சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 29, 2021

யாரோ ஒருவன்? 61


ரேந்திரனுக்கு பரந்தாமனும், அலமேலும் சொன்னதெல்லாமே விசித்திரமாக இருந்தது. நாகராஜ் என்ற பெயரில் வந்து போனவன் செயல் எதுவும் இயல்பாயில்லை. ஏதோ ஒரு மர்மம் அவனைச் சூழ்ந்திருக்கிறது...

நரேந்திரன் கேட்டான். “அவன் உங்க மகன் சூட்கேஸில் இருந்த எதாவது பொருளை எடுத்திருக்க வாய்ப்பிருக்கா?”

பரந்தாமன் உறுதியாகச் சொன்னார். “இல்லை சார். நான் பார்த்துட்டே இருந்தேனே. அவன் கவனமா எதையோ தேடினதையும் பார்த்தேன். அவன் தேடினது கிடைக்காமல் ஏதோ யோசனையோட தான் அவன் இறங்கினான்... இறங்கறப்ப வருத்தத்தோட சொன்னான். “எதுவுமே நம்ம கிட்ட எத்தனை காலம் இருக்கணுமோ அத்தனை காலம் தான் இருக்கும். அதுக்கு மேல ஒரு வினாடி கூட எதையும் நாம வெச்சுக்க முடியாது…”   

நரேந்திரன் யோசித்தான். சூட்கேஸில் அவன் தேடியது கிடைக்கவில்லை என்றான பிறகு நாகராஜ் கிளம்பியிருக்கிறான். அலமேலு வற்புறுத்தியதால் சாப்பிட்டு விட்டுப் போயிருக்கிறான். அவன் சாப்பிடும் போது அவசரம் காட்டவில்லை. அரைகுறையாய் சாப்பிட்டுப் போகவில்லை. திருப்தியாகச் சாப்பிட்டுத் தான் போயிருக்கிறான்... ஒரு பொருளை எடுக்கும் நோக்கத்தில் மட்டுமே வந்திருப்பவன் சாவகாசமாகச் சாப்பிட்டுப் போயிருக்க மாட்டான். போய் இத்தனை பெரிய தொகை அனுப்பியும் இருக்க மாட்டான்...

பரந்தாமன் சொன்னார். “உங்க மாதிரியே தான் என் நண்பர் நாதமுனியும் நாங்க பார்த்தது பாம்பு தானான்னும், நாகராஜ் எதாவது அந்தப் பெட்டில இருந்து எடுத்திருப்பானோன்னும் சந்தேகப்பட்டார். அவர் அவன் போய் கொஞ்ச நேரத்துல வந்திருந்தார். அவரிடமும் உங்க கிட்ட சொன்னதையே தான் சொன்னோம்...”

நரேந்திரன் நாதமுனியைப் பற்றி விசாரித்தான். அவரைப் பற்றிய விவரங்களை பரந்தாமன் சொன்னார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி டாக்டரேட் பட்டம் வாங்கியவர் அவர் என்ற தகவலை சுவாரசியத்துடன் நரேந்திரன் கேட்டுக் கொண்டான். எதற்குமிருக்கட்டும் என்று அவர் விலாசத்தை அவரிடமிருந்து வாங்கிக் கொண்ட நரேந்திரன் பரந்தாமனின் வங்கிக் கணக்கு விவரங்களையும் குறித்துக் கொண்டான். அதன் மூலம் அந்தப் பணம் அனுப்பியிருக்கும் ஆளின் விவரங்களைப் பெறுவது சுலபம் தான். நரேந்திரன் கிளம்பத் தயாரான போது அலமேலு கேட்டாள். “என்ன சாப்பிடறீங்க? காபி, டீ...?”

அவள் கேட்டது சம்பிரதாயமான விசாரிப்பாக இருக்கவில்லை. ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போனால் சந்தோஷம் என்று நினைக்கிற அன்பின் விசாரிப்பாகவே இருந்ததால் நரேந்திரன் சொன்னான். “காபி கொடுங்கம்மா. அரை தம்ளர் போதும்...”

அவள் அன்பாகத் தலையசைத்து விட்டு சமையலறைக்குப் போனது அவனுக்குத் தாயை நினைவூட்டியது. வாழ்க்கையில் நிறைய சோதிக்கப்பட்ட பின்பும் மற்றவர்களிடம் அன்பு குறையாமல் இருப்பதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அது இந்த முதிய தம்பதியருக்கு இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டான்.

அவள் காபி கலக்கப் போன பிறகு பரந்தாமன் அவனிடம் கேட்டார். “ஏன் இத்தனை வருஷம் கழிச்சு இந்த விபத்து பத்தி விசாரிக்க வந்திருக்கீங்க?”

நரேந்திரன் சொன்னான். “அந்த விபத்து திட்டமிட்டு நடந்திருக்கலாம்கிற சந்தேகம் இருக்கு... வேற யாரையோ இலக்கு வச்சி வெச்ச குண்டுல உங்க மகன் பலியாய் இருக்கலாம்கிற சந்தேகமும் இருக்கறதால தான் இந்த விசாரணை...”

பரந்தாமன் சோகமாகத் தலையசைத்தார். அந்தத் தந்தையின் துக்கத்தைப் பார்க்க நரேந்திரனுக்குக் கஷ்டமாக இருந்தது. ஐந்து நிமிடங்களில் அலமேலு தந்த அருமையான காபியை ரசித்துக் குடித்து விட்டு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பரந்தாமனின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பியவனைக் கண்டுபிடிக்க நரேந்திரனுக்கு அதிக நேரமாகவில்லை. ஒரு மணி நேரத்தில் பணம் அனுப்பியவன் வங்கி விவரங்கள், பெயர் விலாசம் எல்லாம் தெரிய வந்தன. நரேந்திரன் சந்தேகப்பட்டது போல அனுப்பியவன் பெயர் வேறாக இருக்கவில்லை. நாகராஜ் என்பதாகத் தான் இருந்தது. விலாசம் தேவ்நாத்பூர் என்ற வட இந்தியக் கிராமத்தில் இருந்த சுவாமி முக்தானந்தா ஆசிரம விலாசமாக இருந்தது. அந்த ஆசிரமம் பல இடங்களில் பல தர்மஸ்தாபனங்களை நடத்திவரும் ஆசிரமம்... நரேந்திரன் நாகராஜ் குறித்த முழுவிவரங்களையும் உடனடியாக அனுப்பி வைக்கும்படி தன் ஆளிடம் கேட்டுக் கொண்டான்.


னார்தன் த்ரிவேதிக்கு அஜீம் அகமது தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. அவரிடமிருந்து அவர் நரேந்திரனுடன் பேசிய பேச்சின் ஒலிநாடாவை அஜீம் அகமதின் ஆள் வாங்கிக் கொண்டு போய் இரண்டு நாட்கள் ஆகி விட்டன. அவன் என்ன நினைக்கிறான் என்றோ, என்ன திட்டமிடுகிறான் என்றோ தெரிவிக்கும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் அவன் கவனத்திற்கு வந்து விட்ட ஒன்றைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டியதில்லை என்பது அவர் அனுபவம். இருந்தாலும் கூட அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை....

அதைக் கவனித்த அவருடைய மேனேஜர் சொன்னான். “ஐயா எதற்கும் நீங்கள் காளிங்க சுவாமியைப் போய் பார்க்கலாமே. அவர் சஞ்சய் எங்கேன்னு சொல்லிடுவாரே...”

இத்தனை நாட்கள் காளிங்க சுவாமியை எப்படி மறந்தோம் என்று ஜனார்தன் த்ரிவேதி தன்னையே கடிந்து கொண்டார். காளிங்க சுவாமி ரிஷிகேசத்திலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஒரு காட்டு காளி கோவிலில் வசிக்கும் ஒரு மந்திரவாதி. காளிங்க சுவாமி சாதாரணமாக யாரும் பார்க்க முடிந்த நபரல்ல. மிக வித்தியாசமான அமானுஷ்யமான மனிதர் அவர்.  பாம்புகளுக்கு மத்தியில் வாழ்பவர் அவர். அவர் வசிக்கும் காட்டு காளி கோயிலில் பலவிதமான பாம்புகள் எப்போதும் ஊர்ந்து கொண்டிருக்கும்.  காளி சிலை முன் இருக்கும் ஒரு எண்ணெய் விளக்கின் ஒளி தவிர வேறெந்த ஒளியும் அந்தக் கோயிலுக்குள் இருக்காது. அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்தக் கோயில் இருப்பதால் பகல் நேரங்களிலும் வெளியே லேசாய் வெளிச்சம் தெரியுமே தவிர கோயிலின் உள்ளே எப்போதும் இருட்டு தான் இருக்கும். அவர் நல்ல வெளிச்சமான இடங்களுக்குச் சென்று யாரும் பார்த்ததில்லை. அதே போல கருப்பு உடை தவிர வேறு நிற உடைகள் அவர் அணிந்தும் யாரும் பார்த்தது கிடையாது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவு நேரத்தில் மட்டும் தான் அவர் அந்தக் காட்டுக் கோயிலிலிருந்து வெளியே வந்து ரிஷிகேசத்திற்குச் செல்வார்.  கங்கையில் குளித்து கரையில் சில மந்திரச் சடங்குகளை நள்ளிரவின் இருட்டிலேயே செய்து விட்டு விடிவதற்கு முன் தன்னுடைய இருப்பிடமான காளி கோயிலுக்குத் திரும்பி விடுவார். கோயிலில் அவருடன் இரண்டு சீடர்கள் மட்டுமிருப்பார்கள்.  

வனத்துறை சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட காலத்தில் அவரை அந்தக் காட்டுப் பகுதியிலிருந்து வெளியேற்ற வனத்துறை அதிகாரிகள் முயன்றார்கள். ஆனால் அவர்கள் அந்த உத்தேசத்தோடு கோயிலை நெருங்க முடியவில்லை. பல நூறு பாம்புகள் கோயிலைச் சுற்றிப் படைவகுத்து நின்றன. ஜனார்தன் த்ரிவேதி போன்ற பல அரசியல் தலைவர்கள் காளிங்க சுவாமியின் பக்தர்களாக இருந்ததால் அதிகாரிகள் அதற்கும் மேலான தீவிர முயற்சிகள் பின்பு எடுக்கப்படவில்லை.

காளிங்க சுவாமி தன் பக்தர்களைச் சந்திப்பது அமாவாசை நள்ளிரவில் கங்கைக் கரையில் அவர் மந்திரச் சடங்குகளை முடித்த பின்னர் தான். அதிகபட்சமாக அதிகாலை நான்கு வரை தான் அவர் பக்தர்களைச் சந்திப்பார். குறி கேட்கும் பக்தர்களிடம் எதையும் உள்ளது உள்ளபடி தயவு தாட்சணியம் பார்க்காமல் சொல்லி விடுவார். மற்ற நாட்களில் யாரும் அவரை அந்தக் காட்டுக் கோயிலுக்குச் சென்று சந்திக்க முடியாது. முயன்றால் பாம்புகள் தான் அவர்களைக் கோயிலுக்கு வெளியே வரவேற்கும். முயன்ற பலரும் அப்படிப் பாம்புகளைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓடிவந்திருப்பதால் இப்போதெல்லாம் யாரும் அப்படி மற்ற நாட்களில் சந்திக்க முயல்வதில்லை.

காளிங்க சுவாமி ஜனார்தன் த்ரிவேதி பதவி அதிகார உச்சங்களுக்குச் செல்லும் முன்பே அதை முன்கூட்டியே கணித்துச் சொன்னவர். பதவியும் அதிகாரமும் பறிபோகும் என்பதையும் ஒன்றரை வருடத்துக்கு முன்பே கணித்துச் சொன்னவர்அதிகார உச்சத்தில் இருக்கும் போது ஒன்றரை வருடத்தில் அதிலிருந்து இறங்க வேண்டியிருக்கும் என்பதை சகித்துக் கொள்வது யாருக்கும் சுலபமல்லஜனார்தன் த்ரிவேதிக்கும் அந்தச் செய்தி காய்ச்சிய ஈயமாகக் காதில் விழுந்தது


“அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஜனார்தன் த்ரிவேதி அப்போது கேட்டார். எத்தனை வேண்டுமானாலும் அவரால் செலவு செய்து பரிகார பூஜைகள் செய்ய முடியும்.

“நீ எது செய்தாலும் பிரயோஜனமில்லை” என்று காளிங்க சுவாமி முடிவாகச் சொல்லி விட்டார்.

ஆனாலும் மனம் தளராத ஜனார்தன் த்ரிவேதி எத்தனையோ ஜோதிடர்கள், சுவாமிஜிகளைச் சந்தித்து அவர்கள் சொன்ன பரிகார பூஜைகள் எல்லாம் செய்து பார்த்தார். காளிங்க சுவாமி சொன்னது போல் எதுவும் பலனளிக்கவில்லை. அரசியலிலும், அதிகாரத்திலும் இறங்குமுகத்தை அவர் பார்க்க நேர்ந்தது. அதன்பிறகு அவர் காளிங்க சுவாமியைச் சந்திக்கவில்லை.


(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. Couldn't guess the events. Very interesting.

    ReplyDelete
  2. எதுவுமே நம்ம கிட்ட எத்தனை காலம் இருக்கணுமோ அத்தனை காலம் தான் இருக்கும். அதுக்கு மேல ஒரு வினாடி கூட எதையும் நாம வெச்சுக்க முடியாது…”

    Wow. So true. Thank you.

    ReplyDelete
  3. காளிங்க சுவாமி பின்னணியே கேட்கவே பயங்கரமாக இருக்கிறது... ஆனால், அவர் நல்லவராக தான் இருப்பார் என்று நினைக்கிறேன்....

    ReplyDelete