விருந்து முடிந்தவுடன் விரட்டாத குறையாக அங்கிருந்து மூன்று மன்னர்களையும் கிளப்பி அழைத்துக் கொண்டு போன அவன் அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு நிம்மதியாக மறுபடியும் சாணக்கியரிடம் பேச வந்தான்.
அவரை வணங்கி விட்டுச் சொன்னான். “ஆச்சாரியரே. நான் சொன்ன வாக்கைக் காப்பாற்றி அவர்களை அழைத்து வந்து சம்மதிக்கவும் வைத்து
விட்டேன். திருப்தி தானே?”
சாணக்கியர் சொன்னார்.
“எங்கள் வேலையை நீ மிகவும் எளிதாக்கி விட்டாய் பர்வதராஜனே. நன்றி. இத்தனை வேகமாக எல்லாவற்றையும் செய்து முடித்ததற்கு
என் பாராட்டுதல்கள்”
பர்வதராஜன் சொன்னான்.
“தங்கள் திருப்தியே என் பாக்கியம் ஆச்சாரியரே. நாம் இனி வெற்றிக்குப் பின்னான பங்கீட்டைப் பற்றிப் பேசலாமல்லவா?”
சாணக்கியர் சொன்னார்.
“பேசுவோம்”
“எங்கள் நால்வருடைய படைவிவரங்களையும் நீங்கள் குறித்து வைத்திருக்கிறீர்கள்.
கூட்டினால் கண்டிப்பாகத் தாங்கள் போருக்கு அழைத்து வரக்கூடிய படைகளை
விட இது அதிகமாகவே இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனாலும் தாங்கள் முன்பே தனநந்தனைப் பலவீனப்படுத்தும் வேலைகளை செய்து வந்திருப்பதாகச்
சொல்கிறீர்கள். எங்கள் நால்வர் படை கூடுதலாக இருப்பதற்கு அதைச்
சரி செய்து கொள்வோம். இனி நாம் வென்ற பின் கிடைப்பதை நாம் பாதி
பாதியாகப் பிரித்துக் கொள்வோம். எனக்குக் கிடைக்கும் பாதியில்
என் நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. அவர்களும் உங்கள் முன்னே சம்மதித்திருக்கிறார்கள். என்ன
சொல்கிறீர்கள்?”
சாணக்கியர் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தார். பர்வதராஜன் சொன்னான்.
“நான் இப்போது கேட்பது எல்லா விதங்களிலும் நியாயமான பங்கீடு தான் ஆச்சாரியரே.
நீங்கள் ஒத்துக் கொண்டால் நாம் போருக்கான ஆயத்தங்களை வேகமாகச் செய்ய
ஆரம்பிக்கலாம். என்ன சொல்கிறீர்கள்? சம்மதம்
தானே?”
சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “சம்மதம்”
பர்வதராஜன் சாணக்கியரையும், சந்திரகுப்தனையும்
மிகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தான். ஹிமவாதக்கூட எல்லையைக்
கடக்கும் வரை மௌனம் காத்த சந்திரகுப்தன் பின் சாணக்கியரிடம் சொன்னான். “ஆச்சாரியரே, நீங்கள்
பர்வதராஜனின் பாதி பங்கீடுக்கு ஒத்துக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒன்றிணைந்த
பாரதம் காணக் கனவு காணும் நீங்கள் மகத ராஜ்ஜியத்தைத் துண்டாடும் கோரிக்கையை எப்படி
ஏற்றீர்கள்?”
சாணக்கியர் வருத்தத்துடன் சொன்னார். ”பர்வதராஜன்
வேறு விதமாக முடிவெடுக்க நம்மை அனுமதிக்கவில்லையே சந்திரகுப்தா. அவனே சரிபாதிக்கும்
மேலான படைகளுக்கு ஏற்பாடும் செய்து விட்டு வென்றதில் பாதி வேண்டும் என்று கேட்கும் போது மறுப்பதற்கு நம்மிடமும் தகுந்த காரணங்கள் இல்லையே. மண்ணாசையும், பொன்னாசையும்
தூண்டுவதால் மட்டுமே நமக்கு உதவ முற்படுபவனிடம் ஒன்றிணைந்த பாரதம் பற்றிப் பேசுவது
செவிடனிடம் பாடிக் காண்பிப்பது போலல்லவா ஆகிவிடும்.”
சந்திரகுப்தனும் அவரை வருத்தத்தோடு
பார்த்தான். அந்த வருத்தமும் அவர் மனதை அவன் நன்றாக அறிந்ததில் உருவானது
தான். ஒன்றுபட்ட பாரதம் என்ற ஒரு பெருங்கனவுக்காகப் போராடி வரும்
அவர் இப்படி இறங்கி வரும்படி நிர்ப்பந்தித்து விட்ட பர்வதராஜன் மீது அவனுக்குக் கடுங்கோபம்
வந்தது.
அவன் முகத்தைப் பார்த்து அதைப் புரிந்து
கொண்ட சாணக்கியர் மெலிதாகப் புன்னகைத்தபடி சொன்னார். “பாதி என்றால்
ஒவ்வொன்றிலும் பாதி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ”ஒன்றை நீ
எடுத்துக் கொள். இன்னொன்றை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம், மூன்றாவதை
இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்வோம்” என்று நாம் சொல்வது
கூட சரிநிகர் மதிப்பில் பாதியாக எடுத்துக் கொள்வதாக இருபக்கமும் இருக்கும். உதாரணத்திற்கு
நிதியை நீ எடுத்துக் கொள். தேசத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். படைகளைப்
பாதியாகப் பிரித்துக் கொள்வோம் என்று கூட அவனிடம் நாம் பேசிப் பார்க்கலாம். அதற்கு
அவன் ஒத்துக் கொண்டால் தேசப்பிரிவினையை நாம் தடுத்துவிட முடியும்.”
“நாம் சொல்வதற்கு
பர்வதராஜன் ஒத்துக் கொள்ளா விட்டால்?” சந்திரகுப்தன் சந்தேகத்துடன்
கேட்டான்.
“நியாயமான
கோரிக்கைகளை ஏற்க மறுப்பவர்களை நாமும் நியாயமான வழிகளில் கையாள வேண்டியதில்லை.” என்று சாணக்கியர்
அமைதியாகச் சொன்னார்.
சந்திரகுப்தன் புன்னகைத்தான்.
மலைகேது தந்தையை எச்சரித்தான். “எனக்கென்னவோ
அந்த அந்தணர் இப்போதும் மகத வெற்றிக்குப் பின் நமக்கு சரிபாதியாய்ப் பிரித்துத் தர மனப்பூர்வமாக ஒத்துக்
கொண்டது போல் தெரியவில்லை தந்தையே.”
பர்வதராஜன் சிரித்தான். “அந்த அந்தணர்
சூழ்ச்சிக்காரர். அவர் மகதத்தை வெற்றி கொண்டபின் நமக்கும் மற்றவர்களுக்கும்
ஏதோ ஒரு சிறு பங்கினைத் தந்து மீதியைத் தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு
வந்தது பலிக்காமல் போய் விட்டது. நான் அவரைக் கையாண்ட விதத்தில் மேற்கொண்டு அவருக்கு மறுத்து
எதுவும் பேச முடியவில்லை. அதனால் தான் வேறு வழியில்லாமல் நான் சொன்னதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்
என்பதை நானும் அறிவேன். தந்திரக்காரரை இப்படித் தந்திரத்தால் தான் வெல்ல வேண்டும்
மகனே.”
மலைகேது தன் தந்தையின் திறமையை எண்ணி
மனதில் மெச்சியபடி தலையசைத்தான். அவன் மனதில் இன்னொரு சந்தேகம் எழ அதைக் கேட்டான். “தந்தையே. அவரை மட்டும்
நீங்கள் சமாளிப்பது போதாதே. மற்ற மூன்று மன்னர்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்குமே. உங்களுக்குக்
கிடைப்பதை அவர்களுக்கும் நீங்களே பிரித்துக் கொடுப்பதாக வேறு நீங்கள் அந்த அந்தணருக்கு
வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அப்படி நீங்கள் பிரித்துக் கொடுத்தால் நமக்குப் பெரிதாக ஒன்றும்
மிஞ்சாதே”
பர்வதராஜன் அலட்சியமாகச் சொன்னான். “மகனே. ஆச்சாரியரைச்
சமாளிப்பது தான் கஷ்டமேயொழிய இந்த மூவரைச் சமாளிப்பது எனக்கு ஒரு விளையாட்டைப் போல
மிகச் சுலபம்.”
மலைகேது அது எப்படி என்பது போல தந்தையைப்
பார்த்தான். பர்வதராஜன் சொன்னான். “மகனே. சில விஷயங்களைத்
தெளிவாக வார்த்தைப்படுத்தினால் மட்டுமே யாரும் பின்னர் அந்த வார்த்தைகளைச் சொல்லித்
தெளிவாக அவர்கள் பெற வேண்டியதைப் பெற முடியும். பொதுவான
வார்த்தைகளை யாரும் எப்படியும் அவரவர் சாமர்த்தியத்திற்குத் தகுந்தபடி பொருள்படுத்திக்
கொள்ள முடியும். அதனால் தான் அந்த அந்தணரிடம் நான் மறுபடி, மறுபடி
சரிபாதி வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு சம்மதம் பெற்று உறுதிப்படுத்திக் கொண்டேன். நம் அண்டை
மன்னர்கள் மூவரும் விவரமில்லாதவர்கள். அதனால் தான் நான்
பொதுவாகச் சொன்னதில் திருப்தியடைந்து சென்று விட்டார்கள்.”
“ஆனாலும்
வெற்றிக்குப் பின் நமக்குக் கிடைப்பதை அவர்கள் கண்கூடாகப் பார்த்த பின் அவர்கள் திருப்தியடைய
மாட்டார்களே. அந்த நேரத்தில் ஏதாவது தகராறு செய்தால் நாம் என்ன செய்வது?”
“மகனே. நான் நேபாள
மன்னனிடம் தனநந்தனுக்குக் கப்பம் கட்டுவதிலிருந்து விடுதலையும் நிதியும் மட்டுமே வாக்களித்திருக்கிறேன். இரண்டும்
கிடைப்பதே பெரிய பாக்கியம் என்று திருப்தியடைந்து தான் அவன் போய் இருக்கிறான். மற்ற இரண்டு
மன்னர்களுக்கு நிதி தருவதாக மட்டுமே நான் வாக்களித்திருக்கிறேன். யாருக்குமே
மகத ராஜ்ஜியத்தைப் பிரித்துத் தருவதாக நான் வாக்களிக்கவில்லை என்பதை நீ கவனித்திருப்பாய். இதில் இருக்கும் சூட்சுமம் உனக்குப்
புரிந்திருக்கிறதா?”
மலைகேதுவுக்கு எந்த சூட்சுமமும் புரியவில்லை. பர்வதராஜனுக்கு தன் அறிவில் பாதி கூட மகனிடம் இல்லாமல் போனது வருத்தத்தைத் தந்தது. ஒரு பெருமூச்சு விட்டு விட்டு மகனிடம் அவன் விளக்க ஆரம்பித்தான். “மகனே ராஜ்ஜியத்தின் பரப்பு அனைவரும் அறிந்தது. அதை நான் மறைத்துப் பிரித்துத் தர வழியில்லை. அதனால் தான் அதைப் பற்றிய பிரஸ்தாபத்தை நான் அவர்களிடம் எடுக்கவில்லை. அப்படி அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் கூட அவர்களாலும் தொலைவில் இருக்கிற பகுதிகளை ஆட்சி புரிய முடியாது. அவர்கள் அந்த அளவு திறமை படைத்தவர்கள் அல்ல. மகதத்தின் பரப்பை நான் மறைக்க முடியாதேயொழிய தனநந்தனின் நிதியை நான் என் விருப்பத்தின்படி மறைக்க முடியும். நிதியைக் கணக்கெடுக்கும் போது அவர்களை எங்களுடன் இருத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாமும், ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் மட்டுமே அந்தச் சமயத்தில் இருக்கும்படி என்னால் பார்த்துக் கொள்ள முடியும். தனநந்தனிடம் இருக்கும் நிதி கற்பனைக்கெட்டாத அளவு அதிகம் என்று பலரும் சொல்கிறார்கள். விபரம் அறிந்த ஒருவர் அது குபேரனிடம் இருக்கும் செல்வத்திற்கு இணையானது என்று என்னிடம் சொல்லியிருந்தார். அந்த அளவில்லாத செல்வத்தில் கால் பகுதியை மட்டும் கணக்கில் காட்டி அதைச் சரியான விகிதத்தில் அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் அவர்களுக்குக் கிடைக்கும் நிதி அவர்கள் கற்பனை செய்ய முடிந்த அளவுக்கும் அதிகமாகவே இருக்கும். அதனால் அவர்கள் திருப்தியடைந்து செல்வது உறுதி. அவர்களிடமிருந்து நமக்கு எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை”
(தொடரும்)
என்.கணேசன்