என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 31, 2026

ரட்சகன் 7

 


கமது அன்சாரி தலைமையில் அங்கு வேறு நான்கு பேர் கூடியிருந்தார்கள். அவர்களில் மூவர் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். நான்காமவன் முகமதலி, அவர்கள் இயக்கத்தின் திறமை வாய்ந்த செயல்வீரன். அப்சல்கானுக்கு இணையானவன் என்று பெயரெடுத்தவன். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் அவர்களுடைய இயக்கத்தின் அனைத்து வேலைகளையும் அப்சல்கானோடு சேர்ந்து செய்தவன் அவன். தற்போது அப்சல்கான் சிறையில் இருப்பதாலும், இந்தியாவில் சூழ்நிலை சரியில்லாமல் இருப்பதாலும் அவன் எந்த தீவிர நடவடிக்கையிலும் இறங்காமல் பதுங்கியிருக்கிறான். மறுபடியும் அவன் இயங்க வேண்டியிருப்பதால் அகமது அன்சாரி அவனை வரவழைத்திருக்கிறார்.

 

அகமது அன்சாரி அப்சல்கானின் ஆலோசனையையும், அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் அவர்கள் இயக்கத்து ஆள் அந்த ஆலோசனை வெற்றி தருமா என்று சந்தேகம் தெரிவித்ததையும் முகமதலிக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்து விட்டுச் சொன்னார்.

 

வெற்றி கிடைக்கும் என்று உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு செயலில் இறங்க வீரம் வேண்டியதில்லை. சுலபமான வெற்றிகளில் பெருமைப்படவும் ஒன்றும் இல்லை. வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்ட வேலைகளில் இறங்கி தான் நம்முடைய இயக்கம் இவ்வளவு தூரம் வளர்ந்து முன்னேறி இருக்கிறது. நாம் இந்தியாவில் நம்முடைய சாகசத்தைக் காட்டி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. உலகத்தின் பார்வையில் நாம் பலவீனமாகிக் கொண்டு இருக்கிறோம். அப்சல்கானை இந்தியா தூக்கில் இட்டு விட்டால் நம் பலவீனத்தை நாம் ஒப்புக் கொண்டது போல் ஆகி விடும். அதற்கு முன் நாம் எதாவது செய்து அப்சல்கானை மீட்க வேண்டும். அதற்கு அப்சல்கானின் இந்த ஆலோசனையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை

 

அவர் சொல்லி விட்டு மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தார். அவர்கள் அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்டார்களேயொழிய தங்கள் அபிப்பிராயம் எதையும் சொல்லவில்லை.  அவர் முகமதலியிடம் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய்?”

 

அவர் சொன்னது சரி தான் என்றாலும், நீங்கள் சொல்வதும் சரி தான். நாம் எதாவது செய்தாக வேண்டும். இல்லா விட்டால் உலக அரங்கில் நாம் மரியாதையை இழந்து விடுவோம்.”

 

அகமது அன்சாரி திருப்தியுடன் தலையசைத்து விட்டுத் தொடர்ந்து கேட்டார். “கடத்துவதானால் யாரைக் கடத்துவது சுலபம்?”

 

கடத்தும் வேலையை இப்போது செய்ய வேண்டியவன் முகமதலி தான் என்பதால் அவனிடம் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. முகமதலி சொன்னான். “மூவரைக் கடத்துவதுமே சுலபமல்ல என்றாலும், சரியாகத் திட்டமிட்டால் யுவராஜைக் கடத்த முடியும்.”

 

அது வரை அமைதியாய் இருந்த மற்றவர்களில் ஒருவர் கேட்டார். “குழந்தை பிறந்த பிறகு கூட யுவராஜை ராஜேஷ்வர் மருமகனாக ஏற்கவில்லை. நம் ஆள் சொன்னது போல, பிடிக்காத மருமகனை நாமாகக் கடத்தினால் அது ராஜேஷ்வருக்கு வசதியாக அல்லவா போய் விடும். திருப்பிக் கொண்டு வந்து அவனைச் சேர்க்கிறேன் என்றால் தான் அவர் வருத்தப்படுவார். நாமாக அவனை அவர்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கி விட்டால், அவர்களுக்குப் பிடித்த பையனை மகளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பாரே அவர்.”

 

அகமது அன்சாரி சொன்னார். “நியாயமான சந்தேகம் தான்.. இது பற்றி நானும் நிறைய யோசித்தேன். ராஜேஷ்வர் யுவராஜை மருமகனாக முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதவராய் இருந்தால் கல்யாணத்திற்கு முன்பாகவே அவனை சுலபமாகத் தீர்த்துக்கட்டியிருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. அவர் அஹிம்சாவாதி அல்ல. அவருடைய கம்பெனி ரகசியங்களை போட்டி கம்பெனிக்கு கசிய விட்ட ஒரு ஊழியன் திடீரென்று காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகின்றன. இதுவரை அவன் பிணம் கூடக் கிடைக்கவில்லை. அதே போல் அவருடைய வீட்டில் நகைகளைக் கையாடல் செய்த ஒரு வேலைக்காரி பற்றி அவர் போலீஸில் புகார் கூடத் தரவில்லை. அவள் ஒரு வாரத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தாள். இதற்குப் பின்னணியில் அவர் தான் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி அலட்டிக் கொள்ளாமல் ஆட்களைத் தீர்த்துக்கட்டும் ஆள் யுவராஜை விட்டு வைத்திருப்பது பெருந்தன்மையால் தான் என்று நினைக்க முடியவில்லை.” 

 

அதே போல மகள் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக அவளை வெறுப்பவராக இருந்தால் கல்யாணத்திற்குப் பிறகும் அவள் பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்ப வேண்டியதில்லை. யுவராஜ் நிர்ப்பயா இருவர் வாழ்க்கையிலிருந்து விலகி நிற்கிறாரே ஒழிய ஒரேயடியாக உறவை அறுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது யுவராஜை மீட்க எதையும் செய்யாமல் இருப்பார் என்று என்னால் நினைக்க முடியவில்லை.”

 

இன்னொருவர் முதல் முறையாக வாயைத் திறந்தார். “யுவராஜை மீட்க ராஜேஷ்வர் முன்வருவார். அதற்குப் பதிலாக அப்சல்கானை விடுவிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி அழுத்தம் தந்தால் அரசாங்கம் கண்டிப்பாக அவருக்கு மறுப்பு தெரிவிக்காது. ஏனென்றால் எல்லோருக்கும் தெரிந்தது போல் ஆளும் கட்சி தேர்தல் செலவுகளுக்கு அவர் தயவைத் தான் எதிர்பார்க்கும் நிலைமையில் இருக்கிறது. ஆனால் யுவராஜுக்காக அப்சல்கானை அரசாங்கம் விடுவிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்குமா? பலர் பணயக்கைதிகளாக இருந்தால் அரசாங்கம் அப்சல்கானை விடுவிக்க எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால் ராஜேஷ்வரின் மருமகனுக்காக அப்சல்கானை விடுவிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது.”

 

அதை ஆமோதித்து மற்ற இருவர் தலையசைத்தார்கள். முகமதலியும் சொன்னான். “ஆமாம். ஆளுங்கட்சிக்கு தேர்தல் நிதியாகத் தருவதில் பத்து சதவீதம் தான் எதிர்க்கட்சிகளுக்கு ராஜேஷ்வர் தருகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கிடைத்த பத்து சதவீதத்திற்காக எதிர்க்கட்சிகள் நன்றியோடு இருக்கப் போவதில்லை. கிடைக்காத தொன்னூறு சதவீதத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் முனைப்பில் தான் இருப்பார்கள்.”

 

அகமது அன்சாரி சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் அரசாங்கத்தோடு இந்த பேச்சுவார்த்தையை நாம் ரகசியமாகவே நடத்துவோம். யுவராஜைக் கடத்தியது நாம் தான் என்று நாம் பகிரங்கப்படுத்த வேண்டியது இல்லை.  அப்சல்கானை நம்மிடம் ஒப்படைப்பதையும் இந்திய அரசாங்கம் வெளிப்படையாகச் செய்ய வேண்டியதில்லை. ரகசியமாகவே இந்தப் பரிவர்த்தனையை முடித்துக் கொள்வோம்.”

 

எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கும் என்ற கருத்தைச் சொன்னவர் சொன்னார். “அப்சல்கான் திகார் சிறையில் இல்லாமல் போனதற்கு இந்திய அரசாங்கம் என்ன பதிலை எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் சொல்லும்.”

 

அகமது அன்சாரி சொன்னார். “அது நம் தலைவலி அல்ல. இந்திய அரசாங்கம் யோசித்து ஒரு வழி கண்டுபிடிக்கட்டும். கதைகள் சொல்வதற்கும், காரணங்கள் கண்டுபிடிப்பதற்கும் அரசியல்வாதிகளுக்குச் சொல்லித்தரவா வேண்டும்?”  

 

அவர் சொன்னது அவர்களுக்கும் சரியென்றே பட்டிருக்க வேண்டும். அடுத்த கேள்வியோ, சந்தேகமோ யாரிடமிருந்தும் எழவில்லை.

திருப்தி அடைந்த அகமது அன்சாரி முகமதலியிடம் சொன்னார். “இனி எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது. அப்சல்கானின் உயிர், விடுதலை மட்டுமல்ல, நம் இயக்கத்தின் எதிர்காலமும், கௌரவமும் கூட உன் கையில் தான் இருக்கிறது முகம்மதலி. இதற்கு முன்பும் இந்தியாவில் எத்தனையோ திட்டங்களை நீ சிறப்பாகச் செயல்படுத்தியவன். ஆனால் அப்போதெல்லாம் உன்னுடன் சேர்ந்து இயங்க அப்சல்கான் கூட இருந்தான். iப்போதும் உனக்கு உதவ நம் ஆட்கள் அங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்றாலும் , திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் சுதந்திரமும், பொறுப்பும் உனக்குத் தான் இருக்கிறது. உன் திறமையைத் தனியாக நிரூபிக்க உனக்கு அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை நீ  பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற நான் உன்னை வாழ்த்துகிறேன்.”

 

முகமதலி நெஞ்சில் கை வைத்தி தலை தாழ்த்தி வணங்கி அங்கிருந்து வெளியேறினான். ஜீப்பில் சிறிது தூரம் பயணித்தும், பாகிஸ்தான் பஸ்ஸில் சிறிது தூரம் பயணித்தும் தான் அவன் விமான நிலையத்தை அடைய வேண்டியிருந்தது. விமான நிலையம் சென்று சேர்ந்ததும் யுவராஜ்  குறித்த தகவல்களை அவன் இணையத்தில் தேட ஆரம்பித்தான். மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்த போது யுவராஜ் பற்றி நிறைய பொதுவான தகவல்கள் அவனுக்குக் கிடைத்திருந்தன.  மும்பை வந்து சேர்ந்தவுடன் அவன் பத்திரிக்கைத் துறையில் அவர்கள் இயக்க நண்பரையும், போலீஸ் துறையில் இருக்கும் ஒரு நண்பரையும் அவன் தொடர்பு கொண்டான். அவனுக்குத் தேவையான மிக முக்கியமான தகவல்கள் அவர்கள் மூலம் அவனுக்குக் கிடைத்தன.

 

ஆபரேஷன் யுவராஜ்திட்டம் அவன் மூளையில் உருவாக ஆரம்பித்தது.

 (தொடரும்)

என்.கணேசன்



No comments:

Post a Comment