என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 22, 2021

இல்லுமினாட்டி 99


சிந்து அந்த அரங்கை அடைந்த போது மணி ஐந்தரை. அதிக ஆட்கள் அங்கே இருக்கவில்லை. விழா அமைப்பாளர்களும், உதவி பெறும் ஏழைக் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டும் தான் வந்திருந்தார்கள். அரங்கில் முதலிரண்டு வரிசை இருக்கைகளை முக்கியஸ்தர்களுக்கு ஒதுக்கி இருந்தார்கள். அதனால் மூன்றாம் வரிசையில், மேடையில் பேசுபவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படியான, ஒரு இடத்தில் சிந்து அமர்ந்து கொண்டாள். பின் ஓரளவு கூட்டம் சேர்ந்தது.


அவள் தாய் மிருதுளா சரியாக மணி 5.55க்கு அரங்குக்கு வந்தாள். விழா பொறுப்பாளர்கள் அவளை வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தார்கள். சிந்துவுக்கு இன்னும் இருபது வருடங்கள் கூடினால் எப்படி இருப்பாளோ அப்படித் தான் மிருதுளா இருந்தாள். கம்பீரமாகவும், அழகாகவும் தெரிந்தாள். அவளை வரவேற்று ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்த போது தான் அவள் பார்வையை அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் மீது பரவ விட்டாள். அவள் பார்வை சிந்துவின் மீதும் படர்ந்து சிறிது நகர்ந்து மீண்டும் சிந்துவின் மீதே வந்து நிலைத்தது.


தன் பார்வையை நம்ப முடியாதது போல் அவள் கண்களை இறுக்க மூடித் திறந்து திரும்பப் பார்த்தாள். ஆச்சரியமும், திகைப்பும் கலந்தவொரு பார்வை பார்த்த அவளை அப்போது தான் பேச அழைத்தார்கள். அவர்கள் அழைத்த பின்னும் அவள் பல உணர்ச்சிகள் ஒருசேரத் தாக்கப்பட்டவள் போல் சிலையாகச் சில விநாடிகள் அமர்ந்திருந்தாள். பின் சுதாரித்துக் கொண்டவளாக மெல்ல எழுந்து பேசப் போனாள். ஆனால் பேச்சில் எந்தத் தங்குதடையும் இருக்கவில்லை.    இந்தத் தேசத்தில் எதை எதையோ இலவசமாகத் தருகிறார்கள். ஆனால் இலவசமாகத் தர வேண்டிய கல்வியை ஏழைக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறார்கள். அதைச் சரி செய்ய ஆட்சியாளர்கள் எதையுமே செய்வதில்லை...” என்று ஆரம்பித்துப் பேசியவள் முடிவு வரை தெளிவாகவே பேசினாள். பேச்சின் இடையே சிந்துவையும் பார்த்தாள். சிந்து ஆரம்பத்தில் பாதித்த அளவுக்கு அவளைப் பின்னால் பாதிக்கவில்லை போல் தோன்றியது.


தனக்குத் தைரியமும் துணிச்சலும் இவளிடமிருந்து தான் வந்திருக்கிறது என்று சிந்து நினைத்துக் கொண்டாள். ஏனென்றால் அவள் தந்தை அழுத்தமானவர் என்றாலும் அவரிடம் இந்தத் தலைமைக்குணம் இருக்கவில்லை.


மிருதுளா பேசி முடித்த பின் அந்தக் கல்வித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சுமார் அரை மணி நேரம் நடந்தது. பின் தேசிய கீதம் பாடி விழா முடிந்து எல்லோரும் போக ஆரம்பித்த போது மிருதுளா சிந்துவும் போகிறாளா என்று பார்த்தாள். ஆனால் சிந்து அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை.


பின் மிருதுளா மேடையிலிருந்து இறங்க அவளை வழியனுப்ப விழாப் பொறுப்பாளர்கள் பின்னாலேயே வந்தார்கள். சிந்துவும் எழுந்து மிருதுளா வரும் வழியில் நின்றாள். மிருதுளாவை இன்று அவள் விடப்போவதில்லை. மிருதுளா அருகில் வந்து ஆனந்தமான குரலில் “சிந்து?” என்று கேட்டாள். சிந்து முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு லேசாகத் தலையாட்டினாள்.


மகளைப் பாசத்துடன் அணைத்துக் கொண்ட மிருதுளா தன் பின்னால் வந்த விழாப் பொறுப்பாளர்களைத்  திரும்பிப் பார்த்தபடி சொன்னாள். ”இது என் மகள் சிந்து



சிந்து இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஓடிப்போன தாய் செய்யும் காரியமல்ல இது. மிருதுளா அவர்கள் முன்னால் அவளைத் தவிர்க்கத் தான் பார்ப்பாள் என்று சிந்து எதிர்பார்த்திருந்தாள்.


அவர்களுக்கு மிருதுளாவின் குடும்பத்தைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை போல் இருக்கிறது. அதனால் அந்தத் தகவலில் ஆச்சரியப்படாத விழாப் பொறுப்பாளர்களில் மூத்தவர் ஆதங்கத்துடன் சொன்னார். “அடடா தெரியவில்லையே. தெரிந்திருந்தால் நான் இவரையும் மேடையில் அமர வைத்திருப்பேனே.... இவர் என்னவாக இருக்கிறார்?”


மிருதுளா மகளைப் பார்த்தாள். சிந்து சொன்னாள். “நான் சென்னையில் பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்க்கிறேன்...”


சந்தோஷம்என்று அவர் கை கூப்ப சிந்துவும் கைகூப்பினாள். மிருதுளாவா சிந்து போகலாம்என்று சொல்லி நடக்க ஆரம்பிக்க சிந்துவும் கூடவே நடக்க ஆரம்பித்தாள். அவள் இதையும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ’கூடவே வசித்து வருகிற மகளை அழைத்துப் போவது போல அழைத்துப் போகிறாளே, என்னவொரு நடிப்பு. என்னவொரு அழுத்தம்...’


மிருதுளா வெளியே காரை நிறுத்திருந்தாள். விழாப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவள் காரில் ஏறிக் கொள்ள சிந்துவும் ஏறி அவளருகே அமர்ந்து கொண்டாள். கார் கிளம்பியது.


“எப்படியிருக்கே சிந்து?” மிருதுளாவின் குரல் கரகரத்தது.

“நல்லாயிருக்கேன்” சிந்து வறண்ட குரலில் சொன்னாள்.

“எப்போ வந்தே சிந்து?”

”காலைல”

“எங்கே தங்கியிருக்கே?”

சிந்து ஓட்டல் பெயரைச் சொன்னாள்.

“அது எங்க வீட்டுக்குப் பக்கம் தான். அப்பா எப்படியிருக்கார்?”

”யாருக்குத் தெரியும். நான் அவரைப் பாத்து பல வருஷமாச்சு. காலேஜ் முதல் வருஷம் படிக்கறப்ப அந்த வீட்டை விட்டு வெளியே வந்தது. அதுக்கப்பறம் அந்த வீட்டுக்கும் திரும்பிப் போகல. அவரையும் பார்க்கல”

மிருதுளா திகைப்புடன் மகளைப் பார்த்தாள். இந்த நேரம் வரை இல்லாத திகைப்பு இந்த விஷயத்திற்கு வருவது சிந்துவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
”ஏன் சிந்து” என்று மிருதுளா கேட்டாள்.

“ஓடிப்போனவளோட பொண்ணு அந்த வீட்டுல யாருக்கும் வேண்டாம். காலேஜ் போற வரைக்கும் சோறு போட்டதே பெரிய விஷயம்...”

முதல் முறையாக மிருதுளாவின் முகத்தில் பெரும் வலி தெரிந்தது. காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு மகளிடம் சொன்னாள். ”புதிர் போட்டுப் பேசாமல் ஆரம்பத்திலிருந்து சொன்னால் தான் எனக்குப் புரியும் சிந்து...”

சிந்து முதல் முறையாக தன் நினைவுக்குத் தெரிந்த நாட்களில் இருந்து பட்ட சித்திரவதையை அவளிடம் சொல்ல ஆரம்பத்தாள். இது நாள் வரை அவள் பட்ட வேதனைகள் அடுத்தவருக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தவள் அவள். அவர்கள் இரக்கத்துடன் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. ஆனால் இன்று அவள் வேதனைக்கு முழுக் காரணமாய் இருந்தவளிடம் தன் சித்திரவதையைச் சொல்கிறாள். மனம் என்று ஒன்றிருந்தால், மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இந்த சமூக சேவகி பதில் சொல்லட்டும், நியாயம் சொல்லட்டும் என்று சிந்து நினைத்தாள்.

அவள் சொல்ல ஆரம்பித்த பின் சில வாக்கியங்களின் முடிவிலேயே மிருதுளாவின் கண்களில் நீர் பெருக ஆரம்பித்தது. அப்போது ஆரம்பித்த கண்ணீர் மகள் பட்டப்படிப்பு முதலாண்டில் இருந்து தானே சமாளித்ததைச் சொன்ன போது கதறியழ ஆரம்பித்தாள். ஆனால் சிந்துவை அந்தக் கதறல் பாதிக்கவில்லை. யாரிடமும் சொல்லத் தயங்கியதையும் தாயிடம் சொன்னாள். “வேலை பார்த்தேன். கிடைச்ச பணம் பத்தலை. திருட ஆரம்பிச்சேன். எங்கேயும் பிடிபடாமல் திருடுவேன்... நீ என்னை விட்டுட்டு ஓடிப்போன பிறகு எனக்கு செக்ஸ் மேல வெறுப்பு வந்திருந்தது.  இல்லாட்டி எவன் கூடயாவது படுத்தும் கூடச் சம்பாதிச்சிருப்பேன்.... எப்படியோ சமாளிச்சேன். ஆனால் அந்த ஆள் கிட்ட நான் பணம் கேட்கலை... அதை விடப் பிச்சை எடுத்தால் கூடத் தப்பில்லைன்னு பட்டுச்சு”

அதோடு அவள் நிறுத்திக் கொண்டாள். அதற்குப் பின் விஸ்வத்தைச் சந்தித்ததில் இப்போது உதயின் காதலியாய் நடிப்பது வரை அவள் எதையும் மிருதுளாவிடம் சொல்லவில்லை.

“சிந்து... சிந்து... “ என்று அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டு அழும் மிருதுளாவின் மீது இப்போதும் அவளுக்கு இரக்கம் வரவில்லை. யாரோ தெருவில் அழுது கொண்டிருக்கும் ஒரு அன்னியரைப் பார்ப்பது போல் அவள் தாயை ஒரு நிமிடம் பார்த்தாள். சுமார் பத்து நிமிடம் மிருதுளா அழ சிந்து ஜன்னல் வழியாகத் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அந்தத் தெருவில் நடக்கும் மனிதர்களையும், செல்லும் வாகனங்களையும் சிந்து இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பத்து நிமிடங்களில் அழுகையை நிறுத்திக் கொண்ட மிருதுளா மகளிடம் சொன்னாள். “நீ என்னை எவ்வளவு தூரம் வெறுக்கிறாய்னு எனக்குப் புரியுது. அது தப்பில்லை. உன் நிலைமைல நானிருந்தாலும் வேற விதமாய் நினைச்சிருக்க வழியில்லை... தப்பு என் பேர்ல தான். அந்த ஆள் உன்னையும் வெறுப்பார்னு நான் எதிர்பார்க்கலை... அதனால தான் ஏமாந்துட்டேன்...”

சிந்து ஒன்றும் சொல்லவில்லை. ஓடிப்போனவள் மீது இருக்கும் கோபம் மகள் மீதும் ஒரு தகப்பனுக்கு வருவது நியாயமில்லை தான். ஆனால் அதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லும் இந்தச் சமூக சேவகியை அவள் நம்பத் தயாராயில்லை.

உன் கதையைச் சொல்லிட்டே. என் கதையையும் நீ கேட்கணும்.... நான் விவாகரத்து பண்ண முடிவெடுத்த நாள்ள இருந்து உன் அப்பா கிட்ட கெஞ்சாத நாளில்லை. “என் குழந்தையை நான் எடுத்துட்டுப் போறேன்னு தினமும் அழுதழுது கேட்டேன்அந்தச் சண்டாளன் ”என் குழந்தை கடைசி வரைக்கும் என் கூட தான் இருக்கும்னு சொல்லிப் பிடிவாதமாய் மறுத்துட்டார் சிந்து....”

இதென்ன புதுக்கதை என்று சிந்து திகைப்புடன் மிருதுளாவைப் பார்த்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, April 19, 2021

யாரோ ஒருவன்? 28


ருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படும் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்காத க்யான் சந்த் பலவீனமாகச் சொன்னான். “தெரியலையே சார்

நரேந்திரன் க்யான் சந்தையே கூர்ந்து பார்த்தான். படுகாயமடைந்ததாகச் சொல்லப்படும் இவன் உடலில் பழைய காயங்களின் தழும்புகள் எதுவும் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி இல்லை. ஒரு டாக்சியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு அது வெடித்து ஒரு ஆள் முழுவதுமாகக் கருகிவிட்டதாகச் சொல்லப்படுகிற அதே நேரத்தில் அந்த டாக்சியின் டிரைவர் வெளியே தெரிகிற மாதிரி தழும்புகளோ பாதிப்புகளோ இல்லாமல் நல்ல ஆரோக்கியமாகவே இருப்பது நம்ப முடியாத முரண்பாடாகத் தோன்றியது.

நரேந்திரன் கேட்டான். “இன்சூரன்ஸ் கம்பெனியில் டாக்சிக்கு எவ்வளவு கிடைத்தது

பன்னிரண்டாயிரத்து முன்னூறு ரூபாய் தந்தார்கள் சார். அந்தக் காலத்துக்கே அது ரொம்பக் கம்மியான தொகை தான். என்ன செய்யறது சார். கேட்டால் என்னென்னவோ கணக்கு சொன்னார்கள்...”

அதற்குப் பிறகு என்ன செய்தீர்கள்?”

பழையபடி அவன் முகத்தில் திருட்டுத்தனம் தெரிந்து மறைக்கப்பட்டது. “ரொம்ப கஷ்டப்பட்டேன் சார்.  கடைசில என் மனைவி வீட்டுல இருந்து உதவி செஞ்சாங்க. வேற ஒரு புது கார் வாங்கி தொழிலை மறுபடியும் தொடர ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்போ சில வருஷங்களுக்கு முன்னால் தான் நான் இந்த டிராவல்ஸ் ஆரம்பிச்சேன்...”

உங்களுக்கு அஜீம் அகமதைத் தெரியுமா?”

க்யான் சந்த் மூன்று வினாடிகள் மூச்சு விட மறந்தான். பின் மெல்லச் சமாளித்துக் கேட்டான். “எந்த அஜீம் அகமதைக் கேட்கறீங்க சார்?”

உங்களுக்கு எத்தனை அஜீம் அகமதைத் தெரியும்?”

க்யான் சந்த் திருட்டு முழி முழித்து விட்டுச் சொன்னான். “எனக்கு யாரையும் தெரியாது சார்

நரேந்திரன் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே சொன்னான். “வெடிகுண்டு தயாரிக்கிறதில் திறமை வாய்ந்த தீவிரவாதி ஒருத்தன் உங்கள் டாக்சியில் வெடிகுண்டு வெடித்த சமயத்தில் மணாலியில் தங்கியிருந்தான். அவனைப் பற்றி தான் கேட்டேன்.”

அந்த ஆளைத் தெரியாது சார்வேகமாகப் பதில் வந்தது. முகத்தில் கிலி தெரிந்தது. அதுவே அஜீம் அகமதை க்யான் சந்த் நன்றாக அறிவான் என்பதை அறிவித்தது.
அந்தச் சமயத்தில் இங்கே எந்தப் போலீஸ் அதிகாரி இந்த வழக்கை விசாரித்தார் ஞாபகம் இருக்கிறதா?”

ஆரம்பத்தில் ஞாபகம் இல்லை என்று சொல்ல நினைத்த க்யான் சந்த் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு  “மதன் லால்னு ஒரு அதிகாரி இருந்தார். அவர் தான் இதை விசாரிச்சார்என்றான். மதன் லால் அரசியல் செல்வாக்கு உள்ளவன். அவனுக்கு மேலிடத்தில் பலரையும் தெரியும். யாருக்கும் துளியளவும் பயப்படாதவன்.என்னை விட்டு விட்டு இந்த ஆள் அவனைக் கேள்வி கேட்கட்டும். அவன் அரசியல் செல்வாக்கைத் தெரிந்து கொண்டு இந்த ஆள் இந்த விசாரணையே கைவிட்டு விடக்கூடும். இந்த ஆளாக அப்படி விடா விட்டால் இந்த ஆளை எப்படி இந்தத் தேவையில்லாத விசாரணையில் இருந்து விலக வைப்பது என்பதை மதன் லால் பார்த்துக் கொள்வான். இன்னொரு தடவை இந்த ஆள் என் பார்வையில் படாமல் இருந்தால் சரி’.

இப்ப அந்த மதன்லால் எங்கே இருக்கிறார்னு தெரியுமா?” என்று நரேந்திரன் கேட்டான். சிம்லாவில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியுமா என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

தெரியலையே சார்என்றான் க்யான் சந்த்.

தெரியவில்லை என்பது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்என்று நினைத்தபடி நரேந்திரன் எழுந்தான். “அந்த வழக்கு சம்பந்தமாக எதாவது தகவல் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் எனக்குப் போன் செய்து சொல்லுங்கள்என்று சொன்னபடி தன்னுடைய விசிட்டிங் கார்டை நரேந்திரன் நீட்ட க்யான் சந்த் தலையசைத்தபடி வாங்கிக் கொண்டான்.       


வேலாயுதம் பக்கத்து வீட்டைக் கண்காணிப்பதையும், அந்த வீட்டில் குடியிருக்கும் நாகராஜ் கண்ணில் தட்டுப்படுவதையுமே இப்போதும் தன் முழு நேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் நடந்த அந்த இரவு நேரப் பூஜையும் பச்சையும் நீலமுமாய் மின்னிய வர்ண ஜாலமும் அவர் ஆர்வத்தை உச்சத்திற்குக் கொண்டு போயிருந்தது.

சில நேரங்களில் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டை ஆராய்வது, தனது அறை விளக்கை அணைத்து விட்டு தனதறையில் இருட்டில் நின்று கொண்டு பக்கத்து வீட்டு அறையை ஆராய்வது என்று ஆராய்ச்சியில் இறங்கி இருந்த அவர் மீது பக்கத்து வீட்டு நாகராஜின் கடைக்கண் பார்வை இன்னும் விழாதது அவருக்கு வருத்தமாகத் தான் இருந்தது. நாகராஜ் மிகப் பெரிய பணக்காரனாக இருக்கலாம். ஒரு நாள் அரை மணி நேரத்துக்கு ஐந்து லட்சம் சம்பாதிப்பவனாக இருக்கலாம். ஆனால் அவர்களும் ஏழைகள் அல்ல. அவன் அளவுக்கு வருமானம் இல்லா விட்டாலும் கோடிக் கணக்கான சொத்துகளுக்கு அதிபதிகள் தான். அதனால் அவன் அவர்களிடம் நட்பு பாராட்டாத மனத்தாங்கல் அவருக்கு அதிகமாகவே இருந்தது.

இப்போது மாடியிலிருந்து அவர் பார்க்கையில் பக்கத்து வீட்டில் சுதர்ஷன் வெளியே வராந்தாவில்  கால் மேல் கால் வைத்து உட்கார்ந்து கொண்டு யாரிடமோ அதிகார தோரணையில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் அதிருப்தியுடன் முகம் சுளித்தார். வேலைக்கார நாய்கள் எஜமானர்களை விட அதிகமாய் பந்தா காண்பிப்பது அவருக்கு ரசிக்க முடியாத விஷயமாக இருந்தது. அவர் முதலாளியாக இருந்திருந்தால் அவனுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டிச் சரியான இடத்தில் வைத்திருப்பார்….

தாத்தா, இதெல்லாம் மேனர்ஸே இல்லை. எதுக்கு நீங்க பக்கத்து வீட்டை அப்படிப் பார்க்கிறீங்க?” என்று பேத்தி தர்ஷினியின் குரல் கேட்டு வேலாயுதம் திரும்பினார். அவளும் அவள் தாய் மேகலாவும் இன்று அதிகாலையில் தான் ஊரிலிருந்து வந்து சேர்ந்திருந்தார்கள்.

பேத்தியைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. அவளிடம் ரகசியமாய்ச் சொன்னார். “பக்கத்து வீட்டில் ஒருத்தன் புதுசாய் குடிவந்திருக்கான். ராத்திரி ஆச்சுன்னா அவன் வீட்டுல இருந்து பாம்பு சீறுகிற மாதிரி சத்தம் வருது. அவனைப் பார்க்க பகல் நேரத்துல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வி..பி வர்றாங்க. அரை மணி நேரத்துக்கு மேல யாரும் இருக்கறதில்லை. அந்த அரை மணி நேரத்துக்கு அஞ்சு லட்சம் ரூபாய் தரணுமாம். அந்த ஆளுக்கு ஏதோ விசேஷ சக்தி இருக்கறதாய் பேசிக்கறாங்க....”

அவர் மற்ற விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்தார்.  ஆனால் அவர் சொன்ன விஷயங்களே அவள் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் போதுமானதாய் இருந்தன.  “அந்த ஆள் என்ன, சாமியார் மாதிரியா?” என்று கேட்டபடி அவளும் அந்த ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

முதலாளி மாதிரி உட்கார்ந்திருக்கானே அவன் வேலைக்காரன் தான். உண்மையில் முதலாளி உள்ளே இருக்கான். அவன் சாமியாரெல்லாம் இல்லை. திடகாத்திரமாய் இருப்பான். பார்க்க சாதாரண ஆள் மாதிரி தான் தெரிவான். பெயர் நாகராஜாம்...”

அந்த நேரமாகப் பார்த்து நாகராஜ் வெளியே வந்து சுதர்ஷனிடம் என்னவோ பேசிக் கொண்டு நின்றான். வேலாயுதம் சொன்ன மாதிரியே அவன் திடகாத்திரமாய் தெரிந்தான். ஆனால் சாமியார்த்தனம் எதுவும் அவனிடம் தெரியவில்லை.  அவள் தாத்தாவிடம் வேடிக்கையாகக் கேட்டாள். “பெயர் நாகராஜ்ங்கறதால அவரே பாம்பு மாதிரி சீறும் சத்தத்தை எழுப்பறாரோ?”

யாருக்குத் தெரியும்?” என்ற வேலாயுதம் பாம்பையே அந்த வீட்டில் பார்த்த உண்மையைப் பேத்தியிடம் சொல்வதைத் தவிர்த்தார். “ஆனால் தினம் ராத்திரி அந்தச் சத்தம் அங்கேயிருந்து கேட்குது. அதனால தான் ஆர்வமாய் பார்க்கிறேன்.” என்றார்.

அந்த நேரமாகப் பார்த்து தர்ஷினிக்கு தீபக்கின் அலைபேசி அழைப்பு வந்தது. “தீபக் உனக்கு சுவாரசியமான ஒரு விஷயம் எங்க பக்கத்து வீட்டில் நடந்துகிட்டிருக்கு....” என்று தாழ்ந்த குரலில் அவள் சொன்னாள்.

வேலாயுதத்திற்கு அவள் அந்த விஷயத்தை தீபக்கிடம் சொன்னது பிடிக்கவில்லை. ஆனால் அவர் தடுப்பதற்கு முன் அவள் முழுமையாகச் சொல்லியும் விட்டாள். “பக்கத்து வீட்டுக்கு ஒரு ஆள் புதுசா குடி வந்திருக்கார்அவர் வந்ததுக்கப்பறம் அவர் வீட்டுல இருந்து தினம் ராத்திரி பாம்பு சீறுகிற சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்காம்...”

  
(தொடரும்)
என்.கணேசன்

Thursday, April 15, 2021

இல்லுமினாட்டி 98



சாலமன் அந்த சர்ச் நோக்கிக் காரில் போய்க் கொண்டிருந்தார். வாங் வே எழுதியனுப்பிய கடிதத்தை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேறு யாரையும்  நம்பிக் கொடுத்தனுப்பும் நிலைமையில் அவர்கள் இல்லை. தகவல் ஏதாவது விதத்தில் சிறிது கசிந்தாலும் அவர்களுக்குப் பேராபத்து. இப்போது போவதிலும் கூட ஆபத்து இல்லாமல் இல்லை. வருபவன் எதிரி என்று நினைத்து விஸ்வம் இயங்கினால் அதுவும் கூட ஆபத்தில் முடியலாம். ஆனால் வேறு வழியில்லை. இதை எச்சரிக்கையுடனாவது எதிர்கொண்டு தானாக வேண்டும்.

சாலமன் அங்கே செல்லப் பகல் நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தார். விஸ்வம் கண்ணிமைக்கும் நேரத்தில் தாவித் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று தான் எர்னெஸ்டோவுக்கு பல அடுக்குப் பாதுகாப்பு போதாமல் அக்ஷயையும் இல்லுமினாட்டி வரவழைத்திருந்தது. அப்படி இருக்கையில் ஒற்றை ஆளாகப் போகிற அவர் நல்ல வெளிச்சத்தில் மிகவும் கவனமாகப் போக வேண்டியிருக்கிறது. காரின் பின் பக்கத்தில் ஒரு பெயர் அட்டையில்நண்பன்என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்திருந்தார்.

அங்கு சென்று சேர்ந்தவுடன் சற்று தொலைவிலேயே காரை நிறுத்தி அந்தப் பெயர் அட்டையை எடுத்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிதானமாக நடக்க ஆரம்பித்தார்.  


சாலமனின் கார் வந்து நிற்கும் சத்தம் தொலைவில் கேட்டவுடனேயே தியானப் பயிற்சியில் இருந்த விஸ்வம் எச்சரிக்கை அடைந்தான். ஜிப்ஸி வெளியே போயிருந்தான். தனியாக இருந்த விஸ்வம் வேகமாக எழுந்து சென்று மறைந்து நின்று சர்ச்சின் உடைந்த ஜன்னல் வழியே பார்த்தான்.  நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு ஆள்நண்பன்என்ற பெயர் அட்டையைத் தூக்கிப்பிடித்தபடி மிக நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.  

நண்பன் என்ற அட்டையைப் பார்த்து வந்திருப்பவன் நண்பன் என்று நம்பும் அளவு விஸ்வம் ஏமாளியல்ல. வேறு யாராவது அந்த ஆளுடன் வந்து பக்கத்தில் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா என்று விஸ்வம் மின்னல் வேகத்தில் நகர்ந்து மற்ற ஜன்னல்களின் கண்ணாடி இடைவெளிகளில் பார்த்தான். அந்த ஆளுடன் வேறு யாரும் வரவில்லை.  அவன் உத்தேசம் என்னவென்று அனுமானிக்க முடியவில்லை.

முன்னொரு காலம் போல் நினைத்தவுடன் ஒருவன் மனதில் என்ன உள்ளது என்று அறிய முற்படும் அளவு அவனிடம் சக்தி சேமிப்பு இல்லை. ஒவ்வொரு விரயத்தையும் அவன் யோசித்துச் செய்ய வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாஸ்டரைப் போன்ற சக்தி வாய்ந்தவர்களிடம் ஏதாவது முயலும் போது தான் அவன் சக்தி விரயம் அதிகமாகும். அதற்கு மட்டும் தான் அவன் தயங்குவான். ஆனால் இப்போது அப்படியில்லை. இப்போது நரம்புகள் தளர்ந்த இந்த உடலில் சிறிது செலவு செய்தாலும் அதை மீண்டும் சேர்க்கக் காலம் அதிகம் தேவைப்படுகிறது. அவன் எதிரிகளை வெல்ல அதிகபட்ச சக்திப் பிரயோகம் வேண்டியிருக்கும். அதனால் தான் தினசரி சேமிக்கும் சக்தியில் அதற்கு ஒரு கணக்குப்படிச் சேர்த்தது  போக மீதமிருக்கும் சக்தியை மட்டுமே மற்றவற்றிற்கு அவன் செலவு செய்கிறான்.

இப்போது அப்படிச் சேர்த்திருக்கும் மீதமுள்ள சக்தி க்ரிஷ் வீட்டிற்கு அவன் அனுப்பி வைத்திருக்கும் சிந்து மனதை ஊடுருவி அங்குள்ள நிலவரத்தை அறிய வேண்டிச் சேர்த்து வைத்திருப்பது. ஜிப்ஸியும் இல்லாமல் அவன் தனியாக இருக்கையில் இந்த ஆளின் உண்மையான உத்தேசம் அறிய வேண்டுமானால் அந்தச் சக்தியை அவன் செலவு செய்தேயாக வேண்டும்.. வேறு வழியில்லை.... சிந்துவை பத்து நாட்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

சாலமன் திடீரென்று தன் மீது ஒரு அதீத சக்தியின் ஆக்கிரமிப்பை உணர்ந்தார். அது அவரை அப்படியே கட்டிப்போட்டது போல் நிற்க வைத்தது. அவரால் அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. எத்தனையோ முறை விஸ்வத்தின் சக்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறார். சில வர்ணனைகளைப் படித்திருக்கிறார். ஆனால் முதல் முறையாகத் தனிப்பட்ட முறையில் அதை உணரும் போது தான் அதன் வலிமை அவருக்குப் புரிந்தது. அவருடைய எண்ணங்களையும் நோக்கங்களையும் யாரோ பார்வையிடுவது போன்ற பிரமை அவருக்கு வந்தது. சுமார் மூன்று நிமிடங்கள் அந்த நிலை நீடித்தது.  பின் மெல்ல விலகியது. அந்த மூன்று நிமிடங்களும் அவர் அந்தச் சக்தியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரு அடியாவது எடுத்து வைக்க முயன்றார். இல்லுமினாட்டியின் உபதலைவரால் அது முடியவில்லை. விஸ்வத்தைப் பார்த்து இல்லுமினாட்டியே ஏன் பயப்படுகிறது என்பது இப்போது தான் தெள்ளத் தெளிவாக அவருக்குப் புரிந்தது.

அந்தச் சக்தியின் ஆக்கிரமிப்பு விலகியதும் மெல்ல முன்னேறி வந்தவர் சர்ச்சின் உடைந்த ஜன்னல் வழியாக அந்தக் கடிதத்தை வைத்து அது காற்றுக்குப் பறந்து விடாதபடி அதன் மீது ஒரு சின்னக் கல்லையும் வைத்து விட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தார். போகும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கார் ஏறி ஒரு கிலோமீட்டராவது தாண்டும் வரை அவரையும் அறியாமல் அவரிடம் ஒரு படபடப்பு இருந்தது.


விஸ்வம் சாலமனின் கார் கிளம்பும் வரை அந்தக் கடிதத்தைத் தொடவில்லை. வந்திருப்பவர் யார், என்ன உத்தேசம் என்று அந்த ஆளை ஆக்கிரமித்திருந்த மூன்று நிமிட காலத்தில் தெளிவாகத் தெரிந்து கொண்டு விட்டபடியால் அதன் பின் அவன் அவசரப்படவில்லை. கார் கிளம்பும் சத்தம் கேட்ட பிறகு வாங் வேயின் கடிதத்தை எடுத்துப் படித்தான்.

சிறிது நேரத்தில் ஜிப்ஸி வந்தான். அவன் கையில் உணவுப் பொருட்கள் இருக்கும் பை இருந்தது. அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு அவன் விஸ்வம் கையில் இருந்த கடிதத்தைக் கேள்விக்குறியோடு பார்த்தான்.. விஸ்வம் அமைதியாக அந்தக் கடிதத்தை அவனிடம் நீட்டினான்.

அதைப்படித்துப் பார்த்து விட்டு ஜிப்ஸி கேட்டான். “யாரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை உன்னால் யூகிக்க முடிந்ததா?”

“முடிந்தது. என் சக்தியைச் சிறிது விரயம் செய்த பின்....” விஸ்வத்தின் குரலில் சிறிது வருத்தம் தெரிந்தது. ஜிப்ஸியால் அவன் மனதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்க்கையில் எல்லா சக்திகளையும் சிறிது கூட யோசிக்காமல் விரயம் செய்து தொலைத்தும், எதை எல்லாம் இழந்திருக்கிறார்கள் என்ற பிரக்ஞை சிறிதுமில்லாத மனிதர்கள் ஏராளமாக இருக்கும் இந்த உலகில் ஒவ்வொன்றின் முக்கியத்துவமும் புரிந்து சேமித்துக் காத்து வாழும் இவனைப் போன்ற ஒருசிலரும் இருக்கிறார்கள்...

விஸ்வம் சொன்னான். “ஆனால் அந்த சீனாக்காரனை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள நான் என் சக்தியை விரயம் செய்ய விரும்பவில்லை. உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்...”

ஜிப்ஸி வாங் வேயைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.



சிந்து டெல்லியில் தாய் மிருதுளா வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினாள். அந்த ஓட்டலில் இருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் தாயின் வீட்டை அவள் அடைந்து விடலாம். தாயை அவள் வீட்டுக்கே போய்ச் சந்திக்க சிந்துவுக்கு விருப்பமிருக்கவில்லை. அவளுக்குத் தாயின் இரண்டாம் கணவனையோ, அவள் மகனையோ சந்திக்கப் பிடிக்கவில்லை. தாயிடம் போனில் பேசி ஏதாவது ஒரு பொது இடத்திற்கு அவளை வரவழைத்துப் பேசலாம் என்று எண்ணியிருந்தாள். அழைத்தால் அவள் வருவாளா, வந்தாலும் என்ன சொல்வாள் என்றெல்லாம் யோசித்துப் பார்த்தாள். ஏதேதோ கற்பனைகள் விரிந்தன. அவற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமிருக்கவில்லை. வேண்டாவெறுப்பாகப் பேசுவதிலிருந்து கண்ணீருடன் பேசுவது வரைக்கும் பல மாதிரிகள் மனதில் வந்து போயின.

நல்ல வேளையாக அவள் போனில் பேசும் முன் அன்றைய ஆங்கில தினசரிப் பத்திரிக்கையில் அவளது தாய் தலைமையேற்று நடத்தும் ஒரு சமூகப் பொதுநல நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் வந்திருந்ததை சிந்து பார்த்தாள். 25 ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டி அவர்களுக்கு அளிக்கும் ஒரு பொது நிகழ்ச்சி அன்று மாலை ஆறு மணிக்கு ஒரு அரங்கில் நடைபெறுகிறது. கூகுளில் அந்த அரங்கு எங்கே இருக்கிறது என்று சிந்து பார்த்தாள். ஓட்டல் இருக்கும் இடத்திலிருந்து 16 கிலோமீட்டர்கள் என்று கூகுள் தெரிவித்தது.

அன்று மாலை அந்தப் பொது நிகழ்ச்சிக்கு முன்னதாகவே சிந்து கிளம்பினாள்.   

(தொடரும்)
  
என்.கணேசன்

Monday, April 12, 2021

யாரோ ஒருவன்? 27


க்யான் சந்த் அரசு அதிகாரிகளை எந்த இடத்திலும்சூழலிலும்
கண்டுபிடித்து விடுவான். அவர்களிடமிருக்கும் தோரணை அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும். தற்போதும் நரேந்திரன் அவனுடைய டிராவல் ஏஜென்சி அலுவலகத்தில் நுழைந்ததும் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே அவனை அறிந்து கொண்டு விட்டான். இந்த ஆள் போலீஸ் அதிகாரியாகவோ, வருமானவரி அதிகாரியாகவோ தானிருக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளில் இந்தப் பகுதி அதிகாரிகள் அனைவரையும் அவன் அறிவான். கம்பீரத் தோரணை தெரிவதால் இந்த ஆள் அவர்களுக்கெல்லாம் மேல்நிலை அதிகாரியாக இருக்க வேண்டும்.

உள்ளே வந்த நரேந்திரன்  தன் விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்ட க்யான் சந்த் அதை வாங்கிப் பார்த்தான். ரா அதிகாரி. ஐபிஎஸ் ஆபிசர்... அவன் தன் அடிவயிற்றில் இனம் காண முடியாத அச்சத்தை உணர்ந்தான். எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் சொன்ன அவன் மிக மரியாதையாக இருக்கையில் அமரச் சொன்னான்.

நரேந்திரன் அமர்ந்தவுடன் க்யான் சந்த்எங்கேயாவது போக வண்டி வேணுமா சார்?” என்று கேட்டபடி மெல்ல உட்கார்ந்து கொண்டான்.

வண்டி எதுவும் வேண்டாம். இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன்னால் உங்கள் கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது இல்லையா. அதைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறேன்...”

ஒரு கணம் அப்படியே சிலை போல க்யான் சந்த் உறைந்தான். பின் கஷ்டப்பட்டு அதிர்ச்சியிலிருந்து மீண்டு சொன்னான். “கேளுங்க சார்

ஒரு கேள்வி ஒருவனிடம் ஏற்படுத்த முடிந்த மாற்றங்கள், அந்தக் கேள்விக்கு அவன் சொல்லும் பதிலை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மனிதன் கண்டிப்பாகச் சில ரகசியங்களைத் தன்னிடம் வைத்திருக்கிறான் என்பதை அந்த ஒரு கணம் தெரிவித்ததாக உணர்ந்த நரேந்திரன் கேட்டான். ”அந்த வெடிகுண்டை வைத்தது யார் என்று தெரியுமா?”

தெரியலை சார். போலீசாலும் கண்டுபிடிக்க முடியலை...”

உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? உங்களுக்கு எதிரிகள் யாராவது செய்த வேலையாயிருக்கும்னு நினைச்சிருக்கீங்களா?”

இல்லை சார்வெடிகுண்டு வைக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு எதிரிகள் யாருமில்லை...”

அப்படின்னா உங்கள் டாக்சியில் பயணம் செய்த அந்த இளைஞனுக்காக வைக்கப்பட்ட வெடிகுண்டாக அது இருக்குமா?”

தெரியலை சார். இருக்கலாம்....”

அந்த நாள் நடந்ததை எல்லாம் ஞாபகப்படுத்திச் சொல்லுங்களேன்...”
ரொம்ப வருஷமானதால எத்தனை ஞாபகத்தில் இருக்கும்னு தெரியலை....” என்று சொல்லி ஆரம்பித்தவனிடம் குறுக்கிட்டு நரேந்திரன் சொன்னான். ”ஆனாலும் வெடிகுண்டு வைக்கிறதெல்லாம் வாழ்க்கைல தினசரி நடக்கிற சம்பவமில்லையேஅதிலும் பாதிக்கப்பட்ட ஆளுக்கு அந்த நாள் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்னும் கண்டிப்பா சாகற வரைக்கும் மனசிலிருக்கும்... அதனால சொல்ல ஆரம்பியுங்கள். எல்லாம் ஞாபகத்துக்கு வரும். இறந்து போன அந்த இளைஞன் பேர் என்ன?...”

நரேந்திரன் சொன்ன விதத்திலேயேமறதிக்கு வாய்ப்பேயில்லை. அதனால் ஒழுங்காக நினைவுபடுத்திச் சொல்என்ற கண்டிப்பு தெரிந்ததாக  க்யான் சந்த் உணர்ந்தான். ஆனால் அவனுக்கு உண்மையாகவே அந்த இளைஞனின் பெயர் ஞாபகம் இல்லை. அவன் மெல்லச் சொன்னான். ”பேர் ஞாபகம் இல்லை சார். தென்னிந்தியாவிலிருந்து வந்தவன்....”

சரி. அவனை எங்கேயிருந்து எந்த நேரத்தில் வண்டில ஏத்திகிட்டீங்க? அதுல இருந்து ஆரம்பிங்க

க்யான் சந்த் மிகவும் சிரமமான வேலையைக் கொடுத்தது போல உணர்ந்தான். பெயர் ஞாபகம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட இந்த அதிகாரி நிகழ்வுகளையும் நினைவில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நினைத்தவனாக எச்சிலை விழுங்கியபடி சொல்ல ஆரம்பித்தான். “நான் ஒரு சவாரி முடிஞ்சு காலைல வந்துகிட்டிருக்கறப்ப அவன் ஒரு லாட்ஜ்ல இருந்து வெளியே அவசரமாய் வந்துகிட்டிருந்தான். என் டாக்சியைப் பார்த்தவுடனே கைகாட்டி நிறுத்தினான். ஒரு நல்ல ஷூ கடைக்குப் போகணும், ட்ரெக்கிங் ஷூ வாங்கணும்னு சொன்னான்.  அவனைக் காரில் ஏத்திகிட்டு போனேன்....” இது வரை சரளமாகச் சொல்லிக் கொண்டே வந்தவன் மறுபடி எச்சிலை மென்று விழுங்கி விட்டுத் தொடர்ந்தான். “கொஞ்ச நேரத்துல வெடிகுண்டு வெடிச்சுது. பத்தடி தள்ளி விழுந்தேன். என்ன நடந்ததுன்னே தெரியாமல் மயங்கிட்டேன். எழுந்து பார்க்கிறப்ப ஆஸ்பத்திரில இருந்தேன்...”

அந்த இளைஞன் உங்க கார்ல எத்தனை நேரம் இருந்திருப்பான்....”

அந்த இளைஞன் சம்பந்தமாகக் கேட்கும் கேள்விகள் க்யான் சந்தைத் சங்கடப்படுத்தியது அவன் முக பாவனையிலிருந்தே தெரிந்தது. ”சுமார் இருபது நிமிஷம் இருந்திருப்பான்.” என்று அவன் சொன்னான்.

காரில் எப்போது அந்த வெடிகுண்டு வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?”

தெரியலை...” வேகமாக வந்தது பதில். “போலீஸ்காரர்களுக்கும் அதைக் கண்டுபிடிக்க முடியலை

வெடிகுண்டு வெடித்த நேரம் என்ன?”

காலைல பத்து மணில இருந்து பத்தே காலுக்குள்ளார இருக்கும்...”

இடையில் டாக்சியை எங்கேயாவது நிறுத்தினீர்களா?...”

அந்தச் சாதாரண கேள்வி அவன் முகத்திலிருந்த இரத்தத்தை வடிய வைத்து விட்டது போலத் தோன்றியது.  அவன் முகம் வெளுத்ததைக் கவனித்து நரேந்திரன் மனதில் குறித்துக் கொண்டான். ”சிக்னல்ல நிறுத்தியிருப்பேன். வேற எங்கேயும் நிறுத்தலை….”

அப்படியானால் அந்த வெடிகுண்டு அவனுக்காக வைக்கப்பட்டதாய் இருக்க வழியில்லை. அவன் ஏறுவதற்கு முன்னாலேயே வைக்கப்பட்டதாய் இருக்கும் போல அல்லவா தெரிகிறது?”

அவன் தலையை மெல்ல அசைத்தான். அதை மறுக்க வழியில்லை.

நரேந்திரன் கேட்டான். “அன்றைக்குக் காலையில் எத்தனை மணிக்கு சவாரிக்குக் கிளம்பினீர்கள்?”

ஒன்பது மணியிருக்கும்.”

அந்தத் தென்னிந்திய இளைஞன் எத்தனாவது சவாரி?”

இரண்டாவது…”

முதல் சவாரி யார் என்று நினைவிருக்கிறதா? அது தெரிந்த ஆள் தானா?”

ஞாபகம் இல்லை சார். தெரிந்த ஆள் இல்லை. தெரிந்த ஆளாய் இருந்திருந்தால் எனக்கு நினைவிருக்கும்

அந்த விபத்தில் உங்கள் காயங்கள் ஆற எத்தனை காலம் தேவைப்பட்டது. நீங்கள் எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றீர்கள்?”

அரசாங்க ஆஸ்பத்திரியில் தான் இருந்தேன் சார். ஒரு மாசம் ஆச்சு காயங்கள் ஆற...” அவன் அதைச் சொன்ன போது அவனிடம் ஒருவிதப் பயம் தெரிந்தது போல் நரேந்திரனுக்குத் தோன்றியது. இதில் ஏதோ ஒரு தகிடுதத்தம் இருப்பதாக அவன் உள்ளுணர்வுக்குப் பட்டது. அதற்கேற்ற மாதிரி போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டுகளில் புகைப்படங்கள் இல்லை. எப்போதும் இது போன்ற வெடிகுண்டு விபத்துகளில் சம்பவ இடம், பாதிக்கப்பட்ட ஆட்கள், வாகனம் எல்லாவற்றின் புகைப்படங்களும் கூட வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த விபத்தின் புகைப்படங்களோ, காயப்பட்டு விழுந்து கிடக்கும் ஆட்களின் புகைப்படங்களோ கூடப் போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டுகளில் இல்லை என்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.   

டாக்சியை இரவில் எங்கே நிறுத்துவீர்கள்?” நரேந்திரன் கேட்டான்.

என் வீட்டின் முன்னால் தான் சார்

இரவிலிருந்து காலைக்குள் யாராவது வெடிகுண்டை வைத்திருக்கலாம். அப்படித் தானே?”

க்யான் சந்துக்கு இந்தக் கேள்விகள் போகும் போக்கு பிடிக்கவில்லை. ‘இந்த ஆள் கேள்விகளை நிறுத்தினால் தேவலைஎன்று தோன்றினாலும் அதை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தபடி அவன் மெல்லத் தலையை ஆட்டினான்.

ஆனால் அந்த வெடிகுண்டு வைத்தவனின் இலக்கு நீங்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் இருபத்தியிரண்டு வருடம் கழித்தும் நீங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்…”

க்யான் சந்த் தலையசைத்தான். நரேந்திரன் யோசனையுடன் சொன்னான்.  “அந்தத் தென்னிந்தியன் உங்கள் டாக்சியில் உட்கார்ந்த பின் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பில்லை என்பதால் இலக்கு அந்தத் தென்னிந்தியனாகவும் இருக்க வழியில்லை. அப்படி நீங்களும் இலக்கில்லை, அந்தத் தென்னிந்தியனும் இலக்கில்லை என்றால் வெடிகுண்டு ஏன் உங்கள் டாக்சியில் வைக்கப்பட்டது?”  

க்யான்சந்த் எச்சிலை விழுங்கியபடி பரிதாபமாக நரேந்திரனைப் பார்த்தான்.

  
(தொடரும்)
என்.கணேசன்