சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 29, 2024

யோகி 47

 

சுகுமாரன் நாத்திகவாதி. மனிதனுக்கு மேலாக, கடவுள் உட்பட எந்த சக்தியும் இருப்பதாக நம்பாதவர். அவர் மனைவியும், மகளும் கடவுளை நம்புவதைக் கூட மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர் சகித்துக் கொள்கிறார். ’அறிவை அடகு வைத்து விட்டவன் அவனாகத் தான் அதை மீட்டு எடுக்க வேண்டும். அப்படி அவன் மீட்டு எடுக்கும் வரை அடுத்தவர்களின் அறிவுரை எதுவும் அவனிடம் எடுபடாது.’ என்பது அவர் அடிக்கடி நினைக்கும் உண்மை. கடவுளையே நம்பாத அவருக்கு ஆவிகள் மீது எப்படி நம்பிக்கை வரும்?

 

ஆனால் கண்களின் முன்னே தோட்டத்தில் நின்று புன்னகைத்த உருவத்தைச் சந்தேகப்படவும் எதுவுமில்லை. இறந்து, அவர் கண் முன்னே பிணமும் எரிக்கப்பட்ட உருவம் நேரில் தெரிவதை ஆவி என்பதைத் தவிர வேறு எந்தப் பெயரில் அழைப்பது? டாமி குரைப்பதற்கு இதைத் தவிர காரணம் வேறு எதுவும் இல்லை என்பதுவும் அவருக்கு உறைத்தது. அவனைக் கூண்டில் இருந்து விடுவிக்கத் தாமதமானது தான் காரணம் என்றால் அவரது கார் வந்தவுடனாவது அவன் குரைப்பதை நிறுத்தியிருக்க வேண்டும்...

 

பயம் அவர் பல காலமாக அறியாத ஒரு உணர்ச்சி. அதே போல் அவர் அதிகமாய் கவலையும் பட்டதில்லை. பணமும், செல்வாக்கும் அதிகமான பிறகு பயத்திற்கும், கவலைக்கும் எந்தக் காரணமும் அவருக்கு இருக்கவில்லை. எந்தப் பிரச்சினையும் அதிக செலவிலாவது தீர்க்கப்பட முடிவது தான். செலவு செய்ததை விடப் பலமடங்கு பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருக்கையில் அதிகமாய் யோசிக்க எதுவுமில்லை. ஆனால் சைத்ராவின் உருவத்தை இத்தனை தத்ரூபமாய் எதிரில் பார்த்தவுடன், தானாக எழுந்த பீதியைக் குறைத்துக் கொள்வது அவருக்குச் சிரமமாகத் தானிருந்தது.

 

துடிப்பதை ஒரு கணம் நிறுத்திய சுகுமாரனின் இதயம் வேகமெடுத்து சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்த போது அவர் கஷ்டப்பட்டு பார்வையைத் திருப்பி கூர்க்காவைப் பார்த்தார். கூர்க்கா கேட்டை சாத்திக் கொண்டிருந்தான். அவன் நின்றிருக்கும் இடத்திலிருந்தும் சைத்ராவின் ஆவியைப் பார்க்காமலிருக்க வழியில்லை. ஆனால் கூர்க்கா எந்த மாற்றமும் இல்லாமலிருந்தான். ஒருவேளை இது என் பார்வைக்கு மட்டும் தான் தெரிகிறதோ?

 

மீண்டும் பார்த்த போது சைத்ராவின் புன்னகை விரிந்தது. மெல்ல அவரை  நெருங்க யத்தனிப்பது போல் தோன்றவே சுகுமாரன் கூடுதலாய் ஒரு கணமும் அங்கே நிற்கப் பிரியப்படவில்லை. மின்னல் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்ட அவர் ஜன்னல் அருகே நின்று கூர்க்காவிடம் கத்தி சொன்னார். “டாமிய கூண்டிலிருந்து வெளிய விட்டுடுப்பா

 

கூர்க்கா தலையசைத்து விட்டு, வீட்டின் பின்பக்கமாகப் போக ஆரம்பித்த போதும் அவன் அந்த  ஆவியைப் பார்த்தது போல் தெரியவில்லை. பார்த்திருந்தால் பயந்து ஓடி வந்திருப்பான். படபடக்கும் இதயத்துடன் சுகுமாரன் தனது அறைக்குப் போய் ஜன்னல் வழியே பார்த்தார். இப்போதும் தோட்டத்தில் அதே இடத்தில் சைத்ரா தெரிந்தாள்.

 

கூண்டில் இருந்து விடுபட்ட டாமியும் ஓடி வந்து, சைத்ரா நிற்கும் இடத்தைப் பார்த்து ஆக்ரோஷத்துடன் குரைத்தது. கூர்க்கா காதைக் குடைந்து கொண்டே எரிச்சலுடன் சொன்னான். “சும்மா இரு டாமி. எத்தனை நேரமாய் கத்தறே? கூண்டிலிருந்து தான் அவிழ்த்து விட்டாச்சுல்ல. அப்பறம் என்ன?”

 

அவனைப் பொருட்படுத்தாமல் டாமி குரைத்தது. சைத்ராவின் ஆவி நிற்பது போல் அவர் உணர்ந்தது பிரமையல்ல என்பது சுகுமாரனுக்கு உறுதிப்பட்டது. ’அதை டாமியும் பார்க்கிறான். ஆனால் கூர்க்காவுக்குத் தான் எதுவும் தெரியவில்லை...’

 

சுகுமாரனுக்கு வயிற்றில் எரிச்சல் அதிகமாக ஆரம்பித்தது. காதில் கேட்கும் ரீங்காரமும் அதிகரித்தது. டாமி தொடர்ந்து குரைத்ததைக் கேட்டுக் கொண்டு இருந்ததால் தலைவலிக்கவும் ஆரம்பித்தது. ஜன்னலிலிருந்து நகர்ந்து கட்டிலில் வந்தமர்ந்தார்.

 

ஆவிகள் என்பது நம் பயங்கள் வடிவம் எடுப்பது தான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. ‘அவள் இறந்து எத்தனை நாட்களாகி விட்டன. எரித்தவுடனேயே அவளை மறந்துமாகி விட்டது. கோவிட் சம்பந்தமாக இன்ஸ்பெக்ஷனுக்கு ஒரு அதிகாரி வந்த போது கூட, அவர் பயப்படவில்லையே. அதனால் ஆழ்மனதின் பயம் இப்படி வடிவெடுத்திருக்க வாய்ப்பில்லை. சரி அது காட்சி அளித்தால் தான் என்ன? அது வேறென்ன செய்யும்? வீட்டுக்குள்ளும் ஆவி வருமா? வர வழியில்லை. போன மாதம் தான் வீட்டில் பல பூஜைகளை மனைவி செய்வித்தாள். வீட்டுக்கு ஏதோ ரட்சை கட்டியிருப்பதாக, அந்தப் பூஜைகள் செய்த சாமியார் சொல்லி விட்டுப் போனார். ’இப்படியெல்லாம் கதை சொல்லி நல்லா சம்பாதிங்கடாஎன்று அன்று இகழ்ச்சியாகச் சொல்லி மனதிற்குள் சிரித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இப்போதோ இகழ்ச்சியாக நினைக்கத் தோன்றவில்லை. பூஜையறையில் ஹோமங்களின் சாம்பலை மனைவி ஒரு டப்பாவில் எடுத்து வைத்திருந்தது ஞாபகம் வர, எதற்கும் இருக்கட்டும் என்று போய் அதை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு வந்தார்.

 

வெளியில் திடீரென்று டாமி குரைப்பது நின்றது. சுகுமாரன் மெல்ல எழுந்து போய் ஜன்னல் வழியே பார்த்தார். முன்பு காட்சி அளித்த இடத்தில் இப்போது சைத்ராவின் ஆவி தெரியவில்லை.  நிஜமாகவே ஹோமங்களின் சாம்பலுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று தோன்றியது. இப்போது சிறிது வயிற்று எரிச்சலும் குறைந்து, காதில் கேட்கும் ரீங்காரமும் குறைந்தது.

 

சற்று நிம்மதி அடைந்தவராய் கைபேசியில் இணையத்தில் ஆவிகள் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்தார். நேரம் போவதே தெரியாமல், அவற்றைப் படிக்கப் படிக்க அவர் தலைசுற்ற ஆரம்பித்தது. ஒரு தளத்தில் சொல்லப்பட்டு இருந்த தகவல்களை இன்னொரு தளம் மறுத்தது. மூன்றாவது தளமோ முற்றிலும் புதிய தகவலைச் சொன்னது. எதிரும் புதிருமான தகவல்களைப் படித்து முடிக்கையில் குழப்பமே மிஞ்சியது. 

 

டாமி குரைப்பதை நிறுத்தி விட்ட பிறகு தான் கூர்க்காவுக்குத் தலைவலி குறைய ஆரம்பித்தது. சனியன் இரவு பத்து மணிக்கு குரைக்க ஆரம்பித்து சற்று முன் தான் நிறுத்தியிருக்கிறது. அவன் கைபேசியில் நேரம் பார்த்தான். பன்னிரண்டே முக்கால். அவன் வழக்கமாய் ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே உறங்குவான். இன்றும் அதற்கு அவன் தயாரானான். சிறிது நேரத்தில் அவன் கண்ணயர்ந்தான்.

 

எவ்வளவு நேரம் அவன் உறங்கினானோ தெரியவில்லை. டாமி பழையபடி ஆக்ரோஷமாய் குரைக்க ஆரம்பித்தது. லேசாக அவன் கண்களைத் திறக்கையில் ஏதோ ஒரு பைக் கடந்து சென்றது. சோம்பல் முறித்தவனாக அவன் யாராவது வீட்டு அருகே தெரிகிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது. ஆட்கள் யாராவது நெருங்கி வந்தால் தான் டாமி இப்படிக் குறைக்கும். அல்லது சிலசமயங்களில் எங்கிருந்தாவது பூனை வந்தாலும் டாமி குரைப்பதுண்டு.  கூர்க்கா எரிச்சலுடன் எழுந்து உள்ளே போனான். உள்ளே தோட்டத்தில் ஒரு துணி எரிந்து கொண்டிருந்தது.

 

டாமி குரைக்கும் சத்தம் மறுபடி கேட்க ஆரம்பித்தவுடன் சுகுமாரனும் எழுந்து வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். ஏதோ ஒன்று தோட்டத்தில் எரிவது அவருக்கும் தெரிந்தது. நல்ல வேளையாக அதை கூர்க்காவும் பார்த்து விட்டு வந்து அவசர அவசரமாக பூட்ஸ் கால்களால் மிதித்து அணைக்க ஆரம்பித்தது தெரிந்தது. அவர் திகைப்புடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.

 

என்னது?” என்று சத்தமாக அவர் கேட்க நினைத்தாலும் அவர் குரல் ஏனோ குளறியது.

 

தலைநிமிர்ந்து அவரைப் பார்த்த கூர்க்கா குழப்பத்துடன் சொன்னான். “எதோ துணி எரிஞ்சுகிட்டிருக்கு. இது எப்படி வந்துச்சுன்னே தெரியல

 

டாமி அந்தத் துணியைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது. சுகுமாரனைப் பார்த்ததும் அவர் அருகே ஓடி வந்து குரைத்து புகார் சொன்னது. அன்புடன் அதைத் தடவிக் கொடுத்தபடி சுகுமார் கூர்க்காவிடம் கேட்டார். ”அது என்ன துணி? எப்படி வந்துச்சு? யார் எரிச்சாங்க?”

 

கூர்க்கா குழப்பத்துடன் சொன்னான். “தெரியலையே சார்.” சொல்லி விட்டு குனிந்து, பாதி எரிந்திருந்த அந்தத் துணியைக் கையில் எடுத்து விரித்தான். அது ஒரு காவித் துணி....

 

அதைப் பார்த்ததும் சுகுமாரனுக்கு குப்பென்று வியர்த்தது.


(தொடரும்)

என்.கணேசன்





 

1 comment:

  1. பேய் பயத்தில் சுகுமாரன் மனநிலையை தத்ரூபமாக காட்டியுள்ளீர்கள் ஐயா....

    ReplyDelete