்தான்.

அருக்காணி திகைப்புடன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டே கேட்டாள். “இது எங்கடா கிடைச்சுது?

“அந்த வீட்டுல கீழே விழுந்து இருந்துது. அந்த ஆளுக்கு தெரியாம அதை எடுத்து ஜோபுல போட்டுகிட்டேன்

அருக்காணி அந்த இடத்திலேயே மகன் முதுகில் மாறி மாறி அடித்தாள். “இது என்ன திருட்டுப் பழக்கம்? எப்ப இருந்து ஆரம்பிச்சது? அப்பன் புத்தி அப்படியே வந்திருக்கா உனக்கு சனியனே? ஏழையா இருந்தாலும் கவுரமா பொழைக்கணும்னு தானடா இவ்வளவு கஷ்டப்படறேன். என்ன காரியம் செய்திருக்கே!

அப்படியே திரும்பி மகனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றாள். இன்னமும் அந்த வீட்டுக்காரர் அந்த நண்பரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தார். அவளைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் கேட்டார். “என்ன?

“என் மகன் தெரியாத்தனமா தப்பு செய்துட்டான் எசமான். கீழே விழுந்து கிடந்ததாம் இந்த நூறு ரூபா. அதை எடுத்து வச்சுகிட்டான்

அந்த நூறு ரூபாயை அவள் அவரிடம் நீட்டினாள். அவர் தங்கராசுவை சுட்டெரிக்கிற மாதிரி பார்த்துக் கொண்டே அந்த நூறு ரூபாய்த் தாளை வாங்கினார். உன் புருசன் பிக்பாக்கெட்டு, அதனால வேலையிலே சேர்த்துக்க வேண்டாம்னு அன்னைக்கே பல பேரு சொன்னாங்க. இன்னைக்கு உன் பையனும் அதையே செய்திருக்கான்

வார்த்தைகள் சுட்டெரிக்க அருக்காணி துடித்துப் போனாள். அதுவும் முன்பின் தெரியாத ஒரு மனிதர் முன்னால் இப்படி அவமானப்படுத்துகிறாரே என்று அழுகை அழுகையாக வநதது. “என்ன எசமான். குழந்தை ஏதோ தெரியாத்தனமா செய்ததை இப்படி சொல்றீங்க. அதான் அவனுக்குப் புத்தி சொல்லி நான் திருப்பிக் குடுத்துட்டேனில்ல.

அவர் தன் நண்பர் முன்னிலையில் அவள் அப்படிக் கேட்டதைக் கௌரவக் குறைவாக நினைத்தார். கோபத்துடன் சொன்னார். “நீயா கொண்டு வந்து தந்திருக்கலைன்னா உன் வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கும். திருட்டுத்தனம் செய்யலாமாம். நான் சொல்லக் கூடாதாம். இப்படிப்பட்ட ஆள் வேலைக்கு வேண்டாம். நாளையில் இருந்து நீ வேலைக்கு வராதே

அருக்காணி கூனிக் குறுகிப் போனாள். என்ன மனிதரிவர்? ஆனால் ஒரு வீடு இல்லையென்றால் வேலைக்கு ஆயிரம் வீடு என்று எண்ணியவளாக சொன்னாள். “சரி எசமான். நாளையில் இருந்து நான் வேலைக்கு வரலை. இந்த 25 நாள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுத்துடுங்க. போயிடறேன்

வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதைக் கேட்டு அவள் அதிர்ந்து போய் கெஞ்சிக் கூத்தாடுவாள் என்று நினைத்த அவருக்கு அவள் அதை ஏற்றுக் கொண்டு செய்த வேலைக்கு சம்பளம் கேட்பது அவர் கோபத்தை அதிகப்படுத்தியது. “முதலில் என் வீட்டுல என்ன எல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து கணக்கு போடாமல் உனக்கு நயாபைசா தர மாட்டேன்...

மனசாட்சி இல்லாமல் பேசும் அந்த மனிதரை அருக்காணி கண்கலங்க பார்த்தாள்.  அவர் அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார். அருக்காணி பக்கத்தில் இதை எல்லாம் பார்த்தபடி நின்றிருந்த அவர் நண்பரை நியாயம் கேட்கும் பாவனையில் பார்த்தாள். அவர் ஆழ்ந்த ஆலோசனையுடன் வேறெங்கோ பார்த்தார். ஏழைக்கு யாரும் துணை இல்லை என்ற எண்ணம் அவள் மனதில் மேலோங்கி நின்றது. ஓரிரு நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

திரும்பி வருகிற போது அவள் மனமெல்லாம் ரணமாக இருந்தது. தங்கராசு அழவில்லை. அவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் அவளைப் பார்த்த பார்வை ‘நீ முட்டாள்என்று குற்றம் சாட்டுவது போல தெரிந்தது. அவளுக்கு அதைத் தாங்க முடியவில்லை. அவளுடைய நாணயத்திற்குக் கிடைத்திருக்கிற மரியாதையை மட்டுமே அவள் மகன் எண்ணிப்பார்ப்பது போல் இருந்தது. மனம் வலித்தது.

சிறிது தூரம் அவர்கள் போயிருப்பார்கள். அவர்கள் பக்கம் ஒரு கார் வந்து நின்றது. பயத்துடன் அருக்காணி பார்த்தாள். அந்த வீட்டுக்காரரின் நண்பர் காரில் இருந்து இறங்கினார். அவரைப் பார்க்கவே அவளுக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்து நின்றாள்.

அவர் ஒன்றும் சொல்லாமல் தன் விசிட்டிங் கார்டை நீட்டினார். “பக்கத்து ரோட்டில புதிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்னு வந்திருக்கில்லையா. அது என்னோடது தான். அங்கே இந்த கார்டைக் கொண்டு போய் நாளைக்கு காலைல காண்பி. அப்பவே உனக்கு கண்டிப்பா நல்ல சம்பளத்துல தகுந்த வேலை போட்டுக் கொடுப்பாங்க. நான் சொல்லி வைக்கிறேன்.

அவளால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அந்தக் கார்டை வாங்கியபடியே அவரைத் திகைப்புடன் பார்த்தாள். அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மூன்று மாடிக் கட்டிடம். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அண்ணாந்து பார்த்து இருக்கிறாள். அதிலெல்லாம் ஒரு வேலை கிடைக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவர் அவளைப் பார்த்துக் கனிவாகச் சொன்னார். நாணயமான ஆள்கள் வேலைக்கு கிடைக்கிறது இப்பவெல்லாம் கஷ்டம்மா. ஒரு நல்ல ஆளைக் கண்டுபிடிக்கறதுக்கு பத்து பேரை வேலைக்கு சேர்க்க வேண்டி இருக்கு. பல ஊர்கள்ல தொழில் செய்கிற என்னோட அனுபவம் இது. பணத்தேவை இருக்கறப்பவும், எடுத்தது மகன்னும் பார்க்காமல் அந்தப் பணத்தோட திரும்பி வந்தே பாரு, உன்னை மாதிரி ஒரு வேலையாள் கிடைக்கணும்னா அது ஆயிரத்துல ஒண்ணு தேர்றது கூட கஷ்டம். நாளைக்கு கண்டிப்பா வா”.  சொன்னவர் ஒரு சில நூறு ரூபாய்களை எண்ணிப்பார்க்காமல் சட்டைப்பையில் இருந்து எடுத்து அவள் கையில் திணித்தார். “ஏதோ அவசரத் தேவைன்னு சொன்னாயே. அதுக்கு வச்சுக்கோ

அவள் கண்கலங்கி கை கூப்பி நிற்கையில் அவர் மறுபடி காரில் ஏறிப் போய் விட்டார். எதிர்பாராமல் மிக நல்ல வேலை கிடைத்ததை விட மகன் நாணயத்தை துச்சமாக நினைக்கப் போன தருணத்தில் அவர் கடவுள் போல வந்து நாணயத்திற்கு உள்ள மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது அவளுக்கு அதிக நிறைவாக இருந்தது.


-என்.கணேசன்
நன்றி: தினமலர்-வாரமலர்


24 comments:

 1. தினமலரில் படித்தேன்.. அருமை..

  ReplyDelete
 2. அருமையான சிறுகதை.
  பாராட்டுக்கள். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
  நன்றி.
  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
 3. வரதராசன்July 30, 2012 at 6:36 PM

  ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அருக்காணி மனநிலை மிக மிக யதார்த்தமாகவும், உன்னதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள் சார்.

  ReplyDelete
 4. அருமையான சிறுகதை..நன்றி!

  ReplyDelete
 5. வாரமலரிலேயே படித்து ரசித்தேன்
  அது தங்கள் படைப்புஎன அறிய
  மிக்க மகிழ்ந்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. //எதிர்பாராமல் மிக நல்ல வேலை கிடைத்ததை விட மகன் நாணயத்தை துச்சமாக நினைக்கப் போன தருணத்தில் அவர் கடவுள் போல வந்து நாணயத்திற்கு உள்ள மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது அவளுக்கு அதிக நிறைவாக இருந்தது. //

  Excellent Lines in the finish..
  Kandaswamy

  ReplyDelete
 7. நானும் வாரமலரிலேயே படித்துவிட்டேன்.
  பல லட்சம் வாசகர்கள் படிக்கிற இதழில் உங்கள் கதை வந்திருக்கிறது.
  உற்சாகத்துடன் இன்னும் எழுதுங்கள்.
  மகிழ்ச்சி. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. அருமையான கதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அருமை . நாணயத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு.

  ReplyDelete
 10. Excellent/Touching Story Super - Sridhar

  ReplyDelete
 11. அருமையான கதை. பாராட்டுக்கள்.

  நன்றி.

  ReplyDelete
 12. நல்ல கதை நல்ல முடிவு  நன்றி,
  http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 13. நாணயம் கூறும் நயமான கதை... அருமை!!! வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 14. மனதில் நெகிழ்வை ஏற்படுத்திய வாழ்வியல் கதை.. அற்புதம் !

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் கணேசன்.
  கடைசி வரி வரை எங்கே நியாயம்
  தோற்றுவிடுமோ என்று பயந்தேன்.
  நல்லவேளை கதையில் வென்றது.

  ReplyDelete
 16. very good story..........
  all the best.

  ReplyDelete
 17. Idhu ponra ungal kadhaikalai padikkum podhu en
  kankalil oriru thulikal kanneer varuvadhai ennal
  Thadukka mudivadhillai...

  Sakthi
  Tiruppur.

  ReplyDelete
 18. ////எதிர்பாராமல் மிக நல்ல வேலை கிடைத்ததை விட மகன் நாணயத்தை துச்சமாக நினைக்கப் போன தருணத்தில் அவர் கடவுள் போல வந்து நாணயத்திற்கு உள்ள மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது அவளுக்கு அதிக நிறைவாக இருந்தது. //

  வாசித்த எங்களுக்கும் :) நன்றி!

  ReplyDelete
 19. //நல்ல வேலை கிடைத்ததை விட மகன் நாணயத்தை துச்சமாக நினைக்கப் போன தருணத்தில் அவர் ”கடவுள் போல வந்து நாணயத்திற்கு உள்ள மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது” அவளுக்கு அதிக நிறைவாக இருந்தது//.

  அருமை சார் மிக்க நன்றி

  ReplyDelete
 20. very great story,,,sir,, really u doing lot of dedication for every one of human beings in this world,,,i ll pray god to give long life and blessing to u,,,, thank u,,,

  ReplyDelete
 21. Dear Mr. Ganesan
  I like this story, i read this story like real ...........
  my tears came out when i finish this story..........very nice...

  ReplyDelete