கி.மு.336 ல் ஒரு நாள் மதியம் ...
பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மகத நாட்டின் தலைநகரான
பாடலிபுத்திரத்திற்குள் வந்து கொண்டிருக்கும் அறிஞர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும்
தன் குதிரை மேல் அமர்ந்தபடி நகரக் காவல் அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள்
அனைவரும் நாளை நடக்கவிருக்கும் அறிஞர்களின் சிறப்புக் கூட்ட நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள். ஆண்டு தோறும்
பாடலிபுத்திரத்தின் அரசவையில் நடக்கும் அறிஞர்களின் சிறப்புக் கூட்ட நிகழ்ச்சியில்
தங்கள் புலமைகளை வெளிப்படுத்தி பரிசுகளும், கௌரவமும்
பெற வருபவர்கள் அதிகம். தர்க்கம், தத்துவம், தர்மம்
என்று பல பிரிவுகளில் அரசவையில் அறிஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பங்கு பெறுபவர்கள்
மட்டுமல்லாமல் அதைக் கேட்டு மகிழவும், தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும்
வருகின்றவர்கள் எண்ணிக்கையும் கூட எப்போதும்
அதிகமாகவே இருக்கும்.
நேற்றிலிருந்தே வர ஆரம்பித்து விட்ட
இவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு
நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமிருக்கும் என்று நகரக் காவல் அதிகாரி மனம் கணக்கிட்டது. திடீரென்று
அவன் கண்கள் ஒரு அந்தணர் மேல் நிலைத்தது. தோற்றத்தில் அவர்
மற்றவர்களைக் காட்டிலும் பெரிதாக வித்தியாசப்படா விட்டாலும் தோரணையில் அவர் நிறையவே
வித்தியாசமாய்த் தெரிந்தார். அவன் பார்வையைக்
கூர்மைப்படுத்தினான். வித்தியாசப்படுத்தியது அவரிடம் தெரிந்த நிதானமும், அமைதியும்
தான் என்று தோன்றியது. பிரளயமே வந்தாலும் இந்த மனிதர் அந்த நிதானத்தையும், அமைதியையும்
இழக்க மாட்டார் என்று அவனுக்குத் தோன்றியது ஏன் என்று அவனுக்கே விளங்கவில்லை. அவரை அவன் இதற்கு முன் பாடலிபுத்திரத்தில்
பார்த்த நினைவில்லை. நகருக்கு அவர் புதியவர் போலிருக்கிறது. நாளைய நிகழ்ச்சிகளில்
பங்கெடுக்க வந்திருக்கிறாரா, பார்வையாளராக வந்திருக்கிறாரா என்று
தெரியவில்லை….
நகரக் காவல் அதிகாரியின் சிந்தனைகளில்
இடம் பிடித்த அந்த அந்தணர் பங்கேற்பவராகவும் வரவில்லை, பார்வையாளராகவும்
வரவில்லை என்பதை அவன் அறிய மாட்டான். நாளை நடக்கவிருக்கும்
அந்தச் சிறப்புக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றிலும் அவரால் தனித்தனியாக
மற்றவர்களுக்குப் பாடம் நடத்த முடியும். அது குறித்து மற்ற
அறிஞர்கள் கருத்தையெல்லாம் பட்டியல் போடுவது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றிலும் அவற்றுக்கும்
மேலான அவருடைய தனிப்பட்ட கருத்துகளையும் ஆணித்தரமாக அவரால் சொல்ல முடியும். நாற்பது
வயதையே அவர் எட்டியிருந்தாலும் அவரிடம் போட்டி போட்டு வெல்லுமளவு திறமை வாய்ந்த எந்த
மூதறிஞரும் கூட பாரதத்தில் இல்லை. தட்சசீலத்தின் புகழ்பெற்ற அந்த ஆசிரியரைத் தோற்றத்தால் அடையாளம்
கண்டறிய முடியாத அறிஞர்களும் கூட ”ஆச்சாரியர் விஷ்ணு குப்தர்” என்ற பெயரை
அறியாதவர்களாக இருக்க மாட்டார்கள்.
அந்த நகரக் காவல் அதிகாரி அறியாத இன்னொரு உண்மை இருக்கிறது. ஆச்சாரியர் என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் விஷ்ணு குப்தர் பாடலிபுத்திரத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர். சிறுவனாக இருந்த போது இந்த நகரத் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தவர். இந்த நகரில் வாழ்ந்த நாட்களின் எத்தனையோ நினைவுகள் இப்போதும் அவர் உள்ளத்தில் பசுமையாக இருக்கின்றன. அவற்றில் நல்ல நினைவுகள் குறைவு, வேதனையான நினைவுகள் அதிகம்... நகரக் காவல் அதிகாரி பார்த்த அந்த அமைதிக்குப் பின்னால் எரிமலைகளே அதிகம் உண்டு. ஆனால் அவன் காரணம் தெரியாமல் யூகித்தது போல் எதுவும் அவர் கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டதோ வெடித்ததோ கிடையாது.
பயணியர்களுக்கான சத்திரத்தில் தன் உடைமைகளை
வைத்து விட்டு அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய விஷ்ணுகுப்தர் நாளைய நிகழ்ச்சிக்காக அங்கே
வந்து தங்கியிருக்கும் சிலரைப் பார்த்தார். நல்ல வேளையாக
அவர்கள் யாரும் அவரைத் தெரிந்தவர்கள் அல்ல. அவர்களில்
சிலர் தங்கள் சுகதுக்கங்களை ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் தாங்கள்
தேர்ச்சி பெற்ற விஷயங்களைப் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நாளைய பங்கேற்புக்கு
இன்று அவர்கள் இந்த வகையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. கண்களை
மூடிக் கொண்டு அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு மறுபடியும் அவர் வெளியே
கிளம்பினார்.
பாடலிபுத்திரம் நிறைய மாறியிருந்தது. அவர் விட்டுப்
போன போதிருந்த பாடலிபுத்திரம் அல்ல இது. வீடுகள், வீதிகள், மனிதர்கள், கடைவீதியில்
விற்றுக் கொண்டிருந்த பொருட்கள் என எல்லாவற்றிலும் சிறிய சிறிய மாற்றங்களை அவர் பார்க்க
முடிந்தது. நடந்து கொண்டே வந்தவர் ஓரிடத்தில் இருந்த பெரிய அரசமரத்தைப்
பார்த்தவுடன் அப்படியே நின்றார். இந்த அரசமரம் மாறவில்லை... அவர் சிறுவனாக
இருந்த போது இந்த அரசமரத்தைச் சுற்றி நிறைய விளையாடியிருக்கிறார். அவரும்
அவர் நண்பர்களும் ஒளிந்து கொள்ளும் இடமாக இந்த மரம் இருந்திருக்கிறது. அவர் தந்தை
சாணக் சொற்பொழிவாற்றும் இடமாக இந்த மரம் இருந்திருக்கிறது.
தந்தையின் நினைவு வந்தவுடன் அவர் மனம்
கனத்தது. சாணக் சிறந்த வேத விற்பன்னர். பேச ஆரம்பித்தால்
மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகளும், சுலோகங்களும் அவர்
வாயிலிருந்து வரும். உண்மை என்று நினைப்பதை எந்த அச்சமும், தயக்கமும்
இல்லாமல் அவர் சொல்வார். நகர மக்கள் வசீகரப்பட்டவர்களாக அவர் சொல்வதைக் கேட்டபடி நின்று
கொண்டும், அமர்ந்து கொண்டுமிருப்பார்கள்.... அவர் தந்தையை
கடைசியாக அவர் பார்த்ததும் இந்த மரத்தடியில் தான். இங்கிருந்து
தான் அவர் தந்தையை வீரர்கள் கைது செய்து கொண்டு போனார்கள். ஒரு மனிதனுக்கு
விஷய ஞானமும், தைரியமும் மட்டுமே போதுமானதல்ல என்று விஷ்ணு என்ற சிறுவன்
பாடம் கற்றது இந்த மரத்தடியில் தான்.
உண்மைகளை உரக்கச் சொன்ன அந்த அறிஞர் என்ன ஆனார் என்பதைப் பற்றி அதற்குப் பின் நகர மக்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. விஷ்ணுவும், அவன் தாயும் மட்டுமே கவலைப்பட்டார்கள். விஷயம் தெரிந்தவர்களாகத் தெரிந்தவர்களிடம் இருவரும் துக்கத்துடன் விசாரித்தார்கள். அவர்களும் தெரியாதென்று கையை விரித்தவுடன் சில நாட்களில் விஷ்ணுவின் தாய் துக்கத்தினாலும், பட்டினியாலும் இறந்து போனாள். விஷ்ணு தனியனானான்...
இளமைக் காலத்தை நினைவுபடுத்திய அந்த
அரசமரத்தை விஷ்ணு குப்தர் மெல்லத் தொட்டார். எல்லாவற்றிற்கும்
மௌனசாட்சியாக நின்றிருந்த அந்த மரத்தடியில் இப்போதும் யாராவது சொற்பொழிவாற்றுகிறார்களா, அப்படி
சொற்பொழிவாற்றினால் கேட்க யாராவது கூடுவார்களா என்று யோசித்தபடியே விஷ்ணு குப்தர் அங்கிருந்து
நகர்ந்தார்.
அவர் மனம் கடந்த கால நினைவுகளத் தொடர்ந்தது. தாயையும்
இழந்த பின் விஷ்ணுவை இந்தப் பாடலிபுத்திரம் ஆதரிக்கவில்லை. “பவதி பிக்ஷாம் தேஹி” என்று பிக்ஷை கேட்டு
வீடு வீடாகச் சென்ற நாட்களில் அவனுக்கு பிக்ஷை கிடைக்கவில்லை. சிலர் மௌனமாகக்
கதவைச் சாத்தினார்கள். சிலர் ராஜத்துரோகியின் மகனுக்குப் பிக்ஷை போட்டால்
அதுவும் ராஜத் துரோகமாக நினைக்கப்படும் அபாயம் இருப்பதாக அவன் காதுபடப் பேசினார்கள். விஷ்ணு
பட்டினி கிடந்த நாட்கள் அதிகம்.
அந்த அரசமரத்தைப் போலவே மாறாமல் இன்றும் இருப்பவன் இந்த மகத தேசத்து அரசன் தனநந்தன். அவனுடைய அநியாய வரிகள், அராஜகப்போக்கு, அகங்காரம், குடிமக்களின் நன்மை குறித்த அலட்சியம் இதெல்லாம் குறித்து தான் சாணக் அக்காலத்தில் போர்க்குரல் எழுப்பியிருந்தார். யாருடைய நலத்தில் அக்கறை கொண்டு அவர் குரல் எழுப்பினாரோ அந்த மக்கள் அவர் என்ன ஆனார் என்று கவலைப்படவில்லை; அவர் மகன் மீது கருணை காட்டவில்லை. அவனுக்குக் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியரும் ஒரு நாள் அவனுக்குக் கற்றுத் தருவதில் தயக்கம் காட்டவே இனி அங்கு வாழ்வதில் அர்த்தமில்லை என்றுணர்ந்து அன்றே விஷ்ணு பாடலிபுத்திரத்திலிருந்து ஓடிப்போனான். நீண்ட பயணத்திற்குப் பின் அவன் அடைந்த தட்சசீலம் அவனுக்கு அடைக்கலம் தந்தது. பிரசித்தி பெற்ற அங்குள்ள கல்விக்கூடம் அவனுக்குக் கல்வியைத் தந்தது. அவனுடைய பேரறிவை மெச்சி பின்பு அவனை அங்கு ஆசிரியனுமாக்கிக் கொண்டது....
விஷ்ணுகுப்தர் தன்னை யாரோ பின் தொடர்வது
போல் உணர்ந்தார். திரும்பி அவர் பார்க்கா விட்டாலும் கூட அவர் எங்காவது நின்றால்
பின் தொடரும் நபரும் நிற்பதையும், அவர் நடக்க ஆரம்பித்தால் நடப்பதையும் அவரால் உணர முடிந்தது. யாரது?
(தொடரும்)
என்.கணேசன்
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
Grand opening sir. Here also you ended the episode with suspense. HA ha haa!
ReplyDeleteஇந்த சஸ்பென்ஸ் பிரச்சினை தாங்காம தான் இப்போதெல்லாம் உங்க நாவல் வெளியானவுடனேயே விலைக்கு வாங்கி விடுகிறேன். இப்போது முதல் பாகம் முடித்து விட்டேன். சூப்பராய் போகுது. அந்தக் காலத்துக்கே போய் அந்த ஆட்களோட மனநிலையோட எல்லாத்தையும் நேர்ல பாக்கற ஃபீல் ஆகுது சார். வாழ்க வளமுடன்.
Deleteஇப்போது இருப்பது போல நிலைமை அந்த காலத்திலும் இருந்திருக்கிறது போல...
ReplyDeleteதொடரின் ஆரம்பமே சுவாரஸ்யமாக உள்ளது... நன்றி ஐயா 🙏
Super
ReplyDelete