சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 6, 2007

ஐயோ இந்தியனே...



ஒன்பதாவது ஆளும் அதைக் கடந்து தான் போனான்.

"நான் சொன்னேன் இல்லைங்களா, இது தான் நம்ம இந்திய மனோபாவம்" என்று என் நண்பர் சலித்துக் கொண்டார். அவர் சொன்னதில் உண்மை இருப்பதாகவே எனக்கும் பட்டது.

பல பேர் வாக்கிங் போகும் அந்த ரேஸ் கோர்ஸ் சாலையின் நடைபாதையில் ஒரு கண்ணாடித் துண்டு கிடந்ததை உட்கார்ந்த இடத்தில் இருந்து சற்று முன் தான் இருவரும் பார்த்தோம். அப்போதே என் நண்பர் சொன்னார். "நீங்க வேணும்னா பாருங்க. ஒரு பய எடுத்து தூரப் போட மாட்டான்."

ஒவ்வொருவராக அதைக் கடந்து சென்றதை நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். சிலர் கவனிக்காமலேயே கடந்தார்கள். சிலர் பார்த்துக் கொண்டே கடந்தார்கள். கடப்பவர்களை என் நண்பர் எண்ணிக் கொண்டே வந்தார்.

"அதுவே காசாய் இருந்திருந்தா அது எப்பவே காணாமல் போயிருக்குங்க. இதுவே அமெரிக்காவாகவோ, இங்கிலாந்தாகவோ இருந்திருந்தா நான் இரண்டு வரை கூட எண்ண முடியாது. அங்கேயெல்லாம் ஒவ்வொருத்தனும் பொது இடத்தில் எவ்வளவு பொறுப்புணர்வோடு செயல்படுவாங்க தெரியுமா?" அவர் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். மகள் இங்கிலாந்தில் இருக்கிறாள். அவர் ஒரு முறை அங்கெல்லாம் போய் ஒவ்வொரு மாதம் இருந்து விட்டு வந்திருக்கிறார். அன்றிலிருந்து அங்குள்ள சுத்தம், சுகாதாரம், கட்டுப்பாடு பற்றி எல்லாம் அவர் சொல்லாத நாளில்லை.

இந்த கண்ணாடித் துண்டை எடுத்துப் போட ஓருவர் கூட முனையாதது எனக்கே என்னவோ போல் இருந்தது. நானே அதை எடுத்துப் போட எண்ணி எழுந்தேன். செருப்பில்லாமல் வரும் ஏதாவது ஏழை காலை அது பதம் பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது.

"நீங்க உட்காருங்க சொல்றேன். நடக்கிறவர்களில் ஒருத்தனுக்காவது அதை அப்புறப் படுத்தணும்னு தோணுதான்னு பார்க்கலாம்" அவர் தடுத்து என்னை மறுபடி உட்கார வைத்தார்.

பன்னிரண்டாவது ஆள் அந்த இடம் வந்ததும் அதை உற்றுப் பார்த்தான். ஏதோ மின்னியதைக் கண்டு அதை குனிந்து எடுத்துப் பார்த்தான். கண்ணாடித் துண்டு என்று அறிந்தவுடன் அலட்சியத்தோடு அதை மறுபடி நடு வீதியிலேயே போட்டு விட்டு நகர்ந்தான்.

"அவன் எடுக்கறப்ப சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு இந்தியனாவது இருக்கிறானேன்னு நினைச்சேன். நடு வீதியில் திரும்பப் போடறதை ஒரு ஓரமாய் தள்ளிப் போடக்கூடாதா? நம்ம நாடு உருப்படாமப் போகிறதுக்கு இவன் மாதிரி ஆளுங்க தான் காரணங்க"

பதினைந்தாவது நபர் ஒரு பெண்மணி. அதன் மேல் காலை வைக்கப் போனவள் கடைசி நொடியில் கவனித்து காலைத் தள்ளி வைக்கப் பாடுபட்டதில் கிட்டத்தட்ட ஒரு பரத நாட்டியமே ஆடி விட்டாள். அதைப் பார்த்து நண்பர் வாய் விட்டு சிரித்தே விட்டார். அவரை முறைத்துப் பார்த்து "எல்லாம் ஈவ் டீசிங்கில் உள்ளே போட்டால் சரியாகிப் போய் விடும்" என்று சொல்லி விட்டுப் போனாள்.

அவரது சிரிப்பு காணாமல் போயிற்று. "எல்லாம் கலிகாலம்" என்று பொதுவாகச் சொன்னவர் எண்ணுவதை மட்டும் நிறுத்தவில்லை. இருபது வரை அவரை பாதசாரிகள் எண்ண விட்டார்கள். ஒரு சின்ன விஷயத்தில் மக்களது அலட்சிய மனோபாவம் எப்படி வெளிப்படுகிறது என்பதை எங்களால் பார்க்க முடிந்தது.

லேசாக இருட்ட ஆரம்பித்தது. என் நண்பர் கிளம்பினார். கிளம்பும் போது மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னார். "இதெல்லாம் பார்க்கறப்ப தாங்க பேசாம பிரிட்டிஷ் காரன் கிட்டவே நாடு இருந்திருந்தா தேவலைன்னு தோணுது. சுதந்திரம்னா என்னன்னு தெரியாதவன் கிட்ட கிடைக்கற சுதந்திரம் என்னமா பாடுபடுதுன்னு பார்த்தீங்க இல்ல"

ஆனால் போகும் போது அவரும் அந்தக் கண்ணாடித் துண்டைத் தாண்டியதைப் பார்த்து "சார்.. அதை எடுத்துப் போட நீங்களும் மறந்துட்டீங்களே" என்று கூப்பிட்டுச் சொன்னேன்.

அவர் திரும்பி வந்து சொன்னார். "மறக்கலை. வேணும்னே தான் எடுக்கலை. இத்தனை பேரைப் பார்த்தீங்க இல்ல. இவங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதுக்குங்க. இப்படிப்பட்டவங்களுக்கு எதுவும் செய்யக்கூடாதுங்க. நாம ஒண்ணு ரெண்டு ஆள் நினைச்சா இந்த நாட்டைத் திருத்த முடியுமா என்ன. நம்ம வரைக்கும் நாம் கவனமாய் இருக்கணும் அவ்வளவு தான்"

அவர் போய் விட்டார். நான் என் காதுகளை நம்ப முடியாமல் சிறிது நேரம் சிலையாக நின்றேன். அந்தக் கண்ணாடித் துண்டை எடுத்து தள்ளி இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வீட்டை நோக்கி நடக்கையில் மனம் ஏனோ கனத்தது.

- என்.கணேசன்
- நன்றி: நிலாச்சாரல்.காம்
-

8 comments:

  1. இதை படித்த போது நான் படித்த ஒரு சிறு கதை நினைவுக்கு வந்தது.. ஒரு ராஜா, கோயிலில் உள்ள ஆண்டவருக்கு அபிஷேகம் செய்ய அந்த ஊரில் உள்ள எல்லோரும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து அங்குள்ள பாத்திரத்தில் விடவேண்டும் என உத்திரவு போட்டாராம். அதில் ஒருவன் நினைத்தானாம், இந்த ஊரில் உள்ள எல்லோரும் பால் விடப்போகின்றார்கள், நாம் ஒரு சொம்பு தண்ணீர் விட்டால் என்ன குறைந்து போய்விடப்போகின்றது. ஆனால் நடந்தது என்ன என்றால் , அரசர் வந்த போது பாத்திரத்தை திறந்து பார்த்தால், முழுவதுமாக தண்ணீராக இருந்ததாம். அது போலத்தான் மற்றவர்க்கு இல்லாத அக்கரை நமக்கு என இருப்பதும்.

    ReplyDelete
  2. சிவதாஸ்October 3, 2011 at 7:14 PM

    அருமை! அருமை! எம் இந்தியர் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டிய விதம் அருமை!

    ReplyDelete
  3. //"இதெல்லாம் பார்க்கறப்ப தாங்க பேசாம பிரிட்டிஷ் காரன் கிட்டவே நாடு இருந்திருந்தா தேவலைன்னு தோணுது. சுதந்திரம்னா என்னன்னு தெரியாதவன் கிட்ட கிடைக்கற சுதந்திரம் என்னமா பாடுபடுதுன்னு பார்த்தீங்க இல்ல"//

    சும்மா நச்சுன்னு இருக்கு!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. Extand your love from self center, then everything will be fixed. It is each and everybody's responsibility.

    ReplyDelete
  5. //இவங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதுக்குங்க//
    சரிதான்.ஆனால் அவங்களுக்கு எல்லாம் இல்லாத ஆராய்ச்சி இவருக்கெதுக்கு.

    ReplyDelete