என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 19, 2026

சதுரங்கம் 6

 

ர்ஜுன் தன் பத்திரிக்கைத் துறை நண்பர்களைத் தொடர்பு கொண்டு, நர்மதா குறித்து பல தகவல்களைப் பெற்றான். அதில் ஒன்று, நர்மதா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நகைக் கடைக்குச் சென்று வைரக் கம்மல் வாங்கினாளாம். அந்தப் பத்திரிக்கை நண்பர் அந்தப் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார். அதில் நர்மதா அந்த வைரக் கம்மலைப் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். நகைக்கடைக்காரர் சிசிடிவி கேமிராப் பதிவிலிருந்து அந்தப் புகைப்படத்தை எடுத்து அந்த நண்பருக்கு அனுப்ப, அதை அந்த நண்பர் அர்ஜுனுக்கு அனுப்பியிருக்கிறார். வாழ்க்கை வெறுத்துப் போய் விரக்தியில் இருப்பவள் வைரக்கம்மல் வாங்குவாளா? அந்தப் புகைப்படத்தில் அவளிடம் விரக்தியின் லேசான அறிகுறி கூட தெரியவில்லை.

 

நர்மதாவுக்கு எந்த விதமான பணப் பற்றாக்குறை இருந்தது போலவும் தெரியவில்லை. அவள் இறப்பதற்கு முந்தைய நாள் வரை வாங்கிய பொருள்கள் எல்லாமும் கூட வாழத்துடிக்கும் நபரின் தேவைகளையே அடையாளம் காட்டின.

 

சுமார் மாலை ஐந்து மணியளவில், அதையெல்லாம் அவன் பணிபுரியும் விடிவெள்ளி பத்திரிக்கையின் ஆசிரியரும் நிறுவனருமான தேவசகாயத்திடம் அவன் சொல்லிக் கொண்டிருந்த போது தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது. உடனே அவர்கள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் நகலை வரவழைத்துப் படித்தார்கள். நர்மதா இறந்த நேரம் இரவு பன்னிரண்டிலிருந்து ஒன்றரை மணிக்குள் இருக்கலாம் என்று அது தெரிவித்தது. தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட காயத்தைத் தவிர அவள் உடலில் வேறு பலத்த காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவளது வலது கட்டை விரல் நுனியில் லேசான ஒரு சிறு கீறல் காயம் மட்டும் இருக்கிறது என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அந்தக் காயம் கத்தி அல்லது கூரான பொருள் ஒன்றில் அவளுடைய விரல் பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

 

அந்தச் சிறு காயம் பற்றிப் படித்தவுடன் அர்ஜுன் புன்னகைத்தான்.

 

தேவசகாயம் அவனிடம் கேட்டார். ”ஏன் சிரிக்கிறாய் அர்ஜுன்?”

 

அர்ஜுன் சொன்னான். “அவள் எழுதினதாய் சொல்ற தற்கொலைக் கடிதத்துல இருக்கற கையெழுத்து முழுசா பொருந்தாமல் போயிருக்கலாம். அதற்குக் காரணம் அந்தக் காயம்னு சொல்வாங்க பாருங்க

 

அவன் சொன்னது போலவே தான் நடந்தது. சிறிது நேரத்தில் வந்த கையெழுத்து நிபுணர்களின் அறிக்கையில்அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து, அவளிடம் இருந்த டைரிகள், மற்ற எழுத்து ஆவணங்களுடன் பொதுவாக ஒத்துப் போனாலும் முற்றிலும் பொருந்துவதாகச் சொல்ல முடியவில்லை. காரணம் அவளுடைய கட்டைவிரல் காயமாகக் கூட இருக்கலாம்.” என்று சொல்லப்பட்டிருந்தது.

 

தேவசகாயம் ஆச்சரியப்பட்டார். அவர் இதற்கு முன்பும் அவனுடைய யூகங்கள் பெரும்பாலும் ஊர்ஜிதமாவது குறித்து பிரமித்திருக்கிறார். உண்மையில் அவன் இந்தப் பத்திரிக்கைக்கு ஒரு மிகப்பெரிய சொத்து தான். அவனுக்கென்று தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். இது போன்ற புலனாய்வுக் கட்டுரைகளானாலும், வேறு முக்கிய விஷயங்களை அலசும் ஆழமான கட்டுரைகளானாலும் அவன் எழுதும் பாணி தனித்தன்மையானது, அறிவுபூர்வமானது. மேலும் ஒரு விஷயத்தைப் பற்றி அவன் எழுதினான்றால் அவன் எழுதியதிலேயே அவ்விஷயத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் வாசகர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதைச் சில அறிஞர்களும், மற்ற பத்திரிக்கையாளர்களும் கூட அவரிடம் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

 

அவனது அறிவுக்கூர்மையில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக அனைவரிடமும் பேரறிவு இருந்திருக்கிறது. அவனுடைய தாத்தா வாசுதேவன் சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த தமிழறிஞரும் கூட. அவர் கம்ப இராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் தங்கு தடையில்லாமல் மனப்பாடமாக மேடைகளில் பேசக்கூடியவர். அவன் தந்தை ஞானமூர்த்தியும் மிகச்சிறந்த அரசியல்வாதி, நேர்மைக்குப் பெயர் போனவர் என்பது மட்டுமல்லாமல் பிரபலமான வழக்கறிஞரும் கூட. சட்ட நுணுக்கங்களை அவர் பேச ஆரம்பித்தால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூர்ந்து கவனிப்பார்கள் என்று விவரமறிந்தவர்கள் சொல்ல தேவசகாயம் கேட்டிருக்கிறார்.  அர்ஜுனுடைய சித்தப்பா ராஜாராம் இந்த நாட்டின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லக்கூடியவர். உலகமெங்கும் அவர் பேச்சுக்கள் பிரபலம். தற்போது கூட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற அவர் சென்றிருக்கிறார்.  இப்படிப்பட்ட குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசுக்கு அபார அறிவு இருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல.   

 

தேவசகாயம் கேட்டார். “உன் சித்தப்பாவோட ஆக்ஸ்ஃபோர்டு பேச்சு எப்போ?”

 

அர்ஜுன் பெருமிதத்துடன் சொன்னான். “நேற்று சார்.”

 

அவர் எப்போ திரும்பி வர்றார்?

 

இன்னைக்கு அங்கேயிருந்து கிளம்பறார். நாளைக்கு வந்துடுவார்

 

அடுத்த வாரம் உன் தாத்தாவோட நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டுல எல்லாக் கட்சிகளும் கொண்டாடப் போறாங்க. அதனால ஒரு சிறப்புக் கட்டுரையை உன் கிட்டே இருந்து எதிர்பார்க்கிறேன் அர்ஜுன். அதை நீ எழுதினா தான் சரியாகவும் இருக்கும், சிறப்பாகவும் இருக்கும். உங்க குடும்பத்து ஆட்கள் ஒவ்வொருத்தரும் அவரை எப்படி ஞாபகப்படுத்திக்கிறாங்கன்னு தனித்தனியா பேட்டி எடுத்தும் போடணும்.”

 

அர்ஜுன் சம்மதித்துத் தலையசைத்தான்.

 

உனக்கு அவரை ஞாபகம் இருக்கா அர்ஜுன்?”

 

சரியா ஞாபகம் இல்லை சார். அவர் இறந்தப்ப எனக்கு மூனு வயசு. அவர் கூட நான் இருக்கற ஃபோட்டோக்கள் இருக்கு. ஆனா அதையெல்லாம் பார்க்கறப்ப கூட எனக்கு எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது..”

 

உண்மையில் அர்ஜுனுக்கு தாத்தாவுடனான எந்த நிகழ்வும் நினைவில் தங்காமல் இருந்தது வருத்தமாகத் தான் இருந்தது. இத்தனைக்கும் அவன் சிறுவயதில் தாத்தாவுடன் தான் அதிகம் இருப்பான் என்று அப்பா சொல்வார். ஆனாலும் எல்லோரும் மாமனிதனாகப் போற்றும் அவர் குறித்த நினைவுகள் எதுவுமே அவனிடம் இல்லை.

 

தேவசகாயம் சொன்னது போல எல்லாக் கட்சிகளும் உரிமையுடன் கொண்டாடும் ஒரு தலைவர் இப்போது அவன் தாத்தா வாசுதேவன் தான். ஆகவே மூன்று கட்சிகளும் கொண்டாடும் இந்த நூற்றாண்டு விழா சுவாரசியமாகத் தான் இருக்கப் போகிறது.

 

தேவசகாயம் கேட்டார். “நீ ஏன் அரசியலுக்குப் போகலை அர்ஜுன்?”

 

பலரும் அவனிடம் கேட்கும் கேள்வி தான் இது. அவன் சொன்னான். “ஆரம்பத்திலிருந்தே எனக்கு அரசியல்ல பெரிய ஈடுபாடு வரலை.”

 

அவர் புன்னகைத்தார். நல்ல வேளையாக எல்லோரும் கேட்கும் அடுத்த கேள்வியை அவர் கேட்கவில்லை. பெரும்பாலானோர் அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “ஏன் அப்படி? உங்கப்பா கட்சியிலயோ, உங்க சித்தப்பா ஆதரிக்கும் ஆளும் கட்சியிலயோவாவது சேர்ந்துக்கலாமே.”

 

பிடிக்கவில்லைஎன்று சொன்ன பிறகு காரணம் கேட்பதும், அனாவசியமாய் அதையே செய்ய ஆலோசனை சொல்வதும் அதிகப்பிரசங்கித்தனம் அல்லவா? அப்படிப்பட்ட அதிகப்பிரசங்கிகள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள்.... அது சம்பந்தமான யோசனைகளை நிறுத்தி விட்டு அர்ஜுன் நர்மதா விஷயத்துக்கு மறுபடி வந்தான்.

 

சார் நர்மதா கடந்த ரெண்டு வருஷமாய் நடிக்கிறதில்லை, நமக்குத் தெரிந்த வகையில் அவளுக்கு இப்போ வேறெந்த சம்பாத்தியமும் இல்லை. ஆனாலும் அவ கிட்ட பணப்புழக்கம் நல்லாவே இருந்திருக்கு. அந்தப் பணம் யார் கிட்ட இருந்து அவளுக்கு வந்துகிட்டு இருந்துச்சுன்னு தெரிஞ்சா, அவளோட மரணத்துக்கு யார் காரணம்கிறதும் நமக்குத் தெரிஞ்சுடும்னு நினைக்கிறேன்.”

 

தேவசகாயம் அவன் நினைப்பது சரியென்று தலையசைத்து விட்டுத் தன் சந்தேகத்தைக் கேட்டார். “அவளோட காதலன் விமல் அவளுக்கு பணம் தந்திருக்கலாமோ?”

 

அவனே ஒரு அன்னக்காவடி சார். முதல்லயாவது ஏதோ ஒன்னு ரெண்டு சீரியல்கள்ல நடிச்சுகிட்டு இருந்தான். இப்ப அதுவுமில்லைன்னு கேள்விப்பட்டேன். அதனால அவனுக்கே  நர்மதா தான் பணம் கொடுத்து உதவற நிலைமை தான் சமீப காலமாய் இருந்திருக்கு. இப்ப அவனும் தலைமறைவாயிட்டான். அவனைக் கண்டுபிடிச்சாலும் எதாவது துப்பு கிடைக்க வாய்ப்புண்டு.”


(தொடரும்)

என்.கணேசன்




1 comment: