பர்வதராஜன் சொன்னான். “கண்டிப்பாக நீ சந்திக்கத்தான் போகிறாய் நண்பனே. அவர்களை இங்கே வரவழைத்திருக்கும் நான் இப்போது உன்னை இங்கே வரவழைத்திருப்பதும் அதற்குத் தானே”
“அவர்களையும்
நீங்கள் தான் இங்கே வரவழைத்தீர்களா? ஏன்? புதிர்
போடாமல் விஷயத்தைச் சொல்லுங்கள் நண்பரே”
பர்வதராஜன் மிக இரகசியமான தொனியில்
தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். “யவன சத்ரப் பிலிப்பைக்
கொன்று வாஹிக் பிரதேசத்தை யவனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆச்சாரியர் அடுத்தபடியாக கேகயத்திற்கு
உதவுகிறேன் என்று சொல்லி இன்னொரு யவன சத்ரப் யூடெமஸையும் போரில் கொன்று விட்டு கேகயத்தையும்
தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். அது உனக்குத்
தெரிந்திருக்கும்”
நேபாள மன்னன் ஆச்சரியத்தோடு கேட்டான். “கேகயத்தை
அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாரா? இப்போதும்
புருஷோத்தமனின் மகன் மலயகேதுவல்லவா கேகய அரசன்?”
பர்வதராஜன் ஒன்றுமறியா குழந்தையைப்
பார்ப்பது போல் நேபாள மன்னனைப் பார்த்து விட்டுச் சொன்னான். “நண்பனே. இப்போது
நேபாளத்திற்கு நீ தான் அரசன். ஆனால் உனக்கு முழு சுதந்திரம் இருக்கிறதா? இப்போதும்
நீ தனநந்தனுக்குக் கப்பம் கட்டிக் கொண்டல்லவா இருக்கிறாய்? ஹிமவாதக்கூடத்துக்கு
நான் தான் அரசன். ஆனால் அலெக்ஸாண்டர் பாரதக் கண்டத்துக்கு வந்து கேகயத்தை வென்றவுடன்
முதல் முதலில் போய் பெரிய நிதியைத் தந்து நான் நட்பு பாராட்டி வர வேண்டியிருந்தது. அவன் இந்தப்
பக்கம் வந்து விடப்போகிறானே என்ற பயம் அப்படி என்னைச் செய்ய வைத்தது. கேகயத்துக்கு
உதவிய பிறகு அது யவனர் கையிலிருந்து நழுவி ஆச்சாரியர், சந்திரகுப்தன்
கட்டுப்பாட்டில் வந்து விட்டது. ஆக நாம் மன்னர்களே என்றாலும் முழு சுதந்திரத்துடன் இல்லை, எல்லையற்ற
செல்வத்துடனும் இல்லை என்பது நம் துர்ப்பாக்கியமாக இருக்கிறது. உண்டா இல்லையா?”
நேபாள மன்னன் தலையசைத்தான். “உண்டு?”
“நம்முடைய
இந்த நலிந்த நிலை என்னை எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால்
ஏதாவது செய்து நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அந்தச்
சமயத்தில் தான் சந்திரகுப்தனும், ஆச்சாரியரும் அடுத்த இலக்காக மகதத்தைக் குறி வைத்திருக்கிறார்கள்
என்றும், அதற்குத் தேவையான படைவலிமை போதாதென்று சற்று தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்
என்றும் ஒற்றர்கள் மூலம் நான் கேள்விப்பட்டேன். உடனே என்
அறிவில் மின்னலாய் ஒரு யோசனை உதித்தது. அவர்களை
இங்கே வரவழைத்தேன்”
மலைகேது தன் தந்தையின் கதை சொல்லும்
திறமையைக் கண்டு வியந்தான்.
சமீப காலமாக வெற்றி மேல் வெற்றி கண்டு
வரும் சாணக்கியர் மீதும், சந்திரகுப்தன் மீதும் எல்லா மன்னர்களுக்குமே வியப்பு கலந்த
மரியாதை இருந்தது. அப்படிப் புகழ் பெற்ற இருவரையும் தானிருக்கும் இடத்திற்கு
வரவழைக்கும் அளவு பர்வதராஜன் வலிமை வாய்ந்தவனாக இருப்பான் என்று நேபாள மன்னன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் மெல்லக்
கேட்டான். “உங்களுக்கு அவர்களை முன்பே தெரியுமா நண்பரே?”
“ஆச்சாரியரை
தட்சசீல ஆசிரியராக இருந்த காலம் முதல் தெரியும். அவர் என்
நெருங்கிய நண்பர். அவரிடம் மாணவனாக இருக்கும் போதே சந்திரகுப்தனையும் தெரியும். அதனால்
அல்லவா அவர்களை இங்கே என்னால் வரவழைக்க முடிந்தது?”
நேபாள மன்னன் முகம் வியப்பில் விரிய
மலைகேது சிரிக்காமல் இருக்க முயன்றான். ஆனால் பர்வதராஜன்
முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவன் தொடர்ந்து
சொன்னான். “அவர்கள் இருவரும் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்கள். காந்தாரம், கேகயம்
இரண்டின் படைகளையும் பெற்று போதுமான பலத்துடன் மகதத்தை வெல்ல முடியும் என்றாலும் யவனர்
தாக்குதல் எந்த நேரத்திலும் அந்த இரண்டு தேசங்களிலும் வரலாம் என்பதால் தயங்குவதாய்ச்
சொன்னார்கள். நான் அவர்களுக்கு இனியும் எந்த அளவு படைபலம் தேவை என்று கேட்டேன். அவர்கள்
சொன்னார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தேன். என் படைபலம், உன் படைபலம், காஷ்மீரம், குலு ஆகிய
இரண்டு தேசங்களின் படைபலம் என நான்கும் சேர்ந்தால் அவர்கள் தேவையின் அளவு வந்தது. உடனே உன்னையும், காஷ்மீரம், குலு அரசர்களையும்
வரச் சொல்லி ஆளனுப்பினேன். எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றே தீரும் அளவு சூழ்ச்சியான
திட்டங்கள் போடும் ஆச்சாரியருடன் சேர்ந்து கொண்டால் நம் அத்தனை பேர் பற்றாக்குறையும், பிரச்சினைகளும்
தீரும். உதாரணத்துக்கு நேபாளத்திற்கு கப்பம் கட்டத்தேவையில்லாத முழு சுதந்திரம் கிடைக்கும், கூடவே மகதத்தின்
எல்லையில்லாத செல்வத்தில் ஒரு பகுதியும் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?”
நேபாள மன்னன் கண்கள் மின்னின.
அடுத்து காஷ்மீர அரசனும், குலு அரசனும்
சேர்ந்து வந்தார்கள். அவர்களையும் பேரன்புடன் கட்டியணைத்து வரவேற்றுத் தனியாகத்
தங்க வைத்து பர்வதராஜன் பேசினான். “என் நெருங்கிய நண்பர் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரையும், சந்திரகுப்தனையும்
இங்கே ஒரு முக்கிய விஷயமாய் பேச வரவழைத்திருக்கிறேன். அதே முக்கிய
விஷயமாய் பேசத் தான் உங்களையும் வரவழைத்திருக்கிறேன்.”
காஷ்மீர அரசன் கேட்டான். “ஆச்சாரியர்
விஷ்ணுகுப்தர் உங்கள் நெருங்கிய நண்பரா?”
“ஆம் அவர்
தட்சசீல ஆசிரியராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு மிக நெருக்கமானவர். அவரிடம்
அப்போது படித்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனையும் அந்தக் காலத்திலிருந்தே நன்றாக அறிவேன்”
குலு மன்னன் சொன்னான். “ஏதோ முக்கிய
விஷயம், மாபெரும் பலன் என்று எங்களை வரவழைத்தீர்கள். அவர்களுக்கும்
அப்படித் தானா?”
பர்வதராஜன் சொன்னான். “ஆம் நம்
அனைவருக்கும் பெரும் பலன்கள் அளிக்கக்கூடிய முக்கிய விஷயம் தான்…”
“என்ன அது?”
“மகதம்.”
அவர்கள் இருவரும் புரியாமல் விழித்தார்கள். பர்வதராஜன்
தொடர்ந்தான். “என் நண்பர் ஆச்சாரியர் பார்வை இப்போது மகதத்தின் மீது திரும்பியிருக்கிறது. அவர் மகதத்தை
வெற்றி கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். பேரறிவைத் தவிர
எந்த மூலதனமும் இல்லாமல் யவன சத்ரப் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தின் அரசனாக
சந்திரகுப்தனை ஆக்கிய அவர் யூடெமஸைக் கொன்று யவனர்களை இங்கே பூஜ்ஜியமாக்கி விட்டார். இப்போது
அவர் பார்வை மகதம் பக்கம் திரும்பி இருக்கிறது. அங்கே தனநந்தன் நிலையைப் பலவீனமாக்க பல வேலைகளை ஏற்கெனவே
செய்திருக்கும் அவர் இப்போது கடைசி அஸ்திரமாக அவன் மீது போர் தொடுக்க நிச்சயித்திருக்கிறார். அவருக்குப்
படைபலம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. நான் நெருங்கிய
நண்பன் என்பதால் முதலில் என்னைத் தொடர்பு கொண்டார். நான் கணக்குப்
போட்டு என் படை வலிமை போதாதென்றும் கூட காஷ்மீரம், குலு, நேபாளம்
தேசங்களின் படைவலிமை தேவையென்றும் சொல்லி உங்கள் மூவரையும் வரவழைத்தேன். மகத சாம்ராஜ்ஜியத்தின் கணக்கிலடங்காத செல்வத்தின் ஒரு பகுதி
தான் நான் உங்களுக்குச் சொல்லியிருந்த மாபெரும் பலன். என்ன சொல்கிறீர்கள்?”
குலு மன்னன் சிரித்துக் கொண்டே சொன்னான். ”தனநந்தனின்
செல்வம் பற்றி அனைவரும் அறிவார்கள். அதில் ஒரு பகுதி
கிடைக்கிறது என்றால் அதற்கு ஆசைப்படாமல் இருக்க நாங்கள் துறவிகள் அல்லவே நண்பரே!”
காஷ்மீர மன்னன் மட்டும் சிறு சந்தேகத்துடன்
கேட்டான். “மகதத்தின் படை வலிமையும் அவன் செல்வத்திற்கு இணையாக மிக அதிகம்
தான். நாம் இத்தனை பேர் சேர்ந்தாலும் அவனை வெல்ல அது போதுமா?”
பர்வதராஜன் புன்னகைத்தபடி சொன்னான். “என் நண்பர்
படை வலிமையோ, பண வலிமையோ இல்லாத காலத்திலேயே தன் சூழ்ச்சித்திறனாலும், திட்டமிடும்
திறனாலும் வாஹிக் பிரதேசத்தை வென்றவர். இப்போது படைவலிமையும், பணவலிமையும்
சேர்ந்து கொண்ட பின் அவரால் முடியாதது எதுவுமிருக்க முடியாது நண்பர்களே”
சொல்லி விட்டு ஒரு காவலனை அழைத்து நேபாள
மன்னனையும் அழைத்து வரக் கட்டளையிட்டான். பின் அவர்களிடம்
தொடர்ந்தான். “யவனர்களை வெல்ல முடிந்த வலிமை மன்னர்களாகிய நமக்கே இல்லாத
போதே அறிவின் வலிமையால் அதைச் சாதிக்க முடிந்த ஆச்சாரியர் ஒரு இலக்கைக் குறி வைத்து விட்டால் அதை அடையாமல்
இருக்கக்கூடியவர் அல்ல. அவருக்குப் படையுதவி செய்வதன் மூலம் நாம் பெறப் போகும் செல்வம்
குபேரனின் செல்வத்திற்கு இணையானது நண்பர்களே… அந்தச்
செல்வம் வேண்டுமா வேண்டாமா?”
”இது என்ன
கேள்வி நண்பரே? வேண்டும்….வேண்டும்….”
என்று குலு மன்னன் சொன்னான்.
நேபாள மன்னனும் வந்து சேர அவனைத் தழுவி
காஷ்மீர மன்னனும், குலு மன்னனும் நலம் விசாரித்தார்கள். ஓரளவுக்கு
மேல் அவர்கள் அதை நீட்டித்த போது பர்வதராஜன் இடைமறித்துச் சொன்னான். “உங்கள்
அன்பை பின்பு பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது முக்கிய
விஷயத்தைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.”
அவர்கள் அமர்ந்தவுடன் பர்வதராஜன் ஒரு
நீதிமானைப் போல் பேச ஆரம்பித்தான். “மகதத்தின் பெருஞ்செல்வத்தைப்
பகிர்ந்து கொள்ள உங்களை இங்கு வரவழைத்த நான் என் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கும்
உங்களிடம் எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. மறைத்தால்
என் மனசாட்சி என்னை உறங்க அனுமதிக்காது. இதை நான் தனியாக
நீங்கள் இருக்கும் இந்த சமயத்தில் தான் சொல்ல முடியுமேயொழிய பொதுவில் வெளிப்படையாகப்
பேச முடியாது”
அவன் குரலில் தெரிந்த இரகசிய தொனி அவர்களை முழுக் கவனத்துடன் கேட்க வைத்தது.
(தொடரும்)
என்.கணேசன்
பர்வதராஜனிடம் உதவி கேட்டு வரும் முன்பே... அவனை பற்றித் தெரிந்து கொண்டு தான் சாணக்கியர் வந்திருப்பார்.... எனவே,இதில் பர்வதராஜனின் திட்டம் நிறைவேறுவது கடினம் தான் தான்....
ReplyDelete