என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, March 3, 2011

வெறுப்பு என்பது விஷமாகும்!
சோதனைகள் சில சமயங்களில் தனித்து வருவதில்லை. ஒருவர் வாழ்விலேயே அவை கூட்டமாகவும், அடுக்கடுக்காகவும் தொடர்ந்து வந்து விடுகின்றன. அப்படி வருகையில் சிலர் உடைந்து போகிறார்கள், சிலர் தங்கள் சுற்றத்தின் பாசத்தையும், நட்பின் ஆழத்தையும் அளந்து பார்க்கிறார்கள், சிலர் புடம் போட்ட தங்கமாக ஜொலித்து எழுகிறார்கள். அப்படி ஜொலித்து எழுந்த ஒருவர் தான் பாலஸ்தீனிய டாக்டரான இஸ்ஸெல்டின் அப்யுலைஷ் (Izzeldin Abuelaish) என்பவர்.

திடீரென்று மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அப்யுலைஷ் வாழ்க்கை அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் வீட்டு முழு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மனைவி நான்கு மகள்கள், ஒரு மகன், இரண்டு மருமகள்களை வளர்க்கும் பொறுப்பை அவர் தலையில் போட்டு விட்டு இறந்த போது இடி விழுந்ததைப் போல அவர் உணர்ந்தார். ஆனாலும் குழந்தைகள் மேல் உயிரையே வைத்திருந்த டாக்டர் அப்யுலைஷ் அந்தப் பொறுப்பை நன்றாகவே நிறைவேற்றி வந்தார். ஆனால் நான்கே மாதங்களில், அதாவது ஜனவரி 2009ல் அவர்கள் வாழ்ந்த காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்ததில் அவருடைய மூன்று மகள்கள், ஒரு மருமகள் ஆகியோர் உயிரிழந்தனர். அவர் சிறிது நேரத்திற்கு முன் தான் அந்த மகள்களிடம் பேசி விட்டு அவர்களுடைய அறையை விட்டு வெளியே வந்திருந்தார். உயிர் தப்பிய ஒரு மகளும் தன் ஒரு கண்ணையும், இரு விரல்களையும் இழந்திருந்தாள்.

அவர் தன் உயிரில் பெரும்பகுதியையே இழந்தது போல உணர்ந்தார். அவருடைய சோகத்திற்கு எல்லை இருக்கவில்லை. அவருடைய 12 வயது மகன் ஒரு நாள் அவரை சமாதானப் படுத்தினான். தன் மூன்று சகோதரிகளும் தாயுடன் சொர்க்கத்தில் இணைந்து விட்டார்கள் என்றும் அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதை தன்னால் காண முடிகிறது என்றும் சோகப் பெருங்கடலில் ஆழ்ந்திருந்த தந்தையிடம் சொன்னான்.

மகனின் வார்த்தைகள் அவரை ஓரளவு ஆறுதலடைய வைத்தது. இறந்தவர்கள் இறைவனை அடைந்தவர்கள். அவர்களைப் பற்றி வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இருப்பவர்களைப் பற்றி யோசிக்க அவர் முடிவெடுத்தார். ஒரு மகன், ஒரு மகள், ஒரு மருமகள் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள், அவர்களை மிக நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட மறுபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அவ்வப்போது அற்பாயுசில் இறந்து போன மகள்கள் நினைவு அவரை வருத்தாமல் இல்லை.

இறந்து போன மகள்கள் நினைவாக “Daughters for Life” என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். மத்திய கிழக்கு நாடுகளில் படிக்கும் ஏழைப் பெண்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி செய்வது தான் அதன் முக்கிய நோக்கம். அந்த மத்திய கிழக்கு நாடுகளில் அவர் மகள்கள் இறக்கக் காரணமான இஸ்ரேலையும் அவர் உதவி செய்யச் சேர்த்திருந்தார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

பலரும் அவரிடம் “உங்கள் மகள்களையும் அவர்களைப் போன்ற பல்லாயிரக் கணக்கான உங்கள் பகுதி மக்களையும் கொன்று குவித்த இஸ்ரேல் மீது தங்களுக்கு வெறுப்பும் கோபமும் இல்லையா?” என்று கேட்டார்கள்.

“தவறு நடக்கும் போது கோபப் படுதல் அவசியம். ஆனால் கோபம் வெறுப்பாக மாறி விட அனுமதிப்பது சரியல்ல. ஏனென்றால் வெறுப்பு என்பது விஷத்தைப் போன்றது. யார் வெறுக்கிறார்களோ அவர்களை எரித்து விடக் கூடிய நெருப்பு அது. அது யாருக்கும் நல்லது செய்து விடுவதில்லை. நான் வெறுப்பதால் என் மகள்களை உயிரோடு மீட்டு விட முடியாது....... பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் அருகருகே வசிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்குவது எந்த நல்ல தீர்வையும் ஏற்படுத்த முடியாது.”

இப்போதும் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடி வரும் எத்தனையோ பாலஸ்தீனர்களில் அப்யுலைஷும் ஒருவர். மகள்களின் மரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் ஒரு அங்கம். அந்த விடுதலை பெறுவது தான் மகள்களின் நினைவுக்காக தான் செய்யும் ஒரு பெருஞ்செயலாக இருக்கும் என்று உறுதியாக அப்யுலைஷ் நம்புகிறார். தன் வாழ்வின் லட்சியமாகவும் அவர் அதையே தான் எண்ணுகிறார். ஆனாலும் ஒரு அரசாங்கமும், அதிகாரத்தில் இருக்கும் ஒருசிலரும் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மக்களையே குற்றம் சாட்டி வெறுக்காதிருக்கும் பக்குவம் அவருக்கு இருக்கிறது.

கடந்த ஜனவரி 23 அன்று ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது அப்யுலைஷ் தன் ஒரு மகளின் மறைவுக்கு அவளுக்குப் பழக்கமான ஒரு இஸ்ரேலியர் அனுப்பியிருந்த அஞ்சலிக் கவிதை ஒன்றைப் படிக்கையில் அழுதே விட்டார்.

மனிதர்கள் நாடு, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்தும் மனிதர்களே. இந்த மகத்தான உண்மையை அவர் மகள்கள் இறந்து இரண்டாவது ஆண்டு நினைவாக அந்த நிகழ்ச்சியில் அந்த இஸ்ரேலியரின் கவிதையை அவர் படித்த போது அந்த விழாவில் கலந்து கொண்ட, அதைப் படித்து அறிந்து கொண்ட அனைவராலும் உணர முடிந்திருக்கும். அந்த நிகழ்ச்சியில் தன் இழப்புகளையும், தன் உணர்வுகளையும், தன் நம்பிக்கைகளையும் அவர் விவரித்தார். அதையெல்லாம் கேட்டு விட்டு பலரும் கண்கலங்கினர். நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ரிச்சர்ட் சில்வர்ஸ்டீன் கூறினார். “இன்றிரவு நான் ஒரு உயர்ந்த மனிதனின் பேச்சைக் கேட்டேன். நான் நேசத்தையும், பண்பட்ட சிந்தனைகளையும் கேட்டேன். அந்த நேசம் வெறுப்பை வெல்ல வல்லது. மனித குல குற்றங்களையும் போக்க வல்லதாக அந்த நேசம் இருக்கட்டுமாக!”

வெறுப்பு என்பது குற்றங்களை மட்டுமே பட்டியல் போடுவதால் ஏற்படுவது. அப்யுலைஷ் தன் மகள்களைக் கொன்றவர்களாக இஸ்ரேலியர்களை வெறுக்க முடியவில்லை. காரணம் அவர் மகளிற்காக அஞ்சலிக் கவிதை அனுப்பி அவருடைய சோகத்தில் பங்கு கொண்ட நபரும் ஒரு இஸ்ரேலியரே. பெரும்பாலான மனிதர்கள் அவர்கள் எந்த நாடானாலும், மதமானாலும், இனமானாலும், மொழியானாலும் அமைதியையே விரும்புகின்றனர். தீமைகளைக் காண நேரும் போது வருத்தமே அடைகின்றனர். அவர்கள் தீர்மானிக்க முடியாதவர்களாகவும், சக்தி அற்றவர்களாகவும் இருக்கலாம். சக்தி வாய்ந்த தலைவர்களின் செயல்களை எதிர்த்து நிற்க சக்தியற்றவர்களாக இருக்கலாம். ஒரு சிலரின் அராஜகங்களுக்கு அவர்களை சார்ந்த சமூகத்தையே வெறுக்கத் துணிவது அறிவுடைமை அல்ல.

அப்யுலைஷின் மனப்பக்குவம் அனைவருக்கும் ஒரு பாடம். தவறுகளை எதிர்ப்பது என்பது வேறு, தவறு செய்தவர்களின் இனத்தையே வெறுப்பது என்பது வேறு என்பதை அவர் அழகாக வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறார். வெறுப்பு என்பது விஷம் தான். அதை உட்கொண்டால் அது கண்டிப்பாக நம்மை அழித்து விடும். பின் நல்லது எதுவும் நம்மிடம் மிஞ்சி விடாது. மானுடம் அன்பால் மட்டுமே காக்கப்பட முடியும், பண்படவும் முடியும்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் அந்தக் குடும்பத்தினரையே வெறுப்பது, ஒரு மதத்தவரில் சிலர் தவறு செய்தால் ஒட்டு மொத்தமாய் அந்த மதத்தினரையே வெறுப்பது, ஒரு இனத்தனவரில் சிலர் தவறு செய்தால் அந்த இனத்தவர் முழுவதும் அப்படித்தான் என்று வெறுப்பது போன்ற நியாயமும், அறிவுமற்ற முட்டாள் தனத்தை நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். அந்த வெறுப்பு விஷத்தை நம்மில் இருந்து அகற்றி நாம் நம்மையும், மானுடத்தையும் காப்பாற்றிக் கொள்வோமா?

- என்.கணேசன்

நன்றி:ஈழநேசன்

7 comments:

 1. மானுடம் அன்பால் மட்டுமே காக்கப்பட முடியும், பண்படவும் முடியும்.

  அருமை நன்றி வாழ்துகள்

  ReplyDelete
 2. வெறுப்பு, இள வயதிலேயே விதைக்கப்படுவதால்தான் தீவிரவாதிகள் உருவாகின்றனர். சிந்திக்க வைக்கும் பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 3. how to say its very great lines i will be change my thoughts immediately thanks

  ReplyDelete
 4. "வெறுப்பு என்பது குற்றங்களை மட்டுமே பட்டியல் போடுவதால் ஏற்படுவது." அற்புதமான வரிகள் இவை......... குடும்பத்தில் ஏற்படும் வெறுப்புகளில் தொடங்கி மொழிகளில், இனங்கள்,மதங்கள் வரையானவற்றில் ஏற்படும் வெறுப்பிற்க்கு இவைதான் காரணம் என்பது நிதர்சனம். அருமையானா பதிவை தந்தமைக்கு நன்றி!!!!

  ReplyDelete
 5. Your articles about any subject is very clear and easily to understand and adapt. God bless you sir

  After reading your post i feel like was doing the meditation.

  Thank you sir for your time spending on this posts.

  ReplyDelete