என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Wednesday, October 10, 2007

காதல் என்பது காத்திருப்பது!

"ஐயா, இதுக்கு முன்னால் கோயமுத்தூர் வந்திருக்கீங்களா?"

புரோக்கர் பொன்னுசாமி ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டான். நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து கிளம்பியது முதல், காரில் தன்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்த அந்த பெரிய மனிதரின் மௌனம் அவனுக்கு என்னவோ போலிருந்தது.

"நான் நாற்பது வருஷத்திற்கு முன் இங்கே ஒரு மில்லில் மூன்று வருஷம் வேலை பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இப்ப தான் வர்றேன்". ரகுவரன் ஒரு கணம் தாமதித்து பதில் சொன்னார்.

"அப்படீங்களா? இப்ப ஊரு எப்படி மாறிடுச்சு பார்த்தீங்களா? அப்ப எந்த ஏரியாவில் குடியிருந்தீங்க?"

ரகுவரன் பதில் சொல்லவில்லை. அவனது கேள்வி காதில் விழாதது போல் இருந்து விட்டார். ஒரு பதில் இன்னொரு கேள்வியை உருவாக்கும். இப்படி சங்கிலித் தொடராக அவனுடன் பேசும் மனநிலையில் அவர் இல்லை.

சிறிது நேரம் அவரது பதிலை எதிர்பார்த்த பொன்னுசாமி பின்பு தானும் மௌனமாகி விட்டான்.

ஆனால் அவனது கேள்வி அவர் வாழ்வின் வசந்த கால நினைவுகளை மனதில் கிளப்பி விட்டது. இன்று பம்பாயில் கோடிக்கணக்கில் சொத்தும் பல விலை உயர்ந்த கார்களும், பங்களாக்களும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த நகர வீதிகளில் ஒரு பழைய சைக்கிளில் அவர் வலம் வந்த காலம் அது. சில சமயங்களில் அவர் தோளைப் பிடித்துக் கொண்டு ஒரு அழகான பெண் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருப்பாள். அந்தப் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு சுகம் இருந்தது. அவளை அவர் உயிருக்கு உயிராக அன்று காதலித்தார். அவளது தந்தையின் வீட்டில் தான் ஒரு போர்ஷனில் குடியிருந்தார். அவளும் அவர் மீது உயிரையே வைத்து இருந்தாள்.

அந்த மூன்று வருடங்களில் அவர் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரது முதல் கவிதை ஒரு பத்திரிக்கையில் பிரசுரமான போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"காணாத போது
காணாமல் போவது
காதல் அல்ல.
காதல் என்பது
காத்திருப்பது"


"உங்களால் எப்படி இவ்வளவு அழகாக கவிதை எழுத முடிகிறது" என்று ஒரு முறை அதிசயித்து கேட்டாள்.

"நீ என்னுடன் இருக்கையில் கவிதை தானாய் வருகிறது" என்று புன்னகையுடன் அவர் பதில் சொன்னார். அது உண்மை தான். அவளைப் பிரிந்த பிறகு அவர் கவிதை எழுதியதில்லை.

அவர் வேறு ஒரு நல்ல வேலை கிடைத்து பம்பாயிற்குப் பயணமான தினம் அவள் கண்ணீரோடு சொன்னாள். "நீங்க கண்டிப்பாய் வருவீங்க இல்லையா? நான் உங்களுக்காக இங்க காத்துகிட்டு இருப்பேன்"

அவரும் போகும் போது திரும்ப வந்து அவளை அவள் தந்தையிடம் பெண் கேட்கும் எண்ணத்துடன் தான் போனார். ஆனால் பம்பாயில் நிறைய பணத்துடன் தன் மகளையும் அவருக்குத் திருமணம் செய்து தர ஒரு பணக்காரர் முன் வந்த போது இது போன்ற சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்று அவரது பெற்றோர் புத்திமதி சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் தன் காதலைச் சொல்லி மறுத்தார். ஆனால் அவரது தந்தை "பிராக்டிகல்" ஆக இருக்கும் படி புத்திமதி சொன்னார்.

"பிராக்டிகல்" ஆக யோசித்ததில் காதல் கரைய ஆரம்பித்தது. அந்தப் பணக்காரப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மாமனார் தந்த பணத்தை முதலீடு செய்து ஆரம்பித்த வியாபாரம் பல மடங்கு இலாபத்தைத் தந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வாழ்க்கையில் தேடிய பணம் கிடைத்தவுடன் காதலும், கவிதைகளும் பழங்கதை ஆகின. எப்போதாவது சில சமயங்களில் பழையவை நினைவுக்கு வரும். வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்களின் இனிமை பின்பு எப்போதும் இருந்ததில்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தும். அதெல்லாம் சில நிமிடங்கள் தான். பின்பு பழையபடி "பிராக்டிகல்" ஆவார். எல்லாமே சௌகரியமாக மறந்து போகும்.

வியாபார நண்பர் ஒருவரின் மகன் திருமணம் கோயமுத்தூரில் நடக்கவே அதற்கு அவர் வர வேண்டியதாயிற்று. அப்போது தான் அங்கு ஒரு இடம் வாங்கி ஒரு வீடு கட்டினால் என்ன என்று தோன்றியது. சாதாரண மில் தொழிலாளியாக இருந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டிப் பார்க்க மனம் திடீரென்று ஆசைப் பட்டது. அதுவும் தான் முன்பு குடியிருந்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் இடம் கிடைத்தால் பரவாயில்லை என்று பேச்சு வாக்கில் நண்பரிடம் சொல்ல, அவர் புரோக்கரிடம் சொல்ல, அதன் விளைவு தான் புரோக்கருடன் இந்த பயணம்.

இப்போது ஏனோ மனம் காதலியை நினைத்துப் பார்த்தது. அவளும் இப்போது பேரன் பேத்திகள் எடுத்து எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று தோன்றியது. தன்னைப் போல் அவளும் எப்போதாவது நினைத்துப் பார்ப்பாளோ?

"நாம பார்க்கப் போற இடம் பத்து சென்ட். பழைய ரெண்டு போர்ஷன் இருக்குங்க. வீட்டுக்காரர் தன் மகள் கல்யாண செலவுக்காக தான் விற்கிறார்ங்க. கல்யாணம் அடுத்த மாசம்ங்க. அதனால் விலையைக் கொஞ்சம் குறைச்சு பேரம் பேசலாங்க. ஒத்துக்குவார்ங்க"

மௌனம் புரோக்கர் பொன்னுசாமிக்குத் தாங்க முடியாத சித்திரவதையாக இருக்கும் போலிருக்கிறது அன்று ரகுவரன் எண்ணியபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தார். ஊரும் அவரைப் போலவே நிறையவே மாறியிருந்தது.

அவரிடம் பதில் வராவிட்டாலும் பொன்னுசாமி பேசிக் கொண்டு போனான். "வீட்டுக்காரர் திருநள்ளாறு போயிருக்கிறார். வீடு பார்க்க ஒன்றுமில்லைங்க. அது மகா பழசுங்க. அதை இடிச்சு தானே கட்டப் போறீங்க....ஆ...டிரைவர் நிறுத்துப்பா. இந்த இடம் தான்"

ரகுவரன் ஒரு கணம் சிலையானார். பொன்னுசாமி காண்பித்த இடம் அவர் ஒரு காலத்தில் வசித்த அதே வீடு. சுற்றும் முற்றும் பங்களாக்கள் இருந்த அந்தப் பகுதியில், இரண்டு போர்ஷன்கள் கொண்ட அந்த ஓட்டு வீடு மாத்திரம் மாறாமல் அப்படியே இருந்தது. விதி என்பது இது தானோ? தன்னை சுதாரித்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினார். பக்கத்து போர்ஷன் பூட்டி இருந்தாலும் அவர் இருந்த போர்ஷன் வீடு பூட்டப் படாமல் இருந்தது.

"இந்த வீட்டில் யார் இருக்காங்க பொன்னுசாமி"

"அந்த வீட்டுக்காரரோட அக்கா இருக்கு. அது பைத்தியமுங்க. அதனால தான் அதை விட்டுட்டு அவங்க போயிருக்காங்க"

"எனக்கு இந்த வீட்டுக்குள்ள போய் பார்க்கணுமே"

பொன்னுசாமி பதறினான். "ஐயோ வேண்டாங்க. அந்தப் பைத்தியம் இருக்கிற இடம் ரொம்ப மோசமாய் தான் இருக்கும். எப்படியும் இடிச்சு தள்ளிட்டு தானே கட்டப் போறீங்க. பார்க்க என்னங்க இருக்கு?"

"பரவாயில்லை. நான் பார்க்கணும்"

தர்மசங்கடத்துன் பொன்னுசாமி அவரைப் பார்த்தான். "சரி வாங்க பார்க்கலாம்"

ரகுவரன் கதவைத் தட்டினார். ஆனால் திறந்தே இருந்ததால் கதவு மெள்ள திறந்து கொண்டது. ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. உள்ளே போகலாமா என்று பொன்னுசாமியை அவர் பார்வையாலேயே கேட்டார்.

பொன்னுசாமி பரிதாபமாய் எச்சிலை விழுங்கினான். " இது வரைக்கும் வீட்டுக்கு வெள்ளை அடிக்க வந்தவங்களை எல்லாம் அந்தப் பைத்தியம் விளக்குமாறால அடிச்சுத் துரத்தி இருக்கு. அதோட தம்பி, அதான் வீட்டுக்காரர், அவர் கூட அதிகம் உள்ளே போக மாட்டாருங்க. எனக்குப் பெரிய பெரிய ரௌடிகளைப் பார்த்தா கூட பயமில்லை. ஆனா பைத்தியம்னா கொஞ்சம் திகில் தானுங்க.... என்ன செய்யும் ஏது செய்யும்னு சொல்ல முடியாதுங்களே..."

"சரி நானே போறேன். நீ இங்கேயே இரு"

ஒரு கணம் யோசித்து விட்டு அதுவே நல்லது என்ற முடிவுக்கு பொன்னுசாமி வந்தான். கோட்டு சூட்டுடன் உள்ளே போகும் இந்த பெரிய மனிதர் எந்த நிலையில் வெளியே வரப் போகிறாரோ, மாற்று உடை இருக்கிறதோ இல்லையோ என்ற கவலையுடன் உள்ளே போகும் அவரைப் பார்த்தபடி வெளியே சற்று தள்ளியே நின்றான். ஒரு வேளை அவர் ஓடி வந்தால் தன் மீது மோதி விடக் கூடாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது.

நெஞ்சு படபடக்க உள்ளே நுழைந்த ரகுவரன் தான் நாற்பது வருடங்கள் பின்னுக்கு வந்து விட்டதைப் போல உணர்ந்தார். அந்த வீடு அவர் விட்டுப் போனபடியே இருந்தது. 1964 வருடத்திய காலண்டர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் உபயோகப்படுத்தி வந்த நாற்காலி அறையில் நடு நாயகமாய் வைக்கப்பட்டிருந்தது. அவரது கவிதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளும், அவரது பழைய டைரி ஒன்றும் அந்த நாற்காலி மீதிருந்தன. சுவரின் ஒரு பகுதியில் அவர் எழுதியிருந்த பால் கணக்கு கூட மங்கலாகத் தெரிந்தது. 1964ல் இருந்து காலம் அந்த அறையில் ஸ்தம்பித்து விட்டது போல் அவருக்குத் தோன்றியது.

"யாரது?"

சமையலறையில் இருந்து ஒரு குரல் பலவீனமாய் கேட்டது. உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த அவர் குரல் வந்த திசையைத் திகைப்புடன் பார்த்தார். சமையலறையிலிருந்து ஒரு கிழவி மெள்ள வந்தாள்.

"யாரது?" அவள் மறுபடி கேட்டாள்.

அவர் முன்பு நினைத்தது பொய். காலம் அங்கே ஸ்தம்பித்து நிற்கவில்லை. அவர் காதலியை காலம் சின்னா பின்னப்படுத்தி இருந்தது. அடையாளமே தெரியாதபடி அவள் உருக்குலைந்து போயிருந்தாள்.

"வசந்தா" ரகுவரன் அழைத்தார். ஆனால் அவள் அவரை அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

"நான் ரகுவரன்.."

"ஆமாம். அது தான் அவர் பெயர். அவர் இன்னும் வரலையே"

"நான் யார்னு தெரியலையா வசந்தா?" என்று சத்தமாகக் கேட்டார். அவளுக்குக் காது கேட்கவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

"சத்தம் போடக் கூடாது. அவர் கவிதை எழுதிட்டு இருக்கார். கவிதை எழுதும் போது சத்தம் போட்டால் அவருக்குப் பிடிக்காது. அவர் வர்ற வரை இந்தப் பத்திரிக்கை படிங்க. இதில் இருபதாம் பக்கம் அவர் எழுதின கவிதை இருக்கு. முதல் பரிசு வாங்கின கவிதை" என்று சொல்லி அந்த நாற்காலியில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தாள்.

கைகள் நடுங்க அந்தப் பத்திரிக்கையைப் பிரித்தார். இருபதாம் பக்கம் அவர் படத்துடன் அந்த முதல் பரிசுக் கவிதை பிரசுரமாகி இருந்தது.

விடை இல்லாத கணக்கு


ஒன்றான இரண்டிலிருந்து
மீண்டும் ஒன்று போனால்
மீதம் இருப்பதென்ன என்றேன்.
பூஜ்ஜியம் என்றும் ஒன்று என்றும்
புரியாமல் சொல்கிறார்கள்.
மீதமிருந்து சிதறும் இதயம்
எத்தனை துகளாய் உடையும் என்று
எவரால் தான் சொல்ல முடியும்?


படிக்கையில் அவர் கண்கள் கலங்கின. கவிஞனாக எழுதியதன் உண்மையை மனிதனாய் நேரில் உணர்கையில் ஏற்பட்ட துயரம் அது.

"உன்னை இங்கே நான் எதிர்பார்க்கலை வசந்தா. நான் இந்த இடத்தை விலைக்கு வாங்க தான் வந்தேன்..."

அவள் கண்கள் கலங்கின. "சார், இது அவர் வாழ்ந்த வீடு. அவர் வர்றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார். கண்டிப்பாய் வருவார். உங்களுக்கு விலை கொடுத்து வாங்க ஆயிரம் வீடு கிடைக்கும். தயவு செய்து இந்த வீட்டை விட்டுடுங்களேன். ஒரு நாள் அவர் வர்றப்ப நான் இல்லாமல் போயிட்டா அவர் துடிச்சுப் போயிடுவார், அவரோட அந்தக் கவிதையில் சொன்ன மாதிரி. சார், நீங்க யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா? நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?"

ரகுவரன் உடைந்து போனார். இதயம் ரணமாகி ரத்தம் கசிந்தது. தன்னை விடப் பெரிய பாதகன் இந்த உலகில் இருப்பானா என்று சந்தேகப் பட்டார். கைகளைக் கூப்பி கனத்த மனத்துடன் குரல் கரகரக்க சொன்னார். "பிராக்டிகல் என்று ஒரு இங்கிலீஷ் வார்த்தை சொன்னாங்க வசந்தா. நான் விலை போயிட்டேன். இப்ப என் கிட்டே என்னைத் தவிர எல்லாமே இருக்கு. உனக்கு நான் செஞ்ச துரோகத்திற்கு இது தான் நான் கண்ட பலன். என்னை மன்னிச்சசுடு வசந்தா"

அவரது வார்த்தைகள் அவளைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அவள் அவரது டைரியைக் கையில் எடுத்துத் தடவியபடி ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கியது போல் தெரிந்தது. நிமிடத்திற்கு நிமிடம் மனதில் கனம் அதிகரிக்க அவளைப் பார்த்தபடி ரகுவரன் சிலையாக நிறைய நேரம் நின்றார். அவள் அவர் இருப்பதையே மறந்து விட்டதாகத் தோன்றியது.

அவர் வெளியே வந்த போது பொன்னுசாமி காரில் சாய்ந்தபடி டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்தவுடன் ஓடி வந்தான்.

"வாங்கய்யா. நல்ல வேளை அந்தப் பைத்தியம் உங்களை ஒன்றும் செய்யலை" அவன் நிஜமாகவே சந்தோஷப் பட்டான்.

காரில் திரும்பிப் போகும் போது சொன்னான். "கிரயமான அடுத்த நிமிஷமே அந்தப் பைத்தியத்தைக் கூட்டிட்டு போயிடுவாங்க. வீடு காலி செய்யறதுல உங்களுக்குப் பிரச்னையே இருக்காது"

ரகுவரன் உடைந்த குரலில் உறுதியாகச் சொன்னார். "இந்த இடத்தை அவங்க சொல்ற விலை கொடுத்து முடிச்சுடலாம் பொன்னுசாமி. ஆனா அந்த வீட்டை அந்தம்மா காலி செய்ய வேண்டாம். அவங்க காலம் முடியற வரைக்கும் அங்கேயே இருக்கட்டும். புரிஞ்சுதா பொன்னுசாமி"

"புரிஞ்சுதுங்கய்யா" என்று வாயளவில் சொன்னாலும் பொன்னுசாமிக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. கிடைக்கப் போகும் கமிஷனைக் கணக்குப் போட ஆரம்பித்ததால் அவன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

-என்.கணேசன்


நன்றி: நிலாச்சாரல்.காம்

13 comments:

 1. ரொம்ப பீல் பண்ண வெச்சிட்டீங்களே!!

  நல்லா இருந்தது கதை.

  ReplyDelete
 2. greatttttttttttttttttttttt i also will wait???

  ReplyDelete
 3. Idhu kadhayalla oru unmayin kanneer

  ReplyDelete
 4. கண் கலங்க வைத்த அருமையான கதை

  ReplyDelete
 5. A touching story. Thanks

  ReplyDelete
 6. எல்லாமே சௌகரியமாக மறந்து போகும்

  ReplyDelete
 7. கவிஞனாக எழுதியதன் உண்மையை மனிதனாய் நேரில் உணர்கையில் ஏற்பட்ட துயரம் அது. Damn good lines

  ReplyDelete
 8. heart touching....

  ReplyDelete
 9. there are rare people who still live like this even now...

  ReplyDelete
 10. I don't know but your love stories always effects me a lot.

  ReplyDelete
 11. இதயம் கனக்கிறது

  ReplyDelete
 12. neengal en oru muzhu neela kathal kathai ezhutha koodathu enaku ungalathu ithara nedunthodargal migavum pidithamanavai athe pondru neengal oru kathal nedunthodar ezhutha vendum ungal variyil kathalai kana avalaga ullen

  vanakathudan
  sathish

  ReplyDelete