என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, October 5, 2007

நாம் வாழ மறக்கிறோமா?


பள்ளியில் படிக்கையில் கல்லூரி வாழ்க்கைக்கு ஏங்குகிறோம். கல்லூரி வாழ்க்கையில் ஒரு நல்ல வேலை கிடைத்து 'செட்டில்' ஆக ஆசைப் படுகிறோம். வேலை கிடைத்ததும் பதவி உயர்வுக்கோ, அதிக சம்பளம் கிடைக்கும் இன்னொரு வேலைக்கோ அவசரப்படுகிறோம். அப்படிக் கிடைத்தவுடன் நல்ல வாழ்க்கைத் துணையைத் தேட ஆரம்பிக்கிறோம். திருமணம் முடிந்தவுடன் பேரன் பேத்திக்காக நம் பெற்றோர் அவசரப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் எப்போது அவர்கள் பள்ளிக்கூடம் போவார்கள் என்று ஆகி விடுகிறது. அவர்கள் படிப்பு ஆரம்பித்தவுடன் அவர்களது அடுத்தடுத்த கட்டங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டே போகிறோம். நம்முடைய வேலையின் சுமையோ எப்போது இதிலிருந்து ஓய்வு பெறுவோம் என்று நம்மை ஏங்க வைக்கிறது. வேலையில் இருந்தும் ஓய்வு பெற்ற பின் உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படும் முன் கொண்டு போய் விடு என்பது தான் கடவுளிடம் நாம் கேட்கும் பிரார்த்தனையாக இருக்கிறது.

இது தான் நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கை வரலாறாக இருக்கிறது. இன்றைய சமூகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே இப்படி எந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால் நம்மிடம் எந்தத் தவறும் இருப்பதாக நமக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால் உண்மையில் நாம் வாழ்க்கை முழுவதும் ஓடும் இந்த ஓட்டத்தில் நாம் வாழ மறந்து விடுகிறோம். அந்தந்த காலத்தில் அந்தந்த அனுபவங்களின் அருமையை நாம் உணரத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த கட்டத்திலிருந்து வாழ ஆரம்பிப்போம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அடுத்த கட்டத்தில் நாம் அடியெடுத்து வைக்கும் போது அதற்கடுத்த கட்டத்தைப் பற்றிய எண்ணங்கள் நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்து விடுகிறது. மரணம் வரை வாழ்க்கை நமக்குப் பிடி கொடுக்காமலேயே போய் விடுகிறது.

இதற்கான ஒரே காரணம் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் மட்டும் தான் என்றும் சொல்லி விட முடியாது. கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களும் கூட இந்த சதியை நம் வாழ்வில் செய்கின்றன. இப்படி ஏன் ஆயிற்று, அப்படி ஏன் நடந்து கொண்டார்கள் என்று புலம்பிக் கொண்டு பல சமயங்களில் நம் வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்கிறோம். கடந்த காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி கடவுளுக்கே இல்லாத போது நாம் இது போன்ற வருத்தங்களில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் விரயமே அல்லவா? உண்மையில் கடந்த காலம் என்பது நாம் சுமக்கத் தேவையில்லாத மிகப் பெரிய சுமையே. அதை சுமந்து கொண்டே அலைபவன் நிகழ்காலத்தைப் பாழடித்து எதிர்காலத்தையும் கோட்டை விடுகிறான். எனவே நாம் அதை இறக்கி வைத்து விட்டு வாழ்வது நல்லது.

நிகழ்காலம் என்ற நிஜம் எதிர்காலக் கனவுகளாலும், கடந்த காலக் கவலைகளாலும் நிரப்பப்பட்டு நம்மால் வாழ மறுக்கப்படுகிறது. வாழ்வில் எப்போதும் நிகழ்காலம் மட்டுமே நம் கைவசம் இருப்பது என்பதை என்றும் நாம் மறந்து விடக் கூடாது. எதிர்காலத்திற்காக திட்டமிடுவதும், கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வதும் மட்டுமே முக்கியம். அதைச் செய்து முடித்தபின் எதிர் காலத்தையும், இறந்த காலத்தையும் நம் கவனத்தில் இருந்து அகற்றி விட்டு நிகழ்காலத்தில் முழுமையாக கவனம் செலுத்துவதே அறிவு. நிகழ்காலம் நன்றாக வாழப்படும் போது, இறந்தகாலத் தவறுகள் திருத்தப்படுகின்றன, எதிர்கால வெற்றிகள் உறுதியாகின்றன.

நாம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம், உடலில் உயிர் இருக்கிறது என்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமல்ல. வாழ்க்கையில் உயிர் இருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நாம் நூறு சதவீதம் பங்கெடுத்துக் கொண்டு வாழ்கிறோமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஏனென்றால் நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் நாம் எந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பங்கேற்காமலேயே நம்முள் உள்ள ரோபோ (Robot) அந்த சமயங்களில் நம் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. பயிற்சி பெற்றுப் பழகிய பின் நீச்சல், வாகனங்கள் ஓட்டுதல் முதலிய செயல்களை இந்த ரோபோ செய்யும் போது அது நமக்கு வரப்பிரசாதம். ஆனால் அதே ரோபோ நாம் அனுபவித்துச் செய்ய வேண்டிய செயல்களைத் தானே செய்யத் துவங்கினால் அது உண்மையில் சாபக்கேடே. துரதிஷ்டவசமாக இப்படி எத்தனையோ நாம் முழுமையாகப் பங்கெடுத்துச் செய்ய வேண்டிய செயல்களையும் அந்த ரோபோவிடம் ஒப்படைத்து விடுகிறோம். அது நம் வேலையைச் செய்யும் போது நாம் நடந்ததிலும், நடக்க இருப்பதிலும் மனதை சஞ்சரிக்க விடுகிறோம்.

நாம் வாழ்கிறோமா, இல்லை அந்த ரோபோவிடம் வாழ்வை ஒப்படைத்து விட்டோமா என்று அறிய நமது தினசரி வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நாம் சாப்பிடும் உணவை ஒவ்வொரு கவளமாக ருசித்து சாப்பிடுகிறோமா? சூரியோதயம், சூரியாஸ்தமனம் போன்ற ரம்மியமான இயற்கைக் காட்சிகள், அழகான பூக்கள், குழந்தைகளின் மழலை, நல்ல இசை போன்றவை நம் கவனத்திற்கு வருகிறதா? ரசிக்கிறோமா? ஈடுபடும் விஷயங்களில் நம்மை மறந்து லயித்துப் போகும் தருணங்கள் உண்டா? செலவில்லாத சின்னச் சின்ன மகிழ்ச்சிகள், மன நிறைவுகள் அடைவதுண்டா? இதற்கு ஆமாம் என்று சிலவற்றிற்காவது ஆமென்று சொல்ல முடிந்தால் அந்த அளவிற்கு வாழ்ந்திருக்கிறோம் என்று பொருள். இல்லை என்பது பதில் என்றால் நம்முள் உள்ள ரோபோ தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் முக்கியமானதே. அதை முழுமையாக வாழும் போது தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. நமது வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கச்சிதமான தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டாம். அப்படி ஒன்றை நாம் காணப்போவதேயில்லை. வாழ்க்கையில் அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று எதுவும் நிச்சயமல்ல. எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடலாம். நிகழ்காலம் மட்டுமே நமது அதிகாரத்தில் உள்ளது. அதில் குழந்தையின் குதூகலத்துடனும், முழு கவனத்துடனும் ஈடுபட முடிந்தால் அப்போது தான் நாம் உண்மையில் வாழ்பவர்களாகிறோம்.

என்.கணேசன்

3 comments:

  1. ive nt made any comment on any so far...however, this writing made me to post a comment! the reason is the truth & reality in ur writing...i agree with u and of course have the same thought like ur writing..but never expressed in writing... u did it...so tanx...

    ReplyDelete
  2. அருமையான பதிவு . எல்லா வார்த்தைகளையும் மனதில் இருத்தி வரும் காலத்தை உபயோகமாக வாழ்வோம் .

    ரேகா ராகவன்

    ReplyDelete