என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 8, 2022

யாரோ ஒருவன்? 97


மதன்லால் ஜனார்தன் த்ரிவேதியிடம் கேட்டான். “சஞ்சயை நீங்க பார்க்கலையா தலைவரே?”

ஜனார்தன் த்ரிவேதி சலிப்புடன் சொன்னார். “பார்த்துப் பேசிட்டு தான் வந்தேன். ஆனா அவன் தெளிவில்லாம பைத்தியம் மாதிரி பேசறான்.”

மதன்லால் திடீரென்று ஆவேசத்தோடு சொன்னான். “அவன் கூட கொஞ்ச நாள் ஒருத்தன் இருந்தால் போதும் தலைவரே எவனானாலும் சரி  பைத்தியமாயிடுவான்”

“என்ன ஆச்சு மதன்லால்?” ஜனார்தன் த்ரிவேதி குழப்பத்துடன் கேட்டார்.

“அவன் பயந்து நடுங்கறது மட்டுமில்லாம அடுத்த ஆளையும் பயமுறுத்தறதுல அவன் கெட்டிக்காரன். எனக்கும் அவனுக்கும் என்ன வயசு வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறீங்க. ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ இருக்கலாம். அவன் என்னை மதன்லால் அண்ணா, மதன்லால் அண்ணான்னு கூப்பிட்டே சித்திரவதை பண்ணிட்டான்.”

ஜனார்தன் த்ரிவேதி திகைத்தார். இதெல்லாம் ஒரு விஷயம் என்று இவன் சொல்கிறானே என்று நினைத்தவராக அவர் மெள்ள பேச்சை மாற்றினார். “அவனுக்கு ஒழுங்கா பேச வராது. முட்டாள். அவனை விடு. நரேந்திரன் உன்னைக் கடத்திட்டு, எவனோ ஒரு கடத்தல்காரன் தான் கடத்தினான்னு காண்பிச்சுக்க உன் மனைவிக்கு போன் பண்ணி ஐம்பது லட்ச ரூபாய் பணம் கேட்டிருக்கான். அது தெரியுமா உனக்கு?”.

மதன்லால் தெரியும் என்று தலையசைத்து விட்டுச் சொன்னான். “அந்தப்பணத்தை தந்திருந்தா அதை அபராதமா எடுத்துகிட்டு என்னை அவன் விட்டிருப்பான்னு அந்த தடியன் சொன்னான். என் மனைவி பேர்ல நான் சேர்த்தியிருக்கற சொத்து அஞ்சு கோடிக்கும் அதிகமாய் தான் இருக்கும். அதுல எதுவும் அவ அப்பன் வீட்டுல இருந்து சீதனமாய் கொண்டு வந்ததல்ல. அப்படி இருக்கைல நான் சேர்த்துக் கொடுத்த பணத்துல பத்துல ஒரு பாகத்தைக் குடுத்து என்னை மீட்க அவளுக்கு மனம் வரலை. அந்தப் பேயோட நான் இனிமேலும் வாழணுமா தலைவரே நீங்களே சொல்லுங்க…..”

“உன் மன வருத்தம் எனக்குப் புரியுது மதன்லால். அதை விட்டுத்தள்ளு.” என்று சொல்லி ஜனார்தன் த்ரிவேதி முக்கியமான மற்ற விஷயங்களைக் கேட்க நினைத்தார்.

“எப்படித் தலைவரே விட்டுத்தள்ள முடியும்? விட்டுத்தள்ள முடிஞ்ச விஷயமா இது? சில பேர் புருஷனுக்காக உயிரைக்கூடக் கொடுக்கிறாங்க. இந்த சனியன் என்னடான்னா புருஷன் காசையே புருஷனுக்காகக் கொடுக்க மாட்டேன்கிறா.”

“இப்படியும் சில ஜந்துக்கள் இருக்கு. என்ன பண்றது?” என்று இரண்டு வினாடிகள் முகத்தில் சோகம் காட்டி விட்டு ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் ஆர்வத்துடன் கேட்டார். “நரேந்திரன் என்னவெல்லாம் உன்னைக் கேட்டான். நீ என்னவெல்லாம் சொல்லியிருக்கிறாய்”

“எல்லாத்தையும் சொல்லச் சொல்லி கேட்டான். க்யான் சந்தையும் அவன் கடத்தி எங்கயோ வெச்சிருக்கானாம். என்னையே கடத்த முடிஞ்சவனுக்கு க்யான் சந்தக் கடத்தறது பெரிய விஷயமா என்ன. எல்லாத்தையும் அவன் கிட்ட க்யான் சந்த் உளறிட்டான் போலருக்கு. அதனால நான் க்யான் சந்துக்கு என்னவெல்லாம் தெரியுமோ அது வரைக்கும் அவனுக்கு சொல்லிருக்கேன்”

ஜனார்தன் த்ரிவேதி திகைப்புடன் அவனைப் பார்த்தார். ”அவன் நீ சொன்னதை எல்லாம் கண்டிப்பாய் ரிகார்ட் பண்ணி வெச்சிருப்பானே”

மதன்லால் அலட்சியமாய் சொன்னான். “சித்திரவதை பண்ணி அந்த வாக்குமூலத்தை அவன் வாங்கிருக்கான்னு சொல்லிட்டா போச்சு. தலைவரே. அவன் நம்மள என்ன பண்ண முடியும் தலைவரே. ஆமாடா அப்படி தான் உன் அப்பனைக் கொன்னோம். முடிஞ்சதை செஞ்சுக்கோடான்னு அவனை அடுத்த தடவை பாக்கறப்ப சொல்லிடப்போறேன். இவ்வளவு தூரம் அவன் போனதுக்கப்பறம் நான் அவனை விடறதாயில்லை... அவனை புடிச்சு வெச்சு அணு அணுவா சித்திரவதை செய்யணும் தலைவரே. அவனை மட்டுமில்ல தலைவரே. அந்த தடியனையும் தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தன் ரொம்ப திமிரா என் கிட்ட நடந்துகிட்டான். மங்கல் பாண்டேன்னு பேரு. அவனை நான் சும்மா விடலையே. அணு அணுவா சித்திரவதை செஞ்சு கொன்னு அதை தற்கொலையாய் மாத்திட்டேன்...”

ஜனார்தன் த்ரிவேதி தாழ்ந்த குரலில் சொன்னார். “மெல்லப் பேசு. பழைய கதை எல்லாம் எதுக்கு இப்போ?”

“யாருக்கு பயப்படணும் தலைவரே. நான் யாருக்குப் பயப்படணும். என்னைக்கானாலும் சரி அவன் சாவு என் கைல தான். குறிச்சு வெச்சுக்கோங்க”

அவருக்குத் தெரிந்து மதன்லால் திமிர் பிடித்தவனேயொழிய முட்டாள் அல்ல. எப்போதுமே கவனமாகத் தான் வெளியிடங்களில்  பேசக்கூடியவன். அப்படி நெருங்கியவர்களிடம் ஏதாவது ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதென்றாலும் மெல்லிய குரலில் பேசக்கூடியவன். இப்படி சத்தமாய் பேச மாட்டான்.

ஜனார்தன் த்ரிவேதி பேச்சை மாற்றினார். “பாம்பு எப்படி அங்கே வந்துச்சு? யார் அதைக் கொண்டு வந்து விட்டாங்க தெரியுமா?”

மதன்லால் முகம் திடீரென்று மாறியது. நிஜமாகவே பாம்பு அங்கே வந்திருப்பதைப் போல அவன் பயந்து போனான். “பாம்பா? எங்கே?” என்று பீதியுடன் கேட்டவன் கட்டிலிலேயே எழுந்து நின்று கொண்டான். இப்போது இங்கே பாம்பு எதுவும் வரவில்லை, தான் கேட்டது அன்று பாம்பு எப்படி அங்கே வந்தது, அன்று யார் அந்த பாம்பைக் கொண்டு வந்தது என்பதைப் பற்றி என்று சொல்ல அவர் முயற்சித்தது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. “ஐயோ பாம்பு, பாம்பு” என்று அவன் அலற ஆரம்பித்தான்.

அந்தச் சத்தம் பக்கத்து அறையிலிருந்த சஞ்சய் ஷர்மாவையும் பதற வைத்து அவன் அவனது அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடினான். அவன் போகும் போது. ”மதன்லால் அண்ணா ஓடிடுங்க. பாம்பு....” என்று கத்த, மதன்லால் கட்டிலில் இருந்து தாவிக் குதித்து தானும் வெளியே ஓடினான். ஆஸ்பத்திரி அட்டெண்டர்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கூட அவர்களைப் பிடித்து விட முடியவில்லை. அஜீம் அகமதின் ஆட்களும், ஜனார்தன் த்ரிவேதியின் ஆட்களும் கூட அவர்களுடன் சேர்ந்த பின்பே அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த முடிந்தது. மயக்க ஊசி போட்டு இருவரையும் உறங்க வைப்பதற்குள் முழு ஆஸ்பத்திரியும் பரபரப்பாக மாறி விட்டது. ஜனார்தன் த்ரிவேதி இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போனார்.  

அவரைத் தனதறைக்கு அழைத்துக் கொண்டு போன டாக்டர் இருவரின் மூளை ஸ்கேன்களையும் காட்டி அதில் உள்ள நுணுக்கமான பாதிப்புகளைக் காட்டி விட்டு விளக்கினார். “இந்தப் பிரச்னைகள் இருக்கிறதால, பெரும்பாலும் இவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே இருந்தாலும் திடீர் திடீர்னு மாறுவாங்க. சம்பந்தமில்லாம பேசுவாங்க. பயப்படுவாங்க. அந்தரங்க விஷயங்களையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுவாங்க. மொத்தத்துல இவங்க செயல்கள்ல இவங்களுக்குக் கட்டுப்பாடு இருக்காது. ஆனா அது எப்ப நடக்கும்னு நம்மளால திட்டவட்டமா சொல்ல முடியாது. மத்தபடி சாதாரணமாவே இருப்பாங்க. இயல்பாய் பேசுவாங்க. எந்தெந்த வார்த்தைகள், விஷயங்கள் அவங்களைப் பாதிக்குதுன்னு புரிஞ்சுகிட்டு நாம தான் ஜாக்கிரதையாய் அதைத் தவிர்க்கணும்.”

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “இதைச் சரி செய்ய முடியாதா?”

“சில சிகிச்சை முறைகள் இருந்தாலும் மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல எதையும் நிச்சயமாய் சொல்ல முடியாது. மற்ற உறுப்புகள் சம்பந்தமாய் நாம இது சரியாக, குணமாக இத்தனை காலம் தேவைப்படும்னு சொல்ல முடியும். ஆனா மூளை சம்பந்தமான சிகிச்சைகள்ல அப்படிச் சொல்ல முடியாது. முயற்சி செய்து பார்ப்போம்…”

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “இப்படி ஆகக் காரணம் என்ன?”

டாக்டர் சொன்னார். “பாம்புக் கடி விஷம் தான் இந்த பாதிப்புகளுக்குக் காரணம். பொதுவா இந்த மாதிரி விஷப்பாம்புகள் காட்டுப் பகுதிகள்ல தான் இருக்கும்னு சொல்றாங்க. காடுகளுக்குள்ளே வேட்டைக்குப் போகிறவங்களுக்குத் தான் இந்த மாதிரி பாம்புகள் கடிக்க வாய்ப்பு அதிகம். நகர்ப்புறங்கள்ல இது வரைக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நடந்ததில்லை. அதனால இது ஆச்சர்யமாய் இருக்கு”  

என்னென்ன சிகிச்சைகள் உண்டோ அதையெல்லாம் செய்யச் சொல்லி விட்டு ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பிய ஜனார்தன் த்ரிவேதிக்கு, இதற்கெல்லாம் விளக்கமும், தீர்வும் காளிங்க சுவாமியிடம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று தோன்றியது. மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்று உதயமானது.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

Thursday, August 4, 2022

சாணக்கியன் 16

தட்சசீல நகரில் பெரியதொரு போர்வையால் தலையையும், உடலையும் மறைத்துக் கொண்டு நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் அவ்வப்போது தன்னை யாராவது பின் தொடர்கிறார்களா அல்லது பார்க்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொண்டான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை. மாளிகை போல் தோற்றம் அளித்த ஒரு வீட்டினை அவன் நெருங்கிய பின்னும் இருபக்கமும் பார்த்துக் கொண்டான். யாரும் தெரியவில்லை.  நிம்மதி அடைந்தவனாக அந்த வீட்டின் கதவைத் தட்டிய அவன் கதவு திறக்கப்பட பொறுமை இழந்து காத்து நின்றான். கதவு திறக்கப்பட்டவுடன் வேகமாகக் கதவை மூடித் தாளிட்டான்.

 

கதவைத் திறந்து விட்ட அழகு மங்கை கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டதைப் பார்த்தவன் தன் இரண்டு கைகளாலும் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டு கேட்டான். “என் இதய ராணிக்கு ஏன் இன்று என் மேல் கோபம்?”

 

அப்போதும் அவனைப் பார்க்க விரும்பாதவள் போல் கண்களை மூடிக்கொண்ட அந்த மங்கை “பேச்சில் இருக்கும் கரிசனமும், அன்பும் நடத்தையில் இல்லையே சேனாதிபதி” என்றாள்.

 

“ஏன் அப்படி கடூரமான வார்த்தைகளைச் சொல்கிறாய் மைனிகா?” என்று சேனாதிபதி சின்ஹரன் கேட்டதற்கு மைனிகா “நேரம் என்ன ஆகிறது சேனாதிபதி?”

 

“நடுநிசியாகி விட்டது என்பது உண்மை தான் மைனிகா. ஆனால் தாமதத்திற்கான காரணம் என் அலட்சியம் அல்ல. அரசர் என்னையும் அமைச்சரையும் நகர விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். அரசர் பேசிக் கொண்டிருக்கையில் எழுந்து வர முடியுமா?””

 

மைனிகா இது உண்மை தானா என்பது போல் அவனைச் சந்தேகப்பார்வை பார்த்தாள். ”இது என்ன போர்க்காலமா? உங்களை நடுநிசி வரையில் அமர வைத்து அரசர் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதற்கு?”

 

“போர்க்காலம் அல்ல தான். ஆனால் ஆம்பி குமாரன் போரை வரவழைத்து விடுவான் என்று அரசர் பயப்படுகிறார்.”

 

மைனிகா சின்ஹரனை சந்தேகம் தீராமல் இப்போதும் பார்த்துக் கொண்டு நிற்க  சின்ஹரன் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு சொன்னான். ”இன்னும் என் ராணிக்கு சந்தேகம் தீரவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும். முழுவதுமாகச் சொல்கிறேன் கேள். இன்று கேகய நாட்டு தூதர் ஒருவர் அங்கிருந்து அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருந்தார்....”

 

அவன் சொன்னதை எல்லாம் மிகவும் கவனமாக மைனிகா கேட்டுக் கொண்டாள். ”.... அரசர் தவறை ஒப்புக் கொண்டு ”கவர்ந்த பசுமாடுகளை அந்தந்த எல்லைப் பகுதிகளிலேயே ஒப்படைப்பதாக நான் கேகய மன்னனுக்கு வாக்களித்திருக்கிறேன். உடனே அதைச் செய்ய ஏற்பாடு செய்.” என்று ஆம்பி குமாரனிடம் சொன்ன போது அவன் கோபத்தோடு “என் உடலில் உயிர் இருக்கிற வரை நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையே” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அரசர் மகனின் போக்குக்கு வருத்தப்பட்டு எங்களிடம் பேசிக் கொண்டே இருந்தார்.... இப்போதெல்லாம் பேச்சைத் தவிர அவரால் வேறெதுவும் செய்ய முடிவதில்லை. பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அமைச்சராவது அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அமைச்சரும் வயதானவர் என்பதால் அரசரைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்வது அவருக்கு எளிதாக முடிகிறது. ஆனால் எனக்கு அதுவும் முடியவில்லை. அதிலும் பயன் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மனமோ ஒரு கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி முன்பே இங்கே வந்து விட்டது. அதை நீ உணராமல் என்னைத் தவறாக நினைக்கிறாயே என் கண்மணி....”

 

மைனிகா அவன் இதழ்களில் முத்தமிட்டபடியே சொன்னாள். “என்னை மன்னித்து விடுங்கள் சேனாதிபதி. நீங்கள் சொன்ன நேரத்தில் வராதவுடன் நான் அதை அலட்சியமென்று எண்ணி விட்டேன்....”

 

சேனாதிபதி சின்ஹரன் மைனிகாவின் வீட்டிலிருந்து கிளம்பும் போது அதிகாலை நேரமாகி விட்டது. வந்தபடியே போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அவன் வேகமாகச் செல்வதை எதிரே இருந்த ஒரு வைக்கோல்போரின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்த ஒருவன் சிறிது நேரம் பொறுத்து விட்டு வந்து மைனிகாவின் வீட்டுக் கதவைத் தட்டினான்.  

 

அவனும் கதவு திறக்கப்பட்டவுடன் உள்ளே நுழைந்து வேகமாகக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டுக் கேட்டான். “என்ன செய்தி மைனிகா? காந்தார சேனாதிபதி என்ன சொல்கிறான்?”

 

மைனிகாவின் தோற்றமும் தோரணையும் தற்போது முற்றிலும் மாறியிருந்தது. அலங்காரமும், உடைகளில் கவர்ச்சியும், மயக்கும் பார்வையும் இல்லாமல் சாதாரணப் பெண்ணாகக் காட்சியளித்த அவள் சேனாதிபதி சின்ஹரன் சொன்னதையெல்லாம் அந்த மனிதனிடம் அப்படியே தெரிவித்தாள்.

 

அந்த மனிதன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். “அப்படியானால் காந்தாரத்தின் கிழட்டு அரசர் நம் மன்னருக்கு வாக்களித்திருந்தபடி எந்தப் பிராயச்சித்தமும் நடக்கப் போவதில்லை...”

 

“அப்படித்தான் தோன்றுகிறது. வேண்டுமானால் அவரிடமிருந்து நம் மன்னருக்கு வருத்தத்தோடு மன்னிப்புக் கடிதம் வேண்டுமானால் வந்து சேரலாம்.”

 

அந்த மனிதன் முகத்தில் வறண்ட புன்னகை ஒன்று வந்து போனது. “இப்படி நடக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். காந்தார அரசர் எப்போதோ தன் அதிகாரத்தை இழந்து விட்டார். அந்தக் கிழவர் மகன் செயல்களுக்கு வருத்தப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்... இப்போதெல்லாம் ஆம்பி குமாரன் இங்கே அதிகம் வருவதில்லையா?”

 

மைனிகா அவன் பெயரைக் கேட்டவுடன் முகம் சுளித்தாள். தாசியே ஆனாலும் அவளுக்குக் கூட அவனுடன் இருக்கையில் ஏற்படும் அருவறுப்பைத் தவிர்க்க முடிந்ததில்லை. அவன் தோற்றத்திலும், அவன் ஆண்மையிலும் எந்தக் குறையும் சொல்ல முடியாதென்றாலும்  அவன் வாய் திறந்து பேச ஆரம்பித்தால் ஏற்படும் உணர்வு அருவறுப்பாகவே இருந்தது. பேசுகையில் யாரையாவது இழிவு படுத்துவது போல அவனால் பேசாமல் இருக்கவே முடியாது. மேலும் அவன் அடுத்தவர்கள் உணர்வுகளை என்றுமே புரிந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை. தன்னைத் தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்கும் பழக்கம் என்றுமே இல்லாதவன்.... அவள் சொன்னாள். “அவனுடைய அந்தப்புரத்தில் அவனுடைய மனைவிக்குத் தோழியாக ஒரு புதிய பெண் வந்திருப்பதாய் செய்தி வந்திருக்கிறது. இப்போது அவனுடைய முழுக் கவனம் அவள் மீது இருக்கிறதாம்”

 

அந்த மனிதன் சொன்னான். “நல்லது.”

 

மைனிகா கேட்டாள். “அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது தூதர் அங்கே போய் காந்தார அரசரின் பதிலைச் சொன்ன பின் தான் முடிவு செய்யப்படுமா?”

 

“இல்லை மைனிகா. இப்படித் தான் நடக்கும் என்பதை கேகய அமைச்சர் இந்திரதத் முன்பே அனுமானித்திருந்தார். ஆனாலும் முறைப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகத் தான் அந்தத் தூதரை அனுப்பி இருந்தார். இந்திரதத் முன்பு தட்சசீல கல்விச்சாலையில் படித்தவர். அது காந்தார விஷயத்தில் அவரைச் சிறிது மென்மைப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்... நாம் வரும் பௌர்ணமி அன்று செயல்படப் போகிறோம்....”

 

மைனிகா சொன்னாள். “இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன”

 

“ஆம். அதிக காலம் எடுத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. நம் திட்டத்தில் உன்னுடைய பங்கு மிக முக்கியமானது.  சேனாதிபதி சின்ஹரனை உன் பொறுப்பில் விடுகிறேன். காந்தார அரசர் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. ஆம்பிகுமாரன் அந்தப் பெண் இருக்கிற வரை அதற்குத் தயாராக இருப்பானே தவிர போருக்குத் தயாராய் இருக்க மாட்டான். நம் திட்டப்படி எல்லாம் நடக்குமானால் எல்லாம் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விடும். ஆம்பி குமாரனுக்கு ஒரு நல்ல பாடம் புகுத்துவது தான் நம் குறிக்கோள்...  இனி அவன் கேகய நாட்டைக் குறைத்து மதிப்பிட மாட்டான்...”

 

மைனிகா சொன்னாள். “என்னை என் தாய்நாடு நினைவு அதிகம் வாட்டுகிறது. எல்லாம் முடிந்து இங்கிருந்து விடுபட்டால் போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்...”

 

அந்த மனிதன் அவளை எச்சரித்தான். ”ஆனால் தாய்நாட்டுக்குப் போகும் அவசரத்தில் பிழைகள் நேர்ந்து விடக்கூடாது மைனிகா. எச்சரிக்கையை நீ குறைத்துக் கொள்ளக் கூடாது. நான் சொன்னது போல் உன் பங்கு மிக முக்கியமானது...”

 

“எனது பங்கை நான் கச்சிதமாக நிறைவேற்றி விடுவேன். கவலைப்படாதே...”

 

“வெற்றி வாகை சூடிய பிறகு சந்திப்போம் மைனிகா. நான் கிளம்புகிறேன்....”

 

அவள் தலையசைக்க அவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

 இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

Monday, August 1, 2022

யாரோ ஒருவன்? 96


ஜனார்தன் த்ரிவேதி தன் மருமகனையும், மதன்லாலையும் தனித்தனியாக சந்தித்துப் பேசுவதே நல்லதென்று நினைத்தார். அவருக்கும் மதன்லாலுக்கும் மட்டும் தெரிந்த சில விஷயங்கள் இருந்தன. அவர் அதை சஞ்சயிடம் சொன்னதில்லை. அதே போல அவரும் சஞ்சயும் மட்டுமே அறிந்த விஷயங்கள் சில இருந்தன. அவை மதன்லால் அறிய வாய்ப்பில்லை. பழுத்த அரசியல்வாதியான அவருக்கு அனைத்தும் அனைவருக்கும் தெரிவது ஆபத்தான விஷயம் என்பது அனுபவத்தில் உணர்ந்த பேருண்மையாக இருந்தது.  அஜீம் அகமதும் அவரிடம் போனில் பேசிய போது அவர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து நடந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லதென்று சொன்னான். இரண்டு பேரும் தனித்தனியாக என்ன சொல்கிறார்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு பின் இரண்டையும் சேர்த்துப் பார்த்து உண்மையை உள்ளபடி அறிவது சரியாக இருக்கும் என்று அவன் சொன்னான். இருவர் சொல்வதிலும் ஏதாவது வித்தியாசங்கள் இருந்தால் அதைப் பின்னர் தெளிவுபடுத்திக் கொள்வது சரியாக இருக்கும் என்பது அவனுடைய அபிப்பிராயமாக இருந்தது.

அதனால் ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவர் முதலில் தன் மருமகனைச் சந்தித்தார். சஞ்சய் ஷர்மா அவரைப் பார்த்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதான். “மாமா உங்கள் மருமகனுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பார்த்தீங்களா? நான் உயிரோடு உங்களைப் பார்ப்பேன்கிற நம்பிக்கையைக் கூட இழந்து விட்டிருந்தேன் மாமா….”

ஜனார்தன் த்ரிவேதி மெலிந்து மிக பலவீனமான நிலையில் இருக்கும் அவர் மருமகன் அழுததும் கண்கலங்கினார். அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவனுக்குத் தைரியம் சொன்னார்.  “அழாதே. உங்களைத் தான் நாங்க மீட்டு விட்டோமே. இனி உங்களை எவனும் எதுவும் பண்ண முடியாது. உன்னைக் கடத்தினது யார்? நரேந்திரன் தானே?”

சஞ்சய் ஷர்மா கோபம் கொந்தளித்தபடிச் சொன்னான். “ஆமா மாமா. அந்த நாய் தான் என்னையும் மதன்லாலையும் கடத்தினான். இரும்புச் சங்கிலியால எங்களைக் கட்டிப் போட்டுருந்தான் மாமா”  

ஜனார்தன் த்ரிவேதிக்கும் கோபம் அதிகரித்தது. “ஆரம்பத்துல இருந்து சொல். உன்னை அவன் எப்படி கடத்தினான்?”

“அவன் தினமும் மூனு வேளையும் ஒவ்வொரு சப்பாத்தி தான் மாமா சாப்பிடக் கொடுத்தான். அதுவும் வறண்ட சப்பாத்தி மாமா. அந்தச் சப்பாத்திய என் வீட்டு நாய் கூடச் சாப்பிடாது மாமா. ஆனா பசிக்கொடுமைல நான் சாப்டிருக்கேன் மாமா. அவன கண்டிப்பா நீங்க சும்மா விடக்கூடாது மாமா.”

“கண்டிப்பா அவன சும்மா விடப்போறதில்லை சஞ்சய் கவலைப்படாதே. அவன் உன்னை எப்படி கடத்தினான்னு சொல்”

”என்னை அவன் கடத்தலை மாமா. ஒரு ட்ரக் டிரைவரும் வேற ஆள்களும் சேர்ந்து தான் கடத்தினாங்க. அவனுகள கண்டுபிடிக்கணும் மாமா”

ஜனார்தன் த்ரிவேதி மருமகனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “நீ இப்ப தானே உன்னைக் கடத்தினது நரேந்திரன்னு சொன்னாய்?”

“ஆமா மாமா அவங்கப்பாவ யார் கொன்னாங்க எப்படிக் கொன்னாங்கன்னு அவனுக்குத் தெரியணுமாம். சொன்னா தான் சப்பாத்தி தருவானாம். மேல ஐஸ் தண்ணிய ஊத்த மாட்டானாம். எப்படியிருக்கு அவன் மிரட்டல்? அவனையும் கடத்தி அப்படியே செய்யணும் மாமா. அவனுக்கு நாம அந்தச் சப்பாத்தியக்கூடத் தரக்கூடாது மாமா. ஐஸ் தண்ணிய ஊத்தறேன்னு பயப்படுத்தக்கூடாது. ஒன்னுமே பேசாம அவன் மேல ஊத்திடணும். ஜன்னி வந்து சாகட்டும் அந்த நாய். அப்பா எப்படிச் செத்தாங்கன்னு தெரியணுமாம். இவனும் செத்துப் போய் நேரடியாவே அவங்கப்பா கிட்ட கேட்டுக்கட்டும்.”

ஜனார்தன் த்ரிவேதி லேசான எரிச்சலுடன் சொன்னார். “அதெல்லாம் கண்டிப்பா செய்வோம். முதல்ல உன்னை அவன் எப்படி கடத்தினான்னு விவரமா சொல்லு”

”அவன் முதல்ல என்னை கடத்தலையே. இப்ப தானே கடத்தினான்.”

ஜனார்தன் த்ரிவேதி பொறுமை இழந்தார். “முட்டாளே இப்ப தான் அவன் உன்னை எப்படிக் கடத்தினான்னு கேட்டேன்”

“இப்ப தான் நான் உங்க பாதுகாப்புல இருக்கேனே மாமா. அந்த நாய் என்னை எப்படி கடத்த முடியும்?”

ஜனார்தன் த்ரிவேதி மருமகன் பழைய உடல்நலத்தில் இருந்திருந்தால் ஓங்கி அறைந்திருப்பார். அவனைக் கூர்ந்து பார்த்தார். இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ?

பழைய கேள்விக்குப் பிறகு வரலாம், இப்போதைக்கு அவனுக்கு நினைவு வரும் வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவராக அவர் கேட்டார். “உன்னை பாம்பு கடிச்சது எப்படி? பாம்பை யார் கொண்டு வந்து கடிக்க விட்டாங்க?”

“அந்தத் தடியனா தான் இருக்கணும். வேற யாரும் அங்கே வர்றதே இல்லையே. ஆனா அவன் பாம்ப விட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போயிட்டான் போல.. அவனையும் சும்மா விடக்கூடாது மாமா. அவனை வித விதமா சித்திரவதை பண்ணணும்”

“தடியனா? எந்த தடியன்?”

“அதான் சப்பாத்தி கொண்டு வர்ற தடியன். அவனுக்கு சத்தம் போடக்கூடாதாம். கத்தினா அடிப்பானாம். அவன் யாரு அப்படிச் சொல்ல?”

ஜனார்தன் த்ரிவேதி கஷ்டப்பட்டு பொறுமை காத்தார். “நரேந்திரன் உன்னை அந்த ஃபேக்டரிக்குள்ளே வந்து பார்த்தானா?”

“எந்த ஃபேக்டரி?”

ஜனார்தன் த்ரிவேதி பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார். “நீ நரேந்திரன் கிட்ட என்னவெல்லாம் சொல்லியிருக்கே?”

“அவன் கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லியிருக்கேன் அவ்வளவு தான்.”

“சரி நான் நாளைக்கு வர்றேன். நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்குப் பேசலாம்” என்று சொன்ன ஜனார்தன் த்ரிவேதி எழுந்து விட்டார். இனி சிறிது நேரம் அங்கேயிருந்தால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுவது உறுதி.

அவருக்கு மருமகன் நடவடிக்கையில் நிறைய வித்தியாசம் தெரிந்தது. அவருடைய மருமகன் கோழையே ஒழிய முட்டாள் அல்ல. ஐபிஎஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி வென்றவன். ராவில் அதிகாரியாக சேர்க்கத் தான் அவர் அவனுக்கு உதவியிருக்கிறாரேயொழிய அவன் ஐபிஎஸ் தேர்வில் வென்றதில் எல்லாம் அவருடைய பங்கு எதுவும் இல்லை. அப்படிப்பட்டவன் இப்போது என்னென்னவோ பேசுகிறான்….

மதன்லாலாவது தெளிவாக எல்லாவற்றையும் சொல்வான் என்ற எதிர்பார்ப்போடு ஜனார்தன் த்ரிவேதி அவன் இருக்கும் அறைக்குப் போனார்.  மதன்லால் சஞ்சய் அளவுக்குப் பலவீனமாக இல்லா விட்டாலும் அவனும் தளர்ந்து தான் காணப்பட்டான்.

“வணக்கம் தலைவரே” என்று கைகூப்பி மதன்லால் அவரை வரவேற்றான்.

அவன் சஞ்சய் போல தெளிவில்லாமல் பேசவில்லை. அவன் கடும் கோபத்தோடு சொன்னான். “அவனை நாம சும்மா விடக்கூடாது தலைவரே”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “அவனை நான் சும்மா விடப் போவதில்லை. மதன்லால். முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு”

“அதை என் வாயால சொல்லவும் கூசுது தலைவரே. இரும்புச் சங்கிலியில கட்டி வெச்சு அந்த தடியன் என்னை எட்டி உதைச்சான் தலைவரே.”

“யார் நரேந்திரனா?”

”இல்லை தலைவரே. அவனோட ஆளொருத்தன்.”

சஞ்சயும் அந்தத் தடியனைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தபடி ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “நரேந்திரன் உன்னை எப்படிக் கடத்தினான். முதல்ல அதைச் சொல்லு.”

“அஜீம் அகமது அனுப்பற மாதிரி எனக்கு ஒரு கடிதம் வந்துச்சு.  அதை நம்பி தான் நான் அந்த ஓட்டலுக்குப் போனேன். அங்கே மயக்க மருந்து வெச்சிகிட்டு எவனோ காத்திருந்திருக்கான். அதை நான் எதிர்பார்க்கல. அதனால தான் ஏமாந்து போயிட்டேன் தலைவரே. எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாயிருந்த இந்த மதன்லாலையே ஒருத்தன் இப்படி தைரியமா மயக்க மருந்து கொடுத்து கடத்த முயற்சி செய்வான்னு யார் நினைச்சு பார்த்திருக்க முடியும்…”

அவன் தெளிவாகச் சொன்ன விதம் ஜனார்தன் த்ரிவேதியின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. சஞ்சய் போல இவனுக்கு மூளை பாதிக்கப்பட்டு விடவில்லை. சஞ்சயும் இவனும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவன் தான் பிடிபட்ட கதையை இவனிடம் கண்டிப்பாகச் சொல்லியிருப்பான். அதனால் அவனிடம் கேட்க வேண்டியதை இவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியவராக அவர் மெல்லக் கேட்டார். “சஞ்சயை அவன் எப்படிக் கடத்தினானாம்?”

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.