என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, February 24, 2012

தோற்கிறதா கல்விமுறை?சமீபத்திய வங்கிக் கொள்ளையில் தலைவனாக செயல்பட்டு போலீஸ் என்கவுண்டரில் இன்று இறந்து போன வினோத்குமார் என்ற இளைஞன் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களிலும் மேல் படிப்பு படித்த இளைஞர்கள் ஈடுபடுவது இன்று அன்றாடச் செய்தியாகி விட்டது. சென்ற ஆண்டு மட்டும், டெல்லி போலீஸ் மட்டும், 127 கொலை, கொள்ளைக, கடத்தல் குற்றங்களில் பட்டப்படிப்பு மற்றும் அதற்கும் மேல்பட்ட படிப்பு படித்த இளைஞர்களை குற்றவாளிகளாகக் கண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ஆசிரியை ஒருத்தியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆசிரியரின் தூண்டுதலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற குற்றச்சாட்டு எழுந்து அந்த ஆசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகளில் சர்வசகஜமாகப் போய் விட்டன.

இது போன்ற செய்திகளை எல்லாம் படிக்கையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கவலை சமூகத்தில் அக்கறை கொண்டவர்களுக்கு எழாமல் இருக்க முடியாது.

ஒரு காலத்தில் கல்வியறிவு இல்லாதவன் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட ரவுடித்தனம், கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் மெத்தப்படித்தவர்களே செய்யும் நிலை வந்து விட்டதே, என்ன காரணம்? படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவான் என்று அப்படிச் செய்வதை விதிவிலக்கு போல எண்ணி பாரதி சபித்தாரே, அந்த விதி விலக்கு இன்று சாதாரண விஷயம் போல ஆகி விட்டதே என்ன காரணம்?


தத் த்விதியம் ஜன்மா என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். அதற்கு “கல்வி என்பது இரண்டாம் பிறப்பு என்பது பொருள்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளவாக் கேடின்றால்
எம்மர் உலகத்தும் யாமறியோம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து,

என்கிறது நாலடியார்.

(இந்த ஜென்மத்தைச் சிறக்கச் செய்யும். எடுத்து, எடுத்து யார் யாருக்குத் தந்தாலும் பெருகுமே தவிர, குறையாது. நம்மை அடுத்தவருக்கு உணர்த்த உதவும். எல்லா அறியாமையையும் அறுத்து எறியும் சிறந்த மருந்து கல்வி)

இப்படிப்பட்ட பெருமை கொண்ட கல்வி இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான பதில். இன்றைய கல்வி மதிப்பெண் கல்வியாக மாறி விட்டது. வீட்டிலும் பள்ளியிலும் மதிப்பெண்களுக்கே அதீத முக்கியவத்துவம். எவ்வளவு மார்க்? எத்தனையாவது ரேங்க்?என்ற கேள்விகளுக்கான பதில்களிலேயே மாணவர்கள் அளக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான இலக்குகளுக்காகவே அவர்களை குடும்பங்களும், பள்ளிகளும் ஓட வைத்துக் கொண்டிருக்கின்றன. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் கூட இல்லை. மற்றவை கணக்கிலேயே இல்லை.  

யாருக்கும் ஒழுக்கம் ஒரு விஷயமே அல்ல. பண்பாடு, உயர்குணங்கள் எல்லாம் அடையாளம் காணப்படுவதுமில்லை, கணக்கிடப்படுவதுமில்லை. இதிலும் குடும்பங்களும், பள்ளிகளும் ஒருமித்தே குற்றவாளிகளாக நிற்கின்றன.

ஏகப்பட்ட தகவல்கள் மாணவர்கள் மூளைகளில் திணிக்கப்படுகின்றன. அதற்கான முயற்சிகள் எல்லா இடங்களிலும் எடுக்கப்படுகின்றன. அந்த மாணவ இதயங்களில் நல்ல குணங்களையும், தன்மைகளையும் பதிப்பது கல்வியில் அங்கமில்லாமல் தொலைக்கப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக தொட்டாற் சிணுங்கிகளும், சகிப்புத் தன்மையற்றவர்களும், மன அமைதி அற்றவர்களும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களும் ஆக இளைய தலைமுறையில் நிறைய பேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவர்கள் வேகமாகச் செல்லக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். பெரும் சக்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் லகான் தான் இல்லை. முறைப்படுத்தவும், சீரான முறையில் எல்லாவற்றையும் கொண்டு செல்லவும் அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதை அவர்களுக்கு சொல்லித் தராததும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தத் தவறியதும் மிகப்பெரிய தவறு. அந்தத் தவறுகளின் விளைவுகளையே நாம் எல்லா இடங்களிலும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் நாம் நாசமாய் போய் விடுவோம்!

-என்.கணேசன்
  

9 comments:

 1. அண்மையில் ஒரு ஆடோ டிரைவருடன் பேசிக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தேன். டிராஃபிக் ஜாம். என்னவென்று பார்த்தேன்.
  ஒரு குடிமகன் நல்ல போதையில் கீழே விழுந்து கிடந்தார். பக்கத்தில் ஒரு பைக். அதில் இருந்து கீழே விழுந்துவிட்டார் போல்
  இருந்தது. நல்ல படித்தவர் போல காணப்பட்டார். என்ன செய்வது !

  பலர் திட்டிக்கொண்டே சென்றனர். ஆடோ டிரைவர் சொன்னார்.... யாரைத் திட்டுவது ஸார் ?
  இன்னிக்கு கவர்ன்மென்ட் செய்யவேண்டியதை தனியார் செய்கின்றனர்.
  தனியார் செய்யவேண்டியதை கவர்ன்மென்ட் செய்கிறது.
  அதனால்தானே இத்தனை நடக்கிறது ... என்றார்.

  என்ன அது. ? என்றேன்.

  சாராயம் காய்ச்சுவது, விற்பது .. எல்லாம் தனி நபர் செய்யவேண்டியது. அதை பொதுத்துறை ஆக்கிவிட்டது அரசு.
  சிறப்பான கல்வி தரவேண்டியது அரசின் கடமை. அதை தனி நபர்களிடம் விட்டு விட்டது அரசு
  என்று ஒரு போடு போட்டார்.

  அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 2. நிலமை எப்போதோ கை நழுவி போய்விட்டது.மாற்று நடவடிக்கைகளை யோசிக்கவேண்டும்.

  ReplyDelete
 3. ஆசை ...பணம் வேண்டும் ...நான் நல்லா இருக்க வேண்டும் ...அடுத்தவன் எப்டி போன எனக்கு என்ன ? இது போன்ற மன ஓட்டம இன்று பரவலாக காணப்படுவதே இதற்கெல்லாம் காரணம் ...

  ReplyDelete
 4. வீட்டிலும் பள்ளியிலும் மதிப்பெண்களுக்கே அதீத முக்கியவத்துவம். ”எவ்வளவு மார்க்? எத்தனையாவது ரேங்க்?” என்ற கேள்விகளுக்கான பதில்களிலேயே மாணவர்கள் அளக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான இலக்குகளுக்காகவே அவர்களை குடும்பங்களும், பள்ளிகளும் ஓட வைத்துக் கொண்டிருக்கின்றன. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் கூட இல்லை. மற்றவை கணக்கிலேயே இல்லை. //

  சரியாக சொன்னீர்கள்.
  நல்ல பதிவு. காலத்துக்கு ஏற்ற பதிவு.

  யாருக்கும் ஒழுக்கம் ஒரு விஷயமே அல்ல. பண்பாடு, உயர்குணங்கள் எல்லாம் அடையாளம் காணப்படுவதுமில்லை, கணக்கிடப்படுவதுமில்லை. இதிலும் குடும்பங்களும், பள்ளிகளும் ஒருமித்தே குற்றவாளிகளாக நிற்கின்றன//

  நூற்றுக்கு நூறு உண்மை.

  ReplyDelete
 5. ஏகப்பட்ட தகவல்கள் மாணவர்கள் மூளைகளில் திணிக்கப்படுகின்றன.
  இதுவும் உண்மையே . அருமையான பகிர்வு . உணருவார்களா பெற்றோர்கள் .

  ReplyDelete
 6. சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 8. ennai porutha varai Periyavargal Periyavargalaaga Nadappathillai........Idhuvum oru kaarananm alla idhuve Ore oru kaaranam

  ReplyDelete
 9. its gd matter to share. every students is changing their attitude due to their improper environment .there is no proper thing to guide them in a gd way.

  ReplyDelete