சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 21, 2021

யாரோ ஒருவன்? 37


ரத்தின் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் ரஞ்சனி மகனிடம் கவலையுடன் சொன்னாள். ”ரெண்டு மூனு நாளுக்கு முன்னாடி கூட எவனோ நம்ம லெட்டர் பாக்ஸ்ல எதோ பொருட்காட்சி விளம்பர நோட்டீஸைப் போட்டுட்டுப் போயிருக்கான். இவர் வாக்கிங் போயிட்டு வந்தவர் அதை எடுத்துப் பிரிச்சுப் பார்த்து இன்னைக்கு மாதிரியே என்னவோ போல ஆகி நின்னுட்டார். அவர் வேர்த்து விறுவிறுத்து நின்னைதப் பார்த்து நானும் ஏதோ ஆபத்தான தகவல் தான் அதிலே இருக்கு போலன்னு பயந்து போயிட்டேன். அப்புறம் தான் பொருட்காட்சி விளம்பரம்னு சொல்றார்….”

தீபக் சொன்னான். “இப்போதைக்கு அவர் ஓய்வெடுக்கட்டும்மா. பிறகு நான் அவரை டாக்டர் கிட்ட கூட்டிகிட்டுப் போறேன். போய் செக் பண்ணிடலாம். அது தான் நல்லது….”

சரத் மெல்ல எழுந்து வந்து அறைக்கதவைச் சத்தமில்லாமல் தாளிட்டு விட்டு கல்யாணுக்குப் போன் செய்தான். அவனுக்கு இன்று ஆபிஸ் போய்ச் சொல்கிற வரை பொறுத்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.

கல்யாண் கேட்டான். “என்ன சரத்…?”

சரத் தீபக் இன்று அதிகாலை நாகராஜைச் சந்தித்து வந்து சொன்னதை எல்லாம் தாழ்ந்த குரலில் தெரிவித்தான். அதைக் கேட்டு கல்யாணும் அதிர்ந்து போனான்.

சரத் அதிர்ச்சியில் வியர்த்து விறுவிறுத்து தலைசுற்றுவது போல் உணர்ந்து சோபாவில் சரிந்ததையும் சொன்னான். “எல்லாமே ஏதோ அமானுஷ்யமாய் தோனிச்சு…”

கல்யாண் சொன்னான். “நாகராஜ் சொன்னதை எல்லாம் பெருசாய் ஏன் எடுக்கற சரத். அதுவும் இந்த ஆத்மா தேடி வர்ற சமாச்சாரம் எல்லாம் நம்பற மாதிரி இல்லை. அதை நான் அன்னைக்கே சொன்னேனே

சரத் சொன்னான். “அதை நானும் பெருசாய் நம்பலை. ஆனால் தீபக்குக்கு ஒரே கனவு ரெண்டாவது தடவையாகவும் வந்திருக்கறதைப் பத்தி என்ன சொல்றே? அதை நாகராஜ் கண்டுபிடிச்சுச் சொன்னதையும் லேசா எடுத்துக்க முடியல…”

கல்யாணுக்கு உடனடியாக அதற்குப் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவனாலும் அதற்குப் பகுத்தறிவான காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  பக்கத்து வீட்டுக்காரன் அமானுஷ்ய மனிதனாகவும், பிரச்சினைக்குரிய ஆளாகவும் தெரிந்தான். அவன் நடவடிக்கை எதுவும் இயல்பாய் இல்லை. அவனைப் பற்றி அறிந்து கொள்ள தீபக்கை ஊக்குவித்து அனுப்பியது இப்படி ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்து தரும் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. “நீ முதல்ல அமைதியாய் இரு. ரஞ்சனி, தீபக் முன்னாடி நீ அமைதியாய் இருக்கறது ரொம்ப முக்கியம். என்ன செய்யணும்னு நான் யோசிக்கிறேன். கவலைப்படாதே….”

கல்யாண் போன் பேசி விட்டுத் திரும்பிய போது வேலாயுதம் தாழ்ந்த குரலில் கேட்டார். “என்னடா பிரச்சினை?”

கல்யாண் மகளோ மனைவியோ அங்கே அருகில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அவர்கள் கண்ணில் படாமல் போகவே சரத் தெரிவித்த தகவல்களை எல்லாம் தாழ்ந்த குரலில் தந்தையிடம் சொன்னான். அவர் முகத்திலும் கவலையின் ரேகைகள் தெரிந்தன. “நாகராஜைப் பத்தி தீபக் கிட்ட சொன்னதே தப்பாய் போச்சு போல இருக்கே. வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டோமோ?” என்று கேட்டார் அவர்.

கல்யாண் உடனடியாக எதுவும் சொல்லாமல் யோசித்தான். பின் மெல்லச் சொன்னான். “பக்கத்து வீட்டுக்காரனைப் பத்தி நாம முழுசா தெரிஞ்சு வெச்சுக்கிறது இப்ப அவசியமாயிடுச்சுப்பா. நீங்க பக்கத்து வீட்டுக்கு வந்துட்டுப் போன மில் அதிபரை ஒரு தடவை நேர்லயே போய்ப் பார்த்துட்டு முழு விவரங்களையும் சேகரிச்சுட்டு வந்துடுங்களேன். முக்கியமா இவன் தங்கியிருந்ததா அவர் சொன்ன அந்த வட இந்திய ஆசிரமத்தோட விலாசத்தையும் வாங்கிட்டு வந்துடுங்கப்பா. இவனோட பூர்வீகத்தை வேற வழிகள்லயும் தெரிஞ்சுக்க அது உதவும்…”

வேலாயுதம் தலையசைத்து விட்டு மெல்ல பக்கத்து வீட்டைப் பார்த்தார். பக்கத்து வீடு அதில் வசிக்கும் மனிதர்களையும் பாம்பையும் போலவே மர்மமாய் காட்சியளித்தது. இது வரை எத்தனையோ முறை அது காலியாக இருக்கும் போதும் அவர் பார்த்திருக்கிறார். ஆனால் இது வரை இப்படித் தோன்றியதில்லை. இப்போது வெளிப்புறத் தோற்றத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லா விட்டாலும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருப்பது நாகராஜைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களா, இல்லை வேறெதாவது சூட்சுமக் காரணம் இருக்கிறதா?


னார்தன் த்ரிவேதியிடமிருந்து மதன்லாலுக்குப் பிறகு எந்தத் தகவலும் வந்து சேரவில்லை.  நரேந்திரன் வந்து விசாரிப்பதைப் பற்றி அவர் அஜீம் அகமதின் ஆட்கள் காதில் போட்டு வைத்திருப்பதாய் அன்று சொல்லியிருந்தார். அதன் பின் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. அதற்கடுத்த தகவல்களை அவர் நேரடியாகப் போன் செய்து தெரிவிக்கத் தயங்குவார் என்பது சென்ற முறை அனுபவத்தில் இருந்தே மதன்லாலுக்குத் தெரிந்திருந்ததால் முன்பு போலவே கவுன்சிலர் அல்லது வேறு எடுபிடிகள் மூலமாக விரைவிலேயே தொடர்பு கொள்வார் என்று மதன்லால் தினமும் எதிர்பார்த்து ஏமாந்தான். அவன் வீட்டு முன்னால் எந்த வாகனம் வந்து நின்றாலும் அவர் ஆளாக இருக்குமோ என்று ஓடோடி வந்து பார்ப்பான். வேறு யாராவது வந்திருப்பார்கள். நிலவரம் சரியில்லாததால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் வழியில்லை.

அவன் எங்கே போனாலும் ரா உளவாளிகள் அவனைக் கண்காணிப்பதாய் உணர்ந்தான். ஜனார்தன் த்ரிவேதியின் தொலைபேசியே ஒட்டுக் கேட்கப் படலாம் என்று அவர் சந்தேகிக்கும் போது அவன் தொலைபேசியையும் அவர்கள் விட்டு வைக்க வழியில்லை. மாமூல், லஞ்சம், அராஜகம் என்று எந்தக் கவலையும் இல்லாமல் ராஜாங்கம் நடத்தி வந்த அவனுக்கு இப்படி தொடர்ந்து கண்காணிக்கப்படுவது தொழிலுக்கும் இடைஞ்சலாக இருந்தது. அது அவனை இயல்பாய் இயங்க விடவில்லை. தன்னை ரா உளவாளிகள் பின் தொடர்வது மதன்லாலுக்கு மிகவும் அவமானமாகவும் இருந்தது. சிம்லாவின் உயர் போலீஸ் அதிகாரியான அவனையே எந்த மரியாதையும் பயமும் இல்லாமல் அவர்கள் பின்தொடர முடிவது அவனுக்கு விடும் சவாலாகவே நினைக்கத் தோன்றியது. இப்படி அவனைப் பின்தொடர்ந்து என்ன கண்டுபிடித்துவிடப் போகிறார்கள் இந்த முட்டாள்கள் என்று அடிக்கடி அவன் ஏளனமாய் நினைத்தான்

நரேந்திரன் பிறகு அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. உளவாளிகளைக் கண்காணிக்க வைத்து விட்டு அவன் போய் விட்டான் போலிருக்கிறது. அஜீம் அகமது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைக்கும் போது மதன்லாலுக்கு அவன் மீதும் கோபம் வந்ததுஉலகமே பயக்கும் பயங்கரத் தீவிரவாதியான அஜீம் அகமது நரேந்திரனை எளிதாக அப்புறப்படுத்த முடியுமே.. ஏன் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான்?

இப்போது வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கொண்டிருந்த மதன்லால் ஜீப்பின் பக்கவாட்டுக் கண்ணாடியில் அவனைப் பைக்கில் பின் தொடரும் ஒரு தடியனைக் கவனித்தான். நேற்றிலிருந்து அவன் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். அவனைச் சுற்றி வளைத்து நையப் புடைத்தால் என்ன என்று தோன்றியது. கேட்டால் எதாவது ஒரு காரணம் சொல்லிக் கொள்ளலாம்….

இந்தச் சிந்தனையில் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மதன்லால் ஸ்டேஷன் வாசலில் ஒரு கிராமத்தான் நிற்பதைக் கவனித்தான். அவன் கையில் ஏதோ ஒரு மனு இருந்தது. அவன் மதன்லாலை ஒருவித சூட்சுமத்துடன் பார்த்தபடியே நெருங்கினான். அவன் பார்வையிலேயே எதையோ தெரிவிக்க முயல்வது தெரிந்தது. மதன்லால் அவனைக் கூர்ந்து பார்த்தான்.

அருகே வந்த அந்த கிராமத்தான்அந்த பைக் தடியன் இங்கே பார்த்துட்டே இருக்கான். உங்க முகபாவனையை மாற்றாதீங்க…. இயல்பாய் இருங்க. இந்த மனுவை இங்கே பிரிச்சுப் படிக்காதீங்க. உள்ளே போய் படிங்கஎன்றான்.



(தொடரும்)
என்.கணேசன் 



5 comments:

  1. super suspense writing style. addicted to your writings.

    ReplyDelete
  2. உலகமே பயக்கும் என்று உள்ளதே, பயக்கும் சரியா?

    ReplyDelete
  3. I think Mahendran was killed in Taxi and Madhavan is alive(may be Nagraj). Police and friends of Madhavan were bribed heavily to close the case.

    ReplyDelete
  4. இங்கும் தடியனா? சஞ்சய்க்கு அப்புறம் மதன்லாலுக்கும் பயங்கர விருந்து இருக்கு போல.....

    ReplyDelete