சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, September 16, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1

ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.




அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

15 comments:

  1. பிரமிக்க வைக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் !

    //ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள்..//
    ஆரக்கிள் ‍ ... பெயர்க்காரணம் வியப்பு !

    ReplyDelete
  3. அருமையான பதிவு. தொடரட்டும் தங்களின் பணி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  4. Good..Useful info...write more...

    ReplyDelete
  5. Migavum nandraga irukkirathu.innum Ezhuthungal.nandri.

    ReplyDelete
  6. really interesting!!

    ReplyDelete
  7. மிகவும் அருமை!!!
    தொடரட்டும் உங்கள் பணி!!!!!

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள தகவல்....உங்கள சேவை தொடர வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  9. pls make link 1 to 60 order

    ReplyDelete
  10. இரண்டாம் உதாரணத்தில், கி. மு. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிட்டு விட்டு ட்ரக்கில் சென்றார் என்பதே இந்த உதாரணம் தவறாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. மேலும் கிரெடிட் கார்டு என்பது நிச்சயமாக அந்த நாட்களில் இருந்திருக்குமா என்பது என் சந்தேகம். இதை தயவு கூர்ந்து விளக்க முடியுமா. அல்லது கால வரையறையில் ஏதாவது பிழை இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் உதாரணம் 1994 ஆம் ஆண்டு நடந்ததாகத் தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. சரியாகப் பார்க்கவும்.

      Delete
    2. Sorry that was my mistake. Realised it sooner. :)

      Delete
  11. padika thodangi irukiren...en virupamana thalaipu..nandri

    ReplyDelete