சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 6, 2007

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!


சிறு வயதிலிருந்தே நமக்கு நினைவு வைத்துக் கொள்ள சொல்லித் தருகிறார்கள். படிக்கும் பாடமாகட்டும், மற்ற விஷயங்கள் ஆகட்டும் அதிகமாய் நினைவு வைத்துக் கொள்வது எல்லோராலும் பாராட்டப்படுகிறது. துரதிர்ஷடவசமாக அதையும் விட முக்கியமான கலை ஒன்றை யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. அந்தக் கலை மதிப்பெண்கள் வாங்கித் தராதென்றாலும் மன அமைதியை அடைய வைக்கும். அது தான் மறக்கும் கலை.

நம் மனதில் நாம் சேர்த்து வைத்துள்ள நினைவுகளில் எத்தனை நினைவுகள் நம் மனதில் ரணங்களாக இருக்கின்றன. எத்தனை நினைவுகள் வரப்பிரசாதமாக இருப்பதற்கு பதிலாக சாபக்கேடாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை நினைவுபடுத்தப் படும் போதும் எப்படியெல்லாம் நாம் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம். பழைய தமிழ் திரைப்பாடல் போல "நினக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று எத்தனை முறை நமக்குள்ளே கேட்டு நொந்திருக்கிறோம்? அப்படி நிறையவே நம் மனதில் சேர்த்து வைத்துள்ளோம். கடலளவு பலரும் சேர்த்து வைத்திருக்கிறோம். அலைகளாய் ஓயாமல் எழுந்து அவை நம்மை அழுத்துகின்றன. கடந்ததெல்லாம் பழங்கதை ஆகாமல் நம்மை நிகழ் காலத்திலும் வாழ விடாமல் செய்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை அடுத்தவர்கள் நமக்குச் செய்த துரோகங்களாகவும், அவர்கள் நம்மை இழிவு படுத்திய நிகழ்ச்சிகளாகவுமாக இருக்கின்றன. பிரபல ஆங்கில எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்: "நம் எதிரிகளை நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறோம். அவர்களால் நாம் நம் தூக்கத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறோம். அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றித் தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் நிஜமாகவே அவர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது". அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

நமக்கு இழைக்கப்படும் நன்மைகளை நாம் தண்ணீரில் எழுதுகிறோம். தீமைகளையோ கல்லில் செதுக்குகிறோம். நண்பர்களை விட நம் நினைவுகளை எதிரிகளே அதிகமாக ஆக்கிரமிக்கிறார்கள். இதை நாம் உணர்வதாகவே தெரிவதில்லை. ஒரு நாளில் எத்தனையோ இதமான சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கலாம். ஆனால் யாரோ ஒருவர் சொன்ன சுடுசொல் எல்லாவற்றையும் மறக்க வைத்து அன்று முழுவதும் நம் மனதில் தனி ஆவர்த்தனம் செய்கிறது. அந்த நபரைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் பின் எப்போதும் அந்த ந்¢னைவு வந்து மனம் கொதித்து அமைதி இழக்கிறோம்.

ஒன்றை நாம் என்றும் மறந்து விடலாகாது. ஒவ்வொரு மனிதனின் தவறான குணாதிசயங்களும், நடத்தைகளும் அறியாமையால் அல்லது தவறான அறிவால் தான் ஏற்படுகின்றன. வளர்த்த விதம், அமைந்த வாழ்க்கை, சூழ்நிலைகள், சேர்க்கை, விதி என்று பலதும் ஒருவன் எண்ணங்களையும், குண நலன்களையும், நடத்தைகளையும் ந்¢ர்ணயிக்கின்றன. இறைவன் தந்த ஆறாவது அறிவை முறையாகப் பயன்படுத்தினால் இவற்றின் தாக்கங்களையும் மீறி ஓருவன் பண்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் எத்தனை பேர் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்கள்? அதைப் பயன்படுத்தாதவன், அடுத்தவர்களைப் புண்படுத்துபவன், 'இன்னாத சொற்களைக்' கூறுபவன், ஏமாற்றுபவன் அவனது 'கர்மா'வின் பலனைக் கண்டிப்பாக அனுபவிப்பான். ஆகவே அவனுக்காக அனுதாபப் பட வேண்டுமேயொழிய தொடர்ந்து வெறுப்பதும், உள்ளே கொதிப்பதும் அறிவிற்கு உகந்ததல்ல.

கைகேயியின் செயலால் வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் சொல்லும் சமாதானத்தை கம்பன் அழகாகக் கூறுவான்:

"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

விதியின் செயல் என்று உணர்ந்ததால் இராமன் அமைதியடைய முடிந்தது. பதினான்கு வருட வனவாசத்திற்கு கைகேயி காரணமாகி அதன் விளைவுகளில் ஒன்றாய் சீதையை இழந்து பெரும் வேதனை அடைந்த போதும் ஒரு முறையாவது இராமன் "எல்லாம் இந்தக் கைகேயியால் வந்தது" என்று ஒரு முறை கூட மனதளவிலும் நினைத்ததாய் இராமாயணத்தில் செய்தி இல்லை.

சிலர் நம்மிடம் மிக நன்றாகப் பழகியிருப்பார்கள். ஏதோ ஒரு சிறு மனஸ்தாபம் அவர்களுடன் ஏற்பட்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்க நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. எத்தனையோ நல்லது உள்ள இடத்தில் ஓரிரு குறைகள் இருப்பது பெரிய குற்றமல்ல. நம்மிடம் குறைகள் இல்லையா? குறைகளே இல்லாத அந்த தனிப்பெரும் தன்மை இறைவனைத் தவிர யாரிடம் இருக்கிறது? திருவள்ளுவர் கூறுவார்-

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்"

இராமன் செய்தான், திருவள்ளுவர் சொன்னார் என்பதற்காக மறக்கவும் மன்னிக்கவும் கூறவில்லை. நம் நிம்மதிக்காக, மன அமைதிக்காக மன்னித்து மறப்பது உத்தமம். குறுகிய வாழ்க்கையில் நாம் சாதிக்கவும், சந்தோஷப்படவும் வேண்டுமானால் இறந்த காலம் என்ற பிணத்தை நம்முடன் கட்டிக் கொண்டு அலைவது முட்டாள்தனம். இறந்ததைப் புதையுங்கள். கட்டிக் கொண்டு காலம் முழுவதும் புலம்பாதீர்கள்.

கால்குலேட்டர் உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்னர் அதை அழித்து விட்டு பின்பு அடுத்த கணக்கு போட்டால் தான் சரியான விடை கிடைக்கும். அதைச் செய்யாமல் தொடர்ந்து கணக்கு போட்டுக் கொண்டே போனால் தவறான விடை தான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். நிகழ்காலத்தில் கவனமாக வாழுங்கள். அதை விட்டு பழைய கவலைகளில் நிகழ்காலத்தை கோட்டை விட்டால் இந்த நிகழ்காலத்திற்கும் சேர்த்து எதிர்காலத்தில் வருந்த வேண்டி இருக்கும்.

சிலர் மறக்க என்று மதுவையும் போதைப் பழக்கத்தையும் நாடுகிறார்கள். இதை விட முட்டாள்தனம் வேறிருக்க முடியாது. தற்காலிகமாக நிம்மதி கிடைக்கிற மாதிரி தோன்றினாலும், இது நம்மை பரிபூரணமாக அழித்து விடும். கவலையை மறக்க போதையை நாடுபவன் பின்பு போதையை மறக்க படாத பாடு பட நேரிடும்.

ரமண மகரிஷியும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சரியான பூரணமான சிந்தனையால் (விசாரம்), இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள். அரைகுறை ஆராய்ச்சியும் அலசலும் தான் சிலவற்றை மனதிலிருந்து முழுவதுமாகக் களையத் தடையாக இருக்கின்றன. முழுவதுமாய் சிந்தித்து உண்மையை உணர முடிந்தால், அந்த உண்மையே ஒருவனை விடுவிக்கும் என்கிறார்கள். அரவிந்தாஸ்ரமத்து அன்னை இன்னொரு வழி சொல்கிறார். "தேவையற்ற மறக்கப் பட வேண்டிய ஒரு எண்ணம் அடிக்கடி உங்களை தொந்தரவு செய்யுமானால் அதை முழுமையாக கவனமாக உணர்வு பூர்வமாக ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின்பு 'சரி மனமே நீ சொல்வதெல்லாம் சொல்லியாகி விட்டது. உன் வேலை முடிந்தது' என எண்ணி அக்காகிதத்தை கவனத்துடனும், உறுதியுடனும் எடுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போடுங்கள். அந்த எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள்".

தியானமும், பிரார்த்தனையும் பல வேதனைகளை மறக்க மருந்தாக இருக்கின்றன. எல்லா பாரத்தையும் அந்த இறைவனிடம் இறக்கி வையுங்கள். காலமும், கடவுள் அருளும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மறக்கும் பக்குவத்தை அளிக்க உதவும்.

வாழ்வில் நல்ல குறிக்கோள் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தால், அதை அடைய வேண்டும் என்ற உள்ளே ஒரு அக்னி இருந்தால் எல்லாவற்றையும் மறந்து உற்சாகத்தோடு வாழ்க்கையைத் தொடர முடியும்.

குறைகளும் நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிது படுத்துகிறோமோ அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன. வாழ்வது ஒரு முறை. அது குறைகளின் கணக்கெடுப்பாக இருக்க வேண்டாம். கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம். நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்.

-என்.கணேசன்

5 comments:

  1. வாழ்வில் (சூழ்நிலைகள் காரணமாக) தவறாக எடுத்த முடிவுகளை மறக்க முடியவில்லையே கணேஷன் sir! வருத்தம் தானே மிஞ்சி இருக்கிறது !

    ReplyDelete
  2. தவறே செய்திருக்கக் கூடாது என்று நினைப்பது கடந்த காலத்தை மாற்றச் சொல்வது போல. அந்த சக்தி கடவுளுக்குக் கூட கிடையாது. எனவே தவறுகளைப் பாடங்களாகக் கொண்டு இனி செய்யக் கூடாது என்று முடிவெடுத்து அதை செயல்படுத்துவதே அறிவு.

    ReplyDelete
  3. "நினக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று எத்தனை முறை நமக்குள்ளே கேட்டு நொந்திருக்கிறோம்?

    நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்.

    அருமையான கவுன்சிலிங்... பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete