என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 23, 2026

யோகி 144

 

ண்ணன் அந்தக் கிழவரை இரண்டு வீதிகளில் பின் தொடர்ந்தார். பைக்கை வைத்து விட்டு இரண்டு குண்டர்களுடன் அவர் அந்தக் கிழவரை தற்போது காரில் மெல்ல பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கிழவர் பின்னால் ஒரு கார் ஊர்ந்து வருவதை உணர்ந்தது போல் தெரியவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் காரை நிறுத்தி விட்டு கண்ணனும் அந்த குண்டர்களும் இறங்கி அந்தக் கிழவரை இடைமறித்து நின்றார்கள்.

 

பொதுவாக இது போன்ற நேரங்களில் எல்லோரும் பயப்படுவது போல் அந்தக் கிழவர் பயப்படவில்லை. என்ன என்பது போல் அவர் பார்த்தார்.

 

கண்ணன் கேட்டார். “உங்க பெயரென்ன?”

 

ரகுராமன்.”

 

கண்ணன் சொன்னார். “எங்கள் தலைவர் உங்களைப் பார்த்துப் பேச வேண்டுமாம். நீங்கள் எங்களுடன் வர வேண்டும்.”

 

உத்தரவிடும் தொனியில் சொன்ன கண்ணனை அந்தக் கிழவர் அமைதியாகப் பார்த்தார். கண்ணன் சொன்னார். “திரும்பவும் உங்களை உங்கள் சேரியிலேயே கொண்டு வந்து விட்டு விடுவோம்.”

 

சரிஎன்று அந்தக் கிழவர் அமைதியாகச் சொன்னார். வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று கண்ணன் எதிர்பார்த்திருக்கவில்லை. நிஜமாகவே இந்த ஆள் புத்தி மந்தமான ஆள் தான் என்பது கண்ணனுக்கு உறுதியாகியது. கண்ணன் அவருக்குக் காரைக் கைகாட்டி விட்டு காரை நோக்கி நடக்க, அந்தக் கிழவர் அவரைப் பின் தொடர்ந்தார்.  பின் கதவைத் திறந்து கைகாட்டிய போது உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார். அவரது இரண்டு பக்கத்திலும் அந்தக் குண்டர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். இந்தக் குண்டர்களே தேவையிருக்கவில்லை என்று நினைத்த கண்ணன், காரைக் கிளப்புவதற்கு முன் பாண்டியனுக்குப் போன் செய்தார். “ஐயா, கிளம்பிட்டோம். அரை மணி நேரத்துல வந்து சேர்ந்துடுவோம்.”

 

ஷ்ரவன் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது பாண்டியனின் உதவியாளன் அவனுக்காக வெளியே காத்திருந்தான். “ஐயா உங்களைக் கூப்பிடுகிறார்.”

 

ஷ்ரவனுக்குத் திக்கென்றது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் அந்த உதவியாளனைப் பின் தொடர்ந்தான். அந்த உதவியாளன் பாண்டியனின் இருப்பிடத்திற்கு அவனை அழைத்துப் போகாமல் பிரம்மானந்தாவின் இருப்பிடத்துக்கு அவனை அழைத்துப் போனது அவனை ஆச்சரியப்படுத்தியது. அவன் உள்ளே போன போது பாண்டியனும், பிரம்மானந்தாவும் அமர்ந்திருந்தார்கள். பிரம்மானந்தா ஏதோ பதற்றமான மனநிலையில் இருப்பது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

ஷ்ரவன் அவரைப் பார்த்ததும் புளங்காகிதம் அடைந்து சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி பணிவுடன் நின்றான். பிரம்மானந்தா எதிரில் இருந்த சோபாவைக் கைகாட்ட, ஷ்ரவன் பணிவு மாறாமல் அந்த சோபாவின் நுனியில் அமர்ந்தான்.

 

பாண்டியன் அவனிடம் சொன்னார். “ஷ்ரவனானந்தா நீங்கள் சொன்ன மாதிரியான ஒருவரை எங்கள் ஆட்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அவர் வந்து விடுவார். அவர் நீங்கள் சொன்ன யோகி தானா என்பதை, நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.”  

 

தலையசைத்த ஷ்ரவன் பரபரப்பை உணர்ந்தான். இவ்வளவு சீக்கிரமாக அவர்கள் அவரைக் கண்டுபிடித்ததுடன் யோகாலயத்திற்கும் அழைத்து வருவார்கள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த யோகியை அழைத்து வருவதில் பாண்டியன் அளவுக்கு பிரம்மானந்தாவுக்கு எதிர்பார்ப்போ, உடன்பாடோ இல்லை என்பதும் அவர் முகபாவனையிலேயே தெரிந்தது.

 

சிறிது நேரத்தில் கண்ணன் அந்த யோகியை அழைத்து வந்தார்.  தும்பைப் பூவாய் நரைத்த தலைமுடி, தாடி, சாயம் போன சட்டை மற்றும் பழுப்பு நிற வேட்டியோடு தோற்றமளித்த அவருடைய கண்களில் எல்லையில்லாத கனிவும், சாந்தமும் தெரிந்தன. அவர் அங்கே வந்து நின்றவுடனேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட ஞான அலைகளை ஷ்ரவன் உணர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் எழுந்து நின்று கைகூப்பினான். பிரம்மானந்தாவிடம் நடித்தது போல் இங்கே நடிக்கத் தேவையிருக்கவில்லை.

 

கண்ணன் அவரை அறிமுகப்படுத்தினார். “யோகிஜி இவர் பெயர் ரகுராமன். சுந்தரவனம் நர்சரியில வேலை பண்றார்.”

 

ரகுராமன் மூவரையும் பார்த்து கைகூப்பினார். அவர் மூவரையும் சரிசமமாய் பார்த்து கைகூப்பியது பிரம்மானந்தாவின் முகத்தை கருக்க வைத்தது.  சரியான பட்டிக்காட்டான். யாரைப் பார்க்க வந்திருக்கிறோம் என்ற பிரக்ஞையும் இல்லாத ஜந்து.’ ஆனாலும் அவரும் அமர்ந்தவாறே கைகூப்ப, பாண்டியனும் அப்படியே செய்தார்.

 

பிரம்மானந்தா அங்கிருந்த இன்னொரு சோபாவில் அமரச் சொல்லி கைகாட்டினார். ரகுராமன் அந்த சொகுசு சோபாவில் அமர்ந்தார். அது போன்ற மிக மென்மையான சோபாவில் அவர் இதுவரை அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்றாலும் அவர் ஷ்ரவனைப் போல் நுனியில் அமராமல் மிக நன்றாக, சௌகரியமாகவே  அமர்ந்து கொண்டார். அதுவும் பிரம்மானந்தாவுக்குப் பிடிக்கவில்லை. எப்பேர்ப்பட்டவரின் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மலைப்பு அந்தத் தோட்டக்காரனுக்குத் தெரியாதது பெரிய தவறாக அவருக்குத் தோன்றியது. நிஜமாகவே கிழவன் தன்னை ஒரு யோகியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?

 

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று பாண்டியன் யோசித்த வேளையில் பிரம்மானந்தா ரகுராமனிடம் கேட்டார். “என்னைத் தெரிகிறதா?”

 

அது இரட்டை அர்த்தத்தில் கேட்கப்பட்ட கேள்வி. “ஒரு காலத்தில் நாம் சந்தித்திருக்கிறோம். நினைவிருக்கிறதா?” என்பது ஒரு கேள்வி. “இப்போது நான் யார் என்று தெரிகிறதா?” என்பது இன்னொரு கேள்வி.

 

இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரியாதது போல ரகுராமன் அவரைக் கூர்ந்து பார்த்து பதிலளிக்க நேரம் எடுத்துக் கொண்டது பிரம்மானந்தாவை அவமானப்படுத்துவது போல் இருந்தது. ’முன்பு பார்த்தது நினைவில்லா விட்டால் தொலைகிறது. இப்போது நான் உலகப்புகழ் பெற்றவன். தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்ட ஐந்து வயதுச் சிறுவனுக்குக் கூட என்னை அடையாளம் தெரியும். இந்தக் கிழவனுக்கு அதுவும் தெரியவில்லையா?’

 

ஷ்ரவன் பயபக்தி காட்டி ரகுராமனிடம் சொன்னான். “இவர் யோகி பிரம்மானந்தாஜி

 

அப்படியா என்பது போல் ரகுராமன் தலையசைத்தது பாண்டியனுக்கே வேடிக்கையாக இருந்தது. அந்த அறிமுகமும் பெரிய பிரமிப்பை ரகுராமனிடம் ஏற்படுத்தவில்லை.

 

இந்தப் புத்திமந்தக் கிழவனை இங்கே அழைத்து வந்ததே முட்டாள்த்தனம்என்று மனம் கடுத்த பிரம்மானந்தா நாசுக்காக இந்தக் கிழவனுக்கு அவர் நிலைமையை உணர்த்த வேண்டும் என்று தோன்றியது. அதனால் இது போன்ற சமயங்களில் வழக்கமாய் உதிர்க்கும் லேசான போலிச் சிரிப்பை உதிர்த்து விட்டு வஞ்சப்புகழ்ச்சி அணியில் பேச ஆரம்பித்தார்.

 

ரகுராமன், எங்களுக்குத் தெரிந்த சிலர் நீங்கள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதையும், சாந்தமாய் இருப்பதையும், முகமலர்ச்சியோடு இருப்பதையும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று பாண்டியன் சொன்னதற்கு நானும் சம்மதித்தேன்.”

 

ரகுராமன் தலையசைத்தார். அந்தப் பாராட்டில் அவர் முகமலர்ச்சி சிறிதும் கூடவில்லை. ஷ்ரவன் பாண்டியனைக் காண்பித்து மெல்லச் சொன்னான். “சார் தான் பாண்டியன். யோகாலயத்தின் மேனேஜராக இருக்கிறார்.”

 

ரகுராமன் தலையசைத்தார். பிரம்மானந்தா மனதில் எழுந்த எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் போலிப் புன்னகையுடன் சொன்னார். “உங்களால் எப்படி எல்லா நேரங்களிலும் முகமலர்ச்சியோடு இருக்க முடிகிறது என்று அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.”

 

அதை எப்படிச் சொல்வது என்று ரகுராமன் யோசித்தது போல் தெரிந்தது. பிரம்மானந்தா சொன்னார். “உதாரணத்துக்கு, இன்றைக்கு சாயங்காலம் நீங்கள் உங்கள் குடிசைக்கு வெளியே பழைய கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு இருந்தீர்கள். இப்போது யோகாலயத்தில் சொகுசு சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த இரண்டும் ஒன்றா? இல்லையே. அப்படி இருக்கையில் இரண்டும் ஒன்று தான் என்பது போல் எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”

 

ஷ்ரவனுக்கு பிரம்மானந்தாவின் கேள்வி கேவலமாய்த் தெரிந்தது. எவ்வளவு நாசுக்காக அவர் ரகுராமனின் கீழான வசதி நிலையைச் சுட்டிக் காட்டுகிறார்?

 

ஆனால் ரகுராமன் அப்போதும் அந்தச் சிறுமையை உணர்ந்தவராகத் தெரியவில்லை. அவர் கனிவு குறையாமல் சொன்னார். “இரண்டும் ஒன்று தானே?”

 

பிரம்மானந்தாவுக்குக் கோபம் வந்து விட்டது. “எப்படி ஒன்று என்கிறீர்கள்?”

 

ரகுராமன் சொன்னார். ”சாயங்காலத்தில் என்னைக் கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்ததும் இறைவன். இப்போது இந்த சொகுசு சோபாவில் உட்கார வைத்திருப்பதும் இறைவன். இரண்டையுமே இறைவன் தீர்மானித்து உட்கார வைத்த இடங்கள் என்றே நான் பார்க்கிறேன். எல்லாம் அறிந்த இறைவன் தீர்மானிப்பதில்  எப்படி தவறிருக்க முடியும்? எப்படி ஒன்றை நிறையாகவும், இன்னொன்றைக் குறையாகவும் நினைப்பது சரியாகும்?”

 

அவர் சொன்னதைக் கேட்டு ஷ்ரவனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. ஒரு யோகியின் கோணம் இப்படித் தான் இருக்குமோ? பிரம்மானந்தாவின் முகம் கருத்தது.  


(தொடரும்)

என்.கணேசன்




6 comments:

  1. Super Sir Nice Real story

    ReplyDelete
  2. Awesome sir... இன்பம் துன்பம் இரண்டும் இறைவன் தந்ததே... அதை ஒன்று போல் பார்க்க வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை சுலபமாக ரகுராம் குரு அவர்கள் மூலம் உணர்த்தி விட்டீர்கள்... நன்றி

    ReplyDelete
  3. Amazing. That last but one para is so meaningful and transformative. Without going into philosophical details, how wonderfully this spiritual depth was explained in simple terms in few words!

    Hats off Mr. Ganesan. You are a blessed soul. May you find your real yogi in life, if not already found. May all of us find the real Masterful yogi of the universe who can guide us to master ourselves.

    ReplyDelete
  4. எல்லோரும் பதில் சொல்லும் பிரம்மானந்தா இன்று கேள்வி கேட்கிறார்.அப்போதே புரிந்திருக்க வேண்டும்.பிரம்மானந்தா எவ்வளவு சிறுமையானவர் என்று.

    ReplyDelete
  5. It's a nose cut for yogi.may be pandiyan might jv enjoied this answer..

    ReplyDelete