யுவராஜ் ஜே.என்.பி.டி சாலையை
அடையும் வரை வழியில் போக்குவரத்து அதிகமாகத்தான் இருந்தது. அவன் ரக்ஷா குடோன்
அருகே செல்லும் போது போக்குவரத்து குறைந்திருந்தது. அந்த குடோன்
ஒரு தனியார் குடோன். காலை ஆறிலிருந்து இரவு ஒன்பது மணி வரை மிகவும் பரபரப்பாக
இருக்கும். அதன் பின் குடோன் மூடப்பட்டு விடும். துறைமுகத்திற்கு
அருகில் இருப்பதால் ஒரு காலத்தில் அது இருபத்திநாலு மணி நேரமும் திறந்திருக்கும். எல்லா சமயங்களிலும்
சரக்குகள் வந்து போய்க் கொண்டு இருக்கும் என்பதால் எல்லா நேரங்களிலும் அங்கு ‘பிசி’யாக இருக்கும். ஆனால் ஆள்
பற்றாக்குறை காரணமாக குடோனை இரவு நேரத்தில் மூடி வைப்பது என்று இரண்டு ஆண்டுகளுக்கு
முன் அதன் உரிமையாளர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால்
இப்போது அது பூட்டியிருக்க தான் வாய்ப்பு அதிகம்.
ஒருவேளை போதைப் பொருள்கள் அங்கே பதுக்கி
வைக்கப்பட்டு இருந்தால் இரவு நேரங்களில் ரகசியமாய் குடோன் பயன்படுத்தப்படும் சாத்தியமுள்ளது
என்று யுவராஜ் நினைத்தான். போதைப் பொருள் முடிவில் ஒரு மனிதனை எப்படி மிருகமாகவும், சமூக எதிரியாகவும்
ஆக்கி விடுகிறது என்று யுவராஜ் கண்கூடாகப் பார்த்திருக்கிறான். அதை ஒழிக்கா
விட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்தையே அது அழித்து விடும் என்று அவன் உறுதியாக நினைத்தான். அவன் மகன்
நீலேஷ் வளர்ந்து வரும் காலத்தில் போதை சூழ்நிலை இருக்கக்கூடாது என்று அவன் ஆசைப்படுகிறான். போதையைப்
பயன்படுத்தும் இளைஞர்களில் ஒருவனாக நாளை நீலேஷ் மாறினால் ஒரு தந்தையாக அவனால் தாங்கிக்
கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அதனால் போதைப் பொருள்
ஒழிப்பு அவனுக்கு வெறும் வேலையாக இருக்கவில்லை. அவனுடைய லட்சியமாகவே இருந்தது.
காரை சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டு
யுவராஜ் குடோனை நோக்கி நடந்தான். ஓரிரு வாகனங்கள் அவனைக் கடந்து சென்றனவே
ஒழிய ஆட்கள் யாரும் அப்பகுதியில் இருக்கவில்லை. யுவராஜ் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.55. குல்ஃபி ஐஸ்காரன் வந்து விட்டானா இல்லை இனிமேல்
தான் வர வேண்டுமா என்று தெரியவில்லை. குடோன் மூடப்பட்டு இருந்தது.
வெளி கேட் பூட்டப்பட்டு இருந்தது. சுற்றும் முற்றும்
நோட்டம் விட்டு பின் யுவராஜ் மெல்ல அந்த கேட் ஏறி உள்ளே குதித்தான். உள்பகுதியிலும் யாரும் தென்படவில்லை.
யுவராஜ் குடோனின் பின்பகுதிக்குச் சென்றான். அங்கும் யாரும் இருக்கவில்லை.
ஆனால் குடோனின் பின்புறக்கதவு லேசாகத் திறந்திருந்ததை யுவராஜ் பார்த்தான்.
உள்ளே குல்ஃபி ஐஸ்காரன் இருப்பானா இல்லை போதைப் பொருள் கடத்தி விற்பனை
செய்யும் ஆசாமிகள் இருப்பார்களா என்று தெரியவில்லை.
யுவராஜ் அலைபேசியை எடுத்து குல்ஃபி ஐஸ்காரன் கடைசியாக எப்போது
ஆன்லைனில் இருந்தான் என்று அறிய வாட்ஸப்பைப் பார்த்தான். இரவு 8.50க்கு கடைசியாக அவன் வாட்ஸப்பில் இருந்திருக்கிறான் என்பது தெரிந்தது.
யுவராஜ் சத்தமில்லாமல் குடோனின் பின்புறக் கதவை அடைந்தான். உள்ளே ஜீரோ வாட்ஸ் பல்பு ஒன்றின் வெளிச்சம் தெரிந்தது. அந்தப் பெரிய குடோனுக்கு அந்த வெளிச்சம் போதுமானதல்ல. அந்த வெளிச்சமும் வலது மூலையிலிருந்து வந்து கொண்டிருந்தது போல் தோன்றியது.
உள்ளே எதாவது பேச்சு சத்தம் கேட்கிறதா என்று காதுகளை யுவராஜ்
கூர்மையாக்கினான். வலது பக்க மூலையிலிருந்து ஒருவன் பேசுவது மெலிதாக அவனுக்குக் கேட்டது.
அவன் யாரிடமோ எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது.
ஆனால் வேறு யார் பேசுவதும் கேட்கவில்லை. அதிகமான
ஆட்கள் இருக்க வாய்ப்பில்லை. யுவராஜ் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தான்.
அவன் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று கைக்குட்டையோடு ஒரு கை அவன்
முகத்தருகே வருவதை உணர்ந்தான். அவன் வேகமாக சுதாரிப்பதற்குள்
நினைவிழந்தான்.
முகமதலி யுவராஜ் கீழே விழுந்து விடாமல்
இருக்க அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தரையில் கிடத்தினான். அங்கு மறைந்திருந்த
அவனுடைய ஆட்கள் ஐந்து பேர் வேகமாக வந்தனர். முகமதலி
தலையை அசைத்தான். முதலிலேயே அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று
அவன் கட்டளைகள் பிறப்பித்து வைத்திருந்ததால் அவர்களிடம் தற்போது சொல்ல எதுவுமில்லை. அவனுடைய
தலையசைப்பு ’வேலையை ஆரம்பிக்கலாம்’ என்ற சமிக்ஞையைத்
தந்தவுடன் அவர்கள் வேகமாகத் தங்களுக்குத் தரப்பட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒருவன் யுவராஜின் கால்சட்டைப் பையிலிருந்து
கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். யுவராஜின்
காரை இருபது கிலோமீட்டர் தொலைவில் ஆளில்லாத ஒரு பகுதியில் விட்டு விடும் வேலை அவனுக்கு
ஒதுக்கப்பட்டு இருந்தது.
முகமதலி யுவராஜின் அலைபேசியைக் கைப்பற்றி
உள்ளே இருந்த சிம்மை வெளியே எடுத்து அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். இருவர்
ஒரு பெரிய மரப் பெட்டியை எடுத்து வர, வேறு இருவர்
யுவராஜின் வாயையும், கை கால்களையும்
கயிற்றால் கட்டினார்கள். அவனை அந்த மரப்பெட்டியில் வைத்துப் பூட்டினார்கள். மரப்பெட்டியில்
ஒரு சிறிய துவாரம் யுவராஜ் மூச்சு விடுவதற்கு வசதியாக இருந்தது.
மரப்பெட்டியைப் பூட்டி மரப்பெட்டி மீது
ஏற்கெனவே அவர்கள் எடுத்து வைத்திருந்த சரக்கு விவரக் காகிதங்களை ஒட்டினார்கள். அரை மணி
நேரத்தில் மற்ற எத்தனையோ சரக்குகளுடன் இந்த மரப்பெட்டியும் துறைமுகத்திற்குள் சென்றது. கூடவே முகமதலி
செல்லவில்லை. துறைமுக கண்காணிப்பு காமிராவில் பதிவாக அவன் விரும்பவில்லை. அவனுடைய
ஆட்கள் மூவர் தான் மரப்பெட்டியுடன் சென்றார்கள். கவனிக்க வேண்டிய ஆட்களை முன்கூட்டியே அவர்கள் கவனித்திருந்ததால்
தேவையற்ற சோதனையோ, பிரச்சினையோ அவர்களுக்கு இருக்கவில்லை.
இரண்டு மணி நேரத்தில் அந்த மரப்பெட்டி
பாகிஸ்தான் செல்லும் கப்பலில் சரக்குகளோடு சரக்காக ஏற்றப்பட்டது. அதிகாலை
நான்கு மணிக்கு அந்தக் கப்பல் மும்பை துறைமுகத்திலிருந்து கிளம்பியது.
குல்ஃபி ஐஸ்காரனின் மனைவியும் மகனும் இரவு ஒன்பது மணியிலிருந்து
அவனைத் தேட ஆரம்பித்தார்கள். எப்போதும் அவன் எட்டு மணியளவில் வீடு வந்து சேர்ந்து விடுவான். ஆள் வரவும்
இல்லை, அவன் அலைபேசியைத் தொடர்பு கொண்டால் ஸ்விட்ச்டு ஆஃப் தகவலும்
வருகிறது என்பது அவர்களைக் கவலை கொள்ள வைத்தது. மும்பையில்
விபத்துகள் அதிகம். எங்காவது ஏதாவது லாரியோ, காரோ வண்டியோடு
சேர்த்து அவனை அடித்துக் கொண்டு போய் விட்டதா என்று தான் அவர்கள் ஆரம்பத்தில் கவலைப்பட்டார்கள். நேரம் ஆக
ஆக உறவினர்களும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் அவனைத் தேடும் பணியில்
சேர்ந்து கொண்டார்கள். வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில்
அவனுடைய குல்ஃபி ஐஸ்க்ரீம் வண்டி ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவனைக்
கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை அவர்கள் அவன் காணாமல் போனதை போலீஸுக்குத் தெரிவித்து
புகார் பதிவு செய்தார்கள்.
நிர்ப்பயாவும் பன்னிரண்டு மணி வரை கணவன் வராததால் அலைபேசியில்
அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாள். ’ஸ்விட்ச்டு ஆஃப்’ என்ற அறிவிப்பு
வந்தவுடன் அவளுக்குள்ளேயும் கவலை எழ ஆரம்பித்தது. சொன்ன நேரத்தில்
வர முடியா விட்டால் கண்டிப்பாகத் தகவல் தெரிவித்து விடும் அளவு பொறுப்பானவன் அழைக்கவில்லை
என்றதும் அவளும் விபத்து பற்றியே ஆரம்பத்தில் சந்தேகித்தாள். பின் அவள்
அவனுடன் பணி புரியும் ஒரு இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்டாள். அவருக்கும்
அவன் எங்கே சென்றான் என்று தெரியவில்லை. அடுத்த ஒரு மணி
நேரத்தில் அவனுடன் பணிபுரிபவர்களும், நண்பர்களும் அவனைத்
தேட ஆரம்பித்தார்கள். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை
நான்கு மணியளவில் அவன் கார் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் யுவராஜ்
என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்



Many thanks.
ReplyDelete