என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, October 6, 2025

யோகி 123

 

யோகாலயம் ஆரம்பித்த புதிதில் ஆன்மீக, யோகா மார்க்கத்திற்கு அதிக ஆட்களைக் கொண்டு வரவேண்டும், ஏழை எளியவர்களுக்கும் யோகா மற்றும் தியானம் போய்ச் சேர வேண்டும் என்றெல்லாம் தீவிரமாகப் பேசி வந்த பிரம்மானந்தா, பின்பும் அதையே எல்லா மேடைகளிலும் சொல்லி வந்தாலும், அவர் ஏழை எளியவர்களிடமிருந்து மெள்ள விலக ஆரம்பித்தது கல்பனானந்தாவுக்குக் கண்கூடாகத் தெரிந்தது. எல்லோருக்கும் காணவும், பேசவும் கிடைப்பது, மதிப்பின் அளவைக் குறைத்துவிடும் என்ற புரிதல் அவருக்கு அழுத்தமாக ஏற்பட்டது. அதனால் ஏழை எளியவர்கள் பேச்சளவில் மட்டுமே அவருடைய தொடர்பில் இருந்தார்கள்.  செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் மட்டுமே அவரை நெருங்க முடிந்தது. அவர்களுடன் பழகுவதையே அவர் கௌரவமாக நினைத்தார். பின் அவர் வெளிநாட்டிலும் பிரபலமாக ஆரம்பித்த பின் முன்பு பழகியவர்களிலும் மேல் நிலையில் இருப்பவர்களுடன் மட்டுமே பழகுவதைத் தொடர்ந்து, கீழே உள்ளவர்களைச் சிறிது சிறிதாக ஒதுக்க ஆரம்பித்தார்.

 முன்பெல்லாம் யோகா, தியானம், ஆன்மீகம் மட்டுமே பேசிவந்த அவர் பின் பன்முக ஆளுமையாகத் தன்னை முன்னிலைப்படுத்துவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். விஞ்ஞானம் முதற்கொண்டு எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தார். ஏதாவது ஒரு கட்டுரையைப் படித்து விட்டு அதைத் தன் கருத்தாகச் சொல்ல ஆரம்பித்தார். சில சமயங்களில் அந்தக் கட்டுரையே ஒரு அரைவேற்காடு எழுதியதாக இருக்கும். அதைப் படித்து அந்தக் கருத்தைச் சொல்லும் அவரையும் அதே வகையில் சிலர் சேர்த்து விமர்சித்தார்கள். அதை வேறு விளக்கங்கள் சொல்லிச் சமாளிப்பார். இது போன்ற அபத்தங்கள் அதிகரிக்க ஆரம்பித்து, மற்றவர்களுடைய பரிகாசத்திற்கு அவர் ஆளாவது கல்பனானந்தாவுக்கு தர்மசங்கடமாக இருக்கும். முக்கியமான சொற்பொழிவுகளுக்கு அவர் செல்லும் போது, பேசுவதற்கு அவள் தான் அருமையான குறிப்புகள் எழுதிக் கொடுப்பாள். அதை மட்டும் பேசினாலே அவர் பேச்சுகள் சிறப்பாக அமைந்து விடும். ஆனால் அவர் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதோடு தன்னை முன்னிலைப்படுத்தும் கற்பனைகளைச் சேர்த்து விடுவார். அப்படிப் பேசியது ஏன் என்றோ, பேசியதன் உண்மைத்தன்மை குறித்தோ கூட, அவர் அவளிடம் தவறியும் பின் எப்போதும் பேசியதில்லை.  

 பொதுவெளியில் எதையும் தெரியாதென்று சொல்வதை அவர் மிகவும் கௌரவக்குறைவாக நினைத்தார். சில நேரங்களில் என்ன பதிலென்று தெளிவில்லாத பதில்களைச் சொல்லி, இந்த தேவ ரகசியங்களை அவரவர் அனுபவத்தின் மூலமாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதுமுண்டு. புரியாத விளக்கங்களை பெரிய பெரிய வார்த்தைகளால் அவர் சொல்வதைக் கேட்டு அவரை அறிஞராகப் பலர் பாராட்டுவது உண்டு என்றாலும், அறிஞர்களும், சிந்திக்க முடிந்தவர்களும், அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர்களில் பலரும் அவரை விமர்சிக்கவும் முற்பட்டதில்லை. ஒருசிலர் மட்டும் ஏளனம் செய்தார்கள். அந்த ஒருசிலரை பிரம்மானந்தா கண்டு கொண்டதில்லை. பிறகு சிறிது சிறிதாக விரும்பத் தகாத செயல்களும் யோகாலயத்தில் ஆரம்பமாகின. ஒற்று வேலை பார்ப்பவர்கள் அங்கே அதிகரித்தார்கள். எதிரான கருத்து சொல்பவர்களுக்கெல்லாம் வேறு எதோ முத்திரை குத்தி ஒதுக்கும் வேலையை அதற்கென்றே இருக்கும் அவரது சமூக வலைத்தளக் குழு பார்த்துக் கொண்டது. சமூகத்தில் சுயசிந்தனை உள்ளவர்களும், தெளிவான பார்வை உள்ளவர்களும், அறச்சீற்றம் உள்ளவர்களும் குறைவாகவே இருப்பதால், எதிலும் அவருக்குப் பிரச்சினை அதிகம் இருக்கவில்லை. வந்த பிரச்சினைகளையும் பணத்தாலும், புகழாலும், அதிகார மையத்துடன் இருந்த செல்வாக்காலும் அவரால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது.  

 யோகாலயம் ஆரம்பிக்கப்பட்ட பின்பும் பத்மநாப நம்பூதிரி சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் உயிரோடு இருந்தார். ஆனால் அவர் தன் முந்தைய சீடர் பிரம்மானந்தாவின் வாழ்க்கையில் குறுக்கிட்டதில்லை. யோகாலயத்தில் கற்பிக்கப்படும் யோகாவும், தியானங்களும் தன்னிடமிருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லைஅவர் பிரம்மானந்தாவின் குருவாகத் தன்னை எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. அது பிரம்மானந்தாவுக்கு வசதியாகப் போனது.  ஆனாலும்  பத்மநாப நம்பூதிரியின் மரணம் வரை ஓரளவாவது அடக்கி வாசித்த அவர், பின் தைரியமாகத் தன் பழைய சரித்திரத்தை மெருகேற்றி, உயர்த்திப் பேச ஆரம்பித்தார்.

 ஆனால் கல்பனா ஆரம்பத்தில் பிரம்மானந்தாவைக் குறித்து மனதில் ஏற்படுத்தியிருந்த பிம்பம் சின்னாபின்னமாகியது. ஒருகாலத்தில் அவர் அவளுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார், பேருதவி செய்திருக்கிறார், இன்று வரை அவர் அவளிடம் மட்டும் பாராமுகம் காட்டியதில்லை. பாண்டியன் அவருக்கு மிக நெருங்கியவராக ஆன பின்னும், பாண்டியன் சொன்னபடி தான் யோகாலயத்தில் எல்லாம் நடக்கிறது என்ற போதும், கல்பனானந்தா மற்றவர்கள் அளவுக்கு பாண்டியனுக்கு அடிபணிந்து போகாமல் ஓரளவு தன் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். அதுகுறித்தும் பிரம்மானந்தா அதிருப்தி தெரிவித்ததோ, கண்டித்ததோ கிடையாது.

 அதனால் தனிப்பட்ட முறையில் அவர் குறித்து புகார் சொல்ல அவளிடம் எதுவுமில்லை. ஆனாலும் அவரது புகழும், செல்வமும், செல்வாக்கும் அதிகமாக, அதிகமாக, அவள் உயர்வாய் நினைத்த அத்தனையும் பிரம்மானந்தாவிடம் குறைந்து கொண்டே வந்து, கடைசியில் காணாமல் போனதை கல்பனானந்தாவால் உணர முடிந்தது.

 யோகாலயத்தை ஆரம்பிக்கும் போது தங்களை முழுமனதுடன் அதில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பெரும்பாலும் காலப்போக்கில் விலக ஆரம்பித்தார்கள். இந்தப் பொய்யான பகட்டில் இணைந்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதை அவர்கள் அவளிடம் தெரிவித்து விட்டு தான் சென்றார்கள். சிலர் தங்களுடன் வந்துவிட அவளை வற்புறுத்தினார்கள். ஆனால் அவள் செல்லவில்லை. யாரும் எப்போதும் எப்படியும் மாறலாம் என்பதை அவள் பிரம்மானந்தா விஷயத்திலேயே தெரிந்து தெளிந்திருந்தாள். புதிதாய் யாரையும் நம்பிப் போய் ஏமாந்து போக அவள் தயாராக இல்லை. பிரம்மானந்தா எப்படி இருந்தாலும், யோகாலயத்தில் உண்மையாகத் துறவறம் பூண்டு வந்தவர்கள் நிறைய உண்டு. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் யோகாவும், தியானமும், உயர்வானது என்பதில் சந்தேகமேயில்லை. அதை ஆத்மார்த்தமாகக் கற்றுத் தரும் பணியில் அவள் இருக்கிறாள். அந்தத் திருப்தியுடன் அவள் அங்கேயே தங்கி விட்டாள்.

 அவள் ஆரம்பத்திலிருந்தே தன் வாழ்க்கையை ராணுவ கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாள். அவள் வாழ்க்கையின் ஒழுங்குமுறை, செய்து வந்த கடுமையான பயிற்சிகள் எல்லாம் காலப்போக்கிலும் தளரவில்லை. ஒரு நாள் நிறைய சாதிக்கப் போகிறவள் என்ற நம்பிக்கையை அவள் என்றும் இழக்கவில்லை. அந்த நம்பிக்கை தான், அணையாத அக்னியாய் இருந்து அவள் தளர்ந்து விடாமல் அவளைக் காத்து வருகிறது.  

 அங்கே கற்றுத் தருகையில் அனாவசியமாக பிரம்மானந்தரின் புகழைப் பரப்பும் வேலையைச் செய்ய வேண்டி இருந்தது ஒன்று தான் சில சமயங்களில் தர்மசங்கடமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் அவளிடம் சொல்லா விட்டாலும், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவான அறிவுறுத்தல் அந்த வகையில் இருந்தது. அதனால் அவளும் அப்படியே இடையில் அவர் புகழை பரப்ப வேண்டியிருந்தது. ஆனால் அதிலும் அவள் மற்றவர்களைப் போல் அல்லாமல் அடக்கியே வாசித்தாள். அதற்கு அவளை யாரும் கண்டிக்கவில்லை.   

 ஆரம்ப ஆட்களில் முக்தானந்தா போன்ற மிகச்சிலர் மட்டும் அங்கிருந்தார்கள்அவர்களிலும் அவரைத் தவிர மற்றவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அவரை பிரம்மானந்தா எத்தனையோ துறவிகளில் ஒருவராக ஒதுக்கியதில் அவளுக்கு உடன்பாடில்லை. முக்தானந்தா மிக நல்ல மனிதர், நல்ல நோக்கத்துடன் தன் சொத்தையே தந்து யோகாலயத்தில் தன்னை இணைத்துக் கொண்ட உயர்ந்த மனிதர் அவர். அப்படிப்பட்டவரை பிரம்மானந்தா கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதை அவள் சிறுமை என்றே நினைத்தாள். ஆனால் அவளால் அதை அவரிடம் சொல்ல முடிந்ததில்லை. ஓரு முறை அவள் முக்தானந்தா பற்றி பிரம்மானந்தாவிடம் சொல்ல முற்பட்ட போது அவர், “மாறும் காலத்துடன் சேர்ந்து மாற முடியாதவர்களை ஒதுக்கி வைத்து விட்டு நாம் முன்னேற வேண்டும். இல்லா விட்டால் அவர்கள் நம்மையும் பின்னுக்கு இழுத்து விடுவார்கள்.” என்று கறாராய் சொல்லி விட்டார். அதன் பின் கல்பனானந்தாவால் அவரிடம் முக்தானந்தா பற்றிப் பேச முடிந்ததில்லை. முக்தானந்தாவும் வலிய வந்து பேசும் ரகம் அல்ல. பேசப் போனாலும் அவர்  அதிகம் பேசுபவரல்லஅதனால் அவளும் அவரிடம் பேச முற்பட்டதில்லை.

 காலம் செல்லச் செல்ல அங்கேயே தங்கத் தீர்மானித்தது முட்டாள்தனமோ என்று சிலசமயங்களில் அவளுக்குத் தோன்றியதுண்டு. ஆனால் அவள் அங்கிருந்து பாதுகாப்பாகப் பிரிந்து செல்லும் காலம் கடந்து விட்டது. இனி அங்கிருந்து அவள் போய்விட முடியாது என்பது அவளுக்குப் புரிந்து விட்டது. கசப்பானாலும் நிஜத்தை மறுத்து யாராலும் நிம்மதியாக வாழ முடியாது. எல்லாவற்றையும் துறவு மனப்பான்மையுடன் ஏற்றுக் கொண்டு பாதிக்கப்படாமல் வாழ முயற்சி எடுத்துக் கொண்டிருந்த போது தான் சைத்ரா அங்கு துறவியாக வந்து சேர்ந்தாள். அதன் பின் நடக்க ஆரம்பித்ததில் எல்லாம் அவளால் விலகி நிற்க முடியவில்லை. விதி அதற்கு அனுமதிக்கவில்லை


(தொடரும்)

என்.கணேசன்





1 comment: