என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 13, 2025

சாணக்கியன் 148

 

பாடலிபுத்திர  நகர வாயிற்காவலர்கள் எப்படியெல்லாம் சோதிக்கிறார்கள் என்பதை சின்ஹரன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலும் அவனது வெளித் தோற்றம் சிந்தனைகளில் ஆழ்ந்தபடி பொறுமையுடன் காத்திருக்கும் ஆன்மிக முதியவராகவே அவனைக் காட்டியது. வருபவர்கள் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு தீவிரமாகவும் விரிவாகவும் விசாரிக்கப்படும் விதத்தை அவன் கவனித்தான். ஆயுதக்கிடங்கு எரிக்கப்பட்டதன் விளைவாக இந்தச் சோதனை ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல வெளியே செல்பவர்களையும் பரிசோதித்த பின்பே அனுப்புவதையும் கவனித்தான். தனநந்தனின் புதையல் காணாமல் போனபின் போகிறவர்களையும் சோதிப்பதை ஆரம்பித்திருப்பார்கள் என்று தோன்றியது.

 

வரிசையில் அவன் முன்னேறி காவலர்கள் அவனைச் சோதிக்க நெருங்கிய போது இந்தக் கிழவரைப் பரிசோதிக்க என்ன இருக்கிறது என்று காவலர்கள் நினைத்தது போலிருந்தது. அவன் தன்னுடைய அடையாளச் சீட்டையும், கையிலிருந்த பழைய பையையும் அவர்கள் பரிசோதிக்க நீட்டினான். அவன் அடையாளச் சீட்டு வைசாலி நகரவாசியாக அவனைக் காட்டியது. அவன் பையில் பழைய காவி உடைகள் இரண்டிருந்தன. வந்திருக்கும் உத்தேசம் என்னவென்று கேட்டார்கள். கரகரத்த முதிர்ந்த குரலில் மகாவிஷ்ணு கோயிலுக்கு தொழ வந்திருப்பதாய் சின்ஹரன் சொன்னான். இந்த முதிய மனிதனும், பையிலிருக்கும் உடைகளும் மகதத்திற்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்திவிட முடியாதென்பதால் அவர்கள் அதிகம் யோசிக்காமல் உள்ளே அனுமதித்தார்கள்.     

 

சின்ஹரன் நேராக மகாவிஷ்ணு கோயிலுக்கே போனான். கோயிலில் இருந்த பூசாரி சின்ஹரனைப் பார்த்தவுடன் பரபரப்படைந்தார். ஏனென்றால் இளவரசன் சுதானு அந்த மகான் மறுபடி வந்தாரா, அவர் எங்கிருப்பவர் என்று தெரியுமா என்று பல முறை அவரிடம் கேட்டிருந்தான். இளவரசன் காணத் துடித்த மகான் இன்று திடீரென்று வந்து சேர்ந்தது அவருக்குப் பரபரப்பாக இருந்தது.

 

பூசாரி சின்ஹரனைப் பார்த்ததும் பயபக்தியுடன் கைகூப்பி வணங்கினார். “வாருங்கள் சுவாமி. அரசியாரும், இளவரசரும் தங்களைப் பார்க்க வேண்டும் என்று அன்று நீங்கள் சென்ற பிறகு நிறைய முயற்சி செய்தார்கள். உங்களைப் பிறகு காண முடியாததில் அவர்களுக்கு ஒரே வருத்தம்.”

 

சின்ஹரன் புன்னகையுடன் சொன்னான். “அந்த வருத்தத்தை இறைவனைக் காண முடியாததில் காட்டியிருந்தால் எப்போதோ கடைத்தேறி இருப்பார்கள்.”

 

மகான்கள் வாயிலிருந்தே இத்தகைய வார்த்தைகள் வர முடியும் என்று பூசாரி எண்ணியபடி சொன்னார். “அவர்களுக்குத் தங்களிடம் ஏதோ கேட்க வேண்டுமாம். தாங்கள் அரண்மனைக்குச் சென்றால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்...”

 

சின்ஹரன் சொன்னான். “மகாவிஷ்ணுவைத் தேடி வந்தவன் மனிதர்களைத் தேடிச் செல்வது உசிதம் என்று தோன்றவில்லை. என்னை மன்னியுங்கள்”

 

பூசாரிக்கு அவர் மகான் என்பது மேலும் உறுதியாகியது. அரண்மனைக்குச் சென்று வெகுமதிகள் பெறும் வாய்ப்பை எத்தனை பேரால் உதறித்தள்ள முடியும்?

 

அவர் அவசரமாகச் சொன்னார். “அப்படியானால் இறைவனைத் தொழுது விட்டு தயவு செய்து இங்கே சற்று நேரம் ஓய்வெடுங்கள். நான் தாங்கள் வந்திருக்கும் தகவலை அனுப்பி அவர்கள் தங்களை வந்து பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.”

 

சின்ஹரன் சிறிது தயக்கத்தோடு யோசிப்பவன் போல பாவனை காட்டினான். பூசாரி அந்த மகான் மறுத்து விடுவாரோ என்று பயந்தார். அதனால் யோசிக்கவும் சமயம் தராமல் அங்கேயிருந்து வேகமாக வெளியேறினார். அவர் ஓட்டமும் நடையுமாக அரண்மனையை அடைந்து வாயிற்காவலன் மூலம் சுதானுவுக்குத் தகவல் அனுப்பி விட்டு அதே வேகத்தில் கோயிலுக்குத் திரும்பி வந்தார். வரும் போது அந்த மகான் காத்திருக்காமல் போயிருப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது. நல்ல வேளையாக அந்த மகான் கோயிலிலேயே தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார்.

 

அந்த மகான் மகாவிஷ்ணு கோயிலுக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் சுதானுவும், தாரிணியும் தாமதிக்காமல் விரைந்து வந்தார்கள். சுதானு பூசாரியின் கையில் சில பொற்காசுகளைத் திணித்து விட்டுச் சொன்னான். “அவரிடம் நாங்கள் தனிமையில் பேச வேண்டியிருக்கிறது”

 

பூசாரி புரிந்து கொண்டு பொற்காசுகள் கிடைத்த மகிழ்ச்சியுடன் “நான் வெளியே தங்கள் ரதத்தருகே நிற்கிறேன் இளவரசே.” என்று கூறி அவர்களைத் தனிமையில் விட்டு வெளியேறினார்.

 

தாரிணி கொண்டு வந்திருந்த பெரிய தாம்பாளத்தில் கனிகளும், பட்டுத் துணியும்,  பொற்காசுகளும் இருந்தன. சின்ஹரன் முன் மிகுந்த பயபக்தியுடன் அந்தத் தாம்பாளத்தை வைத்து விட்டு இருவரும் வணங்கி எழுந்தார்கள்.

 

சின்ஹரன் மெள்ள கண்களைத் திறந்து வலது கையை உயர்த்தி அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தான். பின் தாம்பாளத்தைத் தள்ளி வைத்தபடி சொன்னான். “மகாவிஷ்ணுவின் அருளைத் தவிர அடியேன் வேறெதையும் நாடியதில்லை. எனக்குத் தேவையுமில்லை.”

 

தாரிணி பயபக்தியுடன் சொன்னாள். “எங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள் இதைப் பெற்றுக் கொண்டு ஆசிவழங்க வேண்டும் சுவாமி”

 

சின்ஹரன் கரகரத்த குரலில் சொன்னான். “இறைவனின் அருளைக் கேட்டுப் பெறுங்கள். மனிதர்களின் ஆசியில் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது.”

 

தாரிணி சொன்னாள். “அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி. இறைவனின் திருவடிகளையே மனதில் பற்றிக் கொண்டிருக்கும் தங்களைப் போன்ற மகான்கள் ஆசியில் எத்தனையோ நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”

 

சின்ஹரன் அந்த நம்பிக்கைக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சுதானு அவசரமாக ஆவலுடன் சொன்னான். “சுவாமி அன்று நீங்கள் எனக்கு அருள்வாக்கு ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள். அதன் முழுப்பொருள் எனக்கு விளங்கவில்லை. தாங்கள் அதை விளக்கினால் எனக்கு மிக உதவியாய் இருக்கும்”

 

சின்ஹரன் சொன்னான். “அதைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகம் உனக்கு இருக்குமானால் அதன் பொருள் தானாக உனக்குப் புலப்படும்.”

 

சுதானுவுக்குச் சுருக்கென்றது. விளங்கவில்லை என்றால் யோகமில்லை என்று பொருளாகி விடுமா என்று பயந்தவனாகச் சொன்னான்.  “அரைகுறையாய் புரிந்து கொண்டு அது தவறாக இருந்து விடக்கூடாது என்று தான் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்கிறேன் சுவாமி”

 

சின்ஹரன் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். அவன் கண்களை மூடி முக்காலத்தையும் பார்த்துக் கொண்டிருப்பது அரசிக்குத் தோன்றியது.

 

சின்ஹரன் கண்களை மூடியபடியே சொன்னான். “நீ எதை அடைய வேண்டிக் கொண்டு இந்தக் கோயிலுக்கு வந்தாயோ அதை அடைய உனக்கு ஒரு கச்சிதமான சந்தர்ப்பம் வரப் போகிறது என்று சொல்லியிருந்தேன். அதற்கு மேல் உனக்கு அதை விளக்க எனக்கு அனுமதியில்லை.”

 

தாரிணி மெல்லச் சொன்னாள். “விளக்க வேண்டாம். கூடுதல் தகவல்கள் எதாவது தந்தால் அவனுக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்று கேட்கிறான். தயவு செய்து அனுக்கிரகிக்க வேண்டும் சுவாமி”

 

சின்ஹரன் மெள்ள கண்களைத் திறந்து சுதானுவைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான். “அடுத்த வளர்பிறை ஏகாதசி நள்ளிரவு தான் அனைத்தும் முடிவுசெய்யப்படும் நாள். அதற்குப் பின் எடுக்கிற முயற்சி எதுவும் பலன் தராது. உன் முயற்சியில் உன் விதி மட்டுமல்லாமல் மகதத்தின் விதியும் தீர்மானமாகப் போகிறது. அதனால் எச்சரிக்கையுடன் சிந்தித்துச் செயல்படு.”

 

சுதானு தலையசைத்தான். பின் மெல்லக் கேட்டான். “அந்த சமயத்தில் தான் தாங்கள் சொன்ன எதிரிகளின் முற்றுகையும் இருக்குமா?”

 

சின்ஹரன் தலையை மட்டும் அசைத்து விட்டு எழுந்தான். ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்ப யத்தனித்தான். தாரிணி பயபக்தியுடன் அந்தத் தாம்பாளத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். சின்ஹரன் இரு கைகளாலும் வேண்டாம் என்று சைகை காட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். 

 

யாரோ ஒரு மகானை மகாவிஷ்ணு கோயிலில் சுதானுவும், அரசியும்  சந்தித்த தகவல் ராக்‌ஷசருக்கு அன்றிரவே எட்டியது.

 

ராக்‌ஷசருக்கு இளவரசன் சுதானு மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவன் அதிகம் உணர்ச்சிவசப்படுவன், கோபக்காரன் என்பதோடு தன்னிச்சையாகச் செயல்படுகிறவன், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுக்கிறவன் என்பதும் அவன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை அவர் மனதில் ஏற்படுத்தியிருந்தன….

 

அவர் யோசனையுடன் தகவல் கொண்டு வந்த ஒற்றனிடம் கேட்டார். “அவர் வந்தது எப்போது?”

 

“காலையில் தான். நகர வாயிற்காவலர்கள் சொன்ன நேரத்தைப் பார்த்தால் வந்தவர் நேரடியாக மகாவிஷ்ணு கோயிலுக்குப் போய் வழிபட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. அவர் வந்திருக்கும் தகவலை அரண்மனைக்குச் சென்று பூசாரி தெரிவித்திருக்கிறார். உடனே அரசியும் இளவரசனும் சென்று அந்த மகானைச் சந்தித்திருக்கிறார்கள்.”

 

அரசி கோயில்களுக்குச் செல்வதும், மகான்களைச் சந்திப்பதும் எப்போதும் நடப்பது தான். ஆனால் சுதானு அப்படிச் செல்பவன் அல்ல….

 

“அந்த மகான் இப்போது எங்கே இருக்கிறார்”

 

“தெரியவில்லை. இளவரசர் அவரைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகு தான் நாங்கள் அந்த மகான் பற்றிய தகவல் சேகரிக்க ஆரம்பித்தோம். அவர் வந்த விவரங்கள் கிடைத்தன. ஆனால் போன விவரங்கள் கிடைக்கவில்லை. பயணியர் விடுதி உட்படப் பல இடங்களில் பார்த்து விட்டோம். அவர் எங்கும் இல்லை.”

 

ராக்‌ஷசரின் மூளையில் ஒரு சிறு அபாய மணி அடித்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்





Wednesday, February 12, 2025

முந்தைய சிந்தனைகள் 119

 சிந்திக்க சில உண்மைகள் என் நூல்களில் இருந்து...












Monday, February 10, 2025

யோகி 89


ஷ்ரவன் சொன்னான். “நான் ஆரம்பத்தில் இருந்து சொன்னால் தான் உங்களுக்கு என் வித்தியாசமான பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் சுவாமினி. அதனால தயவு செய்து பொறுமையாய் கேளுங்கள். எங்கள் பூர்வீகம் ராமநாதபுரத்தில் ஒரு குக்கிராமம் என்றாலும், தாத்தா சின்ன வயதிலேயே தொழிலுக்காக ஹைதராபாத்தில் போய் அங்கேயே தங்கி விட்டார். அதனால் எங்கப்பாவே அங்கே தான் பிறந்து வளர்ந்தார். நானும் அப்படித் தான். எனக்கு எட்டு வயதிருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்கு ஒரு மந்திரவாதி வசிக்க வந்தார். அவர் பெயர் சோமையாஜுலு. மாந்திரீகத்தில் அவர் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். எப்போதுமே அவர் வீட்டு வாசலில் கார்கள் நின்று கொண்டே இருக்கும். காலையில் ஏழு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரைக்கும் வெளியாட்கள் அவர் வீட்டில் இருப்பார்கள்.”

 

“ஒரு நாள் இரவு சிரஞ்சீவியின் ஒரு சினிமாப்படம் இரவுக்காட்சி பார்த்து விட்டு நானும், என் அம்மா, அப்பாவும் திரும்பி வந்தோம். அப்போது பக்கத்து வீட்டில் ஏதோ பூஜை நடந்து கொண்டு இருந்தது. அர்த்த ஜாமத்து பூஜைகள் அந்த வீட்டில் நடப்பது சர்வசகஜம். அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு நரி நின்னுகிட்டு இருக்கறதை பார்த்துட்டு நான், “ஹை நரி”ன்னு கைகாட்டி சொன்னேன்.

 

”என் அம்மாவும், அப்பாவும் நான் கைகாட்டிய இடத்தைப் பார்த்தார்கள். அவர்கள் இருவருக்கும் அந்த நரி தெரியவில்லை. அவர்கள் என்னை விசித்திரமாய் பார்த்தார்கள். பையன் என்னவோ உளறுகிறான் என்று விட்டு விட்டார்கள். ஆனால் அதன் பின்பு நான் பக்கத்து வீட்டில் ஏதாவது மாந்திரீக பூஜை நடக்கும் போதெல்லாம் பலதையும் பார்க்க ஆரம்பித்தேன். ஒருநாள் ஆந்தை, இன்னொரு நாள் வௌவால், ஒரு நாள் மண்டை ஓடு, இன்னொரு நாள் அதுவரைக்கும் பார்த்திருக்காத ஒரு வினோத உருவம்... கடைசியாய் பார்த்த உருவத்தின் வாயில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த நாள் இரவு எனக்குக் கடுமையான காய்ச்சலே வந்து விட்டது. ஆரம்பத்தில் கற்பனையாய் எதோ பையன் உளறுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த என் அப்பாவுக்கு இதில் நிஜமாகவே எதோ இருக்கிறதென்று மெள்ளப் புரிய ஆரம்பித்தது. அவர் ஒரு நாள் அந்த மந்திரவாதியிடமே போய் நடந்ததையெல்லாம் சொல்லி இதெல்லாம் எதனால் என்று கேட்டார்.”

 

“சோமையாஜுலு மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் என்னைக் கூப்பிட்டு நான் எப்போது, எதைப் பார்த்தேன் என்று விவரமாய்க் கேட்டார். நானும் சொன்னேன். அவர் என்னை அனுப்பிவிட்டு என் அப்பாவிடம் எனக்கு ஒரு விசேஷ சக்தி இருக்கிறதென்று சொன்னார். ”மாந்திரீகத்தால அனுப்பப்பட்ட ஏவல் சக்தி, அனுப்பிய மந்திரவாதிக்கும், அந்தச் சக்தியால தாக்கப்படற ஆளுக்கும் மட்டும் தான் தெரியும். ஆனால் உங்க மகனுக்கும் அதைப் பார்க்கற சக்தி இயல்பாகவே வந்திருக்கு. இது பல லட்சம் பேர்ல ஒருத்தருக்கு மட்டும் தான் வாய்க்கும். இந்த அபூர்வசக்தி உங்க மகனுக்கும் கிடைச்சுருக்கு” என்று சொன்னார்.”

 

“எங்கப்பா பயந்துட்டார். ’என் மகனுக்கு இதெல்லாம் வேண்டாம். இது வராமல் இருக்க எதாவது செய்ய முடியுமா’ என்று கேட்டார். அதற்கு சோமையாஜுலு “இந்த மாதிரி சக்தி தானாய் வரும். தானாய் போகலாம். நாமாய் ஒன்னும் செய்ய முடியாது’ என்று சொல்லி விட்டார். அதைக் கேட்டு என் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். அதற்கு சோமையாஜுலு சொன்னார். “இதெல்லாம் எல்லாருக்கும் அமையாது. மாந்திரீகம் பண்ற எனக்கே நான் அனுப்பற ஏவல் சக்தி மட்டும் தான் தெரியும். வேற யாரோ யாருக்கோ அனுப்பிய ஏவல் சக்தியை என்னால் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்டவன் என் கிட்டயே வந்து கேட்டாலும் நான் அதற்கான விசேஷ பூஜைகள் எல்லாம் செஞ்சா தான் எனக்கே தெரியும். அப்படி இருக்கறப்ப உங்க மகனுக்கு எந்தப் பூஜையும், முயற்சியும் இல்லாமலேயே தெரியுதுன்னு சொன்னால் அது பெரிய பாக்கியம்.”

 

“அவர் அது மட்டும் சொல்லவில்லை. அவரிடம் வருகிற, பில்லி சூனியம், ஏவல் சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு இருக்கிற பாதிப்பைப் பற்றிச் சொல்ல என்னை அவருடன் அனுப்ப முடியுமா” என்று கூட அப்பாவிடம் கேட்டார். ”கஷ்டமான பூஜைகள் இல்லாமயே உங்க பையனால சிலதைப் பார்க்க முடியுது. கொஞ்சம் அவனுக்கு பயிற்சி கொடுத்தா இன்னும் கூட சூட்சுமமான விஷயங்களையும் அவனால பார்த்து சொல்ல முடியும். அதற்கெல்லாம் அதிக நேரம் ஆகாது. உங்க மகனை நான் சொல்ற சமயங்கள்ல அனுப்பி வைச்சா நான் பணமும் தாராளமாய் தர்றேன்” என்றும் சொன்னார். நாங்களும் அப்போது பணம் போதாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருந்தோம். ஆனாலும் என் அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மாதிரி பணம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டார்.”

 

“ஒருவிதத்தில் அதுவும் நல்லதாயிற்று. இரண்டு வருடங்கள் கழித்து  சோமையாஜுலுவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரு முரட்டு அரசியல்வாதி தனக்கு வந்திருக்கிற கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் சோமையாஜுலு செய்திருக்கும் பில்லி, சூனியம் தான் என்று நினைத்து வாடகைக் கொலையாளிகளை வைத்து சோமையாஜுலுவைக் கொன்று விட்டார். அந்த காலத்தில் அது ஆந்திராவில் மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. நானும் அவர் கூட போய் வந்து கொண்டிருந்தால் என்ன ஆகிருக்குமோ தெரியவில்லை...”

 

கல்பனானந்தா ஷ்ரவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளைப் போலவே தான் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அவன் பேசுவதைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

ஷ்ரவன் தொடர்ந்தான். “அவருடைய மரணத்திற்குப் பின்னாலும் அபூர்வமாய் பல வருடங்களுக்கு ஒரு தடவை சிலதை என்னால் பார்க்க முடிந்தது. பெரியவனான பிறகு எதையும் நான் வாய் திறந்து சொல்வதை நிறுத்தி விட்டேன். எனக்கு அபூர்வ சக்திகள் மேல நிறைய ஆர்வம் இருக்கிறது சுவாமினி. ஆனால் நான் உணர ஆசைப்பட்டதெல்லாம் தெய்வீக சக்திகளைத் தான். நம் யோகிஜீக்கு கிடைத்த அந்த தெய்வீக சக்திகளில் ஒரு சிறுதுளி எனக்கு கிடைத்தாலும் அதை நான் பெரிய பாக்கியமாய் நினைப்பேன்…. ஆனால் நான் ஆசைப்பட்டதற்கு எதிர்மாறாய் தான் எனக்கு நடக்கிறது. என்ன செய்வது?”

 

ஷ்ரவன் இங்கு வந்தபின் கிடைத்த முதல் நாள் இரவு அனுபவத்தை மிகுந்த வேதனை காட்டிச் சொன்னான். சில நாட்களுக்கு முன் பார்த்த ஓமன் ஆங்கிலத் திரைப்படத்தின் விளைவாகத் தான் அது இருக்க வேண்டும் என்று சொன்னான். ஆனாலும் அரை மணி நேரம் உணர்விழக்கும்படியாக மிகுந்த சக்தி வாய்ந்த தாக்குதலாக அது இருந்தது என்றான்.

 

“உங்கள் வகுப்பிலும் நான் பார்த்தது அதே ஓநாயைத் தான் சுவாமினி. முதல் தடவை பார்த்த போது அது நாயா ஓநாயா என்ற எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த தடவை நான் பார்த்தது ஓநாய் தான். சந்தேகமேயில்லை. அது உள்ளே நுழைந்து எல்லாரையும் பார்த்தது. பின் போய் விட்டது. அதைப் பார்த்தவுடனே என் கவனமெல்லாம் அங்கே போய் விட்டது. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கூட என் காதில் விழவில்லை. மன்னித்து விடுங்கள் சுவாமினி.”

 

கல்பனானந்தா அதிர்ச்சியில் சிலை போல் அமர்ந்திருந்தாள். அவள் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவ்வளவு சீக்கிரம் நிதானம் தவறும் நபர் அல்ல என்று ஷ்ரவன் கணித்திருந்தான். அப்படிப்பட்டவள் காட்டிய அதிர்ச்சி, இந்த ஓநாய் சமாச்சாரம் அவள் இப்போது தான் கேள்விப்படுகிறாள் என்பதை சூசகமாக அவனுக்கு அறிவித்தது. அனுப்பியவர்கள் இங்கே அவனுக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தை அவளிடம் சொல்லவில்லை போல் தெரிகிறது. ஆனாலும் அவளை இந்தத் தகவல் ஏன் அதிர வைக்கிறது என்று ஷ்ரவனுக்குப் புரியவில்லை. ஆச்சரியம், திகைப்பு சரி தான். ஆனால் அதிர்ச்சிக்கு என்ன காரணம்?    

 

கல்பனானந்தா சீக்கிரமே நிதானத்திற்கு வந்து மெல்ல கேட்டாள். “இந்த தடவை ஓநாயை மட்டும் தான் பார்த்தீர்களா? அந்த இளைஞனை நீங்கள் பார்க்கவில்லையா?”

 

”இல்லை சுவாமினி”

 

கல்பனானந்தா அமைதியாகச் சொன்னாள். “அபூர்வமாய் ஏவல்சக்தியைப் பார்க்க முடிந்த சக்தி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது நீங்கள் விரும்பாத சக்தியானாலும், வருத்தப்பட என்ன இருக்கிறது? பிடிக்கா விட்டால் அலட்சியப்படுத்தி விடலாமே?”

 

ஷ்ரவன் வருத்தத்தோடு சொன்னான். “நான் சின்ன வயதில் பார்த்தது ஏவல் சக்திகளாய் இருக்கலாம். ஆனால் இப்போது பார்ப்பது சினிமாவில் பார்த்ததாக அல்லவா இருக்கிறது சுவாமினி. இது இன்னும் மோசமாகவல்லவா இருக்கு.”

 

“ஏன் சினிமாவில் பார்த்தது என்று சொல்கிறீர்கள். இதுவும் உண்மையில் ஏவல் சக்திகளாய் இருந்தால்?”

 

“சூரியன் இருக்கும் இடத்தில் எப்படி இருட்டு இருக்க முடியும் சுவாமினி? யோகிஜி வாழ்கிற இடத்தில் எப்படி துஷ்ட ஏவல் சக்திகள் உலாவ முடியும்?”

 

கல்பனானந்தாவின் பார்வை மேலும் கூர்மையாகியது. அவன் மனதில் ஆழத்தில் உள்ளதைப் பார்க்க விரும்புபவள் போல் பார்த்தாள்.


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, February 6, 2025

சாணக்கியன் 147

 

சாணக்கியரைச் சந்தித்த போது பர்வதராஜன் அன்பு, பணிவின் கலவையாக இருந்தான். அவர் கால்களைத் தொட்டு வணங்கிய அவன், மலைகேதுவும் அவர் கால்களைத் தொட்டு வணங்கும் வரை கூப்பிய கைகளைப் பிரிக்கவில்லை. மகனும் தந்தையைப் பின்பற்றி கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் நின்றான். அதனால் உடன் வந்திருந்த குலு, காஷ்மீர, நேபாள மன்னர்களுக்கும் சாணக்கியரைக் கால் தொட்டு வணங்கும் கட்டாயம் ஏற்பட அவர்களும் அதையே செய்தார்கள். அனைவருக்கும் அவர் “வெற்றி உண்டாகட்டும்” என்று ஆசிர்வதித்தார்.

 

அவர்கள் அனைவரும் அமர்ந்தவுடன் சாணக்கியர் அதிக பீடிகை எதுவும் இல்லாமல் விஷயத்திற்கு வந்தார். “நாம் பாரதத்திலேயே வலிமையும் வளமும் வாய்ந்த மகத சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துப் படையெடுத்துக் கிளம்பி இருக்கிறோம். இப்போது நாம் அனைவரும் சேர்ந்த பின்பும் கூட மகதப் படைகளின் வலிமைக்கு ஈடாகி விட மாட்டோம். அவர்களிடமிருக்கும் அளவுக்கு நிதியும் நம்மிடம் இல்லை. இந்தக் குறைபாடுகளை எல்லாம் நம் அறிவின் கூர்மையாலேயே சரி செய்ய வேண்டியிருக்கிறது....”

 

பர்வதராஜன் இடைமறித்துச் சொன்னான். “அது தாங்கள் இருப்பதால் ஏற்கெனவே சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நான் நம்புகிறேன் ஆச்சாரியரே. தாங்கள் அழைத்தவுடன் வேறெதுவும் கேட்காமல் நாங்கள் அனைவரும் வந்திருப்பதே தங்களை நம்பித் தான். அதை நேற்று மாலை காஷ்மீர மன்னரும் என்னிடம் தெரிவித்தார்...”

 

காஷ்மீர மன்னனும் தலையசைக்க சாணக்கியர் அந்தப் பாராட்டைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்தார். “அறிவு தனநந்தன் பக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. ராக்‌ஷசர் ஒருவரது அறிவும் திறமையுமே இன்று மகத நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்துகிறது என்றே சொல்லலாம். தனநந்தனைப் போன்ற அரசனை வைத்துக் கொண்டு அந்த அளவு சிறப்பான நிர்வாகத்தைத் தர முடிவது மிகவும் கஷ்டம்.”

 

எதிரியின் சிறப்பையும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் சொல்ல முடிந்த சாணக்கியரை அவர்கள் வியப்புடன் பார்க்க சாணக்கியர் தொடர்ந்தார். ”நாம் படையெடுத்து வரப்போவது தனநந்தனுக்குத் தெரிய வந்திருக்கிறது என்று நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர்களும் நம்மை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒன்றிருக்கிறது. நாம் எங்கே எப்போது எப்படித் தாக்குவோம் என்று அவர்களால் யூகிக்க வழியில்லை. மகதம் போன்ற பரந்த சாம்ராஜ்ஜியத்தின் நீள அகலங்கள் அவர்களுடைய மிகப் பெரிய பலம் என்றாலும் விளக்கின் அடியில் சிறு இருட்டு இருப்பது போல, எல்லா பலங்களுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு பலவீனம் மறைந்தே இருக்கிறது. அந்த வகையில் மகதத்தின் பலமே பலவீனமும் ஆகிறது. நாம் அவர்களது பரந்த எல்லைகளில் எங்கேயும் தாக்கலாம். அவர்களிடம் எத்தனை பெரிய படைகள் இருந்தாலும் அவர்களது எல்லைகளும் பரந்திருப்பதால் எல்லா இடங்களிலும் அந்தப் படைகளை அவர்கள் நிறுத்தி வைக்க முடியாது. இந்தப் பலவீனத்தையும், அவர்களது மற்ற பலவீனங்களையும் நமக்குச் சாதகமாக நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

 

அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் சிலாகித்துத் தலையசைத்தார்கள். பர்வதராஜன் மெல்லச் சொன்னான். “அப்படியானால் நாம் எங்கே தாக்கப் போகிறோம் என்பது தாக்கும் வரை அவர்களுக்குத் தெரியக்கூடாது. நாம் அதை மிக ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “சரியாகச் சொன்னீர்கள்”.

 

பர்வதராஜன் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நாம் படையெடுத்து வரும் தகவல் எதிரிகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது என்றால் நம் போக்குவரத்து குறித்த தகவலும் முன்கூட்டியே அங்கே போய்ச் சேர்ந்து விடும் என்றல்லவா அர்த்தம். அப்படி என்றால் நாம் தாக்குவதற்காக எங்கே போகிறோம் என்பதும் அவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடும் அல்லவா?”

 

சந்திரகுப்தன் சிறு புன்முறுவலோடு சொன்னான். ”ஆம். மகத ஒற்றர்கள் புத்திசாலிகள். அவர்கள் பல்வேறு இடங்களில் இப்போது பரவிக் கிடப்பார்கள். அவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை மட்டுமே அவர்களுக்குத் தெரியச் செய்வோம். தெரியக்கூடாதது என்று நாம் நினைக்கும் எதுவும் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை.”

 

“எப்படித் தெரியாமல் போகும்? இத்தனை பெரிய படைகளின் நடமாட்டம் நாம் மறைக்க முடிந்ததல்லவே”

 

“நம் படைகளின் நடமாட்டம் அவர்களுக்குத் தெரியத் தான் போகிறது. ஆனால் நம் உத்தேசம் அவர்களுக்குத் தெரியப் போவதில்லை. ஏனென்றால் தாக்குதல் சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எதுவும் தக்க சமயம் வரும் வரை ஆச்சாரியர் தவிர நம் யாருக்குமே தெரியப் போவதில்லை. ஒரே ஒரு ஆளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம் தான் உண்மையான ரகசியமாக இருக்க முடியும். அதனால் அதை நாம் ஆச்சாரியரிடமே விட்டு விடுவோம்.”

 

பர்வதராஜன் திகைத்தான். அவனுக்கு சந்திரகுப்தன் சொன்னதில் இருந்த உண்மை புரிந்து தானிருந்தது என்றாலும் அவன் அறியாத ரகசியங்களை அவனால் சகிக்க முடிந்ததில்லை. அவன் திகைப்பில் ஆழ்ந்து இருக்கையில் நேபாள மன்னன் சொன்னான். “அதுவும் சரி தான். இப்போது இங்கிருக்கும் நம் ஏழு பேருக்கு அந்த ரகசியம் தெரிய வந்தால் அதில் நம்மை அறியாமல் யதேச்சையாக ஒருவர் மூலமாக ரகசியம் கசிந்தாலும் நம் திட்டம் வீணாகி விடும். பிறகு யார் மூலம் கசிந்தது என்று ஆராய்ந்து கொண்டிருந்து ஒன்றும் ஆகப் போவதில்லை...”

 

காஷ்மீர மன்னனும் குலு மன்னனும் கூடத் தலையசைக்கவே பர்வதராஜன் இனி எதிர்மாறாகச் சொல்வது தன் நிலையைப் பலவீனப்படுத்தி விடும் என்று புரிந்தவனாகச் சொன்னான். “முன்பே நான் சொன்னபடி நாங்கள் ஆச்சாரியரை நம்பி வந்திருக்கிறோம். நமக்கு வெற்றி தான் முக்கியம். அதற்கு அவர் சொல்கிறபடியே செய்வோம்.”    

 

சாணக்கியர் சொன்னார். “உங்கள் நம்பிக்கை வீண் போகாது.... அடுத்தபடியாக நமக்கு மிகவும் அனுகூலமாக இருக்கப் போகும் அவர்களது மிகப்பெரிய பலவீனம் மகத மக்கள். தனநந்தனின் கடுமையான வரிகள் மக்களிடம் கடும் அதிருப்தியை விளைவித்திருக்கின்றன. அவர்கள் அவன் ஆட்சிக்கு மாற்றான ஒரு ஆட்சி வருமானால் மகிழ்ச்சியோடு ஆதரவு தரும் மனநிலையில் இருக்கிறார்கள். அதனால் நாம் எங்கு சென்றாலும் மகதப் படையினரிடமிருந்து எதிர்ப்பு வரலாமே ஒழிய மக்களிடமிருந்து ஆதரவே கிடைக்கும். இதுவும் நமக்குச் சாதகமே.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “இந்த சாதக அம்சத்தைப் பயன்படுத்தி சிறிது காலமாகவே ரகசியமாக பல பகுதிகளில் மக்களிடம் தொடர்பை வலுப்படுத்தி வந்திருக்கிறோம். அது இந்தச் சமயத்தில் கண்டிப்பாக நமக்கு உதவும்.”

 

குலு மன்னன் வியப்புடன் சொன்னான். “நீங்கள் முன்கூட்டியே இதை எல்லாம் செய்து வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”

 

சாணக்கியர் சொன்னார். ”இன்று ஒரு கனி நமக்குக் கிடைக்க வேண்டுமானால் பல வருடங்களுக்கு முன்பே மரத்தை நட்டு வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியமல்லவா? தேவையின் நேரத்தில் விதைப்பது பயன் தராதல்லவா? அது போலத் தான் இதுவும். இது மட்டுமல்ல நாங்கள் வேறு பல வேலைகளையும் முன்பே செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அறுவடைக் காலத்தில் தான் உங்களை அழைத்திருக்கிறோம்”

 

பர்வதராஜன் திருப்தியுடன் தலையசைத்தான். விதைக்கும் காலத்திலிருந்தே உடனிருந்து நீர் ஊற்றிப் பராமரித்துக் கஷ்டப்பட்டுக் கடைசியில் கனியைப் பறிக்க வைக்காமல், கனி பறிக்க மட்டும் அழைத்தது தான் இந்தத் திட்டத்திலேயே  அவனுக்கு மிகவும் பிடித்த பகுதி. அதுவும் பறித்ததில் பாதி வேண்டும் என்று அவன் பேரம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறான். கூட இருக்கும் இந்த முட்டாள் மன்னர்கள் பசியாறச் சில கனிகளே தாராளம். மீதி எல்லாம் தனக்கு என்ற எண்ணமே அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

 

பாடலிபுத்திரத்தின் உள்ளே நுழையக் காத்திருப்பவர்கள் வரிசை அன்று மிக நீண்டிருந்தது. அதிக ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதால் வரிசை நீண்டிருக்கவில்லை.  மாறாக ஒவ்வொருவரையும் சோதித்துப் பார்க்க காவலர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள். வணிகர்களையும், பெரிய மூட்டைகளுடன் வந்திருப்பவர்களையும் சோதனை செய்து திருப்தி அடைய அவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. ஆனால் சந்தேகம் எதையும் ஏற்படுத்தாத வெறும் யாத்திரீகர்கள், குறைந்த உடைமைகளுடன் வந்திருந்தால் அவற்றைச் சீக்கிரமே பரிசோதித்து விட்டு உள்ளே அனுமதித்தார்கள். அந்த வரிசையின் கடைசியில் முதிர்ந்த மகானின் வேடமணிந்து சின்ஹரன் நின்றிருந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்   





     

Monday, February 3, 2025

யோகி 88

 

ஷ்ரவனின் அன்றைய வகுப்புகள் வழக்கம் போல் இருந்தன. பிரம்மானந்தர் புராணம் திணிக்கப்படாமல் இருந்திருந்தால், அவற்றில் குறை சொல்ல எதுவுமில்லை. இத்தனை முறை அவர் பெயரைச் சொல்லியே ஆக வேண்டும் என்று இலக்கொன்றை வைத்திருப்பவர்கள் போல், கற்றுத் தந்த துறவிகள் அவர் பெயரை வலுக்கட்டாயமாகச் சேர்த்துச் சொன்னார்கள். அதைக் கேட்டு முகத்தில் சலிப்பைக் காட்டிய மூவரில் ஸ்ரேயாவும் ஒருத்தி என்பதை ஷ்ரவன் கவனித்தான்.

 

அன்று மதிய உணவு, மாலை தேனீர் வேளைகளில் அவனைக் கூடுதலாக யோகாலயத்து ஆட்கள் கவனிப்பது அவனுடைய கவனத்திற்கு வந்தது. கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியவன் என்ற உயர்நிலைக்கு மாறியது எப்படி என்பது ஷ்ரவனுக்குப் தெரியவில்லை. கூடுதல் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று முயற்சித்து, கூடுதல் சந்தேகத்தை அவர்களிடம் ஏற்படுத்தி விட்டோமோ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

 

அன்று காலை நேர வகுப்புகளில் ஓநாய் பிரவேசிக்கவில்லை. மாலை நேரம் தேனீர் வேளை முடிந்து கடைசி வகுப்பு கல்பனானந்தாவினுடையது. அந்த வகுப்பில் மறுபடி ஓநாய் வருமா? கூடுதல் தகவல் எதாவது சொல்லுமா? என்று ஷ்ரவன் ஆவலுடன் எதிர்பார்த்தான். அவள் வகுப்பிலும் ஓநாய் பிரவேசிக்கவில்லை. ஆனால் கல்பனானந்தாவும் தன் வகுப்பு நேரத்தில் அவனைக் கூடுதலாகப் பார்த்தாள். ’இவளுமா?’

 

அனைவரும் அவனைக் கூடுதலாகக் கண்காணிக்க என்ன காரணம் என்பது வகுப்பு முடியும் வரை அவனுக்குப் பிடிபடவில்லை. வகுப்பு முடிந்தபின் கல்பனானந்தா எப்போதும் போல் உடனடியாக வெளியேறி விடாமல் நின்றிருந்தாள். ஒரு முதியவர் அவளிடம் எதையோ கேட்கச் சென்றார். அதைப் பார்த்து இன்னொருவரும் அவர் பின்னால் சென்றார். அவர்கள் இருவரும் அவளிடம் எதையோ கேட்டார்கள். அவள் அவர்கள் கேட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை ஷ்ரவன் மீதே அதிகம் இருந்தது.

 

ஷ்ரவனுக்கு அவள் அவனிடம் எதையோ சொல்லவோ, கேட்கவோ விரும்புகிறாள் என்று தோன்றியது. மற்றவர்கள் எல்லாரும் வெளியேற ஷ்ரவன் கல்பனானந்தா அருகில் சென்றான். அவள் அவசரமாக தன்னிடம் கேள்வி கேட்ட இருவருக்கும் பதில் சொல்லி விட்டு அவனிடம் சிறு புன்னகையுடன் சொன்னாள். “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. பேசலாமல்லவா?” 

 

அவனும் புன்னகையுடன் தலையசைத்தான். அந்த முதியவரும், மற்றவரும் சென்று விட, கல்பனானந்தா தன்னுடன் வரும்படி ஷ்ரவனிடம் சமிக்ஞை செய்துவிட்டு, வகுப்பறையை ஒட்டியிருந்த ஒரு அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். அங்கு பெரிய மேஜையும் ஆறு நாற்காலிகளும் இருந்தன.  கல்பனானந்தா ஒரு நாற்காலியில் அமர்ந்து மேஜைக்கு அந்தப் பக்கம் இருக்கும் எதிர் நாற்காலியில் அவனை அமருமாறு சைகை செய்தாள். அவள் காட்டிய நாற்காலியில் ஷ்ரவன் அமர்ந்தான். அவனுக்கு நேர் எதிரே கண்காணிப்பு காமிரா இருந்தது. அதைக் கவனித்தது போல் ஷ்ரவன் காட்டிக் கொள்ளவில்லை.

 

நீண்ட காலம் பழகியவள் போல் சினேகத்துடன் புன்னகைத்த கல்பனானந்தா அவனிடம் கேட்டாள். “வகுப்புகள் எல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்கின்றனவா? இல்லை, ஏதாவது குறையை நீங்கள் உணர்கிறீர்களா?”

 

“ஒரு குறையும் சொல்வதற்கில்லை. அருமையாக இருக்கின்றன, ஸ்வாமினி” என்று தன் நெஞ்சில் கைவைத்து ஷ்ரவன் சொன்னான்.

 

“மகிழ்ச்சி. முடிந்தவரை எளிமைப்படுத்தி தான் எல்லாவற்றையும் சொல்கிறோம். ஆனால் அதற்கும் மேல் எளிமைப்படுத்த முடியாதல்லவா?”

 

“உண்மை தான் சுவாமினி”

 

”ஏன் உங்களை அழைத்துக் கேட்டேன் என்றால், நீங்கள் இந்தப் பாட விஷயங்களில் இயல்பான ஆர்வம் இருப்பவர் போல நான் உணர்ந்தேன். அதனால் நாங்கள் கற்றுத் தரும் முறையில் குறையிருந்தால் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக உங்களால் அதை உணர முடியும். அதனால் நீங்கள் குறை என்று எதையாவது சொன்னால் நாங்கள் அதைச் சரிசெய்து கொள்ளலாம் அல்லவா?”

 

“யோகிஜி வழிநடத்தியபடி வகுப்புகளை நீங்கள் நடத்தும்போது குறை எப்படி இருக்க முடியும் சுவாமினி”

 

”நன்றி. தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்களே?”

 

“கண்டிப்பாய் நினைக்க மாட்டேன் சுவாமினி, கேளுங்கள்”

 

“நேற்று என் வகுப்பில் திடீரென்று உங்கள் கவனம் நான் சொல்வதிலிருந்து விலகி விட்டதை நான் கவனித்தேன். நீங்கள் வெற்றிடத்தை வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள். சிறிது நேரம் கழித்து தான் உங்கள் கவனம் நான் சொல்வதில் திரும்பியது. எனக்கு நான் தான் சுவாரசியமாகப் பாடம் நடத்தத் தவறி விட்டேனோ என்று சந்தேகம் வந்து விட்டது.”

 

ஷ்ரவனுக்கு இப்போது கூடுதல் கண்காணிப்பின் காரணம் புரிந்து விட்டது. நேற்று அவன் பார்த்தது என்ன என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். காசர்கோடு மந்திரவாதி தாயத்து கட்டி விட்டுப் போய் பாண்டியனுக்கும், சுகுமாரனுக்கும் பாதிப்பு குறைந்து விட்டாலும் அந்த ஓநாய் யோகாலயத்திற்கு வந்துள்ள ஷ்ரவனைத் தாக்கியது அவர்களுக்குப் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி மற்றவர்களையும் அது தாக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பயப்படுகிறார்கள். இப்போது ஓநாய் அவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறது என்பதால் தான் அவனுக்குத் தெரிவதை எல்லாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

 

அவன் மூளை மிக வேகமாய் வேலை செய்ய ஆரம்பித்தது. பிரம்மானந்தர் சொன்ன பயிற்சியை அவன் செய்து கண்டிப்பாய் ஓநாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்காது. இனியும் அந்தப் பயிற்சியையே காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அவன் மேல் சந்தேகம் ஏற்படுவது உறுதி. இவனே எதிரியாக இருக்கலாம் என்ற யூகத்தை அவர்கள் விரைவாகவே எட்டி விடலாம். அதனால் அவர்கள் நம்பும்படியாக வேறு ஒரு காரணத்தை அவன் சொல்ல வேண்டும், அவர்களுக்கு நண்பனாகவும், தேவைப்படும் நபராகவும் அவன் ஆக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் தான் அந்த ஓநாய் கல்பனானந்தாவின் வகுப்புக்கு வந்து அவளையே பார்த்து நின்று ’அடுத்ததாய் இவள் மூலமாய் வாய்ப்பு வரும், பயன்படுத்திக் கொள்’ என்று அவளை அவனுக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றிருக்கிறது.

 

இப்போது அவன் சொல்லப் போகும் காரணம் அவர்கள் நம்பக்கூடிய காரணமாகவும், கூடுதல் சந்தேகத்தைக் கிளப்பாத அளவுக்கு உண்மைத் தன்மை இருக்கும் காரணமாகவும் இருக்க வேண்டும்....

 

அவன் பதில் எதுவும் சொல்லாமல் யோசிப்பது அவளுக்கு, தயக்கமாகவும், சொல்ல மனமில்லாமையாகவும் தோன்றியிருக்க வேண்டும். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெல்லச் சொன்னாள். “சொல்லத் தயக்கமாக இருந்தாலோ, விருப்பம் இல்லாமல் இருந்தாலோ சொல்ல வேண்டாம். பரவாயில்லை.”

 

ஷ்ரவன் அதற்குள் ஒரு திட்டத்தைக் கச்சிதமாய் எட்டியிருந்தான். “அப்படியெல்லாம் இல்லை ஸ்வாமினி. நான் சொல்வது உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம். அதையெல்லாம் சொல்லி நான் உங்கள் நேரத்தை வீணடித்து விட்டதாகத் தோன்றலாம். அதை யோசித்து தான் தயங்கினேன். மற்றபடி எனக்கும், நான் தினமும் வணங்கும் யோகி பிரம்மானந்தாஜி அவர்களின் பிரதான சிஷ்யையான உங்களிடம் என் பிரச்சினையைச்   சொல்லி என் மனப் பாரத்தைக் குறைத்துக் கொள்ள ஆசை தான்.”

 

”பரவாயில்லை ஷ்ரவன், சொல்லுங்கள். யோகிஜியின் பக்தர்களுக்கு வரும் பிரச்சினை எங்களுடைய பிரச்சினையும் கூட. அதனால் எதைச் சொல்லவும் நீங்கள் தயங்க வேண்டியதே இல்லை.”

 

பாண்டியனும் பிரம்மானந்தாவும் நேரடியாக அந்தப் பதிவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வைக்கு இந்தப் பதிவு செல்லும் என்று ஷ்ரவன் அறிந்திருந்தாலும் அவர்கள் நேரலையிலேயே இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியவில்லை.

 

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இருக்கிறோம் என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்த ஷ்ரவன் சற்றுத் தலைதாழ்த்தி அவளைக் கைகூப்பி வணங்கி விட்டு சொல்ல ஆரம்பித்தான்.   


(தொடரும்)

என்.கணேசன்