சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 4, 2021

இல்லுமினாட்டி 127



வாங் வேக்கு ஒவ்வொரு நொடியும் ஆமை வேகத்தில் ஊர்வதாகத் தோன்றியது. கர்னீலியஸ் வீட்டிலிருந்து எத்தனை மணிக்குக் கிளம்பியிருப்பார், அவர் வீட்டிலிருந்து வங்கி எவ்வளவு தூரம், அவர் காரில் போகக்கூடிய வேகம் என்னவாக இருக்கும், எத்தனை மணிக்குச் சேர்வார், எத்தனை நேரம் அங்கிருப்பார், அங்கிருந்து எத்தனை மணிக்குக் கிளம்புவார், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவார் என்றெல்லாம் கணக்குப் போட்டு அவர் போன் செய்யக்கூடிய நேரத்தையும் வாங் வே கணித்திருந்தார். அந்த நேரம் சீக்கிரமாய் வருவதாயில்லை... அது வந்த பின்னரும் போன்கால் வரவில்லை.  

பொறுமை இழந்து ஏன் என்று மனம் பல காரணங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அலைபேசி இசைத்தது. வாங் வே வேகமாக எடுத்துப் பேசினார்.  “ஹலோ”

பேசியது கர்னீலியஸ் அல்ல. எர்னெஸ்டோவின் உதவியாளர். “வாஷிங்டனில் தலைமைக்குழுவில் ஏதாவது கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால் அதைச் சுருக்கமாக குறித்துக் கொண்டு வரும் படி தலைவர் கூறியுள்ளார்.  பொதுக் கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தலைமைக்குழுக் கூட்டம் அங்கே நடத்தலாம் என்று அபிப்பிராயப்படுகிறார்.

“சரி” என்று ஏமாற்றத்தோடு அலைபேசியைக் கீழே வைத்த வாங் வேக்கு எரிச்சலாக இருந்தது. தலைமைக்குழு உறுப்பினருக்கு தரப்படும் மரியாதை இவ்வளவு தான். வெளியுலகிற்கு இல்லுமினாட்டி தலைமைக்குழு உறுப்பினர் பதவி கண்களில் நட்சத்திரம் மின்ன வைக்கும் ஒரு அதிர்ஷ்டம். ஆனால் தலைவருக்கு மட்டும் அந்தப் பதவி துரும்பு மாதிரி தான். பெயரளவில் பதிவு செய்ய இந்தக் கூட்டத்தை கிழவர் பயன்படுத்திக் கொள்கிறார்... சுருக்கமாய் குறிப்புகள் எழுதிக் கொண்டு வர வேண்டுமாம். அவருக்குத் தெரிந்து கிழவர் ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் ஒரு விஷயத்தைச் சொல்ல எடுத்துக் கொண்டால் அப்படியே பேச்சை வெட்டி விடுவார். போனில் பேசுவதானால் மூன்று நிமிடத்திற்கு மேல் கேட்கும் பொறுமை அவருக்கு இருக்காது. இப்போது மணிக்கணக்காக எதையோ க்ரிஷ், இம்மானுவலுடன் கலந்தாலோசிக்கிறார் என்று செய்தி கிடைத்தது வாங் வேக்கு கோபத்தை எழுப்பியது. இப்போது மட்டும் எப்படி கிழவருக்கு பொறுமை இருக்கிறது.... சீக்கிரம் அவர் செத்தொழிந்தால் பரவாயில்லை... விஸ்வம் எப்போது தலைவரை முடித்து வைப்பான் என்று தெரியவில்லை. முன்பே முடித்து விட்டால் இந்த வாஷிங்டன் கூட்டம் இரங்கல் கூட்டமாய்ப் போய் விடும். ஆனந்தக் கண்ணீர் வடிக்க அருமையான வாய்ப்பு.... சரித்திரம் திரும்ப எழுதப்படும். அதில் அவருக்கும் ஒரு சிறப்புப் பங்கு இருக்கும்.

அலைபேசி இசைத்தது. இந்த முறை பேசியது கர்னீலியஸ் தான். எந்தப் பிரச்னையும் இல்லாமல் போய் வர முடிந்ததை அவர் குதூகலத்துடன் சொன்னார்.  வாங் வே ”விஷயத்தைச் சொல்லய்யா” என்று மனதிற்குள் கூவினார். சாகப் போகிறது இந்தக் கிழவனுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது. முடிந்த வரை பேசி விட வேண்டும் என்று துடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டார்.

ஒரு இடைவெளி கிடைத்ததும் வாங் வே “சந்தோஷம். நீங்கள் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிவித்தால் நான் தலைவரிடம் தெரிவித்து விடுவேன். அவர் தகவல் வந்தவுடன் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார்.” என்றார். கர்னீலியஸ் அதற்கு மேல் கதை அளக்காமல் அந்த இரகசியச் சுவடியில் எழுதியிருப்பது என்ன என்பதை வாசித்தார். வாங் வே பரபரப்புடன் அவர் சொன்னதை எழுதிக் கொண்டார்.  

முழுவதும் எழுதிக் கொண்ட பிறகு வாங் வே மிக மகிழ்ச்சியடைந்தார். அந்த இரகசிய ஆவணத்தில் இருப்பது விஸ்வத்துக்குச் சாதகமாகத் தான் இருக்கிறது... அதில் எழுதியிருப்பதைப் பார்த்தால் விஸ்வமும் அவன் கூட்டாளியும் சேர்ந்து தான் எல்லாம் தீர்மானிப்பார்கள் போல் தெரிகிறது. நீண்ட நாள் கழித்து அவர் மனம் உற்சாகத்தின் உச்சிக்குப் போனது. கர்னீலியஸுக்கு நன்றி தெரிவித்து விட்டு உடனடியாக அவர் விஸ்வத்துக்குப் போன் செய்தார்.

அவருடைய உற்சாகம் விஸ்வத்தையும் தொற்றிக் கொண்டது. அவன் அந்த முழுச் செய்தியையும் படித்துப் பார்த்தான். முதல் முறையாக விதி அவன் வாழ்க்கையில் முக்கியமான நேரத்தில் சதி செய்யாமல் நன்மையைச் செய்ய நினைத்திருக்கிறது போலிருக்கிறது. முன்பெல்லாம் விதியை அவன் நம்புபவன் அல்ல. க்ரிஷ் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டு அதை ஓரளவு நம்ப வைத்து விட்டான். ஆனால் அதையும் முழு அளவுக்கு நம்ப அவன் அறிவு அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் அவனால் கட்டுக்கதை என்று நிராகரிக்கவும் முடியவில்லை. அவன் வேறு உடல் சேர்வது, அவனுக்கு ஓடி ஒளிய உதவி கிடைப்பது, இந்தத் தொழும் இடம் வந்து சேர்ந்தது எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது. அந்தக் கவிதை அவனுக்கு வழிகாட்டும் என்பது கூடச் சரியாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதனால் மற்றதெல்லாம் கூடச் சரியாக இருக்கும். அவனுக்கு ஒரு வாக்கியம் மட்டும் புரியவில்லை. “பெருவிழியில் பெரும் சக்தி பெறுவான்.” இதற்கு அவனுக்குப் பொருள் விளங்கவில்லை. இது எதைக் குறிப்பிடுகிறது என்று யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன் தமிழகச் செய்திகளைப் பார்க்க வேண்டும் என்ற நினைவு வந்தது.

அலைபேசியில் தமிழகச் செய்திகளைப் பார்த்தான். ‘ப்ரேக்கிங் ந்யூஸ்” என்று உதய் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி  ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது...

“தமிழக முதலமைச்சரின் மூத்த மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.உதய் திடீரென்று இன்றிரவில் மயங்கி விழுந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் திடீர் சுகவீனம் முதலமைச்சர் குடும்பத்தைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது..”. கமலக்கண்ணன், பத்மாவதி இருவரையும் தொலைக்காட்சி காட்டியது. கமலக்கண்ணன் முகத்தில் கவலை தெரிந்தது. பத்மாவதி அழுதழுது கண்கள் சிவந்திருந்தாள். முகத்தில் சோகம் பரவி இருந்தது. கண்களில் திரண்டிருந்த கண்ணீருக்கும், கண்கள் சிவப்பாகி இருந்ததற்கும் காரணம் வெங்காயச் சாறும் அவள் தாய் பட்ட கஷ்டங்களும் என்று அறியாத விஸ்வம் அந்தச் செய்தியிலும் காட்சியிலும் திருப்தி அடைந்தான். அவர்கள் இருவருக்கும் பின்னால் சிந்துவும், ஹரிணியும் கூடச் சோகமாகத் தெரிந்தார்கள். விஸ்வம் புன்னகைத்தான். சிந்து சாதித்து விட்டாள்.

செய்தி தொடர்ந்தது. “தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் உதயின் உடல்நலக்குறைவுக்குச் சரியான காரணத்தை மருத்துவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. எதையும் இருபத்திநான்கு மணி நேரத்திற்குப் பின்பே தெரிவிக்க முடியும் என்றும் தங்களால் இயன்ற அனைத்து உயர்தரச் சிகிச்சைகளையும்  உதய்க்குச் செய்து வருவதாகத் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டிலிருக்கும்  முதலமைச்சரின் இரண்டாவது மகன் க்ரிஷ் விரைந்து இந்தியா திரும்பிக் கொண்டிருப்பதாக குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்….”

தொடர்ந்து உதய் எப்படி அரசியலில் நுழைந்தான் என்ற பழைய தகவல்களைச் செய்தி அறிவிப்பாளர் சொல்ல ஆரம்பித்தவுடன் விஸ்வம் வேறொரு தொலைக்காட்சிக்கு மாறினான். அதிலும் உதய் சமாச்சாரமே சொல்லிக் கொண்டிருந்ததால் திருப்தி அடைந்து அடுத்து ஆக வேண்டியதை யோசிக்க ஆரம்பித்தான். நாளைக் காலை அவன் வாஷிங்டன் போகிறான். சற்று முன் தான் ஜிப்ஸி அவனுக்கு உடைகளும் சூட்கேஸும் தந்து விட்டுப் போனான். இதை எல்லாம் அவனுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. அவனாக விஸ்வத்தின் தேவை அறிந்து செயல்படுகிறான்... இப்போது எங்கே போனானோ தெரியவில்லை.

மைக்கேல் விக்டர் புகைப்படத்தையும் சாலமன் முன்பே அவனுக்கு அனுப்பி இருந்தார்.  அவன் தான் விஸ்வம் விமானம் ஏற உதவி புரியப் போகிறவன். திடீர் என்று ஒரு சந்தேகம் விஸ்வத்துக்கு வந்தது. வாங் வேக்கு உடனே போன் செய்தான்.  “சாலமன் மைக்கேல் விக்டரைப் பார்த்துப் பேசியது நான் வாஷிங்டன் போக ஏற்பாடு செய்தது எல்லாம் இம்மானுவல் கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? நாளை விமான நிலையத்தில் பிரச்னை ஏற்படாது அல்லவா?”

“கண்டிப்பாக இல்லை நண்பரே. அதில் கவலையே வேண்டாம். சாலமன் எதையுமே யோசித்து தான் செய்வார். பின்னால் எதிரிகளால் கண்டுபிடிக்கப்படும்படியாக எதையும் செய்ய மாட்டார்.  அவரது துரதிர்ஷ்டம் அப்படி இருந்தும் தலிபான்களின் செயல்பாடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்...” வாங் வேயால் அங்கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

விஸ்வமும் அந்த விடை தெரியாத கேள்வியை அடிக்கடி தனக்குள்ளே கேட்டுக் கொண்டு தானிருந்தான்.  அதற்கு முன்னதான எர்னெஸ்டோவின் வாஷிங்டன் பயணம் குறித்த விவரம் சாலமன் மூலமாக அவனுக்குக் கசிந்தது என்று இம்மானுவல் கண்டுபிடித்தது எப்படி? சிந்து, க்ரிஷ் வழியாகக் கசிந்திருக்கலாம் என்ற தூரத்து சந்தேகம் கூட உதய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு விலகி விட்டது.     

“சாலமனுக்கு என்ன ஆயிற்று என்று அதிகாரபூர்வமாய் அறிவிப்பு ஏதாவது வந்திருக்கிறதா நண்பரே” என்று விஸ்வம் கேட்டான்.

“இல்லை நண்பரே. இல்லுமினாட்டி தண்டித்தவர்களைப் பற்றி என்றுமே  பேசுவதில்லை..” என்றார் வாங் வே.

(தொடரும்)
என்.கணேசன்  



5 comments:

  1. Both sides are emerging stronger. But the old scrolls indicate the success of Viswam. How Akshay and Krish are going to win them? Eagerly waiting for the next.

    ReplyDelete
  2. பொதுக்கூட்டத்திற்கு கர்னிலியஸ் வர மாட்டார்.... அதன்மூலம் இல்லுமினாட்டி எச்சரிக்கை அடையப் போகிறது‌‌...

    ReplyDelete
  3. Diwali ku Illuminati novel bonus illai ah sir?
    Eppovum eh padapadappa read pandren.

    ReplyDelete
  4. Sir, Diwali Bonus episode please

    ReplyDelete
  5. Deepavalikku yaaro oruvan episode thaan bonus

    ReplyDelete