சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, June 10, 2020

அறியாத குருவின் சரியான ஓவியம்!




ஒரு முறை கர்னல் ஓல்காட் ஒரு அறிஞரின்  ஆன்மிக, அபூர்வ சக்திகளின் தன்மை மற்றும் வளர்ச்சியைப் பற்றி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் கேட்டார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சற்று யோசித்து விட்டுநான் படமாகவே வரைந்து உங்களுக்குக் காட்டுகிறேன்என்று சொன்னார். அந்த அறிஞரின் புகைப்படம் அவர்களுடைய அறையிலேயே மாட்டப்பட்டிருந்தது. வரைந்து காட்டுகிறேன் என்று சொல்லிய ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வெள்ளை சாட்டின் துணி ஒன்றை எடுத்து அவருக்கு வேண்டிய அளவில் வெட்டி எடுத்துக் கொண்டார். பின் அதே அளவு ப்ளாட்டிங் காகிதம் ஒன்றை வெட்டி எடுத்து இந்த வெள்ளை சாட்டின் துணி மீது வைத்து இரண்டு முழங்கைகளையும் அதன் மேல் ஊன்றிக் கொண்டு கர்னல் ஓல்காட்டிடம் குடிக்கத் தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.

சில சித்து விளையாடல் சமயங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் இது போல் ஏதாவது வேலை கொடுத்து அவரை அந்த இடத்தை விட்டு அனுப்புவதுண்டு என்பதால் கர்னல் ஓல்காட் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. “ஏன் தண்ணீர் கொண்டு வரப் போகவில்லை?” என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்க கர்னல் ஓல்காட்நீங்கள் அந்தத் துணியில் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்காமல் நான் போக மாட்டேன்என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அவரை ஒரு கோபப்பார்வை பார்த்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் இந்த நிமிடமே எனக்கு அந்த ஓவியம் வந்தாக வேண்டும்என்று ஓங்கி அந்த ப்ளாட்டிங் காகிதத்தின் மீது தட்டினார்.   பின் அந்தக் காகிதத்தை விலக்கி அந்த சாட்டின் துணியை எடுத்து கர்னல் ஓல்காட்டிடம் தந்தார்.

அந்த சாட்டின் துணியில் அந்த அறிஞரின் முகம் பதிவாகி இருந்தது. அந்த படத்தைச் சுற்றிலும் பல வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. தலைக்கு மேல் தங்க நிற ஜுவாலைகள், கழுத்துப் பகுதியில் நீலம் மற்றும் நெருப்பு நிறக் கலவை, அதற்கும் கீழே சிவப்பு மற்றும் சாம்பல் நிறப் பூச்சுக்கள் ஆகியவை இருந்தன. இடையிடையே வெள்ளி நிறத்தில் சில பட்டைகள் இருந்தன. அந்தப் படத்திலேயே கர்னல் ஓல்காட் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கிறது என்பது போல் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் இருந்து விட்டார். கர்னல் ஓல்காட்டுக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் அவருக்கு உடலில் சூட்சும சரீரத்தில்சக்ராஎன்று சொல்லப்படும் சக்தி மையங்கள் இருக்கின்றன என்பதும் அந்த சக்ராக்களை ஒட்டியே அந்த ஓவியத்தில் நிறங்கள் தீட்டப்பட்டுள்ளன என்பதும் புரிந்தது.

மனித உடலில் முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து உச்சந்தலை வரை ஏழு சக்ராக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை உடையது மட்டுமல்ல குறிப்பிட்ட சக்திகளின் மையமாகவும், அந்தச் சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாக இருக்கிறது. முதுகுத்தண்டின் கீழ்நுனிப் பகுதியில் இருப்பது மூலாதாரச் சக்ரா. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவை இந்தச் சக்ராவின் பொறுப்பு. அதற்கு சற்று மேல் ஸ்வாதிஷ்டானா சக்ரா.  இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள் இதன் பொறுப்பு. தொப்புள் பகுதியை ஒட்டி இருப்பது மணிப்புரா சக்ரா. ஜீரணம், உடலின் செயலாற்றச் சக்தி இந்தச் சக்ராவின் பொறுப்பு. நெஞ்சுப்பகுதியில் இருப்பது அனாஹாதா சக்ரா. அன்பு, கருணை, இரக்கம் முதலான மேலான உணர்வுகள் இந்தச் சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன. தொண்டைப் பகுதியில் இருப்பது விசுத்தி சக்ரா.  பேச்சுத் திறன், அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தி ஆகியவை இந்தச் சக்ராவின் பொறுப்பு. இரு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் சக்ரா ஆக்ஞா சக்ரா. இந்தச் சக்ராவைப் பொறுத்தே அகப்பார்வை, ஆழமனசக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை அமையும். தலையின் உச்சிப் பகுதியில் சஹஸ்ராரா சக்ரா. ஆத்மஞானமும், தெய்வீக சக்திகள் கைகூடுவதும் இந்தச் சக்ராவின் செயல்பாட்டில் தான்.

கர்னல் ஓல்காட் அந்தச் சக்ராக்களைப் பற்றி மட்டுமல்லாமல் நிறங்களைப் பற்றியும் விரிவாக அறிந்து கொண்டார். தங்க நிறம் தெய்வீக, ஞான சக்திகளாகவும், வெள்ளி நிறம் அதற்கும் ஒரு படி குறைவான ஆனால் மனித சக்திகளுக்கு மேம்பட்டதாகவும், நீல நிறம் தூய்மைக்காகவும், சிவப்பு நிறம் கட்டுப்படுத்தாத உணர்ச்சிகளுக்காகவும், சாம்பல் நிறம் பக்குவப்படாத கீழ் உணர்ச்சிகளாகவும், கருப்பு நிறம் முழு அஞ்ஞானமாகவும் குறிக்கப்படுவதைத் தெரிந்து கொண்டார். அதையெல்லாம் அறிந்து கொண்ட பிறகு அந்த ஓவியத்தில் தலைப்பகுதி மட்டும் இருந்த போதிலும் கீழேயும் நிறங்கள் வரையப்பட்டு இருந்ததை உடல்பகுதியாகவே எடுத்துக் கொண்டு சக்ராக்களாக குறித்துக் கொண்டார். இப்போது அந்தந்த சக்ராப் பகுதிகளில் இருக்கும் நிறங்களை வைத்து அந்த அறிஞரின் தன்மைகளை அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. உயர்மட்ட அறிவு இருந்த அந்த அறிஞர் ஞானமும், தெய்வீக சக்திகளும் ஓரளவு பெற்றிருந்த போதிலும், தன் சில குறைபாடுகளை முழுவதுமாகக் களைந்து விடவில்லை என்பதையும், அந்த சாடின் துணியில் நிறங்களுடன் கூடிய படத்தைப் பார்த்து கர்னல் ஓல்காட் அறிந்து கொண்டார்.

இவ்வாறாக அபூர்வ சக்திகளின் வெளிப்பாட்டில் கூட ஆத்மிக ஞானம் மற்றும் புரிதலையும் சுட்டிக்காட்டும் வல்லமையை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பெற்றிருந்தார். ஆன்மிக வளர்ச்சியில் யார் எந்த அளவு முன்னேற்றத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய சக்ராக்களை வைத்து சூட்சுமப் பார்வை உள்ள ஒருவர் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

கர்னல் ஓல்காட்டுக்கு அவ்வப்போது தகவல்கள் அனுப்பும் ஒரு குரு இருந்தார். அவரிடமிருந்து முன்பே அமானுஷ்ய வழிகளில் கர்னல் ஓல்காட் சில உபதேசங்களைத் தகுந்த சமயத்தில் பெற்றிருக்கிறார். ஆனால் கர்னல் ஓல்காட் அந்தக் குருவை நேரில் பார்த்ததில்லை என்பதால் ஒரு நாள் அந்தக் குருவின் ஓவியத்தைத் தனக்கு வரைந்து தரும் படி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் வேண்டினார். சக்திகளின் வெளிப்பாட்டில் ஒரே வழிமுறையை எப்போதும் பயன்படுத்தாத ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர்களுக்கு நட்பான ஒரு பிரஞ்சு ஓவியர் மூலமாக வரைந்து தருவதாகச் சொன்னார். அந்தப் பிரெஞ்சு ஓவியரும் அந்தக் குருவைப் பார்த்ததில்லை என்பதை கர்னல் ஓல்காட் அறிவார். அறியாத குருவின் ஓவியத்தை அந்தப் பிரெஞ்சுக்காரர் எப்படி வரைய முடியும் என்று கர்னல் ஓல்காட் குழம்பினார். ஆனாலும் எப்படி ஓவியம் உருவாகிறது என்றறிய அவர் ஆவலாக இருந்தார்.

அவரே கடைக்குச் சென்று ஓவியத்திற்கான தடிமனான காகிதம் ஒன்றை அரை டாலர் தந்து வாங்கி வந்தார். அந்தக் காகிதத்தை வீட்டுக்கு வந்து பிரித்த போது இரண்டு கால் டாலர்கள் கீழே விழுந்தன. அவர் செலவு செய்த அரை டாலர் இரண்டு கால் டாலர்களாகத் திரும்பவும் கிடைத்தது வியப்பை அளித்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தக் காகிதத்தை அந்தப் பிரெஞ்சு ஓவியரிடம் தந்து ஒரு இந்திய யோகியை வரையச் சொன்னார். அந்தப் பிரெஞ்சு ஓவியர்நான் எந்த இந்திய யோகியையும் பார்த்தது கூடக் கிடையாதேஎன்று திகைப்புடன் சொல்லபரவாயில்லை. நீங்கள் உங்கள் கற்பனைப்படி அனுமானித்து வரையுங்கள்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொல்லி விட்டார். அவர் தயக்கத்துடனே வரைய ஆரம்பித்தார். குருவின் ஓவியம் கேட்டால் கற்பனைப்படி வரையச் சொல்கிறாரே என்று கர்னல் ஓல்காட்டுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த ஓவியர் வரையும் போது அவ்வப்போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் பின்னால் சென்று  பார்த்தார். சிறிது நேரத்தில் எப்படியோ அந்த ஓவியர் வரைந்து முடித்தார். அதை வாங்கி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் கொடுத்தார். அது சரியான ஓவியம் தானா என்று கர்னல் ஓல்காட்டுக்குச் சந்தேகமாகவே இருந்தது.

சில வருடங்கள் கழித்து இந்தியா வந்த பின் தான் அவரால் அந்தக் குருவை நேரில் சந்திக்க முடிந்தது. அப்போது அந்தப் பிரெஞ்சு ஓவியர் வரைந்து தந்திருந்த ஓவியம் அந்தக் குருவின் ஓவியமாகவே இருந்திருப்பதை அறிந்து அவர் பெருவியப்படைந்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் டெலிபதி மூலம் அந்த யோகியின் உருவத்தை அந்தப் பிரெஞ்சு ஓவியரின் மனதில் பதிய வைத்து  அந்த ஓவியர் குருவின் ஓவியத்தை வரையத் தூண்டியிருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 9.7.2019        
       

1 comment:

  1. அனைத்தும் அற்புதம்.... வியக்க வைக்கும் நிகழ்வு....

    ReplyDelete