சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 9, 2023

சாணக்கியன் 47

 

கேகய இளவரசன் தலைமையில் வலது புறப்படை தயாராவதற்கு முன்பே அலெக்ஸாண்டரின் குதிரைப் படை மின்னல் வேகத்தில் நெருங்கியது. அவர்களில் ஒரு பகுதியினர் தங்களை எதிர் கொண்ட கேகயப்படையைத் தாக்க ஆரம்பிக்க இன்னொரு பகுதியினர் வேகமாக கரையோரம் உள்ள யானைப் படையை நோக்கி ஊடுருவ ஆரம்பித்தனர். அப்படி ஊடுருவ ஆரம்பித்த படையினரிலும் பெரும்பாலோர் கேகயப் படையினரைக் கடுமையாகத் தாக்கி ஈட்டி ஏந்தியபடி வந்த தங்கள் குதிரை வீரர்கள் முன்னேற வழிவகுத்துக் கொடுத்தார்கள். என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று கேகயப்படை உணர்ந்து எச்சரிக்கையடைவதற்கு முன்பாகவே ஈட்டிகளோடு வந்த வீரர்கள் தங்கள் ஈட்டிகளைக் குறிபார்த்து யானைகள் மீது வீச ஆரம்பித்தார்கள். மளமளவென்று வீசப்பட்ட ஈட்டிகள் யானைகள் உடல்களைத் துளைக்க யானைகள் அரண்டு மிரண்டு ஓலமிட்டு அங்குமிங்கும் ஓட கேகயப் படையின் முன்னணியில் பெரும் பதற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அந்த நேரமாகப் பார்த்து எதிர்க்கரையில் இருந்த காந்தார யவனப்படைகள் விதஸ்தா நதியைக் கடக்க ஆரம்பித்தன.

 

இந்திரதத் தங்கள் பக்கம் முன்புறமும் வலது புறத்திலும் இருக்கும் குழப்பங்களைக் கவனித்த அதே நேரத்தில், எதிர்பக்கம் இருந்து ஒரேயடியாக நூற்றுக்கணக்கான படகுகள் கிளம்புவதையும் பார்த்தார். சில படகுகளில் மரப்பாலங்கள் இழுத்து வரப்படுவதையும்,  மற்ற பெரிய படகுகளில் குதிரைப்படை வீரர்களும், காலாட்படை வீரர்களும் கிளம்புவதையும் பார்த்தார். அவர்களுடைய ஆரம்பத் திட்டம் எதிரிகள் படை அவர்கள் கரையை நெருங்கக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதாக இருந்தது. ஆயுதங்களையும், கற்களையும் வீசித் தாக்கி எதிரிகளைக் காயப்படுத்தி எதிரிகள் நெருங்குவதையே பிரம்மப் பிரயத்தனமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தது இப்போது நடக்க வழியேயில்லை. அவர்களுடைய யானைகளே மிரண்டும், மதம் கொண்டும் ஓட ஆரம்பித்ததால் அவர்கள் படைவீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கடும் சிரமத்தில் இருந்ததால் எதிரிப்படையினரை வர விடாமல் தடுக்க முன்புறம் யாருமிருக்க வழியில்லை. விஷ்ணுகுப்தர் அலெக்ஸாண்டரைப் பற்றிச் சொன்னது மிகவும் சரியாகத் தானிருக்கிறது. அருமையான திட்டம் தான் வகுத்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறான்...

 

புருஷோத்தமன் விரைந்து வந்து இணையும் வரை இந்திரதத்தும், சேனாதிபதியும் தங்களால் முடிந்த வரை நிலைமையைச் சீராக்க முயன்றார்கள். ஆனால் யானைகளைச் சமாளிப்பது சாதாரணமான விஷயமாக இல்லை. எதிரிகளைப் பயமுறுத்தவும் சமாளிக்கவும், தங்களது யானைப்படை ஒன்றே போதும் என்று நினைத்திருந்த அவர்கள் தங்கள் பலமே பலவீனமாவதை வேதனையோடு பார்க்க வேண்டியிருந்தது. புருஷோத்தமன் களத்துக்கு வந்து ஓரளவு நிலைமையை ஒழுங்குபடுத்துவதற்குள் காந்தாரப் படையும், யவனப்படையும் நதியைக் கடந்து வந்து விட்டார்கள்.     

 

லெக்ஸாண்டர் தன் கணக்கின் படியே போரின் போக்கு இருப்பதை எண்ணித் திருப்தியடைந்தான். கேகயப்படை உக்கிரமாகப் போரிட்டும் எந்தப் பக்கத்திலும் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. முதல் முக்கிய பலியாக கேகய பட்டத்து இளவரசனே ஆக நேர்ந்தது. கேகய பட்டத்து இளவரசன் அலெக்ஸாண்டரைத் தாக்கவோ, வெல்லவோ முடியாவிட்டாலும் வாளெறிந்து அலெக்ஸாண்டரின் குதிரையைக் கொன்று விட்டு இறந்தான்.

 

அலெக்ஸாண்டர் தன் குதிரையை மிகவும் நேசித்து வந்திருந்ததால் குதிரையின் இழப்பு அவனை மிகவும் வேதனையடையவும், கோபமடையவும் வைத்தது. அவனைப் போலவே கேகய பட்டத்து இளவரசனின் தம்பியான இன்னொரு இளவரசனும் தன் சகோதரன் இறப்பில் கோபமடைந்து போரிட முன்னேறி வந்தான். அவனும் மிக வீரமாகப் போராடினாலும் அவனாலும் அலெக்ஸாண்டரைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவனும் ஒரு கட்டத்தில் மரணத்தைத் தழுவினான்.  கேகய இளவரசர்களைத் தொடர்ந்து அவர்கள் தலைமையில் வந்த படையினரும் அலெக்ஸாண்டரின் திறமை வாய்ந்த படையின் பராக்கிரமத்தால் பலியானார்கள்.

 

மகன்கள் இறந்தவுடன் அதன் துக்கத்திலேயே புருஷோத்தமன் தளர்வடைவார் என்று அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை. பர்வதேஸ்வரன் என்ற பெயரை வெறுமனே அவர் பெறவில்லை என்பதை அலெக்ஸாண்டர் நேரிலேயே கண்டான். மனிதர் தன் வயதுக்கு மீறிய சக்தியைத் தக்க வைத்துக் கொண்டே யானை மீதமர்ந்தபடி போராடினார்.  அவரைப் பார்த்தே அவர் படையும் தங்கள் மனவலிமையைத் திரும்பவும் பெற்றது போல் அலெக்ஸாண்டருக்குத் தோன்றியது.  கடுமையான சேதத்துக்குப் பின்னரும் அவர்கள் தீரத்துடன் போராடினார்கள்.

 

ஆம்பி குமாரன் தன்னுடைய போர்க் குணத்தின் உச்சத்தில் இருந்தான். பழைய கணக்கு ஒன்றைப் பராக்கிரமத்தோடு தீர்ப்பது வார்த்தைகளால் விளக்க முடியாத திருப்தியை அவனுக்குத் தந்தது. ஆனால் அவன் நெருங்க ஆரம்பித்ததைப் பார்த்த புருஷோத்தமனின் ஆத்திரம் அதிகரித்தது.

 

அவர் சில நாட்களுக்கு முன் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்தார். ஆம்பி குமாரன் தன் தந்தை மரணமடையாமல் வாழ்நாளை நீட்டிக் கொண்டே போனதைச் சகிக்க முடியாமல் அவன் தந்தையைக் கொன்று விட்டான் என்ற தகவல் அவருக்குக் கிடைத்திருந்தது. முந்தைய காந்தார அரசர் அவருடைய நண்பர். மிக நல்ல மனிதர். இவனைப் போன்ற நீச்சனைப் பெற்றதைத் தவிர அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த நீச்சன் தனியே வந்து போரிட்டு வெல்லும் தைரியம் இல்லாமல் அலெக்ஸாண்டர் என்ற அன்னியனோடு கைகோர்த்துக் கொண்டு வந்து போராடுகிறான். இவன் ஆரம்பித்து வைத்த செயலால் என் மகன்களையும் இழந்து விட்டேன்…. இந்த எண்ணங்கள் எழ புருஷோத்தமன் பெரும் ஆத்திரத்தோடு போர் புரிய ஆரம்பித்தார்.

 

போரின் போது ஒரு வீரன் எறிந்த வாள் புருஷோத்தமனின் வலது தோளைப் பதம் பார்த்து கீழே விழுந்தது.  வலது தோளில் பெருங்காயம் அடைந்த போதும் சிறிதும் தளராமல் புருஷோத்தமன் போரைத் தொடர்ந்தார்.

 

இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அலெக்ஸாண்டர் சசிகுப்தனிடம் சொன்னான். “கிழவன் அடங்குவது போலத் தெரியவில்லையே.”

 

சசிகுப்தன்  சொன்னான். “ஆம்பி குமாரன் மேல் இருக்கும் ஆத்திரம் அவருக்குக் கூடுதல் பலத்தை அளிப்பது போல் தெரிகிறது. மனிதர் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆம்பி குமாரன் உட்படப் பலரைக் கொன்று விட்டு இறப்பது என்று முடிவெடுத்திருக்கிறது போல் நடந்து கொள்கிறார்.”

 

அலெக்ஸாண்டருக்கு புருஷோத்தமன் மேல் ஒரு தனிமதிப்பு ஏற்பட்டது. அவன் மனிதர்களின் மேலான நல்ல தன்மைகளை மதிக்கத் தெரிந்தவன். முக்கியமாக பல சோதனைகளுக்கும், பின்னடைவுகளுக்கும் நடுவிலும் கூட ஆக்ரோஷமாகப் போரிடும் அவர் வீரத்தை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை….

 

ஆம்பி குமாரனுக்கு உதவ செல்யூகஸும் சேர்ந்து கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் சசிகுப்தனிடம் சொன்னான். “இந்த மனிதன் இறப்பதை விட உயிரோடு இருப்பது நமக்கு அனுகூலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்…”

 

சசிகுப்தன் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான். அவனும் ஆம்பி குமாரனை விட அனைத்து விதங்களிலும் புருஷோத்தமன் தேவலை என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அலெக்ஸாண்டர் அவர்கள் இருவர் பற்றியும் வைத்து இருக்கிற அபிப்பிராயங்களை முழுமையாக அறியாமல் அவன் எதையும் வாய் விட்டுச் சொல்ல விரும்பவில்லை.

 

அலெக்ஸாண்டர் சொன்னான். “புருஷோத்தமனிடம் யாராவது போய்ப் பேசினால் நல்லது என்று நினைக்கிறேன். புருஷோத்தமனுக்குச் சிறிது அறிவு இருந்தாலும் அவரால் கண்டிப்பாக நம்மை இனி வெற்றி காண முடியாது என்பது புரிந்திருக்கும். அதனால் இனியும் அதிக உயிர்ப்பலி தராமல் சரணடைவது தான் புத்திசாலித்தனம் என்பதை யாராவது அவருக்குப் புரிய வைத்தால் நல்லது.”

 

சசிகுப்தன் சொன்னான். “சக்கரவர்த்தி. அந்தக் கிழவருக்கு இருக்கும் ஆத்திரத்தில் நம் ஆட்கள் யார் போயும் அவருடன் பேச முடியாது. நம்மை அவருடையை எதிரிகளாக அவர் நினைப்பதால் நாம் நெருங்கினாலே அவர் தாக்க ஆரம்பித்து விடுவார். மரணத்திற்கும் துணிந்து விட்ட மனிதனை மேலும் அச்சுறுத்தவும் வழியில்லை. அதனால் அவர் நண்பர் என்று நினைக்கும் நபர் யாராவது அவரிடம் போய்ப் பேசினால் அந்த நபர் சொல்வதை அவர் காது கொடுத்தாவது கேட்கும் வாய்ப்பிருக்கிறது….”

 

அலெக்ஸாண்டர் கேட்டான். “அவர் நண்பன் என்று நினைக்கும் ஆட்கள் நம்முடன் யாராவது இருக்கிறார்களா?” சசிகுப்தன் அவனறிந்த மனிதர்களைப் பற்றி எப்போதுமே கூடுதல் தகவல்கள் வைத்திருப்பவன். ஒரு காலத்தில் அவன் புருஷோத்தமனிடம் நன்றாகப் பழகியவன் என்றும் அலெக்ஸாண்டர் கேள்விப்பட்டிருந்ததால் யாரோ ஒருவரை மனதில் வைத்தே தான் சசிகுப்தன் இப்படிச் சொல்கிறான் என்று அவனுக்குத் தோன்றியது.

 

அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது போலவே சசிகுப்தன் சொன்னான். “ஒருவர் இருக்கிறார்…”

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. அலெக்சாண்டரை புருஷோத்தமன் துரத்தியடிப்பார் என்று எதிர்பாரத்தேன்...

    ReplyDelete