சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 18, 2024

சாணக்கியன் 92

துர்வேதிக்கு அந்த விஷயத்தை மன்னரிடம் தெரிவிக்கும் முதல் மனிதர் தானாக இருப்பதில் பெருமை தோன்றியது. இந்த முறை கிடைக்கும் பரிசு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு அதிகரித்தது. அவர் பெருமை பொங்கச் சொன்னார். “நான் பயணம் செய்யும் இடங்களில் நடப்பதை அரைகுறையாகக் கேட்டு வருவதில்லை மன்னா. செல்லும் இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களிடம் பேசி கேள்வி ஞானத்தால்  கூடுதல் அறிவைப் பெற்றுக் கொள்ளாமல் திரும்பி வருவது ஒரு பண்டிதனுக்கு அழகல்லவே. அந்த ஆசிரியர் பெயர் விஷ்ணுகுப்தராம். அவரை சாணக்கியர் என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் அழைக்கிறார்கள்....”

 

வாஹிக் பிரதேசத்தில் புரட்சி நடந்து யவனர்களிடமிருந்து ஆட்சி பறிபோனது குறித்த செய்தி தனநந்தனுக்குத் தெரியும். பறித்தது புரட்சிக்காரர்கள் என்பதற்கு மேல் தெரிந்து கொள்ள அவன் விரும்பியிருக்கவில்லை. மகதம் குறித்த தகவல்களே கூட ஓரளவுக்கு மேல் அறிந்து வைத்துக் கொள்ளுமளவு பொறுமை இல்லாத அவனுக்கு அதைத் தாண்டிய பகுதிகள் குறித்து அறிந்து கொள்ளும் அக்கறை இருக்கவில்லை. அவனையும், மகதத்தையும் பாதிக்காத விஷயங்களைச் சில சமயங்களில் சொல்ல ராக்ஷசர் முயற்சிப்பதுண்டு. அப்போதெல்லாம் கைகூப்பி அவன் சொல்வான். “ராக்ஷசரே. நீங்கள் அறிந்திருந்தால் அது நான் அறிந்திருப்பது போல. அதனால் தயவு செய்து எனக்கு விவரிக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்.”

 

இப்படி அனாவசியமானவை என்று பல தகவல்களைத் தவிர்க்கும் அவனுக்கு வாஹிக் பிரதேசத்தை வென்றது சாணக்கியர் என்ற பெயரோடு விஷ்ணுகுப்தர் என்ற பெயரும் சேர்ந்து சொல்லப்பட்டவுடன் பழைய நினைவுகள் வந்து அவன் முகம் கருத்தது. அவனுக்கு எதிராக சாணக்கின் மகன் சாணக்கியன் என்ற பெயரில் சபதமிட்டுச் சென்ற மனிதர்! மன்னரின் மலர்ந்த முகம் திடீரென்று கருத்தது ஏன் என்று புரியாமல் சதுர்வேதி திகைத்தார். ‘இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாகத் தானே கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன ஆயிற்று திடீரென்று? ஒருவேளை விஷ்ணுகுப்தர் என்ற ஆசிரியர் நான் கேள்விப்பட்டது போல் மகதவாசி இல்லையோ?’ என்ற வகையில் எண்ணங்கள் அவர் மனதில் ஓடின.

 

தனநந்தன் பாராட்டுபவர்களுக்குப் பரிசுகள் தருவதில் தாராளம் காட்டுபவன். ஆனால் அவன் அதிருப்தியான மனநிலையில் இருந்தாலோ அந்த தாராளம் காணாமல் போய் விடும். அவன் தன் சேவகனை சைகையால் அழைத்து ஏதோ  முணுமுணுத்தான். சேவகன் தலையசைத்து விட்டுச் செல்ல தனநந்தன் ராக்ஷசரைப் பார்த்தான்.

 

ராக்ஷசர் தனநந்தனின் பார்வையைப் படித்து அவன் விருப்பத்தைப் புரிந்து கொள்வதில் வல்லவர். அவர் சதுர்வேதியிடம் சொன்னார். “பண்டிதரே. தங்கள் வரவுக்கும், புண்ணியஸ்தலங்களின் தீர்த்தப் பிரசாதங்களைக் கொண்டு வந்து கொடுத்ததற்கும் நன்றி. தற்போது மன்னருடன்  அமைச்சர்கள் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும் முக்கிய அவசரக்கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது....”

 

சதுர்வேதி ஒன்றும் புரியாமல் தலையாட்டினார். மன்னரின் சேவகன் ஒரு தாம்பாளத்தில் கனிகள் பட்டு வஸ்திரம் எடுத்துக் கொண்டு வந்து நீட்டினான். சதுர்வேதி அதைப் பெற்றுக் கொண்டார். அதில் எப்போதும் பொற்காசுகளின் முடிச்சு ஒன்று இருக்கும். சில சமயங்களில் அந்த முடிச்சு சிறியதாகவும் சில சமயங்களில் பெரியதாகவும் இருக்கும். அந்த முடிச்சின் அளவு தனநந்தனின் மனம் குளிர்ந்த அளவைப் பொருத்ததாக இருக்கும். இன்று அவர் பாராட்டிய அளவுக்கு, பெரிய முடிச்சே இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் தாம்பாளத்தில் பொற்காசுகளின் முடிச்சே இருக்காதது சதுர்வேதிக்கு ஏமாற்றத்தை அளித்தது. பிரச்சினை கடைசியாகச் சொன்ன மகதவாசியின் புரட்சி சாதனை தான் என்பது மட்டும் தான் அவருக்குப் புரிந்தது. மகத மன்னனைப் பாராட்டி வாழ்த்தியதோடு நிறுத்தியிருக்க வேண்டும், மகதவாசியின் வாழ்த்தைச் சேர்த்துக் கொண்டது தவறு என்பது அவருக்கு மெள்ளப் புரிந்தது. இப்போது சமாளித்து சரி செய்ய வழியில்லை. ராக்ஷசர் நாசுக்காகப் போய் வா என்று சொல்லி விட்டார். மன்னர் முகத்திலும் இனிமை இல்லை. வருத்தத்தோடு தாம்பாளத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் வாழ்த்தி விட்டுப் போனார்.

 

அவர் வெளியேறும் வரை காத்திருந்த தனநந்தன் பின் அறிவித்தான். “முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடக்கவிருப்பதால் அமைச்சர்கள் சேனாதிபதி தவிர மற்றவர்கள் கலையலாம்.”

 

சேவகர்கள், பணிப்பெண்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்து விட்டு தனநந்தன் ராக்ஷசரிடம் கோபத்துடன் கேட்டான். “மகதவாசி ஒருவர் சாதனை பற்றி பண்டிதர் சற்று முன் சொன்னாரே அந்த ஆள் யாரென்று தெரிகிறதா ராக்ஷசரே?”

 

ராக்ஷசர் சொன்னார். “சில நாட்களுக்கு முன்பு தான் அந்த ஆச்சாரியரின் அடையாளம் அறிந்தேன் அரசே

 

அந்த அந்தணன் தானே முடிசூடிக் கொண்டு விட்டானா?”

 

இல்லை அரசே. அவரது மாணவர்களில் ஒருவனை அரசனாக்கியிருக்கிறார்

 

தனநந்தன் வெறுப்பு மிகுதியில் சொன்னான். “எதிர்க்கிறவர்களை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்தால் பின் அவர்கள் எதிர்ப்பைக் காட்டவும், தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவும் சந்தர்ப்பமிருக்காது. இரண்டு தடவை இதே அரசவையில் அந்த அந்தணனின் திமிர்ப் பேச்சை நாம் அனுமதித்ததன் விளைவு இன்று பெரிய ஆளாகி நம் சபையிலேயே சிலாகித்துப் பேசப்படுபவனாகி விட்டான்.”

 

ராக்ஷசர் அமைதியாகச் சொன்னார். “முதல் முறை அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்காக அவர் விருந்தினராக வந்தார். இரண்டாவது முறை உதவி கேட்டு வந்தார். கேட்ட உதவி  பைத்தியக்காரத்தனமாய் இருந்ததால் நாம் உதவி செய்ய மறுத்து விட்டோம். விருந்தினராக வந்தவரையும், உதவி கேட்டு வந்தவரையும் தண்டிப்பது, அவர் புகழ்பெற்ற தட்சசீலக் கல்விக்கூடத்தின் ஆசிரியராகவும் இருக்கையில், அது தேவையில்லாத அவச்சொல்லுக்கு உங்களை ஆளாக்கி விட்டிருக்கும் அரசே.”

 

தனநந்தன் ஒன்றும் சொல்லா விட்டாலும் அவன் அதிருப்தியான மனநிலையிலேயே இருந்தான். தந்தையை அப்புறப்படுத்தியது போலவே, ஆணவத்துடன் சபதமிட்ட மகனையும் அப்புறப்படுத்த முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

 

மன்னரின் முகத்தில் அதிருப்தியைக் கண்ட அமைச்சர் வரருசி, விஷ்ணுகுப்தரின் சபதம் தான் மன்னரை இத்தனை பாதிக்கிறதோ என்று நினைத்தவராகக் கேட்டார். “அந்தப் புரட்சிப்படைகள் மகதத்திற்கு எதிராக படையெடுத்து வரும் வாய்ப்பிருக்கிறதா?”

 

மகத சேனாதிபதி மெல்ல நகைத்தபடி சொன்னான். “வாஹிக் பிரதேசம் மகதத்தை ஒப்பிடுகையில் சிறு பகுதியே அமைச்சரே. படை வலிமையில் ஒப்பிட்டாலும் ஒரு பாறையை ஒரு மலையோடு ஒப்பிடுவது போலத் தான். அதனால் அவர்கள் படையெடுத்து வருவது தற்கொலை செய்து கொள்வது போலத் தான். அந்த அந்தணர் அங்கே சாதித்தாலும் நமக்கு ஒரு துரும்பு தான். ”

 

ராக்ஷசர் சொன்னார். “உண்மை தான். அங்கு அவர் கையாண்ட யுக்தியும் யவனர்களுக்கு எதிராகப் பலித்ததேயொழிய மற்ற இடங்களில் பலிக்க வழி இல்லை. மேலும் வாஹிக் பிரதேசம் நம் எல்லையிலும் இல்லை...”

 

தனநந்தன் தன் வலிமையோடு அந்த அந்தணரின் வலிமை ஒப்பிடப்படுவதே அவமானம் என்று நினைத்து காட்டமாகச் சொன்னான். “உங்கள் ஒப்பீடுகளே எனக்குக் கேவலமாகத் தோன்றுகிறது. ஒப்பீடு என்பது ஓரளவாவது சரிசமமானவர்களுடன் செய்வது தான் முறை. தூணைத் துரும்போடும் தூசியோடும் யாரும் ஒப்பிடுவதில்லை....”

 

ராக்ஷசர் துரும்பையும், தூசியையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்று எண்ணினாலும் அதை வாய்விட்டுச் சொல்லவில்லை. துரும்பும் தூசியும் விழுவது கண்களில் என்றால் அவையும் பெரும் தொந்தரவே!

 

ஒருவேளை புரட்சிப் படையினர் விஷ்ணுகுப்தரின் பைத்தியக்காரத்தனமான சபதம் காரணமாக முட்டாள்தனமாய் மகதத்தை எதிர்க்க வந்தால் அவர்களைத் தோற்கடித்து துரத்தியடித்து நம் வலிமையைப் புரிய வைக்க வேண்டும் என்ற தனநந்தன் நாம் தயார் நிலைமையில் இருக்கிறோமாஎன்பதை அறிந்து கொள்ள விரும்பினான். படை நிலவரங்களை சேனாதிபதியும், அமைச்சர்களும் விவரமாகச் சொன்னதுடன் போரின் முடிவில் மகதம் என்றாலே புரட்சிப் படையினருக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று உறுதியளித்தவுடன்  தனநந்தன் திருப்தியடைந்தான். சபை கலைந்தது.

 

ஆனால் இல்லத்திற்குச் சென்ற பின்பும் ராக்ஷசரால் கவலையில்லாமல் நிம்மதியாக இருக்க முடியவில்லை.  விஷ்ணுகுப்தரைப் பற்றி அவர் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் ஒரு அசாதாரணமான மனிதரை அடையாளம் காட்டியதால் ராக்ஷசர் அவரிடம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார். நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஆரம்பத்திலிருந்தே அவர் யோசித்துப் பார்த்தார்.

 

ஆரம்பத்தில் அறிஞர்களின் சிறப்புக்கூட்டத்திற்கு விஷ்ணுகுப்தர் வந்ததிலிருந்து ஆரம்பித்தவருக்கு ஆச்சாரியர் ஆரம்பத்தில் நகருக்கு வெளிப்புறத்தில் வசித்து வந்த ஒரு ஏழைச் சிறுவனின் வீட்டுக்குப் போய் பேசியதும், பின் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது.....

 

உடனடியாகப் பழைய ஒற்றனை அவர் அழைத்துப் பேசி அந்தப் பழைய நிகழ்வை ஞாபகப்படுத்தி விட்டுக் கேட்டார். “அந்தச் சிறுவனின் குடும்பம் இப்போதும் அதே வீட்டில் வசிக்கிறதா?”

 

ஒற்றன் சொன்னான். “ஆம் பிரபு

 

அந்தக் குடும்பத்தின் தலைவனை உடனடியாக அழைத்து வா

 

(தொடரும்)

என்.கணேசன்

     

1 comment:

  1. அலெக்சாண்டரை சாதரணமாக நினைத்ததால் புருஷோத்தமன் தோல்வியை தழுவினார்..... அது போல் தனநந்தனும் சாணக்கியரை குறைவாக மதிப்பிட்டு தவறு செய்கிறான்....

    ReplyDelete