ஏறத்தாழ மனிதனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அறியாமையாகவே இருக்கிறது. அறியாமையால் அவன் ஏற்படுத்திக் கொள்ளும் நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாமாகச் சேர்ந்து அவன் வாழ்க்கையைப் பிரச்சினைகளின் தொகுப்பாக ஆக்கி விடுகின்றன.அவன் தனித்தனியாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்வு காண முனைகிறான். ஒன்றை முடிப்பதற்குள் பத்து பிரச்சினைகள் முளைத்து விடுகின்றன. இதற்கு முடிவு தான் என்ன? பிரச்சினைகளின் மூல காரணமான அறியாமையில் இருந்து விடுபடுவது தான். வேரை அழித்தால் கிளைகள், இலைகள் எல்லாம் தானாக அழிந்து விடுவது போல அவன் அறியாமையில் இருந்து விடுபட்டால் ஒட்டு மொத்தமாக அவன் பிரச்சினைகளின் தாக்கத்தில் இருந்து விடுபடுகிறான். இதை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
செயல்களை நடத்துபவை குணங்களே. அவற்றைக் காட்டிலும் வேறொரு கர்த்தா இல்லை என்று எவனொருவன் காண்கிறானோ, குணங்களைக் காட்டிலும் தான் வேறு என்பதை எவன் அறிகிறானோ அவன் என் நிலையை அடைகிறான்.
உடலிலிருந்து உண்டான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் என்பவைகளிலிருந்து விடுபட்டு அமிர்த நிலையை அடைகிறான்.
செயல்கள் குணங்களின் விளைவுகளாகவே இருக்கின்றன. மனிதனுடைய எல்லாச் செயல்களும் அந்தந்த நேரத்தில் அவனுக்கு எந்தக் குணம் மேலோங்கி இருக்கிறதோ அந்தந்த குணத்திற்கேற்ப இருக்கிறது. சாத்வீக குணத்தில் தெளிவாக இருக்கையில் நிதானமாகவும், யோசித்தும் எதையும் முறைப்படியே செய்கிறான். ரஜோ குணம் அதைச் செய், இதைச் செய் என்று அவனைப் பல வேலைகள் செய்ய வைக்கிறது. அந்தச் செயல்களைச் சிந்தித்துச் செய்யக்கூட அவனை அனுமதிப்பதில்லை. இப்போது செய்யா விட்டால் அது பேரிழப்பு அல்லது முட்டாள்தனம் என்று பயமுறுத்தி அவனை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவசரமாக வேலை செய்ய வைக்கிறது. தமோ குணம் மேலோங்கி இருக்கையில் செய்ய வேண்டியதைக் கூட அவன் செய்யத் தவறுகிறான். நாளை செய்யலாம் என்றும், அடுத்தவன் செய்யட்டும் என்றும் அவன் இருந்து விடுகிறான்.
செயல் செய்வது மனிதனாக இருந்தால் அவன் செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கும். முக்குணங்கள் அவனை ஆட்சி செய்து தங்கள் குணங்களின் படி அவனை ஆட வைப்பதால் செயல்கள் செய்வது குணங்களாகவே இருக்கின்றன. அதை உணரும் போது மனிதன் அந்தக் குணங்களையும் கடந்து இருக்கும் தன் இயல்பான ஆத்மாவை அறிந்து கொண்டு அமைதியடைகிறான். அந்த அமைதியும் நிறைவுமல்லவா இறைவனின் இயல்பு நிலை. அந்த நிலையை அடைந்து விட்டவன் பிறப்பு, இறப்பில் சிக்குவதில்லை. அதனால் மூப்பும் இல்லை. துக்கமும் இல்லை.
முக்குணங்களின் எல்லையில்லாத செயல்களுக்கும், அவற்றின் விளைவுகளுக்கும் சிக்காமல் தப்பிக்கும் மனிதனை எப்படி அறிவது, அவன் நடவடிக்கைகள் எப்படி இருக்கும், அவன் எப்படி அந்தக் குணங்களைக் கடந்து கடைத்தேறுவான் என்று அறியும் ஆசையில் அர்ஜுனன் கேட்கிறான்.
“ப்ரபோ! ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்தவன் என்று எந்த அடையாளத்தைக் கொண்டு அறிவது? அவன் எத்தகைய நடவடிக்கைகளைக் கொண்டிருப்பான்? எப்படி முக்குணங்களையும் கடப்பான்?
பகவான் அதற்குப் பதில் கூறுகிறார்.
“பாண்டவனே! மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம் உண்டாகும் போது எவனொருவன் அவற்றை வெறுப்பதில்லையோ, அவை நீங்கும் போது அவற்றைத் திரும்பவும் பெற விரும்புவதில்லையோ
அக்கறை இல்லாதவன் போல் அமர்ந்திருந்து, குணங்களே இயங்குகின்றன என்று உணர்ந்து எவனொருவன் அந்தக் குணங்களால் நிலைகுலைவதில்லையோ,
எவன் தன் நிலையில் நிலைத்து நின்று இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கிறானோ, மண்ணையும், கல்லையும், பொன்னையும் சமமாக மதிக்கிறானோ, பிடித்தது பிடிக்காதது இரண்டையும் ஒன்றாகக் கருதுவானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் சமமாக நினைப்பானோ,
மானம் அவமானம் இரண்டையும் சமமாக எண்ணுவானோ, நண்பனையும், எதிரியையும் சமமாக நடத்துவானோ, செயல்களைச் செய்பவன் நான் என்ற எண்ணத்தை எவன் விட்டவனோ, அவனே குணாதீனன் (குணங்களைக் கடந்தவன்) என்று கூறப்படுவான்.
பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அந்தப் பிரச்சினைகளில் இருந்து சுலபமாக விடுபடுவதில்லை. ஏனென்றால் அவன் அந்தப் பிரச்சினைகள் குறித்த அதீத எண்ணங்கள் காரணமாக அவற்றுடன் தன்னை இணைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டு விடுகிறான். மானசீகமாக அவன் அந்தத் தளையைத் தளர்த்தி விலக்கிக் கொண்டால் மட்டுமே அவன் அதிலிருந்து விடுபட முடியும். பிரச்சினைகள் குறித்த விருப்பு வெறுப்புகளைக் குறைப்பதன் மூலமாகவே அவை குறித்த தீவிர எண்ணங்களை அவன் தவிர்க்க முடியும்.
ஸ்ரீகிருஷ்ணர் இங்கே குறிப்பிடும் மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம் மூன்றுமே சதவ, ரஜோ, தமோ குணங்களின் முறைப்படியான விளைவுகள். அவை வரும் போதும் சரி, அவை விலகும் போதும் சரி அவை குறித்த விருப்பு வெறுப்புகள் நமக்கு அதிகம் இருக்குமானால்
நம் மீது அந்த முக்குணங்களின் ஆதிக்கம் அதிகமாகி விடும். அவை குறித்து அக்கறை இல்லாமல், விலகி நிற்கும் ஆத்மாவாக நாம் எல்லாவற்றையும்
பார்த்தோமானால் அந்தக் குணங்களின் ஆதிக்கம் தளர்ந்து, அவை நம்மைப் பாதிப்பதும் நின்று போகும்.
அதைத் தொடர்ந்து, குணங்களைக் கடந்தவனான குணாதீனனின் இயல்புகளை
ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார். கீதையின் ஆரம்பத்தில் ஸ்திதப்ரக்ஞனில் ஆரம்பித்துப் பல பெயர்களில் அவர் விளக்கிய
அதே குணாதிசயங்கள் இங்கும் அவரால் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் சமமாக நினைக்கும் சமநோக்கு நிலை இங்கும்
வலியுறுத்தப்படுகிறது. கூடவே ’செயல்களைச் செய்பவன் நான்’ என்ற எண்ணத்தையும் அகற்றும்படி பகவான் அறிவுறுத்துகிறார்.
உலகில் எத்தனையோ
செயல்கள் நடக்கின்றன. அவை எத்தனையோ விளைவுகளில் முடிகின்றன. ஆனால் அவை எதிலும் தனி மனிதனுக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால் அவன் செய்கின்ற செயல்களிலும்
அதன் விளைவுகளிலும் அவனுக்கு ஆயிரம் மடங்கு அக்கறை. எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், பலரும் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும் முதலான பலப்பல எண்ணங்கள்
அவனை ஆக்கிரமிக்கின்றன. அதனால் எத்தனையோ மன உளைச்சல்கள், எத்தனையோ துன்பங்கள்... எல்லாம் நினைக்கின்றபடியே முடிகிற வரை
அவன் அந்தச் செயல்களோடு கட்டுண்டவன் ஆகிறான். பிரச்சினை இங்கு அந்தச் செயல்கள் அல்ல. அந்தச் செயல்களைச் செய்யும் “நான்” தான் பிரச்சினை. எல்லாவற்றையும் நடத்துவது இறைவனே, நான் வெறும் கருவியே, இதன் இலாப நஷ்டங்கள் என்னைச் சேர்ந்தவை
அல்ல என்ற பிரக்ஞை மனிதனுக்குள் மேலோங்கி நிற்குமானால் மனிதன் மனப்பாரம் நீங்கியவனாகி
விடுவான். எனவே அந்த ‘நானில்’ இருந்து விடுபட்டால் மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் கூட விடுபட்டிருக்கும்
குணாதீனன் ஆகிறான் என்று கூறும் இந்தக் கருத்துடன் கீதையின் பதினான்காம் அத்தியாயமான
குணத்ரய விபாக யோகம் முடிகிறது.
பாதை நீளும்....
என்.கணேசன்
அருமை...அருமை... அற்புதம்... நம் துன்பங்களில் இருந்து தப்பிக்க...நாம் குணாதீனன் ஆவதைத் தவிர சிறந்த வழி இருக்க முடியாது.
ReplyDelete//"மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம்"...இதை கீதையில் படிக்கும் போது புரியவில்லை...அதற்கான விளக்கம்... சத்வ, ரஜோ, தமோ குணங்களின் முறைப்படியான விளைவுகள்...அருமை...
excellent one. This is the only way to remove all our pains. Watch as third person look at our joy and sorrows, we will slowly release all bonding takes lot of practice to achieve :)
ReplyDelete