என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Wednesday, March 16, 2011

உயர்ந்த செயலின் ரகசியம்


கீதை காட்டும் பாதை – 6

உயர்ந்த செயலின் ரகசியம்

கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.

“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்), பற்றின்றியும் யோகத்தில் உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும் செயல் புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.

தனஞ்செயா, செயல் பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது. ஆகையால் பற்றற்ற நிலையையே தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது

பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த ஆனந்த நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத் தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல் புரிய ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை என்பதும் ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் என்பது விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது. விளைவில்லாத செயல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே விளைவும் மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை. விதைத்தது அவரை என்றால் விளைவது துவரையாக முடியாது. எனவே அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற கவலையில் ஆழ்வது அர்த்தமற்றது.


ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மன ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல் திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனது ஆற்றலும், அறிவுக்கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த செயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற விடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக நிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல் செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது.

ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த செயலிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன் கலையில் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில் அவனுக்கு கிடைக்கக் கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள் இதை எப்படி விமரிசிப்பார்கள் என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது பாதிக்காமல் இருக்காது. அது ஒரு உன்னதப் படைப்பாக இருக்காது.


அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும், உபநிடதங்களும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை எல்லாம் படைத்தவர்கள் எந்த பாராட்டையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது போல தங்கள் பணிகளைச் செய்தது தான். இவை எவற்றிலும் அதைப் படைத்தவர்கள் பெயர் இல்லை. எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய முனிவர்களுக்கோ இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக வந்திருக்கின்றன என்கிற ஆத்ம திருப்தி மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய செயலுக்கும் பெரிய விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில் அவர்கள் சிரமங்கள் எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த படைப்புகள் முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு இருக்கும். எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே கும்மிருட்டு கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை எல்லாவற்றிலும் வியக்க வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள் ஒன்றிலும் கூட முன்பு குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை. (காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து மறைந்து கிடந்த அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன. பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு வந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி தள்ளியே நின்று தான் பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும் ஆசாமிகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக் குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது குறைந்து போனால் கூட அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள் செய்யப் போகிற அடுத்த செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ் கிடைப்பதற்கேற்ற படி உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே தான் பலன் மீது அதீத அக்கறை வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன் தானாக வரும் என்கிறது கீதை.


குரானில் ஒரு வாசகம் வருகிறது. “என்னுடைய ஊதியம் அல்லா ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன் தருபவன் இறைவன். இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து கணக்கை சரி செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும், விளைவையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய் கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ வெளிப்படையான அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு நிருப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச் சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக் கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து செல்லலாம் என்கிறது கீதை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும் விளக்கமாகப் பார்ப்போம்.)

தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன 18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?

பாதை நீளும்....

(தொடரும்)


என்.கணேசன்
நன்றி: விகடன்

6 comments:

 1. நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  ReplyDelete
 2. Sir,

  Excellent Clarification..........

  Thanx,

  Gangadharan.C
  Coimbatore

  ReplyDelete
 3. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 4. அருமையான பதிவு ...

  ReplyDelete
 5. திரு .கணேசன் அவர்களுக்கு வணக்கம் ,

  தங்களுடைய இந்த சீரிய பணி மிகவும் உயர்ந்தது , பாராட்டத்தக்கது .

  நல்ல கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டி நீங்கள் ஆரம்பித்து உள்ள இத்தளமானது ,
  சான்றோர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது .

  வாழ்க உமது பணி , வளர்க உமது நல்முயற்சி

  ReplyDelete