என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, September 1, 2009

இதுவும் ஒரு சேவை தான்..!


அது முடவர்களுக்குப் புகலிடம் தந்த மருத்துவமனையின் ஒரு பகுதி. பெரிய ஹாலில் கிட்டத்தட்ட இருபது முடவர்கள் படுத்திருந்தார்கள். ஒருவருக்கும் எழுந்து நடமாட முடியாது. அவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கட்டிலிலேயே கழிந்து விடும். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் அந்தக் கட்டிலில் இருந்து விடுபடுவது மரணத்தின் பிறகு மட்டுமே.

அந்த ஹாலில் ஒரே ஒரு ஜன்னல். அந்த ஜன்னல் அருகே உள்ள மேடான தளத்தில் இருக்கும் கட்டிலில் படுத்திருந்த மனிதர் மட்டுமே ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடியும். அவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியே நடப்பதை சத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்கும் போது மற்றவர்கள் வெளி உலகத்தைக் கற்பனையில் காண்பார்கள்.

தெருவில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள், தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களின் அழகு, சூரியோதயம், சூர்யாஸ்தமனத்தின் காட்சி, தெருவில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் என்று வெளியுலக வாழ்க்கையை ஜன்னல் அருகே உள்ள மனிதர் அழகாக வர்ணிப்பதை மற்றவர்கள் ரசித்துக் கேட்பார்கள். இப்படி அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

அவர்களில் ஜன்னல் அருகே இருப்பவருக்கு அடுத்து தாழ் தளத்தில் இருப்பவருக்கு ஜன்னலோரத்தில் இருப்பவரைப் பார்த்து பொறாமை. 'இவருக்கு மட்டும் கற்பனையில் அல்லாமல் நேராகவே வெளி உலகைப் பார்க்க முடிகிறதே! இந்த ஆள் செத்தால் நாம் அந்த கட்டிலுக்குப் போய் விடலாம். நமக்கும் வெளி உலகை நம் கண்ணால் பார்த்து மகிழ முடியும்' என்று மனதில் புழுங்குவார்.

அவர் ஆசைப்பட்டது போலவே ஒரு நாள் அந்த ஜன்னலருகே இருப்பவர் இறந்து போனார். அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டு அந்தக் கட்டிலுக்குப் பொறாமைக்காரர் மாற்றப்பட்டார். பொறாமைக்காரருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இனிமேல் வெளியே நடப்பதைப் பார்க்கும் பாக்கியம் அவருக்குத் தான். மிகவும் ஆர்வத்துடன் அவர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். பெரிய சுவர் ஒன்று மட்டுமே வெளியே தெரிந்தது......

சுவர் மறைப்பதால் அங்கிருந்து வெளியே நடப்பது தெரிய வாய்ப்பேயில்லை என்ற போதும் முன்பு அந்த ஜன்னல் அருகே இருந்தவர் தன் கற்பனை வளத்தால் அங்கிருந்த மற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தார்.... மற்றவர் வாழ்க்கைக்கு சுவை ஊட்டி இருந்தார்....

பலருடைய வாழ்க்கையும் அப்படி முடங்கிப் போவதுண்டு. வாழ்க்கை தேக்கமடைந்து நின்று விடுவதுண்டு. புதிதாக எதுவும் நடக்கவோ, எதிர்பார்க்கவோ முடியாத ஒரு பள்ளத்தில் வாழ்க்கை சிக்கிக் கொள்வதுண்டு. அந்த நேரங்களில் சிறிதாவது ஒரு ஆசுவாசத்தையோ, ஒரு சுவாரசியத்தையோ யாராவது தருவார்களேயானால் அதுவும் பெரிய சேவையே.

சிலர் என்றுமே பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். தங்களுடைய பிரச்சினை, மற்றவர்களுடைய பிரச்சினை, நாட்டின் பிரச்னை என்று அவர்கள் ஒரு இடத்தை விட்டுச் செல்லும் போது அங்கு ஒரு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்திச் செல்வார்கள். சிலர் நகைச்சுவையாகவும், நல்ல விஷயங்களைப் பற்றியும், சுவாரசியமான விஷயங்களைப் பற்றியும் கலகலப்பாகப் பேசி ஒரு லேசான மனநிலையை ஏற்படுத்திச் செல்வார்கள்.

எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையையும் நாம் நினைத்தால் ஓரளவாவது அழகுபடுத்த முடியும். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மனதில் நம்பிக்கையூட்ட முடியும். அவர்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் சுலபமாக்கவோ, சுவாரசியமாக்கவோ முடியும். அதற்கு நாம் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. மற்றவர்களுடைய மோசமான நிலைமையை மாற்ற நமக்கு சக்தியில்லாமல் இருக்கலாம். மற்றவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால் நாம் மனம் வைத்தால் அவர்களை சிறிது நேரமாவது அவற்றை மறக்க வைக்க முடியும். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசலாம். கலகலப்பான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இதை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அதிலிருந்து மீண்டு மேன்மையான நிலைக்கு வந்திருக்கிற கதைகளை எடுத்துச் சொல்லலாம். நல்ல மனம் இருந்தால் இன்னும் எத்தனையோ வழிகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும். அப்படி செய்ய முடிவது ஒரு மகத்தான சேவை தான்.

- என்.கணேசன்

நன்றி: விகடன்

8 comments:

 1. nalla sonneenga saar. ithu rompave thevai thaan indha kaalaththil.

  ReplyDelete
 2. //எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையையும் நாம் நினைத்தால் ஓரளவாவது அழகுபடுத்த முடியும். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மனதில் நம்பிக்கையூட்ட முடியும். அவர்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் சுலபமாக்கவோ, சுவாரசியமாக்கவோ முடியும்//

  ஒவ்வொருவரும் இதை பின்பற்றினால் நல்லது. மிக நல்ல பதிவை படித்த திருப்தி.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 3. intha sool nilaiyai thaan MGR, "nalla nalla pillaigalai nambi-intha naade irukuthu thambi" endru paadi vaithu sendraaro!
  Migavum nalla karuthu. thodarattum thanggal thondu.!!

  ReplyDelete
 4. //நாம் மனம் வைத்தால் அவர்களை சிறிது நேரமாவது அவற்றை மறக்க வைக்க முடியும். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசலாம். கலகலப்பான விஷயங்களைப் பற்றிப் பேசலாம்.//

  உண்மை! - நம்மால் முடிந்தமட்டிலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் விசயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயலவேண்டும் ! :)

  அருமையானதொரு பகிர்வு

  ReplyDelete
 5. ஆரம்பத்தில் வரும் கதையை எங்கோ படித்த ஞாபகம். அருமையான நடை கணேசன். படிப்பதற்கு நன்றாக இருந்தது.

  ReplyDelete
 6. Thanks for the Services, this too is a Service..

  ReplyDelete
 7. அருமையான பதிவுங்க கணேஷன்! மனித நேயம் இருக்குமானால் நீங்கள் சொல்லும் அந்த மகத்தான சேவையைச் செய்வது அப்படி ஒன்றும் பெரிய சிரமம் இல்லை.

  ReplyDelete