என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, September 23, 2021

இல்லுமினாட்டி 121



இம்மானுவல் எப்போதும் எதற்கும் மனம் தளர்பவன் அல்ல. அவன் எத்தனையோ சிக்கல்களில் சிக்கி அதிலிருந்து மீண்டிருக்கிறான். எத்தனையோ பெரிய பிரச்சினைகளைச் சந்தித்து அவற்றைத் தீர்த்திருக்கிறான். பிரச்சினைகளை தன் தொழிலின் ஒரு பகுதியாகவே அவன் நினைக்க ஆரம்பித்திருந்ததால் அவற்றை எதிர்பார்த்தே வாழ்ந்தவன் அவன். ஆனால் அப்படிப்பட்ட அவனே தற்போது அதிர்ச்சியில் மன அமைதியைத் தொலைத்திருந்தான். எர்னெஸ்டோவின் வாஷிங்டன் பயணம் விஸ்வத்துக்குத் தெரியும் என்ற அனுமானமும், அவரது பயண விவரம் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களிடமிருந்தோ, உளவுத்துறையிலிருந்தோ போயிருக்கலாம் என்று அக்‌ஷய் சுட்டிக் காட்டியதும் அவனைக் கவலைப்பட வைத்தது. அதோடு விஸ்வம் ஜெர்மனியை விட்டு வெளியே பயணிக்க முடிந்தவனாகவும் இருக்கிறான் என்பதும் சேர்ந்து கொண்டது அவன் மன அமைதியின் அஸ்திவாரத்தையே தகர்த்திருந்தது. பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலில் ஓட்டை ஒன்று ஏற்பட்டு விட்டது என்று தெரிந்த பிறகு பயணியால் எப்படி நிம்மதியாக இருக்க முடியாதோ அதே போல் தான் அவனும் இருந்தான்.

யார் அந்தக் கருப்பு ஆடாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். சிறிது யோசனைக்குப் பின் சமீப காலமாக வித்தியாசமாக நடந்து கொள்ளும் சாலமன் நினைவுக்கு வந்தார். அவர் அவனை விட வயதிலும், சர்வீசிலும் மூத்தவர், திறமையானவர், மரியாதைக்குரியவர், இதுவரை அவர் மீது குறைகள் சொல்ல ஏதுமில்லை.... ஆனால் தற்போது ம்யூனிக்கில் சற்று அதிகமாகவே தங்கியிருக்கிறார். அதை அவரே அவனை அழைத்துச் சொல்லி இருந்தாலும் சொன்ன காரணம் மிகவும் சப்பையாக இருந்தது. இது வரை அவர் அப்படி நடந்து கொண்டதில்லை. உறுதியாகச் சொல்ல முடியா விட்டாலும் இப்போது அவர் சந்தேகத்தைக் கிளப்பும்படி தான் இருக்கிறார். இதில் அவர் மட்டும் தானா இல்லை அவருடன் வேறு யாராவதும் இருக்க முடியுமா என்று யோசித்த போது அது இன்னும் அவனை அதிகம் கஷ்டப்படுத்தியது.

இந்தச் சந்தேகம் வந்திருப்பதை அவன் வெளியே யாரிடமும் சொல்லவில்லை. மனதிற்குள்ளேயே வைத்து இந்தச் சதியைப் பற்றிய விவரங்களை அவன் கண்டறிய வேண்டும்...


சிந்து  இரவிலேயே சென்னைக்குக் கிளம்பி விட்டாள். அம்மாவிடமும் மற்ற இருவரிடமும் அவசர வேலை வந்து விட்டது, இன்னொரு சமயம் வருகிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள். அவர்கள் மூவரும் அவளை வழியனுப்ப விமானநிலையம் வரை வந்தார்கள். மிருதுளா அவளிடம் ரகசியமாகச் சொன்னாள். “நீ சொன்னால் நாங்கள் வந்து உதயின் வீட்டில் பேசுகிறோம். சீக்கிரம் முடிவெடு...”

சிந்து வேதனையுடன் தலையசைத்தாள். அவளால் தற்போதைய நிலைமையைத் தாயிடம் சொல்ல முடியவில்லை. போய் உதயிடமும் அவளால் ஒன்றும் சொல்ல முடியாது. இப்படி ஒரு சிக்கலான நிலைமையில் அம்மா சம்பந்தம் பேச அவசரப்படுகிறாள். இனி நடக்கவிருக்கும் நாடகமும் அவளைத் தைரியம் இழக்க வைத்தது. ”எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போ.” என்று க்ரிஷ் தைரியம் சொல்லி இருந்தாலும் விஸ்வத்துக்கு எதிராக இயங்குவது அவளுக்குப் பயமாகவே இருந்தது. அவனுக்கு எதிராக மாறியவர்களை அவன் உயிரோடு விட்டதில்லை...

தாயை அணைத்துப் பிரியா விடை பெற்ற போது சிந்துவின் கண்கள் தானாக ஈரமாயின. இது அவர்களுடைய கடைசி சந்திப்பாகக்கூட இருக்கலாம்...   

மறுநாள் காலை பதினோரு மணிக்கு அவளுக்கு விட்டமின் வி வந்து சேர்ந்தது. கொண்டு வந்து தந்தவன் குரியர்க் காரன் போல் தோன்றினாலும் அவன் குரியர் ஆள் இல்லை என்பது அவன் கண்களிலும் அசைவுகளிலும் சிந்துவுக்குத் தெரிந்தது. ஆனால் ஒல்லியாக இருந்த அவன் குரியர்காரன் கையெழுத்து வாங்குவது போலவே அவளிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனான்.

க்ரிஷ் சொன்னதைப் போலவே அந்த உறையிலிருந்த சிறிய பாட்டிலை வெளியே எடுத்து குளியலறையில் போய் அதைக் கொட்டிக் காலி செய்தாள். விஸ்வத்திற்கு எதிராக அவள் நடந்து கொண்டாகி விட்டது. இனி எதையும் மாற்ற வழியில்லை. மனதில் ஒரு கனம் கூட ஆரம்பித்தது.   


க்ரிஷ் உதயை அழைத்து ஒரு கதையை நிஜம் போலச் சொல்ல ஆரம்பித்தான். “உதய், நாம் நினைத்ததை விட விஸ்வம் ஆபத்தானவனாக இருக்கிறான். உன்னைக் கொல்ல விஸ்வம் அனுப்பியிருந்த ஒரு ஆளை இல்லுமினாட்டி இன்றைக்கு பிடித்து விட்டிருக்கிறது...”

உதய் திகைப்புடன் கேட்டான். “என்னடா சொல்றே?”

“என்னைப் பழிவாங்கறதுக்கு உன்னைச் சாகடிக்கிறது தான் வழின்னு அவன் நினைச்சிருக்கான் போலிருக்கு. நல்ல வேளையாக ஆளைப் பிடித்து விட்டார்கள். ஆபத்து விலகி விட்டது. ஆனால் அவர்கள்  அந்த ஆளைப் பிடித்தது விஸ்வத்துக்குத் தெரிந்தால் இன்னொரு ஆளை அனுப்பி விடுவான் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் விஸ்வம் நினைத்தபடியே நடக்கிற மாதிரி காட்டிக் கொள்ள  நம்மை ஒரு நாடகம் நடத்தச் சொல்கிறார்கள்.

“என்ன நாடகம்?”

“செவ்வாய்க்கிழமை ராத்திரி நீ மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக வேண்டும்...”என்று ஆரம்பித்து யார் யார் என்னென்ன சொல்ல வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் க்ரிஷ் சொன்னான்.

“என்னடா இது. இத்தனை நாள் கழிச்சு இன்னிக்கு காலைல தான் சிந்து வந்திருக்கா. நீ என்னைப் போய் செவ்வாய்க்கிழமை ஆஸ்பத்திரியில் படுக்கச் சொல்கிறாய்”

“சிந்துவையும் ஆஸ்பத்திரிக்கு உன் கூட போகச் சொல்கிறேன்”

“ஆனாலும் ஆஸ்பத்திரில எப்படிடா?...” என்று உதய் இழுத்தான்.

“அம்மா சொல்ற மாதிரி உனக்குக் கொழுப்பு ஜாஸ்தி தான்டா” என்று சொல்லி க்ரிஷ் சிரித்தான்.

“நீ அம்மான்னு சொன்னவுடனே ஞாபகம் வர்றது. கிழவியை வெச்சுட்டு எப்படிடா நாடகம் போடறது? அதுக்குச் சொன்னாலும் விளங்குமாடா? சொதப்பிடாதா?”

“தேவைப்படறப்ப அம்மா ஓரளவு ஒழுங்கா நடந்துக்குவாங்க. நீ சொல்ற அளவுக்கு மோசமில்லை. ஹரிணியும் சிந்துவும் சேர்ந்து ஓரளவு அம்மாவை சமாளிக்க வைப்பாங்க. அப்பா கிட்ட நீயே எவ்வளவு சொல்லலாம்னு நினைக்கறியோ அந்த அளவுக்கு சொல்லு. அவர் சொல்றது பத்திரிக்கைலயும் டிவியிலயும் வரணும் அவ்வளவு தான்...”

உதய் கேட்டான். “அது ஏன் செவ்வாய்க்கிழமை ராத்திரியே நாடகத்தை ஆரம்பிக்கணும்? ரெண்டு நாள் தள்ளி ஆரம்பிச்சா என்ன?”

“அந்தப்பிடிபட்ட ஆள்கிட்ட செவ்வாய்க்கிழமை தான் அந்த வேலையைச் செய்ய  விஸ்வம் சொல்லியிருக்கான். ஏன்னு எனக்கும் தெரியலை...”

உதய் கவலையுடன் சொன்னான். “நீ சீக்கிரம் வாடா. எனக்கென்னவோ நீ அங்கேயே இருக்கறது ஆபத்தாய் தான் படுது...”

“இங்கே எனக்கு முழு பாதுகாப்பு தந்திருக்காங்க... என்னைப் பத்தி நீ கவலைப்படவே வேண்டாம்...”


சாலமனுக்கு வாங் வே போன் செய்து புதிய நிலவரம் கேட்டார். சாலமன் விஸ்வத்தின் புதிய வேண்டுகோளைச் சொன்னார். எர்னெஸ்டோவின் கடந்த இரண்டு வாஷிங்டன் பயணங்களைப் பற்றிய தகவல்களையும் விஸ்வம் கேட்டிருக்கிறான் என்று சாலமன் சொன்னார்.  வாங் வேக்கு விஸ்வம் வாஷிங்டனில் தான் கிழவரின் கதையை முடிக்கப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் ஏதாவது குறிப்பிட்ட நேரம், இடம் விஸ்வம் சொல்லியிருக்கிறானா என்று அறிய விரும்பினார்.

சாலமன் சொன்னார். “நாம் கொடுக்கிற தகவல்களை எல்லாம் பார்த்துத் தான் அதை அவன் முடிவு செய்வான் போலிருக்கிறது.”

வாங் வேக்குப் பரபரப்பாக இருந்தது. அவருக்கு அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது அவன் முடிவெடுத்தவுடனேயே தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரும் வாஷிங்டன் கிளம்புகிறார். அமெரிக்க ரஷிய ஜனாதிபதிகளுடான விழாவுக்கு அவருக்கு அழைப்பில்லை என்றாலும் வாஷிங்டனில் மறுநாள் காலை நடக்கும் இல்லுமினாட்டி கூட்டத்திற்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பில் அவர் போக வேண்டியிருந்தது.   அந்தச் சமயத்தில் அவரும் அங்கேயே இருப்பதால் நேரம் காலம் தெரிந்தால் பரவாயில்லை...

அவர் விஸ்வத்தின் கூட்டாளி பற்றி நினைவு வந்தவராகக் கேட்டார். “அந்தக் கூட்டாளி உங்களுக்குப் பார்க்கக் கிடைத்தானா?”

“இல்லை. வாஷிங்டன் போக அந்தக் கூட்டாளிக்கு டிக்கெட் செய்யவும் சொல்லவில்லை...”

இத்தனை நெருங்கியும் கூட்டாளி பற்றி விஸ்வம் எதையும் சொல்லாதது அவருக்கு வருத்தமாய்த் தான் இருந்தது. அவர் அடுத்ததாகக் கேட்டார் ”ம்யூனிக்கில் அந்த நால்வர் கூட்டணி என்ன ஆலோசனை செய்திருக்கிறது என்று ஏதாவது தகவல் உண்டா?”

“இல்லை.” என்று சாலமன் சொன்னவுடன் எல்லோரும் அவரவர் ரகசியங்களைக் காக்கும் விதம் வாங் வேயை எரிச்சலடைய வைத்தது. கடைசியில் ’எல்லாம் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். அதுவரை தானே’ என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டார்.

(தொடரும்)
என்.கணேசன்



Monday, September 20, 2021

யாரோ ஒருவன்? 50


ஜெய்ராம் படித்தவன். அறிவியல் அறிவு ஓரளவாவது உள்ளவன். அவனுக்குத் தன் காதுகளில் விழுந்த செய்தியை நம்புவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ”என்னது, நாகரத்தினமா?” என்று அவநம்பிக்கை தொனிக்கும் குரலில் கிழவரை அவன் கேட்டான். நாகராஜிடம் ரத்தினக் கற்கள் இருக்கக் கூடும். அவனிடம் இருந்ததால் இந்தக் கிழவன் அதை நாகரத்தினமாக நினைத்துக் கொண்டிருக்கக்கூடும்....

கிழவர் அந்த அவநம்பிக்கை தொனியை இலட்சியம் செய்யவில்லை. ஆணித்தரமாய் சொன்னார். “ஆமாம் நாகரத்தினம் தான்”

“பார்த்த காட்சியைத் தெளிவாகச் சொல்லுங்களேன்.” என்று ஜெய்ராம் சொன்னான். அதை வைத்து கிழவன் என்ன பார்த்திருப்பான் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்பது அவன் எண்ணமாய் இருந்தது.

கிழவர் சொன்னார். “சுவாமிஜி சமாதியடைவதற்குப் பத்து நாட்கள் முன் ஒரு ராத்திரி.... எனக்கு தூக்கம் வரலை.... பொறுப்பில்லாத குழந்தைகள் இருந்தால் ஒரு தகப்பனுக்கு எப்படிச் சரியாய் தூக்கம் வரும்...” கிழவர் தன் மகனைக் கடுமையாக ஒரு முறை பார்த்தார். அந்த இளைஞன் அவரை முறைத்தான். அவர் தொடர்ந்து ஜெய்ராமைப் பார்த்துச் சொன்னார். “தூக்கம் வராததால எழுந்து உட்கார்ந்து கொஞ்சம் நேரம் காலத்தைப் போக்கினேன். போய் ஒரு தம்ளர் தண்ணி சாப்பிட்டு வந்து மறுபடி தூங்க முயற்சிக்கலாம்னு நினைச்சி போறப்ப சுவாமிஜி அறையில் பல நிறங்கள்ல எதோ வெளிச்சம் தெரிஞ்சுது. என்னடா இது இப்படி ஜொலிக்குதுன்னு சொல்லி போய் சுவாமிஜி அறையை எட்டிப் பார்த்தால் சுவாமிஜி நல்ல தூக்கத்தில் இருந்தார். மகராஜ் பாய்ல உட்கார்ந்திட்டிருந்தார். அவர் கைல ரெண்டு மூனு நாகரத்தினக்கல் இருந்துச்சு. அந்த மாதிரியொரு ஜொலிப்பை நான் என் வாழ்நாள்ல பார்த்தது கிடையாது.... அந்த அறையே ஒரு தேவலோகம் மாதிரி அந்த ரத்தினங்களால ஜொலிச்சுது. மகராஜ் எதோ தேவேந்திரன் மாதிரியும் கந்தர்வன் மாதிரியும் தெரிஞ்சார். அது வேறொரு உலகம் மாதிரி ஒரு கணம் தோணுச்சு. மகராஜும் வேற எதோ ஒரு உலகத்துல இருக்கிற மாதிரி இருந்தார். ரெண்டு நிமிஷம் நின்னிருப்பேன். திடீர்னு மகராஜ் பின்னால இருந்து வேக வேகமாய் ஒரு பாம்பு கிளம்பி நான் பார்த்துகிட்டிருந்த ஜன்னல்ல ஏறி சீறுச்சு. நான் ஒரே ஓட்டம் எடுத்து என் அறைக்கு வந்துட்டேன். எங்க அந்தப் பாம்பு என்னைத் துரத்திட்டே என் அறைக்கும் பின்னாலயே வந்துடுமோன்னு பயந்தேன். நல்ல வேளையா அது வரலை. பிறகு எனக்கு நிறைய நேரம் தூக்கம் வரலை....”

ஜெய்ராம் கேட்டான். “நீங்க பார்த்தது நாகரத்தினம்னு தான்னு எப்படிச் சொல்றீங்க.? அது வேற எதோ விலையுயர்ந்த வைரம், மாணிக்கமாய் கூட இருக்கலாமில்லையா?”

“இல்லை எனக்குத் தெரியும் அது நாகரத்தினம் தான்னு. ஏன்னா வேற எந்த விலையுயர்ந்த கல்களும் மகராஜ் கைல இருக்க வாய்ப்பே இல்லை. அந்தக் ரத்தினங்கள் அவர் கிட்ட இருக்கிறது தான் அவருக்கு ஐஸ்வர்யத்தைத் தந்துகிட்டிருக்கு. அவருக்கு ஏதோ கூடுதல் சக்திகளைத் தந்திருக்கு. அவருக்கு நாகசக்தி வசப்பட்டிருக்குன்னு பல தடவை சுவாமிஜி சொல்லியிருக்கிறார். அந்தச் சக்தி வசப்பட்டிருப்பது அந்த நாகரத்தினங்களால தான்.”

ஜெய்ராம் நாகரத்தினம் என்பதே கற்பனைன்னு விஞ்ஞானம் சொல்லி இருக்கிறதென்று விளக்க நினைத்தான். ஆனால் கிழவர் ஆணித்தரமாய் நம்பும் விஷயத்தை மாற்ற முடியாதென்று தோன்றியது. ஆனால் கிழவர் அவன் பார்வையிலிருந்தே அவன் அவர் சொன்னதை நம்பவில்லை என்று யூகித்து விட்டிருந்தார்.  

அவர் சொன்னார். “சுவாமிஜிக்கு ஏராளமான சக்திகள் இருந்துச்சு. அதை அவர் அடிக்கடி வெளிப்படுத்திக்கலைன்னாலும் கூட இருந்த எங்களுக்கு அதை எத்தனையோ விதங்கள்ல உணர முடிஞ்சுது.  நாளைக்கு என்ன நடக்கும்னு அவர் முந்தின நாளே சொன்னதிருக்கு. தூரத்துல என்ன நடந்திருக்குன்னு இருந்த இடத்துல இருந்துட்டே சொன்னதிருக்கு. அதுக்குக் காரணம் அவர் ஒரு யோகி. ஞானி. மகராஜ் நல்லவரே ஒழிய அந்த மாதிரி யோக வாழ்க்கை வாழ்ந்தவர் கிடையாது. அப்படி இருந்தும் அவருக்குப் பல சக்திகள் வந்திருந்துச்சுன்னா அது அந்த நாகரத்தினம் வழியா தான்.... அப்புறம் இன்னொரு விஷயம்.... அந்த நாகரத்தினம் ஜொலிச்ச மாதிரி ஒரு ஜொலிப்பை என் வாழ்நாள்ல வேற எங்கயும் பார்த்ததில்லை.... அந்த ரத்தினத்தைப் பார்த்த என்னை அந்த நாகம் அந்த இடத்தில் நிக்க விடலையே அதுக்கு என்ன சொல்றீங்க. நாகங்கள் அன்னியர்கள் அதைப் பார்க்கவும், தொடவும் லேசில் விடாதாம்....”

“நீங்க பார்த்த விஷயத்தை சுவாமிஜி கிட்டயோ, மகராஜ் கிட்டயோ பிறகு எப்பவாவது பேசியிருக்கீங்களா?”

“இல்லை. பேசறது. ஆபத்துன்னு மனசு சொல்லுச்சு. அதனால தான் அவங்க கிட்ட மட்டுமல்ல வீட்டுலயும் யார் கிட்டயும் சொல்லலை. இப்ப கொஞ்சம் பணக்கஷ்டம்... பசங்க ரெண்டு பேரும் சரியில்லை... சோம்பேறிங்க....” கிழவன் மகனின் முறைப்பை சட்டை செய்யாமல் தொடர்ந்தார். “அதனால தான் மகராஜை மனசுல நினைச்சுட்டு நாற்பதாயிரம் ரூபாய் கிடைச்சால் சொல்றேன்னும், அதுக்குக் கம்மி ஒரு பைசா வந்தாலும் சொல்றதில்லைன்னும் சொல்லிகிட்டேன். அவரோட அனுக்கிரகத்தால நீங்க சம்மதிச்சுப் பணம் கிடைச்சது. அதனால உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன்.”

அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அதை நாகராஜின் அனுக்கிரகம் என்று கிழவர் சொன்னது ஜெய்ராமுக்கு நாகரத்தினம் என்று அவர் சொன்னதை விடக்கூடுதல் வேடிக்கையாக இருந்தது.

இனி சொல்ல கிழவரிடம் எதுவும் இல்லையென்று புரிந்து மெள்ள ஜெய்ராம் எழுந்தான்.


அடுத்த நாள் கல்யாணுக்கு துப்பறியும் நிறுவனத்திலிருந்து விரிவான மின்னஞ்சல் வந்திருந்தது. ஜெய்ராம் என்ற பெயரில் விசாரித்து அறிந்ததை எல்லாம் விரிவாக எழுதிக் கடைசியில் அவர்களுடைய கணிப்பை இப்படி எழுதியிருந்தார்கள்:

“நாகராஜ் ஆரம்ப காலத்தில் மன அழுத்தங்களால் ஆழமாய்ப் பாதிக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் எப்படியோ பாம்புகளிடம் ஒரு நேசத்தை வளர்த்திருக்கிறான். எப்போது, எப்படி என்பதை அவனும் சுவாமிஜியும் மட்டுமே அறிவார்கள்.  சுவாமிஜி அதிசய சக்திகள் பெற்றிருந்தார் என்பதால் ஏதோ செய்து அவனைக் குணப்படுத்தி கடைசியில் தன் சக்திகளை நாகராஜுக்குச் சொல்லித் தந்திருக்கவோ, மாற்றி விட்டிருக்கவோ வாய்ப்பிருக்கிறது.  அனைத்தும் சுவாமிஜியும் அவனும் கடைசியாகக் காட்டுக்கு தவம் செய்யப் போன போது நிகழ்ந்திருக்க வேண்டும். அதனால் தான் வரும்போதே நாகராஜ் மாறியவனாகவும், வாய் விட்டு இயல்பாகப் பேசுபவனாகவும் ஆகியிருக்கிறான். அவனிடம் சில விலை உயர்ந்த ரத்தினங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம். வேலைக்காரக் கிழவர் பார்த்த இரண்டு மூன்று ரத்தினங்கள் தானா மேலும் அதிகமா என்று நிச்சயித்து அறிய வழியில்லை. ஆனால் கிழவர் நம்புவது போல் அது நாகரத்தினக் கல்லாய் இருக்க வழியில்லை. நிபுணர்கள் சிலரையும் கலந்தாலோசித்ததில் நாகரத்தினம் என ஒன்று கதைகளில் மட்டுமே இருக்கும் கற்பனை என்றும் நிஜமல்ல என்றும் ஆணித்தரமாகத் தெரிவிக்கிறார்கள்.  அதனால் அவனிடம் இருக்கும் ஜொலிக்கும் ரத்தினங்கள் வேறெதாகவோ தான் இருக்க வேண்டும்.   

நாகராஜிடம் போய் வந்தவர்கள் எல்லாரும் தங்கள் பிரச்சினை தீர்ந்தவர்களாகவும், பெரும் நிதியைப் பின் எப்படியோ பெற முடிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதற்கு நாகராஜின் நாகசக்தியே காரணம் என்கிறார்கள். ஒன்றிரண்டு என்றால் அவற்றை எதேச்சையாக என்று எண்ணலாம். ஆனால் எல்லோரும் சொல்லும் ஒன்றை யதேச்சையாக எடுத்துக் கொள்ளவும் வழியில்லை. அதே நேரத்தில் கிழவர் தனக்குக் கிடைத்த தொகையையும் நாகராஜ் அருளில் கிடைத்ததாகவே சொல்கிறார் என்பது வேடிக்கையாகவும் இருக்கிறது. ஆனால் நாகராஜ் நினைத்தால் எத்தனை பணத்தையும் அனாயாசமாகச் சம்பாதித்து விடும் மிக வசதியான நிலையில் இருக்கிறான் என்பது நிச்சயம். அரசியல் செல்வாக்கு கூட அவனிடம் சீக்கிரம் அப்பாயின்மெண்ட் வாங்கப் பயன்படவில்லை என்றும் தெரிகிறது. ஏன் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அழுத்தம் தருவதில்லை என்று மேல்மட்டங்களில் ரகசியமாய் விசாரித்தோம். அதிர்ஷ்டத்தை வரவழைக்க மட்டுமல்லாமல், துரதிர்ஷ்டத்தையும், பிரச்சினைகளையும் கூட வரவழைக்கும் சக்தி வாய்ந்தவனாக அவனைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால் அவனுடைய கோபத்திற்கு ஆளாகும் தைரியம் யாருக்கும் இல்லை.”



(தொடரும்)
என்.கணேசன்




Thursday, September 16, 2021

இல்லுமினாட்டி 120




க்ரிஷ் இனியும் இல்லுமினாட்டியிடம் சிந்து பற்றிய உண்மைகளை மறைப்பது நியாயமில்லை என்பதை உணர்ந்தான். இனி அவன் சென்னையில் நடத்தவிருக்கும் நாடகம் அவர்கள் பார்வைக்கு வராமல் போகாது என்பதோடு அவன் சந்தேகப்படும் உண்மையையும் இல்லுமினாட்டியின் உறுப்பினராக அவன் அவர்களிடம் இப்போதும் சொல்லாமல் இருக்க முடியாது.  

மறுநாள் காலை எர்னெஸ்டோ வீட்டில் அவர்கள் நால்வரும் சந்தித்துக் கொண்ட போது க்ரிஷ் ஆரம்பித்தான். “நான் ஒரு உண்மையை உங்களிடம் சொல்லாமல் விட்டதற்கு உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த உண்மையைச் சொல்லாததற்கும் சரியான காரணம் இருந்தது. என் அண்ணன் உதயைக் காதலிக்கும் சிந்து உண்மையில் விஸ்வத்தால் அனுப்பப்பட்டவள்...”

இம்மானுவல் க்ரிஷை முறைத்துப் பார்த்தான். எர்னெஸ்டோ கடுமையாகப் பார்த்தார். அக்‌ஷய் ஆச்சரியத்துடன் பார்த்தான். க்ரிஷ் சுருக்கமாக நடந்ததை எல்லாம் சொன்னான். “... அவளைப் பற்றி உங்களிடம் சொல்லி நீங்கள் அவளை விசாரிக்க முடிவு செய்தால் இதுவும் இன்னொரு மனோகர் விஷயமாக முடிந்து விடும். அவள் சிக்கியது தெரிந்தால் விஸ்வம் தன் திட்டத்தைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அவளைத் தீர்த்துக்கட்டி இன்னொரு ஆளை வேறொரு விதமாகத் தயார் செய்வான். இதைக் கண்டுபிடிக்க முடிந்தது போல் அதையும் கண்டுபிடிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அவளை என் கண்காணிப்பில் வைத்திருந்தேன். சில தியானப்பயிற்சிகள் செய்து அவள் மனதை மாற்றும் அலைவரிசைகளையும் முடிந்த வரை அனுப்பி வைத்தேன்..... அவளை மாற்றியது என் குருவின் அருளா, என் முயற்சிகளா, அவள் விதியே தானா என்று தெரியவில்லை. ஆனால் மாறியிருக்கிறாள். நேற்று விஸ்வம் போன் செய்ததை அவள் எனக்குத் தெரிவித்திருக்கிறாள்....”

இம்மானுவல் கோபத்துடன் கேட்டான். “க்ரிஷ் நீயும் உன் குடும்பமும் எத்தனை பெரிய ஆபத்தில் மாட்டியிருக்க முடியும் என்பதை உணர்கிறாயா?”

எர்னென்ஸ்டோ கேட்டார். “க்ரிஷ். நீ இல்லுமினாட்டியில் சேரும் போது செய்திருந்த உறுதிமொழிகள் எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? நீ செய்திருப்பது  எங்கள் விதிகளில் பெரிய குற்றம். தெரியுமா?”

க்ரிஷ் சொன்னான். “தவறு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் என் உள்ளுணர்வு என்னை வழி நடத்துவதாக நான் உணரும் போது அதனால் இது வரை எந்த ஆபத்தும் வந்ததில்லை. மாறாக அந்த வழியே போகும் போது நன்மையே தான் நடந்திருக்கிறது. இப்போது கூட விஸ்வத்தின் மிகப் பெரிய திட்டம்  அதனால் தான் தெரிந்திருக்கிறது.”

இம்மானுவல் சொன்னான். “அவளை அனுமதிக்காமலேயே இருந்திருந்தால் அந்த மிகப்பெரிய திட்டம் நடந்தே இருக்காது....”

“நான் மிகப்பெரிய திட்டம் என்று சொன்னது உதயையோ என் தாயையோ அவன் கொல்ல நினைத்த திட்டத்தை அல்ல. அவன் நம் தலைவரைக் கொல்ல நினைத்திருக்கும் திட்டத்தை...”

எர்னெஸ்டோவும், அக்‌ஷயும் க்ரிஷைக் கூர்மையாகப் பார்க்க இம்மானுவல் திகைப்புடன் கேட்டான். “என்ன சொல்கிறாய்?”

“விஸ்வம் தலைவரை, புதன், வியாழன் இந்த இரண்டு நாட்களில் எப்படியோ கொல்லத் திட்டமிட்டு இருக்கிறான் என்று நினைக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் இல்லுமினாட்டி விவகாரங்கள் எதிலும் ஈடுபட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்னை இந்தியா அனுப்ப, என் அண்ணன் அல்லது அம்மாவைக் கொல்லும் இந்தத் திட்டத்தைப் போட்டிருக்கிறான். என்னைப் பழிதீர்க்க அவர்களைக் கொல்வது மட்டும் அவன்  உத்தேசமாய் இருந்தால் அதை உடனடியாகச் செய்திருப்பான். எந்த நேரமும் செய்திருக்கலாம். இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு இந்த மாதிரி சிந்துவை என் வீட்டுக்கு எங்கள் எல்லோருடனும் நெருக்கமாகப் பழக வைத்து, “நான் சொல்கிற நாளில் சொல்கிறபடி செய்” என்று தயாராக இருக்க வைத்திருக்க மாட்டான்....”

மூவரும் மௌனமாக யோசித்தார்கள். அவன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று எர்னெஸ்டோவும், இம்மானுவலும் நினைத்த போது அக்‌ஷய் குழப்பத்தோடு கேட்டான்.  “நீ இங்கே இருந்தால் என்ன செய்வாய் என்று அவன் பயப்படுகிறான்?”

இம்மானுவல் புன்னகையுடன் சொன்னான். “அது விஸ்வத்துக்கே  தெரிந்திருக்க வழியில்லை. பயம் மட்டும் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் சென்ற முறை இல்லுமினாட்டி கூட்டத்திலும் க்ரிஷ் வந்து எதையும் மாற்ற முடியும் என்று நாங்கள் உட்பட யாருமே நினைத்திருக்கவில்லை. ஆனாலும் க்ரிஷ் வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டான். அதனால் இந்த முறை விஷப்பரிட்சையில் இறங்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்....”

எர்னெஸ்டோ க்ரிஷிடம் கேட்டார். “நீ ஏன் புதன் வியாழன் என்று இரண்டு நாட்களை மட்டும் சொல்கிறாய்?”

“உள்ளுணர்வு சொல்லும் யூகம் தான். செவ்வாய் இரவுக்குள் அந்த விஷத்தை உணவில் சேர்க்க வேண்டும் என்பதை அவன் குறிப்பாகச் சொல்லி இருக்கிறான். மயக்கமாக சில மணி நேரங்களாகும் என்றும் சொல்லியிருக்கிறான். அப்படியானால் புதன் காலைக்குள் எனக்குத் தகவல் வரும். நான் உடனே கிளம்பி விடுவேன். ஆக அதற்குப் பின் நான் இந்தியாவில் இருப்பது நல்லது என்று அவன் நினைக்கிறான். மரணம் வர ஒரு வாரம் ஆகும் என்றால் அது வரை நான் கண்டிப்பாக அங்கேயே தான் இருப்பேன். அதற்குள் அவன் தன் வேலைகளை முடித்து விடலாம் என்று நினைத்து இருக்கலாம். அவன் நான் இருக்க வேண்டாம் என்று நினைக்கும் புதன் கிழமை காலையோ நீங்கள் வாஷிங்டனில் இருப்பீர்கள். உங்களைக் கொல்வது ம்யூனிக் பங்களாவில் சாத்தியமில்லை என்று அவன் நினைத்திருக்கிறான். அதனால் தான் இங்கே அவன் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அந்தப் புதன் காலையிலிருந்து நீங்கள் திரும்பவும் ம்யூனிக்கில் இங்கே வந்து சேரும் வரை ஏதாவது செய்ய அவனுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று நான் நினைக்கிறேன்...”  

அக்‌ஷய் சொன்னான். “நீ சொல்வதைப் பார்த்தால் முக்கியமாக வாஷிங்டனில் அவனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எண்ணுகிறான் என்றாகிறது. அவன் கோணத்திலிருந்து அவன் எண்ணுவது தவறில்லை...”

இம்மானுவல் அக்‌ஷயைப் பார்த்தான். நேற்று தான் அவனிடம் விஸ்வம் வாஷிங்டன் போக வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருந்தான். இப்போது இந்த யூகம் சரியாக இருந்தால் விஸ்வம் வாஷிங்டன் போக அல்லது முன்கூட்டியே போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. அவன் அதிர்ந்து போனான்.

அக்‌ஷய் இம்மானுவலிடம் கேட்டான். “தலைவர் வாஷிங்டனில் நடக்கும் அந்த விழாவுக்குப் போவார் என்று யாருக்கெல்லாம் தெரியும்?”

“இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும் எங்கள் உளவுத்துறைக்கும் மட்டும் தான் தெரியும்.”

அக்‌ஷய் கேட்டான். “அப்படியானால் அவனுக்குத் தகவல் போயிருப்பது உங்கள் உறுப்பினர் யாராவது மூலமாகவோ, உளவுத்துறை ஆட்கள் யாராவது மூலமாகவோ என்று எடுத்துக் கொள்ளலாமா?”

இம்மானுவல் அதிர்ச்சியுடன், தர்மசங்கடமும் அடைந்து சொன்னான். “அவன் கூட்டாளி எதையும் அறிய முடிந்தவன் என்பதால் அவன் மூலமாகக்கூட விஸ்வம்  அறிந்திருக்கலாம்”

திடீரென்று எர்னெஸ்டோ வாய்விட்டுச் சிரித்தார். மூவரும் அவரைத் திகைப்புடன் பார்த்தார்கள். அவர் க்ரிஷிடம் சொன்னார். “இதையெல்லாம் பார்த்தால் ஒரு வேடிக்கையான உண்மை என்னைச் சிரிக்க வைக்கிறது. விஸ்வத்துக்கு இல்லுமினாட்டி மீதோ, இல்லுமினாட்டியின் பாதுகாப்பு வீர்ர்கள் மீதோ பயமில்லை. பாதுகாவலாக இருக்கும் அமானுஷ்யன் மீதும் பயமில்லை. அவர்கள் எல்லாரும் இருந்தாலும் கவலைப்படாதவன் அவன் வேலை எல்லாம் முடிகிற வரை நீ இடையே போய் காரியத்தைக் கெடுக்காமல் இருந்தால் சரி என்று நினைக்கிறான் என்று புரிகிறது.  நீ நிஜமாகவே சரித்திரம் படைத்து விட்டாய் க்ரிஷ். யாருக்கும் பயப்படாத உன் நண்பன் இப்போது உனக்கு மட்டும் தான் பயப்படுகிறான். ஏனென்றால் உன்னை மட்டும் தான் அவனால் அனுமானிக்க முடியவில்லை போலிருக்கிறது....”

அவர் சொன்னதிலிருந்த உண்மையின் வேடிக்கையை மூவரும் உணர்ந்தாலும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். விஸ்வம் போன்ற ஒரு ஆபத்தான மனிதன் அவரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பது அவரைப் பாதிக்கவில்லை என்பதும் அவரால் இப்படி வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது என்பதும் அவர் மனதின் உறுதியை அவர்களுக்குக் காட்டியது.... இதுவல்லவா தலைமைப் பண்பு என்று வியக்க வைத்தது.



(தொடரும்)
என்.கணேசன்