ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மலைகேதுவை சுசித்தார்த்தக் உலுக்கி எழுப்பினான். வயிற்றுப்போக்கின் காரணமாக உடல் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் உணர்ந்திருந்த மலைகேது இரவு சற்று தாமதமாகத் தான் உறங்க ஆரம்பித்திருந்தான். அதனால் நடுநிசியில் எழுப்பப்பட்டது அவனுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. கண்களைத் திறந்தவன் சுசித்தார்த்தக்கைப் பார்த்து முறைத்தான். “என்ன விஷயம்?”
“உங்கள்
தந்தை கொல்லப்பட்டு விட்டார் இளவரசே” என்று சுசித்தார்த்தக்
வருத்தத்துடன் தெரிவித்தான்.
மலைகேது முழுமையாக விழித்துக் கொண்டான். “என்ன உளறுகிறாய்?”
சுசித்தார்த்தக் குரல் தழுதழுக்கச்
சொன்னான். “உளறவில்லை இளவரசே. உண்மையைத்
தான் சொல்கிறேன். பராக்கிரமசாலியும், பேரரறிவு
படைத்தவருமான தங்கள் தந்தை தற்போது உயிரோடு இல்லை....”
மலைகேது தலையில் இடிவிழுந்தது போல்
உணர்ந்தான். பலவிதமான உணர்ச்சிகள் அலைமோத சிலை போல் செயலற்று அமர்ந்திருந்த
அவனிடம் சுசித்தார்த்தக் பதற்றமும், பரபரப்பும் காட்டிச்
சொன்னான். “நடன நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு என்னையும், காவலர்களையும்
அரசர் போகச் சொல்லி விட்டார். ”நீங்கள் செல்லுங்கள். நான் பின்பு
வருகிறேன்” என்று சொல்லி விட்டதால் நாங்களும் வந்து விட்டோம். அவர் மீது
நான் வைத்திருக்கும் அன்பை அறிந்த என் நண்பன் ஒருவன் அரண்மனையில் காவலனாக இருக்கிறான். அவன் சற்று
முன் என்னிடம் வந்து “ஹிமவாதகூட அரசர் இறந்து விட்டார். நடன அரங்கில்
ஒரு மூலையில் இறந்து விழுந்திருந்த அவர் உடலில் விஷம் பரவியிருப்பது போல் தெரிகிறது. நடன அரங்கின்
விளக்குகளை அணைக்கச் சென்றிருந்த பணியாள் அதைப் பார்த்துப் பதறி சாணக்கியரிடம் செய்தியைத்
தெரிவிக்க ஓடிச் சென்றிருக்கிறான்.
அரண்மனைக் காவலனாக இருக்கும் என் நண்பனும் அதைக் கேள்விப்பட்டு ஓடி வந்து என்னிடம்
தெரிவித்ததால் தான் இதை நானும் அறிய நேர்ந்தது....”
குழப்பமும், அதிர்ச்சியும்
அடைந்திருந்த மலைகேது முடிவில் துக்கமும் கோபமும் கொண்டான். “என் தந்தையைக்
கொல்லும் துணிச்சல் யாருக்கு வந்தது என்று எனக்கு உடனே தெரிய வேண்டும்...
இது தான் நீங்கள் நிர்வாகம் புரியும் இலட்சணமா என்று ஆச்சாரியரையும் கேட்க வேண்டும்....
உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்ததற்கு இது தான் நீங்கள் எங்களுக்குச் செய்யும்
கைம்மாறா என்று நான் கேட்கப் போகிறேன்... என் தந்தையைக் கொன்றவர்களை
நான் தண்டிக்காமல் விட மாட்டேன். வா உடனே நடன அரங்கிற்கு நாமும் போவோம்...”
என்று சொன்னபடி எழுந்து நின்ற மலைகேதுவை சுசித்தார்த்தக் இரக்கத்துடன் பார்த்தானேயொழிய
இம்மியும் நகரவில்லை.
இரண்டடி எடுத்து வைத்த மலைகேது சுசித்தார்த்தக்
நகராமல் நிற்பதைப் பார்த்து விட்டுக் கேட்டான். “ஏன் மரம்
போல் நிற்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?”
சுசித்தார்த்தக் சுற்றும் முற்றும்
பார்த்து விட்டுச் சொன்னான். “உங்கள் உயிருக்கும் ஆபத்திருக்கிறது என்று நான் பயப்படுகிறேன்
இளவரசே”
மலைகேது அதிர்ந்தான். “என்ன உளறுகிறாய்?”.
”ஒருவேளை
உங்கள் தந்தையின் மரணம் ஆச்சாரியரின் நடவடிக்கையாகவே இருந்தால்..?”
மலைகேதுவின் முகம் பீதியில் வெளுத்தது. அவன் ”விளக்கமாகச்
சொல்” என்று சொல்ல நினைத்தான். ஆனால் நாக்கு
நகர மறுத்தது. சுசித்தார்த்தக் அவனுக்கு விளக்கினான். “ஒருவேளை
சந்திரகுப்தனைக் கொல்ல நாம் போட்ட திட்டத்தை அவர் அறிந்து விட்டிருந்தால்? அறிந்து
கோபம் கொண்டு அவர் எடுத்த நடவடிக்கையாகவே இது இருந்திருந்தால்? நீங்கள்
நியாயம் கேட்கப் போனால் ”எப்போது எங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினீர்களோ
அப்போதே நீங்கள் குற்றவாளிகளாகவும், எங்களுக்கு எதிரியாகியும்
விட்டீர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே” என்கிற
வகையில் பேசினால்? உங்களையும் அந்த வகையிலேயே சேர்த்தால் உங்கள் உயிருக்கு என்ன
உத்திரவாதம் இருக்கிறது?”
மலைகேதுவுக்குத் தலை சுற்றியது. எப்போதோ
சாணக்கியர் சொல்லி இருந்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. “கொடுத்த
வாக்கை என்றும் மீற மாட்டேன். ஆனால் அதையே என் பலவீனமாக நினைத்து யாராவது எதிராகச் சதியில்
ஈடுபட்டால் அதே வழியில் அவர்களைக் கையாளத் தயங்க மாட்டேன்” என்று அவர் ஆணித்தரமாகப்
பேசியிருந்தார். இப்போது அவன் தந்தை சதியில் ஈடுபட்டதால் அதே
வழியில் அவனைக் கையாண்டு விட்டாரோ? அவன் மெல்ல மஞ்சத்தில் உட்கார்ந்தபடி பலவீனமாகக் கேட்டான். “இனி என்ன
செய்வது?”
சுசித்தார்த்தக் சற்று யோசிப்பது போல்
பாவனை காட்டி விட்டுச் சொன்னான். “எதற்கும் பிரதம அமைச்சர் ராக்ஷசரிடம்
ஆலோசனை கேட்டு விட்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம் இளவரசே. எப்படியும்
விடிவதற்கு முன் சாணக்கியர் எதுவும் செய்வதற்கில்லை.... அதற்குள்
ஒரு முடிவெடுத்துச் செயல்படுவோம். நீங்கள் பொறுத்திருங்கள். நான் இத்தகவலை
அவருக்குத் தெரிவித்து அவரது ஆலோசனையைப் பெற்று வருகிறேன்....”
சொல்லி விட்டு சுசித்தார்த்தக் வேகமாக
அங்கிருந்து சென்றான். மலைகேதுக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. இது அவன்
தாங்க முடிந்த கனமல்ல. சற்று யோசித்து விட்டு அவன் தந்தையின் காவலர்களை அழைத்துப்
பேசினான். சுசித்தார்த்தக் சொன்னது போல் தான் நடந்திருக்கிறதா என்பதை
அவன் அறிய விரும்பினான். காவலர்களும் சுசித்தார்த்தக் சொன்னதையே சொன்னார்கள். ’அரசர் தான்
எங்களைப் போகச் சொன்னார், அதனால் தான் கிளம்பி வந்தோம்” என்றும்
”அங்கிருந்து கிளம்புகையில் அனைவரும் கிளம்பிப் போயிருந்தார்கள். நடன அரங்கில்
அரசரைத் தவிர வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை” என்றும்
சொன்னார்கள்.
தந்தை ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அவர்களை
அங்கிருந்து அனுப்பி இருக்க வேண்டும் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்தத்
திட்டம் பிசுபிசுத்து விட்டதோ? சாணக்கியர் அதை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாரோ? சந்திரகுப்தன்
உட்பட அனைவரும் சென்ற பின் தன் காவலர்களையும், சுசித்தார்த்தக்கையும்
அனுப்பி விட்டு நடன அரங்கில் ஏன் தங்கினார் என்பது தெரிந்தால் என்ன நடந்திருக்கும்
என்பதை அனுமானிக்கவாவது செய்யலாம். இப்போதோ குழப்பம்
மட்டுமே மிஞ்சுகிறது.
காலம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஒவ்வொரு
கணமும் ஒவ்வொரு யுகம் போல் அவனுக்குத் தோன்றியது. என்னேரமும்
எதிரிகள் வந்து அவனைத் தாக்கலாம் என்ற பயம் அவனுக்குள் எழ ஆரம்பித்தது. பயம் பலவிதமான
கற்பனைகளால் கூடிக் கொண்டே போனது.
சிறிது நேரத்தில் சுசித்தார்த்தக் மூச்சிறைக்க
ஓடி வந்தான். அவன் முகம் பேயறைந்ததைப் போல் இருந்தது. அவன் வந்து
எதுவும் சொல்லாமல் மூச்சு வாங்கியபடியே நிற்க சுசித்தார்த்தக் பொறுமையிழந்து கேட்டான். “ராக்ஷசர் என்ன
சொன்னார்?”
சுசித்தார்த்தக் மூச்சு வாங்கியபடியே
சொன்னான். “அவரை.... அவரைப் பார்க்க முடியவில்லை இளவரசே”
“ஏன்?”
“அவரும்
சற்று முன் தான் அவர் ஒளிந்திருந்த மறைவிடத்திலிருந்து தப்பித்துச் சென்றாராம்”
“ஏன்?”
“அது தெரியவில்லை
இளவரசே. அவர் இருக்குமிடம் பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கலாம்
என்று சந்தேகப்பட்டார் என்று தெரிகிறது. அதனால் அவரும் ஆபத்தை
உணர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.”
மலைகேது அதிர்ந்தான். அவனுக்குத்
தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவனுக்குப்
புரியாமல் என்னென்னவோ இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு
மறுபடியும் மண்டை வெடிப்பது போலிருந்தது. அவன் பரிதாபமாகக்
கேட்டான். “இனி என்ன செய்வது?”
சுசித்தார்த்தக் சொன்னான். “என்ன செய்வதென்று
நிதானமாக யோசிப்போம் இளவரசே, முதலில் உங்கள் உயிரை நீங்கள் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். உயிர் இருந்தால்
தான் நீங்கள் எதாவது செய்ய முடியும். பிரதம அமைச்சரே
உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பிச் செல்கிறார் என்கிற போது நீங்களும் அப்படியே செய்வது
உத்தமம் என்று எனக்குத் தோன்றுகிறது இளவரசே”
மலைகேது குழப்பத்துடன் யோசித்து விட்டுக்
கேட்டான். “எப்படி இங்கிருந்து நான் தப்பிப்பது?”
“அந்தப்
பொறுப்பை என்னிடம் விடுங்கள் இளவரசே. பாடலிபுத்திரத்திலிருந்து
உங்களைப் பாதுகாப்பாகத் தப்பிக்க வைப்பது என் பொறுப்பு. முதலில்
நீங்கள் மாறுவேடமிட வேண்டும். உண்மை உருவத்தோடு வெளிப்பட்டால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். நீங்கள்
வணிகர் வேடமிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் முழு நம்பிக்கைக்குரிய காவலர்களை மட்டும் நம்முடன்
அழைத்துச் செல்வோம். அவர்களும் நானும் பணியாட்கள் வேடத்தில் உங்களுடன் வருகிறோம். பாடலித்திர
நகர வாயில் அதிகாலையில் திறந்தவுடன் முதல் ஆட்களாக இங்கிருந்து வெளியேறித் தப்பிப்போம்”
மலைகேதுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யோசிக்கையில்
உயிர் முதல் முக்கியம் என்று அவனுக்கும் தோன்றியது. ராக்ஷசரே இனி
இங்கிருப்பது ஆபத்து என்று தப்பியோடுகையில் அவனும் அதையே செய்வது புத்திசாலித்தனம்
என்று தோன்றியது. அவன் சம்மதித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்



இதுக்கு பெயர் தான் துண்டக்கானோம், துணியாக்கானோம்னு ஓடு விடுவது போல...
ReplyDeleteதனநந்தன் ஆட்சியில் இருக்கும் போதே மகதத்தில் பல வேலைகள் செய்த சாணக்கியர்...
இப்போது மகதம் தன் கட்டுப்பாட்டில் வந்த பின்...அங்கு யாராவது சாணக்கியருக்கு எதிராக சிந்திக்க கூட முடியாது.
இதற்கு பெயர் தான் சாணக்கியரின் சாமர்த்திய அரசியல்.....
DeleteNot easy to confront Acharya chanakya. One who does will pay a heavy price.Thanks. Desikan.
ReplyDelete