சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, October 9, 2007

மானுடம்

சிறுகதை

வெளியே பலர் தலைதெறிக்க ஓடும் சத்தமும், பலரது கூக்குரலும் கேட்டன. முஸ்தபா முதுகில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த ஹரி பயந்து போய் கீழே இறங்கி அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். "தோஸ்த், எனக்குப் பயமாயிருக்கு"

நாற்பத்தைந்து வயது முஸ்தபா தன் நான்கு வயது நண்பனை பேரன்புடன் அணைத்துக் கொண்டார். "நான் இருக்கேனுல்ல. அப்புறம் என்னடா கண்ணா பயம்"

அவர் மனைவி பாத்திமா அவசர அவசரமாக ஜன்னல்களை சாத்தினாள். "மறுபடி மதக் கலவரம்னு நினைக்கிறேன்". அவள் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தன.

"மதக்கலவரம்னா என்ன தோஸ்த்?" என்று ஹரி வெகுளித்தனமாகக் கேட்ட போது முஸ்தபாவிற்கு திடீரென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை. பின் வருத்தத்துடன் சொன்னார். "சில பேருக்குப் பைத்தியம் பிடிக்குதுன்னு அர்த்தம்"

ஹரிக்கு ஒன்றும் விளங்கா விட்டாலும் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை அந்தச் சிறிய ஊரில் மதக் கலவரம் என்பது அறியாத ஒன்றாக இருந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் ஜனத்தொகையில் ஏறத்தாழ சரிபாதியாக இருக்கும் அந்த ஊரில் அந்தக் காலத்தில் மதம் சண்டை மூட்டும் விஷயமாக இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் மதித்தும், விட்டுக் கொடுத்தும் பெருந்தன்மையாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாட்டில் எங்கெங்கோ நடக்கும் சம்பவங்களும், விடப்படும் அறிக்கைகளும் கூட அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகள் தயவால் பெரிதாக்கப்பட்டு கலவரம் வெடிக்கக் காரணமாகி விடுகின்றன. இதெல்லாம் சரியல்ல, தேவையில்லாதது என்று சிந்திப்பவர்கள் இன்னும் பெருமளவு ஊரில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிந்திப்பவர்கள் செயல்படுவதில்லை. செயல்படுபவர்களோ சிந்திப்பதில்லை.

வெளியே தெரு விளக்குக்கு யாரோ கல்லெடுத்து எறிந்து பல்பு பெரும் சத்தத்துடன் உடைந்து சிதறும் சத்தம் கேட்டது. 'இந்தத் தெரு விளக்கு எந்த மதத்தையும் சேர்ந்ததல்லவே, இதையேன் உடைக்கிறீர்கள்' என்று முஸ்தபாவிற்கு கதவைத் திறந்து கத்தத் தோன்றியது. ஆனால் இதை வைத்தே இன்னொரு கலவரம் ஆரம்பிக்கக் கூடும் என்பதால் அவர் வாய் திறக்கவில்லை.

"தோஸ்த் எனக்குத் தூக்கம் வருது" என்றான் ஹரி.

"கொஞ்சம் சாப்பாடு ஊட்டிட்டு தூங்க வை. அப்புறமா அவங்க வீட்டுக்குக் கொண்டு போய் விடறேன்" என்று அவனை மனைவியிடம் கொடுத்தார். "ஆன்ட்டி கிட்ட போடா தங்கம். கொஞ்சம் சாப்பிட்டுட்டு தூங்குவியாம்" என்று சொல்லி ஹரியின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார். அவனுக்கு அவர் தோஸ்த் என்றாலும் பாத்திமா ஆன்ட்டி தான். அவன் சாப்பிட்டு விட்டுத் தூங்கிப் போனான். முஸ்தபா மணியைப் பார்த்தார். மணி இரவு ஒன்பதரை.

ஹரி பக்கத்துத் தெருவில் வசிக்கும் சாமா சாஸ்திரிகளின் பேரன். தாய் தந்தை இருவரையும் ஒரு விபத்தில் பறி கொடுத்து விட்டுத் தன் தாத்தாவுடன் வாழும் ஹரிக்கும், குழந்தைகள் இல்லாத முஸ்தபாவுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு மிக ஆழமானது. அவரது பெட்டிக் கடையில் தான் சாமா சாஸ்திரி வெற்றிலை பாக்கு வாங்குவார். அப்போது பேரனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். துறுதுறு என்று இருக்கும் அந்தச் சிறுவனின் சுட்டித் தனம் முஸ்தபாவை மிகவும் வசீகரித்து விட்டது. ஆரம்பத்தில் பேச்சுக் கொடுத்தவர் காலம் செல்லச் செல்ல அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விளையாடும் அளவு நெருங்கி, ஒருநாள் அவனைப் பார்க்கா விட்டால் பைத்தியம் பிடித்து விடும் நிலைக்கு வந்து விட்டார். ஹரியும் அவருடன் 'தோஸ்த், தோஸ்த்' என்று மிக ஒட்டி விட்டான். தினமும் அவர் வீட்டுக்குப் போவதும், அவருடன் விளையாடுவதும் அவனுக்கு மிக முக்கியமாகப் போய் விட்டது.

சாமா சாஸ்திரிகள் அந்த ஊர் பெருமாள் கோயிலில் பூஜை செய்பவர். ஆரம்பத்தில் தன் பேரன் முஸ்தபாவின் வீட்டுக்குப் போவதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் ஹரி அவர் பேச்சைக் கேட்பதாக இல்லை. தாய் தந்தை இல்லாத அந்தக் குழந்தையை அதற்கு மேல் கண்டித்து நிறுத்த அவரால் முடியவில்லை. ஆனால் தனியாக முஸ்தபாவிடம் தயங்கியபடி சொன்னார். "சாப்பிட மட்டும் எதுவும் தராதேள்".

முஸ்தபா சொன்னார். "இந்தக் குழந்தை என் வீட்டுக்கு வர ஆரம்பிச்ச நாளில் இருந்து நாங்க அசைவம் சமைக்கறதை நிறுத்திட்டோம் சாமி". சாமா சாஸ்திரிகள் சமாதானம் அடைந்தார்.

முஸ்தபாவின் சமையலறை அசைவத்தை மறந்து விட்டாலும் பாத்திமா மட்டும் ஓட்டலிலோ விருந்திலோ அசைவம் சாப்பிடுவதுண்டு. ஆனால் முஸ்தபா அசைவ உணவைப் பிறகு தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. அவருடைய ஹரிக்கு வேண்டாதது அவருக்கும் வேண்டாம்.

வெளியே அமைதி நிலவ ஆரம்பித்து சிறிது நேரம் ஆன பின் முஸ்தபா தூங்கும் ஹரியைத் தோளில் போட்டுக் கொண்டு சாமா சாஸ்திரிகள் வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது தான் பக்கத்து வீட்டு முனுசாமி வந்து பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னார். "பாய், சாமா சாஸ்திரியைக் குத்திக் கொன்னுட்டாங்க"

முஸ்தபா இடி விழுந்தது போல் உணர்ந்தார். சுமார் பத்து நாட்களுக்கு முன் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு ஒரு இந்து ஒரு முஸ்லீமைக் குத்திக் கொன்றிருந்தான். கொன்றதற்குக் காரணம் மதம் அல்ல என்றும் தனிப்பட்ட பிரச்சினையே என்றும் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் சிலர் அதை இந்து, முஸ்லீம் பிரச்சினையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது இது போன்ற ஒரு அப்பாவி மனிதர் கொலையில் வந்து முடியும் என்று முஸ்தபா கனவிலும் நினைக்கவில்லை. தூங்கும் ஹரியை கனத்த இதயத்துடன் பார்த்தார். முன்பே தாய் தந்தையரை இழந்திருந்த இந்த குழந்தை இப்போது இருந்த ஒரே சொந்தத்தையும் இழந்து விட்டது.

மறுநாள் ஹரியை அழைத்துக் கொண்டு போக ஒரு கும்பல் அவர் வீட்டுக்கு வந்தது. அவர்கள் வந்த போது ஹரி தூங்கி கொண்டு இருந்தான்.

"எங்கே கூட்டிகிட்டுப் போகப் போறீங்க? குழந்தை இங்கேயே இருக்கட்டுமே" முஸ்தபா கெஞ்சினார்.

வந்தவர்கள் முகத்தில் உக்கிரம் தெரிந்தது. கூடவே ஒரு போலீஸ்காரரும் இருந்திரா விட்டால் அவரை ஒரு கை பார்த்திருப்பார்கள்
போலத் தோன்றியது.

"நீ யாருய்யா? உனக்கும் இந்தக் குழந்தைக்கும் என்னய்யா உறவு?"

"அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னய்யா சம்பந்தம்?"

"ஏன், இந்தக் குழந்தையையும் கொன்னுடத் திட்டம் வச்சிருக்கீங்களா?"

கேள்விகள் காய்ச்சிய ஈயமாய் விழ முஸ்தபா தளர்ந்து தடுமாறி நின்றார். தூங்கி கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். முஸ்தபா ஒரு நடைப் பிணமாய் மாறி விட்டார். அதன் பிறகு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. தூங்க முடியவில்லை. கடையைத் திறக்கவில்லை. யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை. அந்தக் குழந்தைக்காக யாரிடமும் யுத்தம் செய்யக் கூட அவர் தயாராக இருந்தார். ஆனால் மனிதர்களுடன் சண்டை போட்டு ஜெயிக்கலாம். மத உணர்வுடன் சண்டை போட்டு ஜெயிக்க முடியுமோ?

பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள். அவர் உறவுக்காரர் அப்துல்லா வந்து சொன்னார். "சரி விட்டுத் தள்ளுங்க. நம்ம சனத்துல எத்தனையோ குழந்தைக இல்லையா. எதோ ஒரு குழந்தையை தத்து எடுத்துகிட்டா போச்சு. இந்தியாவில் குழந்தைக்கா பஞ்சம்"

முஸ்தபா வாய் திறக்கவில்லை. எதோ ஒரு குழந்தை ஹரியாக முடியுமா? இவர்களுக்கு அவர் எப்படி சொல்லிப் புரிய வைக்க முடியும். பாத்திமாவும் நிறையவே பாதிக்கப் பட்டிருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொன்னாள். "அடுத்தவங்க புள்ள மேல ஆச வச்சது நம்ம தப்பு. நமக்கு என்ன உரிமை இருக்கு. மறக்கணும். மனச நீங்க தேத்திக்கணும்". முஸ்தபாவிற்கு யார் என்ன சொன்னாலும் ஹரியின் பிரிவைத் தாங்க முடியவில்லை. ஹரியைப் பத்து மைல் தள்ளி இருக்கும் ஒரு மடத்தில் தற்போது அவர்கள் தங்க வைத்திருப்பதாக முனுசாமி மூலம் தகவல் கிடைத்தது. "அங்கத்து ஸ்வாமிஜி அவனை சென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்குத் தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்துட்டதா பேசிக்கறாங்க. ஒரு வாரத்துல ஹரி அங்க போயிடுவான் போலத் தெரியுது"

முஸ்தபா இயந்திரமாய்த் தலையசைத்தார்.


அந்த மடத்தில் ஸ்வாமிஜி என்று எல்லோராலும் பயபக்தியுடன் அழைக்கப் பட்ட அந்தத் துறவி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஹரி அசையாமல் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கும் அந்த முதியவரை அதிசயமாய் பார்த்தான். 'இதென்ன இவர் உட்கார்ந்துட்டே தூங்கறார்!'. தானும் அவர் முன் அப்படியே அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்து பார்த்தான். அவன் கண்களைத் திறந்த போது அவர் புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க ஏன் பாயில படுத்துத் தூங்காம உக்காந்துகிட்டே தூங்குறீங்க"

அவர் வாய் விட்டுச் சிரித்தார். அவன் எழுந்து சுவாதீனமாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்டான். மடத்தில் உள்ள சிலர் திடுக்கிட்டு அவனை எழுப்பப் போன போது அவர் தடுத்து விட்டு அவனிடம் கேட்டார். "உன் பெயரென்ன குழந்தை?"

"ஹரி. உங்க பெயரென்ன?"

"தாத்தா"

தாத்தா என்றதும் அவன் முகம் வாடியது. "எங்க தாத்தா எங்கே?"

"அவர் சாமி கிட்ட போயிருக்கார்"

"அவர் எங்க போனாலும் என்னை விட்டுட்டு போக மாட்டாரே. அவர் ஏன் இன்னும் வரலை?"

ஸ்வாமிஜி ஹரியின் முதுகை ஆதுரத்துடன் தடவினார். "நீ போய் விளையாடறியா?"

"நான் என் தோஸ்த் கூட தான் விளையாடுவேன். என் தோஸ்த் எங்கே?"

"வருவான். உன் தோஸ்த் பெயரென்ன?"

"தோஸ்த் தான்"

ஸ்வாமிஜி புன்னகைத்தார். "உனக்கு மந்திரம் சுலோகம் ஏதாவது தெரியுமா?"

"ஓ" ஹரியின் முகம் பெருமிதமாய் மலர்ந்தது.

"சொல் பார்க்கலாம்"

"சுக்லாம் பரதரம் விஷ்ணும்......" ஹரியின் மழலைக் குரல் கணீரென்று ஒலித்தது. அவன் முடித்த பின் ஸ்வாமிஜி கை தட்டினார். "நல்ல பையன். இன்னொரு சுலோகம் சொல் பார்க்கலாம்".

ஹரிக்கு அவர் கை தட்டியது பெருத்த சந்தோஷத்தைத் தந்திருந்ததால் கணீரென்று சொன்னான். "அல்லாஹ¤ அக்பர் அல்லா...". பல முறை மசூதியில் இருந்து கேட்டதை 'இது என்ன' என்று முஸ்தபாவிடம் கேட்க அவர் அவனுக்குப் புரிய வைக்க 'இதுவும் ஒரு சுலோகம்' என்று சொல்லியிருந்ததார்.

ஹரி அந்த 'சுலோகம்' சொல்லி முடித்த போது ஸ்வாமிஜியும் மடத்தில் இருந்தவர்களும் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர். இத்தனை காலமாக இந்த மடத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை. சிலையாக அமர்ந்திருந்த ஸ்வாமிஜியைப் பார்த்து ஹரி ஏமாற்றத்துடன் கேட்டான். "ஏன் தாத்தா கை தட்டலை. நான் சரியாய் சொல்லலையா?"

சாட்சாத் இறைவனே நேரில் வந்து கேள்வி கேட்டதாய்த் தோன்ற ஸ்வாமிஜி திகைப்பில் இருந்து மீண்டு கை தட்டினார். மடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஹரியை தூக்கிக் கொண்டு போனார்கள்.


"நாளைக்கு அந்தக் குழந்தையைக் கூட்டிகிட்டுப் போக ஆளுக சென்னையில் இருந்து வர்றதா கேள்விப் பட்டேன்" என்று முனுசாமி முஸ்தபாவிடம் தெரிவித்தார். என்றென்றைக்குமாய் ஹரியை இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் முஸ்தபாவின் மனதை இமயமாய் அழுத்தியது. முஸ்தபா கண்கலங்கினார்.

அதைக் கண்டு மனம் நெகிழ்ந்த முனுசாமி சொன்னார். "ஒரு தடவ போய் பாத்துட்டு தான் வாங்களேன் பாய்". அவர் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்தப் பாச உறவை கண்கூடாக தினம் பார்த்துக் கொண்டிருந்தவர்.

"பார்க்க விடுவாங்களா"

"அந்த ஸ்வாமிஜி ரொம்ப நல்லவரு. அவரு முன்னாடி உங்கள யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. வேணும்னா நானும் கூட வர்றேன்".

ஆனால் அவர்கள் கிளம்பியதைக் கேள்விப்பட்ட சில முஸ்லீம் நண்பர்கள் இப்போதைய சூழ்நிலையில் தனியாக முஸ்தபா அந்த மடத்தருகே செல்வது அவர் உயிருக்கு ஆபத்து என்று முடிவு செய்தவர்களாக பாதுகாப்புக்கென்று ஒரு கூட்டமாக பின்னாலேயே கிளம்பினார்கள்.


முஸ்தபாவும் முனுசாமியும் சென்ற போது ஹரி வெளியே தனியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். முஸ்தபாவைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒரே சந்தோஷப் பிரவாகம். "தோஸ்த்" என்று கத்தியபடி ஓடோடி வந்தான். "நீ ஏன் என்னைப் பார்க்க இவ்வளவு நாளாய் வரலை"

சுற்றும் முற்றும் பார்த்த படி முஸ்தபா ஹரியை கட்டியணைத்துக் கொண்டார். மற்றவர்கள் வந்தால் தொடர்ந்து பேச விட மாட்டார்கள் என்று அறிந்து அவசர அவசரமாகச் சொன்னார். "எங்க போனாலும் நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும். சரியா கண்ணா. இந்த தோஸ்தை மறந்துடாதே"

"நான் எங்கேயும் போகலை. உன் கூடவே வர்றேன். எனக்கு இந்த இடம் பிடிக்கலை. இங்க யாரும் என் கூட விளையாட வர மாட்டேன்கிறாங்க." என்ற ஹரி கெஞ்சினான். "உன் கூடவே நான் வரட்டுமா தோஸ்த்".

அதற்கு மேல் துக்கத்தை அணை போட முடியாமல் முஸ்தபா முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "அல்லாவே! இது என்ன சோதனை? இப்படி கேட்கிற குழந்தையை நான் எப்படி விட்டு விட்டு போவேன். என் கொஞ்ச நஞ்ச மன உறுதியையும் இந்தக் குழந்தை கரைத்து விடும் போல இருக்கிறதே". எத்தனை நேரம் அழுதாரோ தெரியவில்லை. முனுசாமியின் கை அவர் தோளைத் தொட்ட போது சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார். அப்போது தான் அவருக்கு மிக அருகில் ஸ்வாமிஜி நிற்பதைப் பார்த்தார். முஸ்தபாவுக்கு முன்னால் இந்துக்கள் பலரும், அவருக்குப் பின்னால் முஸ்லீம்கள் பலரும் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு கும்பல்களிலும் ஒரு உஷ்ணம் தெரிந்தது.

முன்னால் இருந்த் கும்பலில் இருந்து ஒருவன் பலவந்தமாக அவரிடம் இருந்து ஹரியை பிரித்து தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். ஹரி முஸ்தபாவைக் காட்டி ஸ்வாமிஜியிடம் சொன்னான். "தாத்தா இது தான் என்னோட தோஸ்த்"

தோஸ்த் என்று அடிக்கடி குழந்தை சொன்னது இன்னொரு குழந்தையை என்று இதுவரை எண்ணியிருந்த ஸ்வாமிஜி புன்னகை பூத்தார். 'இந்தக் குழந்தையின் அகராதி வித்தியாசமானது. சுலோகத்தில் இருந்து தோஸ்த் வரை எல்லாவற்றிற்கும் பிரத்தியேக அர்த்தம் உண்டு'.

"இந்தக் குழந்தைக்கு யாருமே இல்லைன்னு எல்லோரும் என் கிட்டே சொன்னார்களே. நீங்கள் யார்?" கனிவாக ஸ்வாமிஜி முஸ்தபாவைக் கேட்டார்.

முஸ்தபா அந்தக் கனிவான மனிதரிடம் நாத்தழதழக்க எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தார். தன்னைப் பற்றி, சாமா சாஸ்திரிகள் பற்றி, ஹரியைப் பற்றி, ஹரி மேல் தான் வைத்திருந்த எல்லையில்லாத பாசத்தைப் பற்றி, அவன் போன பின் தான் பட்ட தாங்கவொணா வேதனையைப் பற்றி எல்லாம் விவரித்துச் சொன்னார்.

கேட்டு முடித்த ஸ்வாமிஜி திரும்பித் தன் பின் இருந்த கூட்டத்தைப் பார்த்தார். ஹரியை வைத்திருந்தவன் "இந்தக் குழந்தையோட தாத்தாவைக் கொன்னது இவங்க கூட்டம் தான் ஸ்வாமி" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினான். சற்று நேரத்தில் இரண்டு குமபல்களும் பரஸ்பரம் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். கடைசியில் கடவுள்கள், மதங்கள் பற்றி வந்து சண்டை உச்சக் கட்டத்துக்கு வந்த போது ஸ்வாமிஜி கையை உயர்த்தி அமைதிப் படுத்தினார். அவர் முன்பு இரு கும்பல்களும் ஏனோ அடங்கின.

ஸ்வாமிஜி அமைதியாகச் சொன்னார். "இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்து பராமரித்துக் கொண்டு வரும் தெய்வம் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்ததாக இருந்திருந்தால் கண்டிப்பாய் மற்ற எல்லா மதத்தாரையும் அழித்திருக்கும் இல்லையா? மதம், மொழி, நிறம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கிற ஒரே காரணத்தால் தான் அந்த தெய்வம் எல்லாரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இது சிறிதளவாவது சிந்திக்கத் தெரிந்தால் எல்லாருமே உணர முடியும். அப்படியிருந்தும் நாம் சண்டை போடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?"

இரு தரப்பிலும் மௌனம் நிலவியது. தெளிவான சிந்தனை இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவுகளுக்கு ஏது இடம்?

"இந்தக் குழந்தைக்கு இது வரை விஷ்ணுவுக்கும் அல்லாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. எல்லாக் குழந்தைகளும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருக்கிறார்கள். நாம் தான் வித்தியாச, வெறுப்பு விதைகளை அவர்கள் மனதில் தூவி பிற்காலப் பிரச்சினைகளுக்கும் இன்றே அஸ்திவாரம் போடுகிறோம்....." அவர் தொடர்ந்து அமைதியாக என்னென்னவோ சொன்னார். ஹரிக்கு அது எதுவும் புரியவில்லை. அவனுக்கு ஒன்றே ஒன்று புரிந்தது. இந்தத் தாத்தா சொன்னால் எல்லாரும் கேட்பார்கள் போலத் தெரிகிறது. இவர் மனம் வைத்தால் நாமும் நம் தோஸ்த்துடன் போய் விடலாம். அவர் முடிக்கும் வரை காத்திருந்து விட்டு ஆவலுடன் அவரிடம் கேட்டான். "தாத்தா நான் என் தோஸ்த் கூடப் போகட்டுமா?"

அவர் புன்னகையுடன் தலையசைத்தார். உடனே தன்னை வைத்திருந்தவனிடம் இருந்து இறங்கி ஓடி வந்து முஸ்தபாவின் கால்களை ஹரி கட்டிப் பிடித்துக் கொண்டான்.

ஸ்வாமிஜி முஸ்தபாவிடம் சொன்னார். "முஸ்தபா, இனி இது உங்கள் குழந்தை. நீங்களே வளர்த்தலாம். இந்தக் குழந்தையை ஒரு இந்துவாகவோ ஒரு முஸ்லீமாகவோ வளர்த்த வேண்டாம். இரண்டு மதங்களிலும் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லிக் கொடுத்து ஒரு நல்ல மனிதனாக வளர்த்துங்கள். இந்த இரண்டு கும்பல்களுக்கும் இடையே பொதுவாய் இருக்கும் ஒரு நல்ல விஷயமாய் உங்கள் வீடு இருக்கட்டும்."

முஸ்தபாவிற்கு நன்றி சொல்ல எத்தனையோ வார்த்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. ஆனால் எதையும் சொல்ல அவரது நாக்கு மறுத்தது. கடைசியாய் ஒரு முறை பார்க்க வந்தவனிடம் கடைசி வரை வைத்துக் கொள் என்று சொல்லி அந்தக் குழந்தையைக் கொடுத்ததன் மூலம் உயிரையே திருப்பிக் கொடுத்த அந்த மாமனிதன் முன் மலைத்து நின்றார். வார்த்தைகளுக்குப் பதிலாக கண்ணீர் அருவியாக வழிந்தது. சற்று முன் ஹரியைப் பார்த்து அழுததை விட அதிகமாக குழந்தையைப் போல் கேவிக் கேவி அழுதார். அவர் கைகள் தலைக்கு மேல் நீண்டு ஸ்வாமிஜியை நமஸ்கரித்தன. அவரைப் பார்த்து அப்படியே ஹரியும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கூப்பிக் கொண்டான். அவனுக்கும் ஏனோ அழத் தோன்றியது. அவனும் முதல் முறையாக அழுதான்.

ஸ்வாமிஜியின் வார்த்தைகளாலும் கழுவப்படாத கறைகள் இருபக்கங்களிலும் இருந்த இதயங்களில் இருந்திருக்குமானால், அந்த இரண்டு ஜீவன்களின் கண்ணீரால் கழுவப்பட்டு விட்டன என்றே சொல்ல வேண்டும். வார்த்தைகளுக்கும் மேலாக அன்பென்னும் அந்த மானுட பாஷையை, அதன் சக்தியை அந்தக் கணம் உணர்ந்து மனம் நெகிழ்ந்து அனைவரும் நின்றார்கள்.

-என்.கணேசன்

நன்றி: நிலாச்சாரல்.காம்

9 comments:

  1. greattttttttttttt................ you make me cryyyyyy........ thanksssssssssssssss........... i love every oneeeeeeeeeee........ kakkai kuruvi engal jadhiiiiii....... vazhga valamudan..... www.gurusindia.com

    ReplyDelete
  2. super.
    Abishek.Akilan...

    ReplyDelete
  3. indha kathai padithu piragavadhu irandu madhangalum matham marandhu manidham valarkkatum
    vazhga manidha neyam
    segar

    ReplyDelete
  4. BALASUBRAMANIAN KOCHIAugust 20, 2012 at 9:48 PM

    EXCELLENT.CONTINUE YOUR SERVICE TO PEOPLE.THANKING YOU

    ReplyDelete
  5. அருமையான கதை . மானுடம் சிறக்க இதுதான் சிறந்த வழி.

    ReplyDelete
  6. Wonderful story, appropriate words.

    ReplyDelete
  7. en kalanga vachutinga...amar.g

    ReplyDelete