சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 8, 2024

யோகி 31

 

ருணாச்சலம் பரசுராமனிடம் புன்னகையுடன் சொன்னார். “ஓய்வுல இருக்கேன்னு சொல்லிட்டு வெளி அப்பாயின்மெண்ட்ஸ எல்லாம் முடிஞ்ச அளவு தவிர்த்துகிட்டு இருக்கேன். ஆனா இது ரொம்ப நாளைக்கு முடியாது. பழையபடி ஒரு வாரத்துலயாவதுபிசியாயிட வேண்டியிருக்கும். ஒரு நிமிஷம் பொறு…. பார்த்து சொல்றேன்

 

அருணாச்சலம் தன் பக்கத்திலிருந்த அப்பாயின்மெண்ட்ஸ் குறிப்பேட்டைப் பார்த்து விட்டுச் சொன்னார். “நாளைக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு வாயேன்

 

 “சரி மச்சான். நாளைக்கு சாயங்காலம் பார்ப்போம்

 

அருணாச்சலம் புன்னகையுடன் செல்போனைக் கீழே வைத்தார்.

 

 

பரசுராமன் அவருடைய தாய்மாமனின் ஒரே மகன். தாய்மாமனுக்குத் திருமணமாகி பல வருடங்கள் கழித்துப் பிறந்தவர். அருணாச்சலத்தை விட இருபது வயது இளையவர். மிகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்பவர். அவர் மிக மிக சுவாரசியமானவரும் கூட. மிகவும் புத்திசாலி என்றாலும் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் முறையான கல்லூரிப் படிப்புக்குள் அவர் நுழையவில்லை. அருணாச்சலத்தின் தாய்மாமன் தன் மகனிடம் எத்தனையோ சொல்லிப் பார்த்தார். பரசுராமன் தன் தந்தையிடம் சொன்னார். “என்ன சிலபஸ் வெச்சிருக்காங்க?. உருப்படியா என்ன சொல்லித் தர்றாங்க? காலேஜ்ல படிச்சா எனக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச அறிவும் போயிடும்.”

 

அப்படின்னா என்ன பண்றதா உத்தேசம்?”

 

எத்தனையோ அறிவுப் பொக்கிஷங்க உலகத்திலே இருக்கு. அதைப் போய் கத்துக்கப் போறேன்.”

 

பரசுராமன் ஆர்வம் காட்டிய அறிவுப் பொக்கிஷங்கள் எதுவும் பெரிய வருமானம் தருவதாக இருக்கவில்லை. அவரும் வருமானத்தைப் பற்றிக் கவலைப்பட்டவராக இருக்கவில்லை. ஆனால் அவருடைய தந்தை கவலைப்பட்டார். அவர் மகனிடம் கேட்டார். “அப்போ வருமானத்துக்கு என்ன பண்றதா உத்தேசம்?”

 

எவ்வளவு எனக்குத் தேவையோ அதை நான் சம்பாதிச்சுக்குவேன். நீ அதைப் பத்திக் கவலைப்படாதே.”

 

என்ன பொழப்புடா இது? எங்களுக்கு எங்க பையன் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு ஆசை இருக்காதா?”

 

உங்க ஆசைக்கு நான் எல்லாரையும் மாதிரி சம்பாதிக்கிற எந்திரமா வாழ முடியாது. பாரு உனக்கு நல்ல பென்ஷன் கிடைக்கிற உத்தியோகம். நான் சம்பாதிச்சுக் குடுத்து நீயும், அம்மாவும் சாப்டணும்கிற நிலைமை இல்லை. உன் காசை சந்தோஷமா செலவு செய்துட்டு போய்ட்டே இரு. நீ எனக்கு சேர்த்து வைக்கணும்னே நினைக்காதே. நீங்க செலவு பண்ணியும் எதாவது மிஞ்சினா அதை விட்டுட்டு போ. மிஞ்சாட்டியும் பரவாயில்ல.”

 

அப்ப கல்யாணம்?” இதை அவன் தாய் கேட்டாள்.

 

அது எனக்கு வேண்டாம். அது கூடவே வர்ற மத்த பிரச்னையும் வேண்டாம்.”

 

வாரிசு தொடரணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதாடா?”

 

ஆமா. ஐன்ஸ்டீனாவும், ராமானுஜமாவுமா நம்ம வாரிசு இருக்கப் போகுது. அதுக பிறக்காததுல உலகத்துக்கு என்ன நஷ்டம் வந்துடப் போகுது? கஷ்டப்படப் போற ஒன்னு ரெண்டு ஜீவன் உலகத்துல குறையுதுன்னு சந்தோஷப்படும்மா

 

இது தான் பரசுராமன். இப்படி இயல்பான வாழ்க்கை வாழப் பிரியப்படாமல் அவர் பேரார்வம் காட்டியது மந்திர தந்திரங்களில். அவற்றில் அவர் அடைந்த உயரம் மிக அதிகம். அவர் அந்த உயரத்தை எட்டிய விதம் ஒரு சுவாரசியமான கதை!

 

ரசுராமன் மந்திர தந்திரங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கக் காரணமாய் இருந்த சம்பவம் சுவாரசியமானது. அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கையில் நண்பர்களுடன் மகாபலிபுரத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார். அவருடைய நண்பர்களில் தில்லு திவாகரன் என்பவன் மிகவும் குறும்புக்காரன். அவன் மிக தைரியமானவனும் கூடஅந்தத் தைரியமும் துணிச்சலும் தான் அவனுக்குதில்லுஎன்ற அடைமொழியை அவன் நண்பர்களிடம் பெற்றுத் தந்திருந்தது. பள்ளிக்கூடத்திலும் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அவன் ஆசிரியர்கள் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கக் கற்றுக் கொண்டிருந்தார்கள். கண்டித்தால் எல்லோர் முன்னிலையிலும் அவர்களை அவமானப்படுத்துவது போல் அவன் நடந்து கொள்வான். அவன் தந்தையும் ஒரு ரவுடி என்பதால் பெற்றோரை அழைத்துத் திருத்தவும் வழியில்லை என்பதால் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் கூட அவனிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்கள். அப்படிப்பட்ட தில்லு திவாரகரனும் பரசுராமனுடன் மகாபலிபுரம் வந்திருந்தான்.

 

மகாபலிபுரம் கடற்கரையில் தலையில் ஒரு கருப்புத் துணியும், இடுப்பில் ஒரு காவி வேட்டியும் கட்டிக் கொண்டு சட்டையில்லாமல் துறவி போல் தெரிந்த ஒருவர் அமர்ந்திருந்தார். கடலைப்பார்த்தபடி மணலில் அமர்ந்திருந்த அவரைப் பார்த்தவுடன் கிண்டல் செய்ய வேண்டும் என்று தில்லு திவாகரனுக்குத் தோன்றியது. அவனுக்கு அவ்வப்போது திடீரென்று யாரையாவது கலாய்க்க வேண்டும் என்று தோன்றுவது வாடிக்கை தான். அப்படி அவன் ஆரம்பித்தான் என்றால் சம்பந்தப்பட்ட நபர் அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடிப் போகும் வரை அவன் நிறுத்த மாட்டான். சிலர் அவனை சிறுவன் தானே என்று எண்ணி மிரட்டத் துணிவது உண்டு. மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை, பிறகு அவன் செய்யும் அட்டகாசத்தால் பிறகு தெரிந்து கொண்டு மெல்லப் பின்வாங்கி விடுவார்கள்.

 

துறவி போல் தெரிந்த அந்த ஆள் ஆரம்பத்தில் தில்லு திவாகரனை அலட்சியம் செய்தார்ஆனால் திவாகரன் தன் செயல்களை நிறுத்துவதாகத் தெரியவில்லை. மிரட்டுவதையும், சண்டை போடுவதையுமாவது தாங்கிக் கொள்ள முடிந்த திவாகரனுக்கு அவனை யாரும் அலட்சியம் செய்வது தாங்க முடியாத ஒன்று. வேண்டுமென்றே அவருக்குச் சற்றுத் தள்ளி நின்று கொண்டு காலால் மணலைத் தள்ளித் தெறிக்க விட்டு விளையாட ஆரம்பித்தான். நண்பர்கள்வேண்டாம்என்று தடுத்ததை அவன் வழக்கம் போல் பொருட்படுத்தவில்லை. மணல் அந்த துறவி மேல் விழ ஆரம்பித்தது.

 

அந்தத் துறவி ஒரு கணம் பக்கவாட்டில் அவனைத் திரும்பிப் பார்த்தார். அவ்வளவு தான். தூக்கிய ஒரு காலோடு தில்லு திவாகரன் சிலை போல் நின்றான். ஆரம்பத்தில் நண்பன் ஏதோ விளையாட்டாய் செய்கிறான் என்று அவன் நண்பர்கள் நினைத்தார்கள். ஆனால் சிறிது நேரமாகியும் அவன் ஒரு காலைத் தூக்கி நடராஜர் போலவே தொடர்ந்து நின்றதைப் பார்த்த பிறகு தான் ஏதோ பிரச்சினை என்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. அந்தத் துறவி இதற்குச் சம்பந்தமில்லாதவர் போல் மறுபடியும் கடலைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்    

 

பரசுராமனும், மற்ற நண்பர்களும் திவாகரன் அருகில் சென்றார்கள். அவன் சிலை போல நின்றாலும் அவன் கண்களில் பீதி தெரிய தெரிய ஆரம்பித்தது.

 

பரசுராமன் கேட்டார். “என்னடா ஆச்சு?”

 

திவாகரன் தலையையும் கூட அசைக்க முடியாமல் நேர் பார்வை பார்த்தானே ஒழிய பதில் சொல்லவில்லை. கூர்ந்து பார்த்தால் அவன் ஏதோ பேச முயற்சி செய்கிறான் என்பது அவன் உதடுகளின் அசைவிலிருந்து தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வரவில்லை. எல்லோருமாகச் சேர்ந்து அவனுடைய தூக்கிய காலைக் கீழே இறக்க முயற்சி செய்தார்கள். அவன் வலி தாங்காமல் அரற்றினானே ஒழிய கால் கீழ் இறங்கவில்லை. சற்று தொலைவில் இருந்தவர்கள் சிலர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டு வந்துஎன்ன ஆச்சு?’ என்று கேட்டுக் கொண்டு வந்தார்கள்.

 

பரசுராமன் சொன்னார். “சும்மா காலாட்டி விளையாடிகிட்டே இருந்தான். திடீர்னு இப்படியே நிக்கறான். என்ன ஆச்சுன்னே தெரியல

 

வந்தவர்களும் ஏதேதோ முயற்சி செய்தார்கள். ஆனால் திவாகரனின் காலைக் கீழே இறக்கி வைக்கவோ, அவனைப் பேச வைக்கவோ முடியவில்லை. சற்று தள்ளி அமர்ந்திருந்த துறவியோ இப்படி ஒரு சம்பவம் அருகில் நடந்து கொண்டு இருக்கிறது என்பது போலவே காட்டிக் கொள்ளவில்லை. கடலையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

பரசுராமனும் அவர் நண்பர்களும் நண்பனின் நிலைமைக்கு அவர் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டார்கள் என்றாலும், அவரை எப்படி அணுகுவது என்று தெரியாமல் விழித்தார்கள். பரசுராமன் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்று பணிவுடன் நின்று தயக்கத்துடன் சொன்னார். “மன்னிச்சுக்கோங்க சாமி.”

 

அந்தத் துறவி திரும்பி அவரைப் பார்த்தார். பரசுராமன் கைகூப்பினார்.

 

துறவி சொன்னார். “பத்து நிமிஷத்துல சரியாயிடும்"


(தொடரும்)

என்.கணேசன்






1 comment:

  1. பரசுராமனும் சைத்ரா வழக்குக்குள் நுழைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....பார்க்கலாம்

    ReplyDelete