சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 1, 2020

சத்ரபதி 127



பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷா அவனுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு கணம் எட்டிப்பார்த்தால் துரதிர்ஷ்டம் ஒரு யுகம் தங்கி விடுகிறது என்று எண்ணி மனம் நொந்திருந்தான். சிவாஜி முகலாயர்களிடம் தப்பித்து வரும் வரை ராஜா ஜெய்சிங்கை எதிர்த்து ஜெயிக்கும்படியாக அவனிடம் தங்கி இருந்த அதிர்ஷ்டம் சிவாஜி வந்தவுடன் காணாமல் போய் விட்டதைக் கண்டான். சிவாஜி முகலாயர்களின் துணையோடு போர் தொடுக்க வருவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பீஜாப்பூர் வீரர்களுக்கு சிவாஜி என்றாலே சிம்ம சொப்பனமாகவே இருந்தது. அவர்கள் தோற்கத்தான் போகிறோம் என்ற விரக்தியுடனேயே போரிட்டது போல் இருந்தது. தொடர்ந்து தோல்விமுகம் கண்ட பின் தன் படைத்தலைவனை அழைத்துச் சொன்னான். “தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் என்று சிவாஜியிடம் சொல். சமாதானம் செய்து கொள்ள அவன் என்ன விலை கேட்டாலும் கொடு…. போரை முடி”

படைத்தலைவன் சற்று வருத்தத்துடன் ஒரு கணம் நின்று விட்டுத் தலையசைத்து விட்டுச் சென்றான். விரக்தியுடன் அமர்ந்திருந்த அலி ஆதில்ஷாவை இரக்கத்துடன் பார்த்து விட்டு ராஜமாதா பாதுஷா பேகம் சொன்னாள். “மகனே ஒரு மனிதன் என்றும் இழக்கக்கூடாதது மனோ தைரியத்தைத் தான். தைரியமாக இரு மகனே. கஷ்டங்கள் யாருக்கு வரவில்லை. சிவாஜியையே பார். சில மாதங்களுக்கு முன் அவன் முகலாயச் சக்கரவர்த்தியின் கைதி. இன்று அவருக்கு நண்பனானது மட்டுமல்லாமல் நம்மை எதிர்த்து ஜெயிக்கும் நிலைமைக்கு வரவில்லையா? நம் காலமும் ஒரு நாள் மாறும் மகனே.”

அலி ஆதில்ஷா வேதனையுடன் சொன்னான். “தாயே. சிவாஜி ஒன்றுமில்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தவன். அதனால் அவன் எப்போது கணக்குப் பார்த்தாலும் அவன் பெற்றதெல்லாம் அவனுக்கு லாபமாகவே இருக்கும். அதனாலேயே அவன் தைரியத்தோடு இருக்கிறான், எல்லாவற்றையும் துணிச்சலாகச் சந்திக்கிறான் என்று நினைக்கிறேன். நான் ஒரு பெரிய ராஜ்ஜியத்தோடு வாழ்க்கையை ஆரம்பித்தவன். இப்போது நிறைய இழந்து கொண்டே வருகிற நிலையில் கணக்குப் பார்த்தால் எல்லாமே குறைந்து கொண்டே வருகிறது, நஷ்டமாகவே தெரிகிறது. இதைத் தொடர்ந்து தாங்கும் சக்தி எனக்கில்லை. இனி எந்தக் காலத்திலும் கணக்கு லாபத்தைக் காண்பிக்க வழியேயில்லை என்பதை உணர்கிறேன். எல்லாம் போதும் என்று தோன்றுகிறது. உங்கள் மகன் இப்போது வேண்டுவது ஒன்றே ஒன்று தான் தாயே. அது உறக்கம். அந்த உறக்கமும் நிரந்தரமானதாக இருந்தால் இறைவனுக்கு நான் நன்றி சொல்வேன்….”

பாதுஷா பேகம் பதறிப்போனாள். “மகனே என்ன வார்த்தைகளைச் சொல்கிறாய்? பழுத்த இலை நான் உதிராமல் இன்னும் வாழ்க்கையைப் பிடித்துக் கிடக்கையில் காலம் பல காண வேண்டிய நீ இப்படிப் பேசலாமா? சிவாஜியிடமிருந்து பாடம் கற்றுக் கொள் என்பதற்காகத் தான் அவன் உதாரணத்தைச் சொன்னேன்….”

அலி ஆதில்ஷா சொன்னான். “அவனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது தாயே. முகலாயச் சக்கரவர்த்தியின் தர்பாரிலேயே அவரை அலட்சியப்படுத்தி வெளியேறி, சிறைப்பட்டாலும் சாகசத்துடன் தப்பித்து வந்து, அவரே நட்பு பாராட்டும் நிலைமைக்குக் கொண்டு வந்த அந்த சாதனை ஒன்று போதும் தாயே சரித்திரம் அவனைப் பேசுவதற்கு. ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்வதற்கு உங்கள் மகனுக்கு வயதும் இல்லை…. மனதும் இல்லை…. மன்னித்து விடுங்கள்…”

மகனையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் இருந்த பாதுஷா பேகம் “எல்லா வெற்றி தோல்விகளும் மனிதனின் மனநிலையிலேயே முதலில் தீர்மானமாகின்றன. அதனால் விரக்தியை  முதலில் விடு” என்று சொல்லிப் புரிய வைக்க நினைத்தாள். ஆனால் அதற்குள் அலி ஆதில்ஷா உறங்கி விட்டிருந்தான்.  


சிவாஜி பீஜாப்பூர் சுல்தானுடன் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்தத்தில்  ஷோலாப்பூர் கோட்டையையும், அதை அடுத்த பகுதிகளையும் பெற்றதோடு வருடா வருடம் ஒரு பெரிய தொகையைக் கப்பமாகபவும் பெற்றான். கோல்கொண்டா சுல்தானையும் வென்று அவனிடமும் ஒரு பெருந்தொகையைக் கப்பமாக வருடா வருடம் பெறும்படியான ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ஒப்பந்தங்களுக்கு முவாசிம் எந்த எதிர்ப்பும் தெரியவில்லை. தந்தையின் மனப்போக்கு இல்லாத அவன் சிவாஜி தங்களுக்கு எதிராக இயங்காத வரை அவன் வாழ்க்கையை வாழ அவனை அனுமதிப்பது தான் சரி என்ற முடிவில் இருந்தான்.

சிவாஜி பணவசதிகள் பெருகிய பிறகும் தொடர்ந்து போரில் ஈடுபட முனையவில்லை. அவன் கவனம் மறுபடி நிர்வாகத்திலும், ராஜ்ஜியத்தின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களிலும் தங்கியது. கோட்டைகளை வலிமைப்படுத்திக் கொண்ட அவன் கவனம் அடுத்ததாகக் கப்பற்படையை அமைப்பதற்கு நகர்ந்தது. தண்ணீரில் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த அந்தக் காலத்தில் முகலாயர்கள் கூட நிலத்தில் ஆதிக்கம் செலுத்தக் காட்டிய முனைப்பை நீரில் ஆதிக்கம் செலுத்துவதில் காட்டவில்லை. எதிர்கால அவசியத்தை உணர்ந்து சிவாஜி ஐரோப்பியர்களைப் போல் கனரகக் கப்பல்களை உருவாக்காமல் இலகுரகக் கப்பல்களை உற்பத்தி செய்யும் மையங்களைப் பல இடங்களில் ஏற்படுத்தினான். இப்படிப் போர்க்காலத்தில் போர் முனைப்புகளும், அமைதிக்காலத்தில் வலிமைப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளும், நிர்வாக சீரமைப்பு முயற்சிகளும் என தாதாஜி கொண்டதேவின் சீடன் கருமமே கண்ணாயிருந்தான்.


தெற்கில் எதிரிகளுக்குள் போர் நின்று போய் விட்டது, சிவாஜி அமைதியாக இருக்கிறான், முவாசிம்மும் அமைதியாக இருக்கிறான் என்ற நிலைமை ஔரங்கசீப்பைச் சந்தேகத்திற்குள்ளாக்கியது. சிவாஜி சும்மா இருக்க முடியாதவன் என்று ஔரங்கசீப் கணித்திருந்தான். சில சக்திகள் என்றுமே அடங்கிக் கிடக்க முடியாதவை என்று உறுதியாக நம்பிய ஔரங்கசீப் ஒற்றர்களிடம் தக்காண நிலைமையைப் பற்றி விசாரித்தான்.

“சக்கரவர்த்தி சிவாஜி கப்பல்கள் கட்டுவதிலும், கோட்டைகளைச் சீரமைப்பதிலும், நிர்வாகக் காரியங்களிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறான்….” என்று ஒற்றர் தலைவன் சொன்னான்.

ஔரங்கசீப் கேட்டான். “முவாசிம்?”

“இளவரசர் அடிக்கடி விருந்துகள் வைக்கிறார். கேளிக்கைகளில் கலந்து கொள்கிறார். அவ்வப்போது நிர்வாகக் காரியங்களையும் கவனித்துக் கொள்கிறார்”

ஔரங்கசீப் ஒற்றர்களுக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாய் முவாசிம்மும், சிவாஜியும் கூட்டாக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என்று சந்தேகப்பட்டான். சிவாஜி சிறைப்பட்டதற்குப் பலிவாங்க முவாசிம்மைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரியணை ஏற எந்த இளவரசனுக்குத் தான் ஆசையிருக்காது. முவாசிம் சிவாஜியின் திட்டத்துக்கு இசைந்து கொடுக்கக் கூடியவனே. அப்படி இருவரும் கூட்டு சேர்ந்தால்…….?

ஔரங்கசீப் இந்தச் சிந்தனைக்குப் பிறகு உறக்கத்தைத் தொலைத்தான். அவன் வந்த வழி அவனைப் பயமுறுத்தியது. அந்த வழியிலேயே மகனும் வரலாம் என்ற சாத்தியக்கூறை அவனால் மறக்கவோ மறுக்கவோ முடியவில்லை. சிவாஜி எதற்கும் துணிந்தவன். பீஜாப்பூர், கோல்கொண்டா பகுதிகளை அடக்கி அடிபணியச் செய்த பிறகு அவன் அடுத்த பார்வையும் இலக்கும் முகலாய சாம்ராஜ்ஜியமாகத் தான் இருக்க முடியும். நினைக்க நினைக்க அவன் கற்பனை பயங்கரமாய்ச் சிறகடித்துப் பறந்தது.

உடனடியாக தக்காண அரசியலில் அனுபவம் உள்ள அவன் நம்பிக்கைக்கு உரியவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினான். தனக்கு ஏற்பட்டிருக்கும் ஐயப்பாட்டைச் சொன்னான்.

அவன் நம்பிக்கைக்குரியவர்கள் அவனைப் பலகாலமாய்ப் பார்த்து வருபவர்கள். அவன் மனப்போக்கை நன்றாக அறிந்தவர்கள். உங்கள் சந்தேகம் தவறானது, ஆதாரமற்றது என்று யாராவது சொன்னால் சொன்னவர்களையே சந்தேகப்படுவான். அவர்களும் அவன் மகனுடன் கூட்டு சேர்ந்து விட்டார்களோ என்று நினைக்க ஆரம்பிப்பான். இந்த உண்மையை மறக்காத அவர்கள் கவனமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

“நீங்கள் சொல்கிறபடி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது…”

“சிவாஜி தந்திரமானவன். மறைவிலிருந்தே காரியங்கள் செய்பவன். இளவரசரைத் தவறாக வழிநடத்த வாய்ப்பிருக்கிறது…..”

“அவன் அமைதியாக இருக்கிறான் என்றாலே சந்தேகப்படுவது நல்லது…”

இப்படி ஆரம்பித்த பேச்சு முடிவில் இப்படி முடிந்தது.

“சிவாஜி இந்த அளவுக்குச் சென்று வெற்றி பெறும் முன் அவனை அடக்குவது நல்லது”

“அவனைச் சிறைப்படுத்துவதே நல்லது…. சுதந்திரமாக இருந்தால் தானே சதியில் அவன் ஈடுபடுவான்…. அப்படி விட்டு விடக்கூடாது….”

ஒரே ஒருவன் மட்டும் மெல்லச் சொன்னான். “அவனுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் நிலையில் என்ன காரணம் சொல்லி நம்மால் சிறைப்படுத்த முடியும்…..”

ஔரங்கசீப் சொன்னான். “அரசியலில் காரணங்களுக்குப் பஞ்சமா?”

சிவாஜியையும், தௌலதாபாத்தில் இருக்கும் அவன் படைத்தலைவர்கள், அதிகாரிகளையும் கைது செய்ய ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்து உடனே முவாசிம்முக்குக் கடிதம் அனுப்பி வைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Sivaji has correctly predicted about Ali Adilshah even in his younger days. Aurangazeb is not dependable. His thought processes were excellently narrated by you.

    ReplyDelete
  2. அலி ஆதில்ஷாவை பார்க்கும் போது பாவமாகதான் உள்ளது.... ஔரங்கசீப் தன்னுடைய விபரீத சிந்தனையால் தான் வீழப் போகிறான் என்று நினைக்கிறேன்....

    ReplyDelete