என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 14, 2026

ரட்சகன் 9

 


முகமதலி யுவராஜைப் பற்றி வேண்டிய அளவு தகவல்களைச் சேகரித்து விட்டான். மிக நேர்மையான, தைரியமான அதிகாரி. மூன்று வருடங்களுக்கு முன் ஐபிஎஸ் தேர்வு பெற்றதிலிருந்து அவன் மும்பையின் போதை தடுப்புப் பிரிவில் தான் பணிபுரிகிறான். மும்பையில் பாலிவுட் நடிகர் நடிகைகளிலிருந்து உயர்பள்ளி மாணவர்கள் வரை போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகின்றது. அரசியல்வாதிகள், மேலதிகாரிகள் தரும் ரகசிய ஆதரவு காரணமாக அங்கு போதைப் பொருள் புழக்கத்தை இதுவரையில் யாராலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. ஆனாலும் யுவராஜ் தன்னால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். இதுவரை இரண்டு முறை பெருமளவில் போதைப் பொருள்களை அவன் கைப்பற்றியிருக்கிறான். இது வரை சில்லறை விற்பனையாளர்கள் இருபத்தியிரண்டு பேரை அவன் கைது செய்திருக்கிறான்.

 

முகமதலி புன்னகைத்தான். அவர்களுடைய இயக்கமும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளுக்கு போதைப் பொருள்களைக் கடத்தி வருகிறது. அவர்கள் மொத்த விற்பனையாளர்களே ஒழிய சில்லறை விற்பனையாளர்கள் அல்ல. சில்லறை விற்பனையிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் யுவராஜும் அவர்களுக்குப் பரிச்சயம் ஆகியிருப்பான்.

 

இதற்கு முன் இரண்டு முறை பெருமளவில் போதைப் பொருளை அவன் கைப்பற்றியிருக்கின்ற தகவல் முகமதலியை யோசிக்க வைத்தது. முதல் முறை கைப்பற்றியது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு. இரண்டாவது முறை கைப்பற்றியது நான்கு மாதங்களுக்கு முன்பு. அந்தச் செய்திகளை முகமதலி விரிவாகப் படித்தான். யாரோ தகவல் தராமல் அந்த அளவு போதைப் பொருள்களை யுவராஜ் கைப்பற்றியிருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் தருவதன் மூலம் ஒரு பெரிய தொகையை அந்தத் தகவல் தருபவன் பெற்றிருக்க வேண்டும். போலீஸுக்குத் தகவல் தருபவர்கள் பெயர் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாலும் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமல்ல. கஷ்டமாக இருந்தால் கூட அதைக் கண்டுபிடித்தாக வேண்டிய நிலைமையில் முகமதலி இருக்கிறான்.

 

அவர்களுடைய இயக்கத்துக்கு உதவக்கூடிய ஆட்கள் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருக்கிறார்கள். பலர் பல முக்கிய வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கடைசி வரை மற்றவர்களால் கண்டுபிடிக்கப்பட மாட்டார்கள். தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் எந்த முட்டாள்த்தனமும் அவர்கள் செய்வதில்லை. இயக்கமும் முடிந்த அளவு அவர்களை வெளிப்படுத்தாதபடியே பார்த்துக் கொள்ளும். ஏனென்றால் அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் மிக முக்கியம். அவர்கள் சிக்கிக்கொண்டால் தகவல்கள் கிடைப்பது நின்று போகும்.

 

முகமதலி தன்னிடம் உள்ள தகவல் பேழையில் தேடி ஒரு எண்ணைக் கண்டுபிடித்து அதை ஒரு பாதுகாப்பான அலைபேசி மூலம் அழைத்தான்.

 

ஹலோஒரு பெண் குரல் கேட்டது.

 

நான் எம்.. எண் 3025”

 

மறுபக்கம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முகமதலி பொறுமையாகக் காத்திருந்தான். அந்தப் பெண் அவன் சொன்ன எழுத்துக்களையும், எண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்தியடைந்தால் மறுபடி அழைப்பாள். அவன் சொன்னதில் ஏதாவது பிழை இருந்தால் மறுபடி அழைப்பு வராது. அவன் அழைத்தாலும் அந்த எண்ணில் பதிலிருக்காது.

 

மூன்று நிமிடங்கள் கழித்து அவள் மறுபடி அழைத்தாள். “என்ன வேண்டும்?”

 

முகமதலி யுவராஜ் பெரிய அளவில் இரண்டு முறை போதைப் பொருள்களைக் கண்டுபிடித்த தேதிகளையும், கிடைத்த இடங்களையும் சொல்லி விட்டுக் கேட்டான். “எனக்கு அந்தத் தகவல் தந்த ஆளின் பெயரும், விலாசமும் வேண்டும்.”

 

பொதுவாக இது போன்ற கோரிக்கை சொல்லப்பட்டவுடன் மறுபக்கத்தில் அலைபேசி வைக்கப்பட்டு விடும் - முன்பு எழுத்துக்களையும், எண்ணையும் சொன்னவுடன் வைக்கப்பட்டது போல. ஆனால் அந்தப் பெண் உடனே அலைபேசியை வைக்கவில்லை. அவள் சொன்னாள். “இப்போதெல்லாம் கெடுபிடிகள் அதிகம். சந்தேகம் எழுந்தால் முக்கிய விவரங்களை யார் பார்க்கிறார்கள் என்கிற விவரங்களை அவர்களால் கண்டுபிடித்து விட முடியும்.”

 

முகமதலி எரிச்சலடைந்தான். “அது எனக்கும் தெரியும். இது முக்கிய வேலைக்கு வேண்டிய அத்தியாவசியத் தகவல்.”

 

சொல்லி விட்டு அவன் அலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.  அரை மணி நேரம் கழித்து அந்தப் பெண் அவனை அழைத்து ஒரு பெயரையும், விலாசத்தையும் சொன்னாள்.

 

முகமதலி சரியாக இரண்டு மணி நான்கு நிமிடங்களின் முடிவில் அந்த ஆள் குறித்து அனைத்து தகவல்களையும் பெற்றிருந்தான். அந்த ஆள் குல்ஃபி ஐஸ் விற்பவன். அவன் வியாபாரத்திற்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பகுதிக்குச் செல்பவன். அப்படிப் போகும் போது தகவல்களைப் பெற்று போலீஸுக்குத் தெரிவிப்பான் போல் தெரிந்தது.

 

தள்ளுவண்டியில் குல்ஃபி ஐஸ் விற்கும் அவனை யார் பார்வையிலும் படாமல் ஆக்கிரமிப்பது முகமதலிக்குச் சுலபமான வேலையாக இல்லை. ஒரு நாள் முழுவதும் அவனை ரகசியமாகப் பின் தொடர்ந்து மாலை ஏழு மணியளவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத வீதியில் முகமதலி அவனை அணுகினான்.

 

ஒரு குல்ஃபி ஐஸ் அவனிடம் வாங்கிப் பணத்தைத் தந்தபடியே முகமதலி தாழ்ந்த குரலில் சொன்னான். “யுவராஜ் சார் என்னை அனுப்பினார்.?”

 

ஐஸ்காரன் குழப்பத்துடன் கேட்டான். “எந்த யுவராஜ்?”

 

யுவராஜ் ஐபிஎஸ்.”

 

ஐஸ்காரன் முகமதலியைக் கூர்ந்து பார்த்தான். முகமதலி சொன்னான். “சார் அந்த சிவப்புக் காரில் இருக்கிறார். ஐந்து நிமிடம் பேச வேண்டுமாம். அவர் இங்கே வந்து உன்னுடன் பேசுவதை யாரும் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு வா...”

 

ஐஸ்காரன் சுமார் நூறு அடி தள்ளி நிற்கும் சிவப்புக் காரை பார்த்தான். உள்ளிருந்து யாரோ கையசைப்பது தெரிந்தது.

 

ஐஸ்காரன் வண்டியை ஒரு ஓரமாகத் தள்ளி நிறுத்தினான். பின் அவன் முகமதலியுடன் காரை நோக்கி நடந்தான். முகமதலி காரின் பின் பக்கக் கதவைத் திறந்து ஐஸ்காரனைப் பார்த்து தலையசைத்தான். “சீக்கிரம் பேசி விட்டு வா

 

ஐஸ்காரன் குனிந்து உள்ளே பார்த்தான். அந்தச் சமயத்தில் முகமதலி வேகமாய் ஐஸ்காரனை உள்ளே தள்ள, உள்ளே இருந்து ஒருவன் வேகமாய் ஐஸ்காரனை உள்ளே இழுத்தான். ஐஸ்காரன் சுதாரிப்பதற்குள் மயக்க மருந்து தடவிய கைக்குட்டை அவன் மூக்கைப் பதம் பார்த்தது. ஐஸ்காரன் நினைவிழந்து மயக்கமானான். சிவப்புக் கார் வேகமாக அங்கிருந்து பறந்தது. 

 

ரை மணி நேரம் கழித்து யுவராஜுக்கு ஐஸ்காரனிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்து சேர்ந்தது. ”ஒரு முக்கியத் தகவல் இருக்கிறது. ஜே.என்.பி.டி சாலையில் உள்ள ரக்ஷா குடோனின் பின்புறம் இன்று இரவு பத்து மணிக்கு வரவும்.”

 

அந்தத் தகவலில் பெயர் எதுவும் இல்லை என்றாலும் அதை அனுப்பியிருப்பது குல்ஃபி ஐஸ்காரன் தான் என்பதில் யுவராஜுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அந்த அலைபேசி எண் குல்ஃபி ஐஸ்காரனுடையது தான். இதற்கு முன் தகவல் தெரிவித்த போது கூட ஒரு முறை நேரடியாகப் பேசியும், ஒரு முறை இப்படி அனுப்பியும் தான் இருந்தான் என்பதால் யுவராஜ் இதில் தில்லுமுல்லு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.

 

யுவராஜ் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 7.40. காரில் போனால் பல சிக்னல்களைத் தாண்டிப் போய்ச் சேர்வதற்கு இரண்டு மணி நேரம் தேவைப்படும். வழியில் ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டுப் போனால் ஐஸ்காரன் சொல்லும் பத்து மணியாகி விடும்.

 

யுவராஜ் நிர்ப்பயாவை அழைத்து இன்று வரத் தாமதமாகும் என்று சொன்னான்.

 

அவள் கேட்டாள். “எத்தனை மணியாகும்?”

 

இரவு பத்து மணிக்கு மேல் போக்குவரத்து குறைய ஆரம்பிக்கும் என்பதால் ரக்ஷா குடோன் பகுதியிலிருந்து வீட்டுக்கு ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். “பதினொன்றரைக்கு வந்துடுவேன். சாரி. ஒரு முக்கியமான வேலை....”

 

அவன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய வேலை அவனைப் பல சமயங்களில் நடுநிசிக்குத் தான் வீட்டுக்குப் போக அனுமதித்திருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட அவள் சலித்துக் கொண்டதோ, கோப்ப்பட்டதோ கிடையாது. அதுவே அவனுடைய குற்ற உணர்ச்சியை எப்போதும் அதிகப்படுத்தும். எந்த மாதிரி ஒரு வாழ்க்கையை அவன் அவளுக்குக் கொடுத்திருக்கிறான்...

 

பரவாயில்லைங்க. உங்க பையனுக்கு இப்பவே குட் நைட் கிஸ் குடுத்துடுங்க. இல்லாட்டி தூங்க மாட்டான்.” சொல்லி விட்டு நிர்ப்பயா அலைபேசியை மகன் காதில் வைத்தாள்.

 

நீலேஷிடம் யுவராஜ் இன்று இரவு வரத் தாமதமாகும் என்றும் நீலேஷ் சமர்த்தாகத் தூங்க வேண்டும் என்றும் சொல்லி இரவு முத்தத்தை அலைபேசி வழியே அனுப்பினான். மழலை மொழியில் தந்தையிடம் சிறிது கதை பேசி விட்டு நீலேஷும் தந்தைக்கு முத்தத்தை அனுப்பி வைத்தான்.

 

அவர்களிடம் பேசி விட்டு யுவராஜ் காரில் கிளம்பினான்.


(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. ஆசிரியருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete