என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 18, 2017

’சவ சாதனா’ செய்த அகோரியின் திகில் கதை!


அமானுஷ்ய ஆன்மிகம் - 16

ராபர்ட் ஈ ஸ்வொபோதா (Robert E Svoboda) என்ற எழுத்தாளர் அகோரிகள் குறித்த பேரார்வம் கொண்டவர். அவர் நீண்ட தேடலின் முடிவில் ஒரு சக்தி வாய்ந்த அகோரியைக் கண்டடைந்தார். அந்த அகோரி மற்ற அகோரிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றமும், வாழும் சூழலும் உடையவராக இருந்தார். சாதாரண மனிதர்களின் தோற்றம், சாதாரண மனிதர்களைப் போலவே மனைவி குடும்பம், குழந்தைகள் எல்லாம் கொண்டவராக இருந்தார். அதனால் ஒருசிலரைத் தவிர வெளி உலகத்திற்கு அவர் அகோரி என்பதே தெரியாமல் இருந்தது. ராபர்ட்டின் ஆத்மார்த்தமான தேடலால் மட்டுமே அந்த அகோரியை அறிய முடிந்தது. பிரபலமானால் பொது மக்களின் தொடர் வரவாலும், எண்ணற்ற கோரிக்கைகள் மற்றும் கேள்விகளாலும் தன் சுதந்திரத்தை இழந்து விட வேண்டியிருக்கும் என்பதால் மறைவிலேயே தன் அகோர சடங்குகளையும், அபூர்வ சித்திகளையும் வைத்திருந்தார் அந்த அகோரி. அவரைக் குருவாக ஏற்றுக் கொண்ட எழுத்தாளர் ராபர்ட் ஈ ஸ்வொபோதா அவர் குறித்து நூல்கள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட போது தன் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல் எழுத அனுமதியளித்தார் அந்த அகோரி குரு. அவர் விருப்பப்படியே அந்த அகோரி குருவின் பெயரையோ, இருப்பிடத்தையோ வெளிப்படுத்தாமல் ராபர்ட் ஈ ஸ்வொபோதா மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் எழுதினார். அவை 1) Aghora I- At the left hand of God,  2)Aghora II - Kundalini  3) Aghora III - The Law of Karma. இந்த மூன்று நூல்களும் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளன. தன் அகோரி குருவுக்கு தூய்மையான ஆனந்தம்  என்னும் பொருள் கொண்ட விமலானந்தா என்ற புனைப் பெயரிட்டு விவரித்த சில சுவாரசிய சம்பவங்களைப் பார்ப்போம்.


மும்பையில் ஒரு செல்வந்தருக்கு மகனாகப் பிறந்த அகோரி விமலானந்தாவுக்கு சிறுவயதில் இருந்தே அபூர்வசக்திகள் படைத்த மகான்கள் மேல் ஈர்ப்பு இருந்தது. அதனால் அந்த மகான்கள் பற்றி படிப்பதிலும், அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். சமகாலத்து மனிதர்களில் அப்படி சக்தி படைத்தவர்கள் யாராவது இருந்தால், நண்பர்களுடன் சேர்ந்து சென்று அவர்களைச் சந்தித்து வருவதிலும் அவர் ஆர்வமாய் இருந்தார். ஆனால் கண்மூடித்தனமாக யாரையும் துதிப்பதோ, பின்பற்றுவதோ அவரால் சிறிதும் சகிக்க முடியாததாக  இருந்தது.

இளைஞராக இருந்த போது ஒரு முறை ஜீனசந்திர சூரி என்ற வயதான மனிதர் அபூர்வசக்திகள் படைத்தவர் என்றும், எப்போதுமே பயணத்தில் இருக்கும் அந்த மனிதர் மும்பை வந்துள்ளார் என்றும் கேள்விப்பட்டார். உடனே அவர் தன் நண்பர்களுடன் சென்று அந்த மனிதரைச் சந்தித்தார். ஜீனசந்திர சூரி ஒரு கூட்டமாக அவரைக் காண வந்த இளைஞர்களில் விமலானந்தாவை மட்டும் கூர்ந்து கவனித்தார். பின் விமலானந்தாவிடம் அவருடைய ஜாதகத்தைக் கொண்டு வந்து தன்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அத்தனை பேர் போயிருந்த போது தன் ஜாதகத்தை மட்டும் ஏன் இந்த மனிதர் கேட்கிறார் என்பது விமலானந்தாவுக்குப் புரியவில்லை. ஆனால் அவர் கூறிய படியே மறுநாள் தனியாக தன் ஜாதகத்தைக் கொண்டு போய் அவரிடம் விமலானந்தா தந்தார்.

ஜீனசந்திர சூரி அந்த ஜாதகத்தை நிறைய நேரம் ஆராய்ந்தார். பின் “உனக்கு ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், மற்றும் சில அபூர்வசக்தி யந்திரங்கள் படித்துத் தேற விருப்பமா?என்று விமலானந்தாவைக் கேட்க விமலானந்தாவும் அதற்கு விருப்பம் தெரிவித்தார். பின் மூன்று வருடங்கள் அந்தத் துறைகளில் நிறைய அவர் கற்றுக் கொண்டார். முக்கியமாக பல வகை சக்தி யந்திரங்கள் எப்படி தயாரிப்பது, அவற்றை வைத்து சில பூஜைகள் செய்வது எப்படி என்பதை ஜீனசந்திர சூரியிடமிருந்து விமலானந்தா கற்றுக் கொண்டார்.

மூன்று வருடங்கள் கழித்து கல்லூரிக்கு விடுமுறை நாட்களின் போது ஒரு சமயம் என்னுடன் வெளியூர் வருகிறாயா?என்று ஜீனசந்திர சூரி கேட்க விமலானந்தாவும் ஒத்துக் கொண்டார். அன்றைய தர்பாங்கா மாநிலத்தில் இருந்த, இன்றைய பீகாரில் உள்ள, ஜனக்பூர் என்ற சிறிய கிராமத்திற்கு அவரை ஜீனசந்திர சூரி அழைத்துச் சென்றார். இரண்டு மூன்று நாட்கள் அந்தக் கிராமத்தில் இனிதே கழிந்தன. கிராமத்து மக்களில் பலரும் ஜீனசந்திர சூரிக்கு முன்பே மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் போலிருந்தது. கிராம மக்களும் அன்பாகப் பழகினார்கள். மூன்றாவது நாள் அமாவாசை நாள்.

அன்று இரவு ஜீனசந்திர சூரி விமலானந்தாவிடம் வந்து மிக இனிமையாகப் பேசினார். வழக்கத்திற்கும் மாறாகக் கூடுதல் இனிமையோடு அவர் பேசியது விமலானந்தாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்பே சொன்னது போல எத்தனை தான் மரியாதைக்குரிய நபர்களாக இருந்தாலும் அறிவை மழுங்கடித்து அவர்களைப் பின்பற்ற முடியாத விமலானந்தா இந்த மனிதர் எதற்கோ அடிபோடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டார்.

கடைசியில் ஜீனசந்திர சூரி விஷயத்துக்கு வந்தார். “நீ இன்று சவ சாதனா செய்யப் போகிறாய்என்றார்.

விமலானந்தாவுக்கு சவ சாதனாஎன்றால் என்ன என்று தெரியவில்லை. அப்படியென்றால் என்ன என்று கேட்டார்.  

“சவ சாதனா என்றால் சவத்தின் மேல் அமர்ந்தபடி பூஜை செய்வது. இன்று புதியதாக ஒரு இளம்பெண்ணின் சவம் கிடைத்திருக்கிறதுஎன்று ஜீனசந்திர சூரி சொன்னவுடன் விமலானந்தாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறு வயதில் இருந்தே சவம் என்றால் அவருக்குப் பயம். அந்தப் பிணத்தைத் தன் பிணமாகவே நினைத்து மயங்கி விழும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்டவருக்குப் பிணத்தின் மீது அமர்ந்து யோகசாதனை செய்வது என்பது எப்படிப்பட்ட திகிலைக் கிளப்பி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அப்போது தான் விமலானந்தாவுக்கு ஜீனசந்திர சூரி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு தான் செயல்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது. அவர் ஜாதகத்தைப் பார்த்து அவருக்கு சவ சாதனா சித்தியாகும் என்பதை அறிந்து கொண்டு தான் அதற்காக இவ்வளவு நாட்கள் தயார்ப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை விமலானந்தா புரிந்து கொண்டார். உடனே உறுதியாக அதெல்லாம் என்னால் முடியாது என்று விமலானந்தா தெரிவித்தார்.

பல விதங்களில் சொல்லிப் பார்த்தும் விமலானந்தா கேட்காமல் போகவே கடும் கோபம் அடைந்த ஜீனசந்திர சூரி “நீ அதைச் செய்யா விட்டால் உன் சவத்தின் மீது அமர்ந்து நானந்த சவ சாதனாசெய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.   

இளைஞரான தன்னை இந்த வயதான மனிதர் இப்படி மிரட்டுவதைச் சகிக்காத விமலானந்தா இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்என்று கோபத்துடன் தெரிவித்தார்.

இதை முன்பே எதிர்பார்த்திருந்த ஜீனசந்திர சூரி தன்னோடு அந்தக் கிராம எல்லையில் வசித்து வந்த சில பழங்குடி மக்களை அழைத்து வந்திருந்தார். திடகாத்திரமான அந்தப் பழங்குடி மக்கள் தங்கள் கைகளில் கத்தி முதலான தாக்குதல் ஆயுதங்களை வைத்திருந்தபடி நெருங்கினார்கள்.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத விமலானந்தா பயந்து போனார். இங்கு இவர்களால் கொல்லப்பட்டாலும் ஏனென்று கேட்க நாதியில்லை. இந்த ஆள் சொல்வது போலச் செய்தாலோ பயத்திலேயே உயிர் போய் விடும். சவசாதனத்தின் போது ஏதாவது ஒரு துஷ்ட சக்தி என்னை ஆட்கொண்டு உயிரைக் குடித்து விடும். மொத்தத்தில் இன்று எனக்கு மரணம் நிச்சயம்என்று மனதிற்குள் புலம்பியவராக கடைசியில் சவ சாதனாசெய்வதற்கு விமலானந்தா ஒத்துக் கொண்டார்.    

உடனே மீண்டும் இனிமையான பேச்சுக்கு மாறிய ஜீனசந்திர சூரி சவ சாதனா எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்க ஆரம்பித்தார். சவத்தின் கை, கால்களின் கட்டை விரல்களை எப்படிக் கட்ட வேண்டும், சவத்தின் மீது எப்படி அமர வேண்டும், எப்படி சவசாதனா செய்ய வேண்டும் என்பதை  எல்லாம் சொல்லித் தந்த ஜீனசந்திர சூரி ஒரு பாட்டில் சாராயத்தையும் தந்து அப்போதே குடிக்கச் சொன்னார்.  அன்று வரை மதுவைக் கையாலும் தொட்டிராத விமலானந்தா ‘இன்று எல்லாம் விதி விட்ட வழிஎன்று நினைத்தவராக சாராயத்தை முழுவதுமாகக் குடித்தார். தொண்டை, வயிறு எல்லாம் எரிந்தது.

அவர் அருகில் இருந்த மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே பிணம் தயாராக வைக்கப்பட்டிருந்தது.  ஜீனசந்திர சூரி தான் ரகசியமாய் வைத்திருந்த ஒரு யந்திரத்தை எடுத்து விமலானந்தாவின் கையில் தந்தார். “இது நான் நாற்பது ஆண்டு காலமாக அஸ்ஸாமில் பூஜித்து வந்த சக்தி வாய்ந்த யந்திரம். இது உன்னைக் காக்கும். நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. என்று சொல்லிய அவர் விமலானந்தாவை சவத்தின் மீது அமர வைத்து, சொல்ல வேண்டிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, சவத்தைச் சுற்றி கருப்புக் கயிறால் பெரிய வட்டமிட்டு மந்திரங்கள் ஜபித்தார்.

சவ சாதனாவின் போது வேறெந்த ஆவியும் இதைத் தாண்டி வந்து உன் கவனக்குவிப்பைக் கலைத்து விட முடியாதபடி ரட்சனை செய்திருக்கிறேன். பயப்படாமல் நான் சொன்னபடி செய்என்று சொன்னார்.

அமாவாசைக் கும்மிருட்டில், மயானத்தில், பிணத்தின் மேல் அமர்ந்து ஒரு அமானுஷ்ய சடங்கைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளான விமலானந்தா விரக்தியுடன் தலையசைத்தார்.

அந்தத் திகில் சடங்கில் இனி என்ன ஆயிற்று என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)
என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 20.6.2017

Thursday, September 14, 2017

இருவேறு உலகம் – 47


நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்ச மாலை, பளிச் வெள்ளையில் விலையுயர்ந்த வேட்டி, சட்டை, நடையில் வேகம் கலந்த தனி மிடுக்கு என்ற அடையாளங்களுடன் சதாசிவ நம்பூதிரியைச் சந்திக்க மனோகருடன் மர்ம மனிதன் உள்ளே நுழைந்தான். மனோகர் வந்த காரையே பார்த்து முன்பு பிரமித்திருந்த சங்கர நம்பூதிரிக்கு இப்போது மனோகரின் முதலாளி வந்திறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பார்த்தவுடன் பிளந்த வாய் மூடச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. இப்போது யோசிக்கையில் இரண்டு ஜாதகங்கள் பார்க்க இந்த ஆள் தந்த நாற்பதாயிரம் ரூபாய் அதிகத் தொகை அல்ல என்று தோன்றியது. ‘அப்பா அந்த இரண்டு ஜாதகங்கள் அலச எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அதுவும் இனி ஜாதகம் பார்ப்பதில்லை என்ற பிடிவாதத்தை இந்த ஆளுக்காக விட்டுக் கொடுத்து ஜாதகம் பார்த்திருக்கிறார்……’

சங்கர நம்பூதிரி பணிவுடனும், பயபக்தியுடனும் மர்ம மனிதனைப் பார்த்துக் கைகூப்பினார். மனோகர் அவரை அறிமுகப்படுத்தினான். “இவர் பெரியவரோட மகன். இவரும் ஜோதிடர் தான்”

மர்ம மனிதன் மிகுந்த மரியாதையுடன் கை கூப்பினான். அந்த மரியாதையில் புளங்காகிதம் அடைந்த சங்கர நம்பூதிரி அவர்களை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்.

சதாசிவ நம்பூதிரி சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். மேலே வரும் காலடி ஓசைகளைக் கேட்டு விட்டுக் கண்களைத் திறந்த அவரிடம் மனோகர் சொன்னான். “ஐயா வணக்கம். சார் தான் என் முதலாளி.”

மர்ம மனிதன் சங்கர நம்பூதிரிக்குக் காட்டிய மரியாதையை விடக்கூடுதல் மரியாதையுடன் கைகூப்பினான். சதாசிவ நம்பூதிரியும் மரியாதையுடன் கைகூப்பி விட்டு எதிரே இருந்த நாற்காலிகளில் அமரக் கை காட்டினார். மனோகர் அமரவில்லை. மர்ம மனிதன் ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டு மனோகரைப் பார்த்து லேசாகத் தலையசைத்தான். மனோகர் கிளம்பி விட்டான். சங்கர நம்பூதிரிக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய ஆவல் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவனுடனேயே கீழிறிங்கி விட்டார். ’அப்பா மட்டும் புத்திசாலியாக இருந்தால் இந்த ஆளிடம் இனியும் ஒரு பெருந்தொகை கறந்து விடலாம். ஆனால் சூரியன் எப்படி மேற்கில் உதிக்காதோ அது போல இவரும் அதைச் செய்ய மாட்டார்.’ என்று அவர் மனம் அங்கலாய்த்தது.

சதாசிவ நம்பூதிரி எதிரில் இருந்த மர்ம மனிதனைக் கூர்ந்து பார்த்தார். மர்ம மனிதன் தான் வந்த பாத்திரமாகவே மாறி இருந்ததால் அவருக்கு முந்தைய நாள் இரவு வீட்டுக்கு வெளியில் இருட்டில் கண்காணித்த மனிதன் என்று தோன்றவேயில்லை. சதாசிவ நம்பூதிரிக்கு எதிரில் அமர்ந்திருந்த ஆள் கம்பீரமாகவும், ஆன்மிகவாதியாகவும், நல்ல துடிப்பான மனிதராகவும் தெரிந்தார்.  சக்தி அலைகளைப் படிப்பதில் வல்லவரான மாஸ்டரே இங்கிருந்திருந்தாலும் கூட இப்போது மர்ம மனிதனின் சுயரூபத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகத் தானிருந்திருக்கும் என்கிற நிலையில் சதாசிவ நம்பூதிரிக்கு சந்தேகம் தோன்றாமல் இருந்தது ஆச்சரியமில்லை.

மர்ம மனிதன் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “வணக்கம் ஐயா. நான் கனகசபை. பூர்வீகம் தஞ்சாவூர்ப் பக்கம். தொழில் விஷயமா குஜராத்ல போய் செட்டில் ஆனவன்….”

சதாசிவ நம்பூதிரிக்கு அவன் தொழில் பற்றியோ சேர்த்திருக்கும் சொத்து பற்றியோ விசாரித்துத் தெரிந்து கொள்ளத் தோன்றவில்லை. அவர் ஆர்வத்துடன் தன் பழைய சந்தேகத்தைக் கேட்டார். ”சந்தோஷம்…. உங்க ஆள் நீங்கள் ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சவர்னு சொன்னார்.  உங்களுக்கு எப்படி ஜோதிடத்தில் ஆர்வம்?”

“ஐயா ஆரம்பத்தில் நான் ஜோதிடத்தை நம்பாமல் தான் இருந்தேன். என் குருநாதர் தான் அது ஒரு சயின்ஸ். எல்லாத்தையுமே சொல்லிடாட்டியும் முக்கியமான பல தகவல்களை நாம் சுலபமாய் தெரிஞ்சுக்கலாம்னு சொல்லி எனக்கு ஜோதிடத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தினவர். அதுல இறங்கினதுக்கு அப்புறம் அதுல ஆர்வம் அதிகமாயி ஆழமாவே போயிட்டேன்….”

“இந்த ரெண்டு ஜாதகங்கள் யாரோடது? உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?”

மர்ம மனிதன் மிகவும் எச்சரிக்கையுடன் பதிலளித்தான். “ரெண்டு ஜாதகங்களையும் எனக்கு குரு தான் கொடுத்தார். இந்த ரெண்டு ஜாதகத்தையும் பாரு. அவங்க என்ன ஆவாங்கன்னு சொல்லுன்னார். நான் பார்த்தேன். ரெண்டும் ரொம்ப சுவாரசியமான ஜாதகங்கள்….. முடிஞ்சா வரலாற்றையே புரட்ட முடிஞ்ச ஜாதகங்கள்….. ஆனா இப்ப நடப்பு தசைல ஆபத்தான கட்டத்துல இருக்கிறதா எனக்கு பட்டுச்சு……”

“உங்க கணிப்பு உண்மை தான். உங்க குரு என்ன சொல்றார்?”

“அவர் கிட்ட நான் கேட்கறதுக்குள்ள அவர் காலமாயிட்டார்…..” மிகுந்த வருத்தத்துடன் மர்ம மனிதன் சொன்னான்.

சதாசிவ நம்பூதிரி தன் முன்னால் டீப்பாயில் வைத்திருந்த இரண்டு ஜாதகங்களையும் ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார். மர்ம மனிதன் அவரையே கூர்ந்து பார்த்தான். அவனுக்கு அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருந்தது. அவனுக்கு இருக்கும் சக்தியின் பரிமாணத்திற்கு அவனால் சுலபமாக ஊடுருவிப் பார்க்க முடியும். ஆனால் அவரிடம் தன் சக்தியை உபயோகிப்பதில் ஒரு பிரச்னையை அவன் உணர்ந்தான். உண்மையான ஆன்மிகவாதியும், சாத்வீகியுமான அவர் அவன் சக்தி ஊடுருவலை உணர முடிந்த நுட்பநிலை கொண்டவர். நேற்றிரவு உணர்ந்தும் இருந்தவர். இப்போது அவன் தான் நேற்று இரவு இங்கு வந்தவன் என்று ஒப்பிட்டு அறிந்து கொள்ள அதிக நேரம் ஆகாது. அவர் தெரிந்து கொண்டார் என்றான பிறகு அனாவசியமாய் அவரைக் கொல்ல வேண்டி இருக்கும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அது தேவையில்லாத சக்தி விரயமாய் இருக்கும். எனவே அவர் வாய் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொள்வது தான் நல்லது….

சதாசிவ நம்பூதிரி கேட்டார். “ஜாதகங்களைக் கொடுத்தப்ப உங்க குரு இந்த ரெண்டு ஜாதகங்களும் யாருடையதுன்னு சொல்லலியா?”

”இல்லை. பாருன்னு மட்டும் தான் சொன்னார்….. நானும் அவர் நான் பார்த்துச் சொல்றதுக்குள்ளே இறந்துடுவார்னு தெரியாததாலயும், யாருன்னு தெரிஞ்சதுக்கப்பறம் ஜாதகம் பார்த்தால், தெரிஞ்ச விஷயங்கள் நம் கணிப்பை பாதிச்சுடுமோங்கறதாலயும் கேட்கலை….”

சதாசிவ நம்பூதிரி தலையாட்டினார்.

மர்ம மனிதன் தொடர்ந்து உணர்ச்சிகரமாகச் சொன்னான். “… பார்த்த பிறகு இவ்வளவு அருமையான ஜாதகர்கள் இப்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பார்களே அவர்களுக்கு என்ன ஆகும், தப்பிப்பார்களா இல்லை மாட்டிக் கொள்வார்களாங்கற சந்தேகம் என்னை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு. முகம் தெரியாத மனுஷங்களா அவங்க இருந்தாலும் அந்த ஒரு நெருடலை என்னால தவிர்க்க முடியல….. அதனால தான் ரெண்டாவதா ஒரு நல்ல ஜோதிடர் கருத்தையும் கேட்கலாமேன்னு தோணுச்சு….. என்னுடைய ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, ஒரு விஷயத்துல இறங்கிட்டா அதோட முடிவு வரைக்கும் தெரிஞ்சுக்கற வரைக்கும் நிம்மதியா இருக்க முடியாது. மனசுல அந்தக் கேள்விக்குறி பெருசா நிக்கும்… நின்னுகிட்டே இருக்கும்…..”

சதாசிவ நம்பூதிரி க்ரிஷின் ஜாதகத்தைக் கையிலெடுத்தபடி சொன்னார். “இந்த ஜாதகன் இப்ப உயிரோட இருக்கவே வாய்ப்பு குறைவு. போன அமாவாசையிலேயே காலமாயிருக்கலாம்…..”

மர்ம மனிதனுக்கு அவரை மனதினுள் மெச்சாமல் இருக்க முடியவில்லை. மெல்லக் கேட்டான். “ஒருவேளை பிழைச்சிருந்தா அவன் கண்டத்துல இருந்து முழுசா தப்பிச்சதா நாம எடுத்துக்கலாமா ஐயா?”

“இல்லை. இன்னும் நிறைய ஆபத்து காத்துகிட்டிருக்கு. ஆபத்துக்காலம் இன்னும் ஆறு மாசம் இருக்கு. ஆனா பையன் மகாபுத்திசாலி. நல்ல ஆத்மா. அன்பானவன்….. புதனின் வேகமாய் புரிந்து கொள்ளும் திறமையும், சனியின் ஆழமாய் உணரக்கூடிய ஞானமும் இருக்கிறவன். அதனால கஷ்டம்னாலும் எதையும் சமாளிக்கற வாய்ப்பும் இல்லாமலில்லை…..”

மர்ம மனிதனும் அந்த சாத்தியக்கூறில் தான் சின்னதாய் ஒரு அபாயத்தை உணர்ந்திருந்தான். கிழவரும் அதே முடிவைத் தான் எட்டியிருக்கிறார்…..

அடுத்ததாக சதாசிவ நம்பூதிரி மற்ற ஜாதகத்தை எடுத்தார். ”இந்த ஜாதகரும் ஒரு தர்மாத்மா. ஆரம்பகாலத்தில் நாஸ்திகராய் இருந்திருக்க வாய்ப்பு இருக்கு. பின் ஆன்மிகத்துல இழுக்கப்பட்டிருப்பார். பல மகாசக்திகளை இந்த ஆள் கண்டிப்பாய் தன்வசமாக்கி இருப்பார். இவருக்கும் இனி ஆறுமாச காலம் ஆபத்தாய் தான் இருக்கும். இவர் பின்னால பல பலம்வாய்ந்த ஆட்கள் இருப்பார்கள். அதே போல எதிரிகளும் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். கிரகங்கள் யுத்த சூழலைச் சொல்றதால இவர் விதியையும் நிச்சயமாய் சொல்றதுக்கில்லை….”

மாஸ்டரின் ஜாதகத்தை நன்றாக அலசியிருந்ததால் இதையும் மர்ம மனிதன் அறிந்திருந்தான். யதார்த்தமாய் கேட்பது போல் அவன் மெல்லக் கேட்டான். “ஐயா உண்டு, இல்லை என்று முடிவாகச் சொல்வதல்லவா விஞ்ஞானம். இப்படி நிச்சயமாய் சொல்ல முடியாத போது ஜோதிடத்தை எப்படி விஞ்ஞானம்னு சொல்றது? இதை என் குரு கிட்டயே கேட்டிருப்பேன். அவர் இல்லாததால உங்க கிட்ட கேட்கிறேன்…. தப்பா நினைச்சுக்கக் கூடாது….”

“விஞ்ஞானம் படிச்ச டாக்டர்கள் கூட பிழைக்கறதுக்கு வாய்ப்பு 50 சதவீதம், 40 சதவீதம்னு சொல்றாங்களே. அது அவங்க தப்போ, விஞ்ஞானத்தோட தப்போ இல்லை. சாதகமும், பாதகமும் ஒன்னை ஒன்னு மிஞ்சற மாதிரி இருக்கறப்போ முடிவா சொல்ல கடவுளால தான் முடியும், ஜோதிடனும், டாக்டர்களும் தெளிவாய் தெரிஞ்சதை மட்டும் தான் உறுதியா சொல்ல முடியும். மத்ததச் சொல்ல முடியாது….”

மர்ம மனிதன் அவருடைய வாதத்தை ரசித்தான். ஆனால் ஒரு உண்மையை அவன் அறிவான். எல்லாத் தகவல்களையும் பெற்ற பின் சாதக பாதகங்கள் சரிசமமாகவே இருந்தால் கூட வாக்கு பலிதம் உள்ள ஒரு திறமையான ஜோதிடன் தன் உள்ளுணர்வால் முடிவாக ஒன்றை உணர்வான். இந்த மனிதரும் அதை உணர்ந்திருக்காமல் இருக்க மாட்டார். அதை மெல்ல அவன் வரவழைப்பான். அதற்கு முன் தான் அறிய வேண்டியிருந்த முக்கியக் கேள்வியை அவன் மெல்லக் கேட்டான். “இந்த ரெண்டு பேரும் எதிரிகளானால் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியுமா ஐயா?”



(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, September 13, 2017

Monday, September 11, 2017

தலைமைப்பீட அகோரேஸ்வரர்கள்!

அமானுஷ்ய ஆன்மிகம் 15 



கோரிகளின் ரகசியங்களை உணர்ந்து அவற்றில் ஆளுமை கொண்ட யோகிகள் அகோரேஸ்வரர்கள் என்றழைக்கப்பட்டார்கள். அகோரிகளின் குருவாக சக்தி வாய்ந்தவராக இருந்து சீர்திருத்தங்களும் செய்து முறைப்படுத்திய பாபா கினாராமும் அப்படியே அழைக்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. பாபா கினாராமைத் தொடர்ந்து அகோரிகளின் தலைமைப்பீடத்திற்கு வந்த பினக்ராம், பிகாம்ராம் போன்றவர்களும் பெயரளவில் மட்டுமல்லாமல் அகோரேஸ்வரர்களாகவே வாழ்ந்தும் சென்றார்கள்.

அகோரேஸ்வரர்களாக உயர்ந்த அந்த தலைமைப் பீடாதிபதிகள் துவக்கத்திலேயே அகோர மார்க்கத்தில் இருந்தவர்களாக இருக்கவில்லை. பினக்ராம் ‘கபீர்பந்திஎன்றழைக்கப்பட்ட கபீரின் ஆன்மிக வழியைப் பின்பற்றுபவராகத் தான் ஆரம்பத்தில் இருந்தார். பிகாம்ராம் வைஷ்ணவராக இருந்தவர். பிற்காலத்தில் தான் இவர்கள் அகோர மார்க்கத்தில் ஈர்க்கப்பட்டு அகோரிகளாக மாறி பின் அகோரேஸ்வரர்களாக உயர்ந்தார்கள். அவர்களுடைய குரு பாபா கினாராமைப் போலவே அவர்களும் சிவனை வணங்குவதற்கு இணையாக விஷ்ணுவையும் வணங்கினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து வந்த தலைமைக் குருக்களில் பாபா ராஜேஸ்வர் ராம் அவர்களிடம் ஒரு பெண்மணி தனக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை என்பதால் குடும்பத்தில் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.  மனமிரங்கிய பாபா ராஜேஸ்வர்ராம் அந்தப் பெண்மணியிடம் ஸ்ரீமன் நாராயண நாரயணாஎன்று தியானித்து வரும்படி கூற, அவரும் அப்படியே தியானித்து விரைவிலேயே தாய் ஆனார் என்று சொல்லப்படுகிறது. சைவர்களும், வைணவர்களும் தங்கள் தீவிரப்பற்றினால் சண்டையிட்டுக் கொண்ட கால கட்டங்களில் இப்படி இரண்டையுமே ஏற்றுக் கொண்டவர்களாக அகோரேஸ்வரர்கள் இருந்தார்கள் என்பது  கவனிக்க வேண்டிய செய்தி.

பாபா ராஜேஸ்வரரின் சீடரும், அடுத்த தலைமைப் பீடாதிபதியாகவும் வந்த அகோரேஸ்வரர் பாபா பகவான் தாஸ், பாபா கினாராமிற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமானவர். இவர் சர்க்கார் பாபா என்றும் அழைக்கப்பட்டார்.      
அகோரேஸ்வரர் பாபா பகவான் தாஸ் 1937 ஆம் ஆண்டு பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். அவர் பிறப்பதற்கு முன் அவரது தாயார் கனவில் அவர் வயிற்றில் இருந்து பிறக்கும் குழந்தை சாதாரணக்குழந்தை அல்ல, இறைவனின் அம்சமே என்று யாரோ சொல்வதாக உணர்ந்தார். சிறிது நேரத்தில் குழந்தையும் பிறக்கவே அந்தக் கனவின் பிரகடனத்தை மனதில் கொண்டு குழந்தைக்கு பகவான் தாஸ் என்ற பெயரை வைத்தார்கள்.

பகவான் தாஸுக்கு ஐந்து வயதாகிய போதே அவருடைய தந்தை காலமாகி விட, பகவான் தாஸ் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டி செல்லமாக வளர்ந்த பகவான் தாஸ் பள்ளிப்படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆன்மிக நூல்களைப் படிப்பதும், கோயில்கள் மற்றும் புனித ஸ்தலங்களில் தியானம் செய்வதுமே அவருக்குப் பிடித்தமானவைகளாக இருந்தன. சிறு வயதில் பிரகலாதன் கதையும், துருவன் கதையும் அவரை அதிகம் ஈர்த்தன. வயதாக, ஆக துறவு மனப்பான்மை அவரிடம் வளர ஆரம்பித்தது. ஏழு வயதாகிய போதே அதிகமாக கோயில்களில் அவர் தங்க ஆரம்பித்தார். வீட்டில் உண்பது அரிதாகியது. கோயிலில் பிரசாதமோ, யாராவது ஏதாவது தந்தால் அதையோ மட்டும் உண்பார். தியான நிலையில் இருந்தால் அதுவும் உண்ண மாட்டார். மணிக்கணக்கில் இறை உணர்வுடன் லயித்தபடி அமர்ந்திருப்பார். தோற்றம், உணவு, உடை, சவுகரியம் முதலானவை அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அவருடைய இந்த நிலை கண்டு குடும்பத்தினர் வருத்தப்படவே, அவர்களுடைய வருத்தம் காணச் சகிக்காமல் அவர் அந்த ஊரை விட்டு வெளியேறி, கயா, பூரி ஆகிய புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். மறுபடி சொற்ப காலத்திற்கு அவர் ஊருக்குத் திரும்பிய போது குடும்பத்தினர் அவருடைய துறவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் பெற்றிருந்தனர்.

சிறிது காலம் அங்கிருந்து விட்டு மறுபடியும் அங்கிருந்து கிளம்பிய அவர் செல்லும் வழியில் எல்லாம் ஆன்மிகப் பெரியோர்களின் சத்சங்கத்தில் அதிகம் கழித்தார். ஆரம்ப காலத்தில் வைஷ்ணவப் பெரியோர்களே அவருக்கு அதிகம் கிடைத்தார்கள். ஒன்பதாவது வயதில் காசி விஸ்வநாதரைத் தரிசிக்க அவருக்கு ஆவல் ஏற்பட்டது. அவர் காசிக்குச் சென்று தச அஸ்வமேத காட்டை அடைந்த போது அடுத்து கோயிலுக்கு எப்படிச் செல்வது என்று அறியாத ஒரு நிலையில் அப்படியே சிறிது நேரம் அங்கு நின்றிருந்தார்.  அப்போது பட்டுப்புடவை அணிந்திருந்த ஒரு மூதாட்டி அவரருகே வந்தார். அந்த மூதாட்டி தெய்வீகக் களையுடன் இருந்தார். “உனக்கு காசி விஸ்வநாதனைப் பார்க்க வேண்டுமா?என்று கேட்டார். அந்த மூதாட்டியே அவர் மனதை அறிந்து அப்படிக் கேட்டது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பாபா பகவான் தாஸ் “ஆமாம்என்றார்.

அந்த மூதாட்டி “நீ கங்கையில் குளித்து விட்டு வா. நான் உன்னை அங்கே அழைத்துப் போகிறேன்என்று கூறினார். பாபா பகவான் தாஸும் அவர் கூறியபடியே கங்கையில் குளித்து விட்டு வர அந்த மூதாட்டி அவரை காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் யோயிலில் காசி விஸ்வநாதரைத் தரிசித்ததும் எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவித்த அவர் அங்கேயே வாழ்நாள் பூராவும் தங்கி விட பேராவல் கொண்டார். ஆனால் அந்த மூதாட்டி அவரை அங்கேயே இருக்க விடாமல் அன்னபூரணேஸ்வரி ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போனவுடன் அந்த மூதாட்டி மாயமாக மறைந்து விட்டார். அவர் யார், எதற்காக அவரை அழைத்து வந்தார், எப்படி மறைந்தார் என்று புரியாத நிலையில் திரும்ப கங்கைக் கரைக்கு பாபா பகவான் தாஸ் திரும்பினார். அங்கே ஹரிச்சந்திர காட்டில் அப்போதைய அகோரிகளின் தலைமைப் பீடாதிபதியான பாபா ராஜேஸ்வர ராமை அவர் சந்தித்தார். அந்தச் சிறுவனின் ஆன்மிக தேஜஸைக் கவனித்த பாபா ராஜேஸ்வர ராம் அவருக்கு அகோர தீட்சை அளித்து அவர் பெயரை பாபா பகவான்ராம் என்று மாற்றினார்.

அங்கேயே மூன்று வருடங்கள் இருந்து அகோர ரகசியங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்ட போதும் பாபா பகவான்ராமால் அதற்கு மேலும் அங்கேயே தங்கி விட முடியவில்லை. மெய்ஞான வேட்கை மேலும் பல மேல்நிலைகளை அடைய அங்கிருந்து இழுத்துச் சென்றது. தன் பன்னிரண்டாம் வயது முடிவடையும் காலத்தில் அவர் அங்கிருந்தும் சென்று கங்கை முதலான புண்ணிய நதிகளோரம் பயணம் மேற்கொண்டார்.

பதினான்காம் வயதில் கங்கை நதிக்கரையோரம் இருந்த ஒரு சுடுகாட்டில் மூன்று நாட்கள் இரவு பகலாக உணவு நீரின்றி கடும் தவமிருந்த பகவான் ராம் மூன்றாம் நாள் முடிவில் மெய்ஞானசித்தி பெற்றார். அந்த மூன்று நாட்களில் அவருடைய தவ வலிமையை நேரில் பார்த்த மக்கள் உண்மையான மெய்ஞானியாக அவரை அடையாளம் கண்டனர். அவரைக் கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்தனர். அவர் அருகாமையில் இருக்கும் போது பலர் பரவசத்தையும், பேரமைதியையும் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் நோய்கள் குணமாகும் அனுபவத்தையும் பெற்றார்கள். மனித குலத்தின் மீது பெரும் கருணை கொண்டிருந்த பாபா பகவான்ராம் மக்கள் உணர்ந்த அற்புதங்களில் தன் பங்கை என்றுமே ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணமே ஆணித்தரமாக அவரிடம் இருந்தது.     

தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்த பாபா பகவான்ராம் பல இடங்களில் ஆசிரமங்களையும், டிரஸ்டுகளையும் அமைத்து மெய்ஞான வழிகளைப் பரப்புவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர் பின் நேபாளம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லெபனான், சவுதி அரேபியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து அமெரிக்கா, மெக்சிகோ முதலான நாடுகளுக்கும் பயணம் செய்து உலக மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். உலகம் முழுவதும் உள்ள அகோரிகளைத் தொடர்பு கொண்ட அவர் தேவையான சீர்திருத்தங்களை தற்காலத்திற்கு ஏற்றவாறு அகோர மார்க்கத்தில் கொண்டு வந்தார்.


அகோர் பரிஷத் டிரஸ்ட் என்ற அமைப்படி ஏற்படுத்தி அதன் மேற்பார்வையில் Aghor Research Institute and Library என்ற நூலகத்தை பகவான்ராம் பாபா நிறுவினார். அகோரிகளின் சித்தாந்தம், வேதாந்தம், செயல்முறை குறித்த நூல்கள் எல்லாம் அங்கே படிக்கக் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அகோரிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கும் அந்த அமைப்பும் நூலகமும் உதவி செய்கின்றன. புனிதநூல்கள் பல பிற்கால சந்ததியினரால் சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்பட்டு மனிதர்களை மூளைச்சலவை செய்வதாக இருக்கின்றன என்றும், அதனாலேயே அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் தவறை ஒருவர் செய்யக்கூடாது என்றும் அவர் அடிக்கடி சொல்வார். மனிதன் உண்மை என்ன என்பதைத் தன் ஆத்மஞானம் மூலம் தான் அறிய முடியும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

1992 ஆம் ஆண்டு நியூயார்க்கில் மன்ஹட்டன் நகரில் காலமான பகவான்ராம் பாபாவின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு அவர் விருப்பப்படி காசியில் கங்கைக்கரையில் எரிக்கப்பட்டது.  பதினைந்து வயதிற்குள்ளேயே மெய்ஞானம் பெற்று அகோர ரகசியங்கள் பலவும் அறிந்திருந்த போதும் மகாசக்திகளைப் பலர் அறிய விளம்பரம் செய்து பயன்படுத்துவதை பாபா பகவான்ராம் சிறிதும் ஆதரித்ததில்லை.  அந்த சக்திகளை ரகசியமாய் மட்டும் பயன்படுத்த வேண்டும், அதுவும் மனிதகுலத்தின் நன்மைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த அவர் அப்படியே வாழ்ந்தும் சென்ற மகானாக இருந்தார்.

அடுத்த வாரம் திகிலூட்டும் சுவாரசியமான நிகழ்வுகளைச் சந்தித்த இன்னொரு அகோரியின் அனுபவங்களைப் பார்ப்போமா?


(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 13.6.2017 


Thursday, September 7, 2017

இருவேறு உலகம் – 46


யாரோ வரும் காலடியோசை கேட்டதுமே மாஸ்டரின் கை அந்தப் பேனாவுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த காகிதத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது.  வருவது எதிரியாக இருக்குமோ என்ற எண்ணம் தான் முதலில் மனதில் எழுந்தது. ஆனால் அந்த ஆட்களை முந்தி வந்த அலைவரிசைகள் அப்படிச் சொல்லவில்லை என்றாலும் அவன் அலைவரிசைகளை மறைப்பதில் வல்லவன் என்று முன்கூட்டியே அறிந்திருந்த தகவல் எச்சரிக்கை விடுத்தது. அவர்  வேகமாக அந்தக் காகிதத்தைத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பத்ரகாளியின் பின்னால் மறைவாக நின்று கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தார். இரண்டு இளைஞர்கள் சாராய பாட்டிலுடன் வந்து கொண்டிருந்தார்கள். சற்று முன் வேகமெடுத்த இதயத்துடிப்புகள் இயல்பு நிலைக்கு வர ‘இங்கிருக்கும் காலி பாட்டில்கள் இவர்கள் கைங்கர்யம் தானா?என்று எண்ணியவர் அமானுஷ்யமாய் ஒரு வினோத ஒலியை எழுப்பியபடி சிலையின் பின்னால் இருந்து தாவிக் குதித்தபடி வெளியே வந்தார். “உங்கள் ரத்தம் வேண்டும் பிள்ளைகளேஎன்று ஹிந்தியில் பெண்குரலில் கிறீச்சிட்ட குரலில் அவர் சொன்னார்.

எதிர்பாராமல் அரையிருட்டில் இருந்து வெளிப்பட்ட உருவமும் அதன் ஒலியும், இரத்தம் கேட்டதும் அந்த இளைஞர்களிடம் பெரும் பீதியைக் கிளப்பி விட்டது. ஒரு கணம் பயத்தில் உறைந்து போன இருவரும் அடுத்த கணம் அங்கிருந்து புயல் வேகத்தில் ஓடி மறைந்தார்கள். மாஸ்டர் புன்னகைத்தார். பயத்தின் இயல்பே இது தான். கண்டது என்ன, கேட்டது என்ன என்றெல்லாம் நின்று ஆராய்ச்சி செய்ய விடாது... ஆனால் இரத்தம் கேட்கும் இந்தக் கோயிலுக்கு இனி சாராய பாட்டில்களோடு சீக்கிரத்தில் யாரும் வர மாட்டார்கள் என்று எண்ணியவராக தீப்பெட்டி எடுத்து ஒரு தீக்குச்சியை உரசி அந்த வெளிச்சத்தில், தான் எடுத்து வைத்திருந்த தாளில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். ஒரு எளிமையான வரைபடமாக அது இருந்தது.



ஒரு பனிமலையில் ஓரிடத்தில் ஒரு திரிசூலம்.... அதன் மேல் ஆகாயத்தில் ஒரு பறவை.  அவ்வளவு தான்.  அந்தத் தீககுச்சியில் நெருப்பு தீர்வதற்கு முன்  அந்த வரைபடத்தை மனதில் பதித்துக் கொண்ட மாஸ்டருக்கு எதிரி எடுத்துக் கொண்டு போன தாளிலும் இதே வரைபடம் இருந்ததா அல்லது வேறுபடம் இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் குரு தன் பிரிய சீடனுக்கு என்று அனுப்பி இருந்த செய்தியைச் சரியான நாளில் சரியான முகூர்த்தத்தில் பெற்றுக் கொண்ட திருப்தியில் கண்கள் ஈரமாயின. இது சொல்லும் தகவல் என்ன, தொடர்ந்து அவர் செய்ய வேண்டியதென்ன என்பது இனிமேல் தான் பிடிபடும் என்றாலும் இப்போதைக்கு இது போதும்.

ஈரமான கண்களுடன் மாஸ்டர் அரையிருட்டில் தெரிந்த பத்ரகாளியைப் பார்த்து கைகூப்பியபடி சொன்னார். உன் முன்னிலையில் எனக்குக் கிடைக்க வேண்டிய தகவலைப் பெற்று விட்டேன். சற்று முன் ஏமாற்றி விட்டதாகச் சொன்னதற்கு என்னை மன்னித்து விடு தாயே. எத்தனை தான் ஞானம் பெற்றாலும் சமயத்தில் மனம் சராசரியாகி விடுகிறது... அவசரப்பட்டு முடிவெடுத்து வெளிக்கொட்டியும் விடுகிறது.....

உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடாமல் அங்கிருந்த குப்பைகளையும், மது பாட்டில்களையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து விட்டு சில நிமிடங்கள் பத்ரகாளி சிலை முன் அமர்ந்து தியானம் செய்து வணங்கி விட்டுத் தான் மாஸ்டர் கிளம்பினார். செல்லும் போது மனம் லேசாக இருந்தது.

இருட்டில் கங்கைக்கரையில் நிறைய நேரம் பல சிந்தனைகளுடன் அவர் அமர்ந்திருந்தார். கரையில் யாத்திரீகர்கள் ஆரவாரம் ஓய்ந்து அவர் தனியாக அமர்ந்திருந்த போது அந்த நதி  மட்டுமே அவர் துணையாக இருந்தது. இன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்த போது குருவின் அருள் அவரைக் கைவிட்டு விடவில்லை என்று தோன்றியது. குரு தன் பிரிய சிஷ்யனுக்கு வெளியே ஒரு பொதுவான தகவல் எழுதி வைத்தாலும் உள்ளே ஒரு முக்கியத் தகவலையும் வைத்து விட்டு தான் சென்றிருக்கிறார். ஒருவேளை வெளித்தகவல் எதிரியின் கண்ணில் பட்டு அதை அவன் எடுத்துச் சென்றிருந்தாலும் முக்கியத் தகவல் கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற நிம்மதியில் தான் வருத்தமில்லாமல் அவர் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்....

குருவின் மரணத்தை நினைக்கையில் எதிரி மீது வந்த ஆத்திரத்தை அவரால் குறைக்க முடியவில்லை. “நீ எப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் சரி, க்ரிஷ் போன்ற ஜீனியஸை உன் பகடைக்காயாக உபயோகப்படுத்திக் கொண்டாலும் சரி என் கடைசி மூச்சு வரை உன்னை எதிர்த்துப் போராடுவேன்என்று மர்ம எதிரியை நினைத்துச் சொன்னார்.

ண்டது கனவல்ல உண்மைக் காட்சிகள் தான் என்பதை வேற்றுக்கிரகவாசி தெரிவித்தவுடன் ஏற்பட்ட திகைப்பு அவனுக்குள் பல கேள்விகளை எழுப்பியது. வேற்றுக்கிரகவாசியிடம் க்ரிஷ் கேட்டான்.

“யார் அவர்கள்?

“ரெண்டு பேரும் உன் விதியோடு சம்பந்தப்பட்டவர்கள். முதல் காட்சியில் பார்த்தவன் தான் உன் எதிரி

அவனை எங்கே சரியாகப் பார்த்தேன். இருட்டில் சரியாகத் தெரியவில்லை.... சரி இரண்டாம் காட்சியில் பார்த்தது?

“அந்த ஆள் உன்னை எதிரியின் ஆளாகப் பார்க்கிறவர்?

“குழப்பாதே

“அவர்கள் இரண்டு பேர் பற்றியும் என்னிடம் கேட்காதே. நீயாகப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் அவர்கள்....

“அவர்களை நான் இது வரை பார்த்தது கூடக் கிடையாதே....

“இனி பார்க்க வேண்டி வரும். அப்போது புரிந்து கொள்.

வேற்றுக்கிரகவாசி சில விஷயங்களில் பிடிவாதமானவன். சொல்ல வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் பின் அவன் கண்டிப்பாகச் சொல்ல மாட்டான்..... “சரி அந்தப் பாழடைந்த கோயில் எங்கே இருக்கிறது?

“வாரணாசி எல்லையில் இருக்கிறது?

“அவர்கள் ஏன் அங்கே போகிறார்கள்?

“அவர்களுக்கு வேண்டிய தகவல் அந்தக் கோயிலில் இருக்கிறது. அதைத் தேடிப் போகிறார்கள்.

“அதையேன் முழு இருட்டில் ஒருத்தரும், அரையிருட்டில் ஒருத்தரும் தேடிப் போகிறார்கள். நல்ல வெளிச்சத்திலேயே போகலாமே

“முதல் ஆளுக்கு ரகசியம் முக்கியம். இரண்டாம் ஆளுக்கு முகூர்த்தம் முக்கியம்.....

க்ரிஷுக்குக் குழப்பம் அதிகமானதே ஒழியக் குறையவில்லை. இப்படியே தொடர்ந்தால் தலை வெடித்து விடும் போல இருந்தது. அவன் பேச்சை மாற்றினான். “இனி எவ்வளவு நாள் நான் இங்கேயே இருக்க வேண்டும்? வீட்டுக்கு எப்போது போவது?

“நீ மரணத்திலிருந்து இப்போதைக்குத் தப்பி விட்டாய். அதனால் இனி நாம் போய் விடலாம். உன்னை அந்த மலையிலேயே விட்டு விட்டு நானும் கிளம்புகிறேன்....

“மரணத்திலிருந்து இப்போதைக்குத் தப்பி விட்டாய்என்று அவன் சொன்னதை க்ரிஷ் கவனித்தான். “சரி இனியும் எனக்கு ஆபத்து வந்தால், நீயும் போய் விட்டால் யார் என்னைக் காப்பாற்றுவார்கள்? நான் என்ன செய்வது?

நான் உனக்கு ஒரு பேருண்மையைச் சொல்லட்டுமா?

“சொல்...

“எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரை நம்பியும் வாழாதே. உனக்குத் தேவையானதை எல்லாம் கொண்டு வந்து தர உனக்குள்ளே ஒரு மகாசக்தி இருக்கிறது. அந்த சக்தி அலைவரிசையில் நீ இருக்கும் வரை உனக்கு வேண்டியது எதுவும் கிடைக்காமல் போகாது....

“அந்தச் சக்தி அலைவரிசையில் இருப்பது எப்படி...?

“அதை நீயே தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். சரி நாம் கிளம்பலாமா?

க்ரிஷ் தலையசைத்தான். அடுத்த கணம் தனக்குள் ஏதோ ஊடுருவுவதை அவன் உணர்ந்தான். பின் லேசாவது போல் உணர்ந்து கடைசியில் அவன் நினைவிழந்தான்.....


வியாழக்கிழமை காலையில் சதாசிவ நம்பூதிரியின் வீட்டுக்குள் மனோகருடன் புதியதொரு வேடத்தில் மர்ம மனிதன் நுழைந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, September 4, 2017

வாழ்வில் மறக்கக்கூடாத உண்மைகள்!

வாழ்க்கையில் அமைதியும், வெற்றியும் அடைய விரும்பும் ஒவ்வொரு மனிதனும் மறக்கக்கூடாத உண்மைகள் இவை!
-என்.கணேசன்


Friday, September 1, 2017

மதுரை புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 219 ல் என் நூல்கள்


அனைவரும் வருக! சிறப்புத் தள்ளுபடியில் நூல்களைப் பெறுக!

அன்புடன்
என்.கணேசன்