மாணிக்கத்திடம் சங்கரமணி எதிரி சொன்னது என்னவென்று கேட்டார், மாணிக்கம் சொன்ன போது சங்கரமணியின் முகமும் களையிழந்து கருத்தது. மாமனும் மருமகனும் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார்கள். இருக்கும் நிலைமையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய முயன்றாலும் எங்கேயாவது இடித்து செய்ய முடியாமல் போகும் நிலைமை தான் அவர்கள் எதிரே இருந்தது. அவனுடைய ஆளை விடுவிக்காமல் எதிரி விட மாட்டான். உதயோ அந்த ஆளை விடுவிக்க விட மாட்டான். அவனிடம் நேரடியாகக் கேட்க வழியில்லை. மறைமுகமாய் கேட்டால் பயனில்லை. ஹரிணியைக் கைது செய்ய போலீஸை அனுப்பியதிலிருந்து கமலக்கண்ணனும் அவரிடம் கடுப்பாகத் தான் இருந்தார். இல்லாவிட்டால் அவரிடமாவது ஏதாவது கதை சொல்லிக் கையைக் காலைப் பிடித்து எதிரியின் ஆளை விடுவித்திருக்கலாம். செந்தில்நாதனும் எங்கிருக்கிருக்கிறார் என்ற சிறிய துப்பும் கூடக் கிடைக்கவில்லை. அதிகார தோரணையைக் காட்டினாலோ ஆட்சி கவிழும் அபாயம் இருக்கிறது. உதய் எம் எல் ஏக்களிடம் ரகசியமாய் பேசி வருவதாகவும் உளவுத்துறை ரிப்போர்ட் சொன்னது. மந்திரி பதவி கேட்டுக் கிடைக்காத எம் எல் ஏக்கள் கமலக்கண்ணன் பக்கம் சாய்வார்கள் போல் தெரிகிறது. மாட்டிய மனோகர் உண்மையைக் கக்கி விட்டால், உண்மைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டால். முக்கால் வாசி எம் எல் ஏக்கள் கண்டிப்பாக கமலக்கண்ணன் பக்கம் போய் விடுவார்கள். இருதலைக் கொள்ளி எறும்பாய் மாணிக்கம் தவித்தார்.
தந்தையும் தாத்தாவும் பேசுவதை மறைவில் இருந்து மணீஷ் கேட்டுக் கொண்டிருந்தான். ஹரிணியைக் கைது செய்ய மாணிக்கம் போலீஸாரை அனுப்பியதிலிருந்தே மணீஷ் கல்லூரிக்குச் செல்வதை நிறுத்தி இருந்தான். அவனுக்கு அவளை நேருக்கு நேர் பார்க்கக் கூசியது. அவளிடம் போனில் கூட அவன் பேசவில்லை. என்னவென்று பேசுவான். என்ன சொல்லி சமாளிப்பான். நண்பனாக அவளுக்கு அவன் உதவா விட்டாலும் பரவாயில்லை. அவனுடைய தந்தை அவளைக் கேவலப்படுத்த அல்லவா துணிந்திருந்தார். அவனுக்கு அவருடைய நிலைமை முழுவதும் தெரிந்திருந்ததால் அவரை அவனால் குறை கூறவும் முடியவில்லை. எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தது அவனும் அவன் தாத்தாவும் அல்லவா? அவர்களால் அல்லவா அவர் க்ரிஷைக் கொலை செய்யச் சம்மதித்தார். இப்படியெல்லாம் முடியும் என்று யாருக்குத் தெரியும்?
கமலக்கண்ணன் ஹரிணியைக் காப்பாற்றியதுடன் அவளையும், அவள் தாயையும் தன் வீட்டுக்கே அழைத்துப் போய் அவர்கள் இருவரின் எண்ணத்தில் எத்தனையோ உயர்ந்திருப்பார். இது வரை க்ரிஷ் மேல் காதல் மட்டுமே ஹரிணிக்கு இருந்தது. இப்போது அந்தக் குடும்பத்தின் மீது அசைக்க முடியாத நன்றியுணர்வும் அல்லவா வந்திருக்கும். இதைப் பற்றி எல்லாம் நினைத்து, கூனிக்குறுகி தன் அறையிலேயே அவன் அடைபட்டிருந்தான். மகன் மனநிலையைப் புரிந்திருந்தாலும் மாணிக்கம் அவன் வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு வேகமாக மீண்டு வருவான் என்று நம்பினார். ஆனால் ஹரிணி கைது முயற்சிக்குப் பின் அவருக்கும் அவனுடன் மனம் விட்டுப் பேசுவதில் தயக்கம் இருந்தது. அவனும் தந்தி வாசகங்கள் தவிர கூடுதலாகப் பேசவில்லை. அவர்களுக்குள் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதை மௌனமாக இருவருமே உணர்ந்தார்கள்.
மாணிக்கமும், சங்கரமணியும் பேசிய தற்போதைய நிலவரம் மணீஷுக்குக் கலவரத்தையே மனதில் ஏற்படுத்தியது. எப்போதுமே நிதானம் தவறாத அவன் தந்தை குழம்பி, நடுங்கி, செய்வதறியாமல் நிற்பதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது. இதையெல்லாம் பார்க்க அவனுக்குச் சகிக்கவில்லை. செத்து விடலாம் என்று தோன்ற ஆரம்பித்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுதலை வாங்கிக் கொள்ளலாம். அடுத்த ஜென்மத்திலாவது அதிர்ஷ்டசாலியாகப் பிறக்க வாய்ப்பிருக்கிறது…. ஆரம்பத்தில் சடாரென்று தோன்றிய தற்கொலை எண்ணம் பின் வலுப்பெற ஆரம்பித்தது. அதுவே நிம்மதி என்று தோன்றியது. அதுவே வழியாகத் தோன்றியது, இப்போது எதிரி கூப்பிட்டு தந்தையை மிரட்டியதைக் கேட்ட பிறகு முடிவே செய்து விட்டான். “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று ஒற்றை வரியில் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தான். சாவதற்கு முன் ஒரே ஒரு முறை ஹரிணியிடம் பேசத் தோன்றியது. காறித் துப்பினாலும் பரவாயில்லை அவளிடம் பேசி விட்டு உலகிலிருந்து விடைபெறத் தோன்றியது. அவளுக்குப் போன் செய்தான். “ஹலோ”
“என்னடா உன்னைப் பார்க்கவே முடியலை. போன்லயும் பேச மாட்டேங்கற. ரொம்ப பிசியா. இல்லை உடம்பு சரியில்லையா?”
ஹரிணி நட்பு மாறாமல் கேட்டதில் உடனே மணீஷின் கண்கள் ஈரமாயின. என்ன ஒரு நல்ல மனசிருந்தால் அவளால் இப்படிப் பேச முடியும்? குரல் அடைக்க மணீஷ் சொன்னான். “மனசு தான் கொஞ்சம் சரியில்லை ஹரிணி”
“ஏண்டா?”
அவன் என்னவென்று சொல்வான்? மனதார அவன் சொன்னான். “என்னை மன்னிச்சுடு ஹரிணி”
அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்பது ஹரிணிக்குப் புரிந்தது. அவன் தந்தையின் செய்கையால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியால் தான் இது வரை போனில் கூடப் பேசாமல் இருந்திருக்கிறான் என்பது புரிந்தது. உடனே அவள் கோபித்துக் கொண்டாள். ”லூஸு. ஃப்ரண்ட்ஸுக்குள்ள என்னடா மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்….”
அவளுடைய பெருந்தன்மை அவன் கண்களைக் குளமாக்கின. “உனக்கு என் மேல கோபம் இல்லையே ஹரிணி”
“நீ எப்பவுமே என்னோட நண்பன் தாண்டா. கோபம் இருந்திருந்தா நேர்ல வந்து ஓங்கி அறைஞ்சிருப்பேன். அதோட மறந்தும் இருப்பேன். அது தான் ஹரிணி” சொல்லி விட்டுச் சிரித்தாள்.
“க்ரிஷ் என்ன பண்றான்?”
“அவன் உலகம் தனி. ஏதோ யோசிக்கிறான். தியானம் பண்றான். படிக்கறான். தினமும் நாலு வார்த்தை பேசறதே அபூர்வமாய் இருக்கு. அவங்கம்மா அடிக்கடி அந்தக் கம்ப்யூட்டரை புஸ்தகங்களையும் கொளுத்திடறதா மிரட்டறப்ப மட்டும் வெளிய வந்து கொஞ்ச நேரம் இருக்கான். எனக்குன்னு வந்து எப்படி ஒருத்தன் வாய்ச்சிருக்கான் பாரேன்”
மேலும் சிறிது பேசினார்கள். கடைசியாக அவள் அவனை நேரில் ஒருமுறை வரச்சொன்னாள். சரி என்று சொல்லி விட்டுப் போனை வைத்த மணீஷ் “இனிமே நீ தான் என்னைக் கடைசியா ஒரு தடவை பார்க்க வரணும் ஹரிணி” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
ரணமான மனதிலும் கடைசியில் சிறிய ஆறுதல் தங்கியது. அவள் அவனை வெறுக்கவில்லை. அவனைக் குற்றப்படுத்தவில்லை. இன்னும் நண்பனாகவே அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள். காதல் என்ற நிலைக்கு உயர முடியா விட்டாலும் அவன் நட்பு என்ற நிலையிலிருந்து இறங்கி விடவில்லை…… ஹரிணி நிஜமாகவே நல்லவள். தங்கமானவள். “அடுத்த ஜென்மத்திலாவது என்னைக் காதலி ஹரிணி ப்ளீஸ்” என்று மனதில் சொல்லிக் கொண்டபடி தூக்க மாத்திரை டப்பாவை மணீஷ் எடுத்தான். மாத்திரைகள் ஒவ்வொன்றாக விழுங்க விழுங்க கடந்த கால நினைவுகள் ஒவ்வொன்றாய் மனதில் வந்து போனது….. கடைசியில் நினைவிழக்கும் வரை தங்கியது ஒரே முகம்… ஒரே நினைவு…. “ஹரிணி”
மணீஷின் தற்கொலையைக் கேள்விப்பட்டவுடன் பதறிப் போய் நேரில் முதலில் வந்து நின்ற கமலக்கண்ணனை மாணிக்கம் கண்ணீருடன் பார்த்தார். கமலக்கண்ணன் அவரைக் கட்டிக் கொண்டு அழுதார். ஹரிணி விஷயத்தில் மாணிக்கம் மீது ஏற்பட்டிருந்த கோபமும் பிணக்கும் மணீஷின் மரணத்தைக் கேள்விப்பட்டவுடனேயே அவருக்குக் காணாமல் போய் விட்டது. தன் மகனுடன் சிறு வயது முதல் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பிள்ளையாக மட்டுமே அவருக்கு மணீஷைப் பார்க்க முடிந்திருந்தது. அந்த மரணத்தில் ஒரே ஒரு மகனை இழந்து நிற்கும் நண்பனாகவே மாணிக்கத்தைப் பார்த்து அவர் மனமுடைந்தார். அவர் பின்னால் துக்கம் தாங்காமல் அழும் பத்மாவதியையும், கண்கலங்கி நிற்கும் க்ரிஷ், ஹரிணியையும் மாணிக்கம் வெறித்துப் பார்த்தார். உதய்க்கு அவர் மீது கோபம் இருந்தாலும் மணீஷைத் தன் தம்பி போலவே நினைத்து இருந்ததால் அங்கு வந்ததுடன் பார்வையாளனாக நிற்காமல் தற்கொலையை மாரடைப்பாக மாற்றி மீடியாவுக்கு வெளியிட சங்கரமணியுடன் சேர்ந்து ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான்.
சங்கரமணியும் பேரனின் மரணத்தால் மனம் உடைந்திருந்தாலும் மாணிக்கம் போலச் செயலற்றுப் போகவில்லை. இனி ஆக வேண்டியதைப் பார்க்கும் மனநிலையை அவர் தக்க வைத்துக் கொண்டிருந்தார். ஹைதராபாதிலிருந்து வந்திருந்த அவரது இரண்டாவது மகளையும் அவள் குடும்பத்தினரையும் முன்னிலைப்படுத்த அவர் முயன்று கொண்டிருந்தார். அவளுடைய பிள்ளைகளிடம் “இனிமே பெரியப்பாவுக்கு எல்லாம் நீங்கள் தான். அவனை நீங்க தான் பார்த்துக்கணும், ஆறுதல் சொல்லணும். பிள்ளைகளாய் இருக்கணும்” என்று சங்கரமணி சொல்லிக் கொண்டிருந்தது மாணிக்கத்தின் காதுகளில் நாராசமாக விழுந்து கொண்டிருந்தது. யாரும் அவருக்கு அவர் மகன் போல ஆகிவிட முடியாது…..
இந்தப் பாசாங்குகளுக்கு மத்தியில் கமலக்கண்ணன் – பத்மாவதியின் அழுகை கூட அவருக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. இருவரிடமும் கள்ளம் கபடம் இல்லை. வெளிவரும் கண்ணீர் நிஜமானது. நடிப்பல்ல. சற்று தள்ளி குரலடைக்க ஏதோ சொல்லிக் கொண்டிருந்த ஹரிணிக்கு க்ரிஷ் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் கண்கலங்கி வந்திருந்த க்ரிஷ் இப்போது அமைதி அடைந்திருந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்குத் தன் மகனை நினைக்காமல் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒரே வயது… ஒரே விதமான ஆரம்பம்…. ஆனால் முடிந்த விதம் மலையும் மடுவும். எப்போதுமே க்ரிஷ் கர்மாவைப் பற்றிப் பேசுவதைக் கேட்டிருக்கிறார். விதைத்ததை அறுவடை செய்ய வேண்டி வரும், அதனால் எதையும் யோசித்துச் செய்யுங்கள் என்று கமலக்கண்ணனிடம் அடிக்கடி சொல்வான். மகன் சொன்னதற்காகவே கமலக்கண்ணன் சிலதைச் செய்யாமல் தவிர்த்ததுண்டு, சில நல்ல காரியங்கள் செய்ததுண்டு….. எத்தனையோ மாறியதுண்டு. அதை ஏளனமாய் மாணிக்கம் கவனித்திருக்கிறார்...
மாணிக்கம் மகனின் சடலத்தைப் பார்த்தார். அவர் பார்வை அவரையும் அறியாமல் ஹாலில் பெரிதாய் தொங்கவிடப்பட்டிருந்த ராஜதுரை படம் மீதும் ஹரிணிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த க்ரிஷ் மீதும் போய் மறுபடி மகன் சடலத்தின் மீது விழுந்தது. அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை….
(தொடரும்)
என்.கணேசன்
As Krish reminded Karma plays its role. Feel pity for Manish and Manickam. Nice update.
ReplyDeleteஒரு சின்ன தப்புல ஆரம்பிச்ச விசயம் எங்க வந்து முடிஞ்சிருக்கு....?
ReplyDeleteராஜதுரையின் மரணத்தைவிட...மணீஷின் மரணம்...படிக்கும் போது துக்க வீட்டில் இருப்பது போல வருத்தத்தை வரவழைக்கிறது...
இறுதியில் மாணிக்கத்தின் பார்வை ராஜதுரையின் படத்திலிருந்து..ஆறுதல் சொன்ன கிரிஷ் வழியே போய் மணீஷின் சடலத்தில் தங்கியது...அருமையான குறிப்பு...மகனை இழந்த தந்தை...சகுனி மாமாவின் மனநிலையை அப்படியே கொண்டுவந்து விட்டீர்கள்...
தற்கொலை செய்யும்போது இருக்கும் மனநிலை மற்றும் சிந்தனை எப்படி இருக்கும்...? என்பதை அப்படியே கண்முன் கொண்டிவந்துவிட்டீர்கள் ஐயா...!!!
"தங்கிய ஒரே முகம்..ஒரே நினைவு 'ஹரிணி' " இப்படிதான் இருக்குமோ..?
👏👏👏👏👏👏
Twisted turning..
ReplyDelete