சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 18, 2019

சத்ரபதி – 64


திரி எத்தனை தான் வலிமையானவனும், திறமையானவனுமாக இருந்தாலும் கூட அவன் முழுக்கவனம் வேறெங்கேயோ இருக்கும் பட்சத்தில் அவனிடம் பயம் கொள்ளத் தேவையில்லை என்று புத்திசாலித் தனமாக நினைத்தான் சிவாஜி. முன்பு அவன் தந்தை வசமிருந்து தற்போது முகலாயர் வசம் இருக்கும் ஜுன்னார் மற்றும் அகமதுநகரைத் தனக்குத் தர அவன் முன்பே சக்கரவர்த்தி ஷாஜஹானைக் கேட்டிருந்தான். தலைநகருக்கு அவன் வரும் போது அதற்கான ஆதாரங்களை எல்லாம் தரும் படியும் பின்பு முடிவெடுப்பதாகவும் ஷாஜஹான் கூறியிருந்தார். இப்போது ஔரங்கசீப்பின் முழுக்கவனமும் முகலாயத் தலைநகர் பக்கம் இருப்பதால் சிவாஜி சத்தமில்லாமல் அந்தப் பகுதிகளை முற்றுகை இட்டான். ஜுன்னார் பெருஞ்செல்வம் மிக்க நகரம். அந்தச் செல்வத்தை அவன் எளிதாகக் கைப்பற்றினான். ஆனால் அடுத்ததாக அகமதுநகரை நோக்கி அவன் செல்லும் முன் தகவல் கிடைக்கப்பட்ட ஔரங்கசீப் ஒரு வலிமையான படையை விரைவில் அனுப்பி வைத்தான். சிவாஜி அகமதுநகரை ஆக்கிரமித்திருக்கும் போது முழுமையாக அந்தச் செல்வத்தைக் கைப்பற்ற முடியாமல் பாதியில் ஔரங்கசீப் அனுப்பி வைத்த முகலாயப்படை அங்கே வந்து சேர்ந்தது. அதனால் கிட்டத்தட்டப் பாதிச் செல்வத்தை மட்டுமே கைப்பற்றி இருந்த சிவாஜி அதை எடுத்துக் கொண்டு அங்கிருந்து படையுடன் வேகமாகப் பின்வாங்கினான்.

திரும்பி வந்தவுடன் சிவாஜி முதல் வேலையாக ஔரங்கசீப்புக்கு ஒரு கடிதம் எழுதினான். “……. ஜுன்னார், மற்றும் அகமதுநகர் ஒரு காலத்தில் என் தந்தையினுடையதாக இருந்தது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அந்த இரு இடங்களின் உரிமை கோரி சக்கரவர்த்திக்கு முன்பே நான் மடலும் அனுப்பி இருந்தேன். அது குறித்து எதுவும் இன்னமும் முடிவெடுக்கப்படாத நிலையில் மேலும் பொறுக்க முடியாமல் நான் எனக்குச் சொந்தமான அப்பிரதேசங்களின் செல்வத்தைக் கைப்பற்ற முயற்சித்தேன். எல்லாம் முடிந்து திரும்புகையில் தங்கள் அனுமதி வரும் வரை கூடக் காத்திருக்க முடியாத என் செயலுக்கு நான் வருத்தப்பட்டேன். செயல் புரிவதற்கு முன்பு யோசிப்பதற்குப் பதிலாக பின்னர் வருத்தப்படுவதில் எந்தப் பலனும் இல்லை என்றாலும் உடனே என் வருத்தத்தை உங்களிடம் தெரிவிப்பதில் மனச்சமாதானம் பெறுகிறேன். செய்த தவறுக்கு மன்னிப்பைக் கோரி, இனி இப்படி நடக்காது என்ற உத்தரவாதத்தையும் தரும்-

தங்கள் சேவகன் சிவாஜி”



சிவாஜியின் கடிதம் சென்று சேர்வதற்குச் சற்று முன்னதாகத் தான் ரோஷனாராவின் கடிதம் ஔரங்கசீப்பை அடைந்திருந்தது. ரோஷனாரா எழுதியிருந்தாள்.

“நான் அளவில்லா பாசம் கொண்டிருக்கும் என் உடன்பிறந்த தம்பிக்கு,

நாம் பயந்து கொண்டிருந்தது நடந்தே விட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சக்கரவர்த்திக்கு உடல்நிலை மிக மோசமாகி விட்டிருப்பதாக வதந்திகள் உலாவருகின்றன. தர்பாருக்கு அவர் வந்து பலநாட்களாகி விட்டன. நானும் அவரைச் சந்திக்க முடியவில்லை. ஷாஜஹானாபாத் மாளிகையில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். தாரா ஷிக்கோவ் இப்போது இங்கு தான் இருக்கிறான். அவனையும் பாதுஷா பேகத்தையும் தவிர யாரும் சக்கரவர்த்தியை நெருங்க முடியவில்லை. பணியாளர்கள் மூலமாக அவர் உடல்நிலை எந்த அளவில் இருக்கிறது என்று அறிய நான் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. யாரும் வாயைத் திறக்க மறுக்கிறார்கள். ஒருவேளை சக்கரவர்த்தி காலமாகி விட்டு, அதை வெளியே தெரிவிக்க தாரா ஷிக்கோவ் மறுக்கிறானா என்றும் தெரியவில்லை. ஒருவேளை அரியணையில் அமர்ந்து கொண்ட பிறகு அறிவிக்கும் உத்தேசமும் அவனுக்கு இருக்கலாம் என்று தோன்றுகிறது…..”

ஔரங்கசீப் பேரபாயத்தை உணர்ந்தான். இனியும் இங்கே தங்குவது முட்டாள்தனம் என்று அவனுக்குப் புரிந்தது. அந்தச் சமயத்தில் தான் சிவாஜியின் கடிதம் அவனைச் சென்றடைந்தது.  சிவாஜியின் செயல்கள் அவனைக் கோபமூட்டினாலும் அவன் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க ஔரங்கசீப்பிடம் அவகாசம் இருக்கவில்லை. சிவாஜிக்கு எந்தப் பதிலையும் அவன் எழுதவில்லை. அவனைக் காக்க வைத்து விட்டுப் பின் முடிவெடுக்கலாம் என்று எண்ணினான். சஹானாராவின் இதற்கு முந்தையை கடிதமும் தலைநகரில் நிலவும் அபாயச் சூழ்நிலையையே தெரிவித்திருந்ததால் இரண்டு நாள் முன்பு தான் பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷாவிடம் ஒரு பெருந்தொகையை அபராதத் தொகையாய் உடனடியாகச் செலுத்தும் படியும் இல்லாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தான். என்ன கேட்டாலும் தரத் தயாராக இருந்த அலி ஆதில்ஷா சிறிதும் கால தாமதம் செய்யாமல் அந்தப் பெருந்தொகையை அனுப்பி வைத்ததால் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டு ஔரங்கசீப் அவசர அவசரமாகத் தலைநகர் நோக்கிப் புறப்பட்டான்.

ஔரங்கசீப்பைப் போலவே மற்ற சகோதரர்கள் ஷா ஷூஜா வங்காளத்திலிருந்தும், முராத் குஜராத்திலிருந்தும் தலைநகர் நோக்கி விரைந்தார்கள். தகவல் கிடைத்த சக்கரவர்த்தி ஷாஜஹான் தனிமையில் இருந்து வெளியே வந்து தான் உயிருடன் இருப்பது மட்டுமல்லாமல் பூரண வலிமையுடன் தான் இருப்பதாகவும் அறிவித்து விட்டு கடைசி மகன்கள் மூவரையும் அவரவர் இடங்களுக்குத் திரும்பச் செல்லும்படி கட்டளையிட்டார்.

தந்தை திரும்ப வந்ததிலும், கட்டளை பிறப்பித்ததிலும் மகன்கள் மூவருக்கும் உடன்பாடு இருக்கவில்லை. பதவியை நோக்கிச் செல்லும் வழியில் வருகிற தடங்கலை எல்லாம் ஒரு பொருட்டாக அவர்கள் நினைக்காமல் முன்னேறிச் செல்ல யுத்தங்கள் ஆரம்பமாக ஆரம்பித்தன.


லி ஆதில்ஷா பல காலம் கழித்து ஒரு பாதுகாப்பை உணர்ந்தான். அவன் தந்த தொகையை ஏற்றுக் கொண்ட ஔரங்கசீப் தக்காணத்திலிருந்து போகும் வரை ஒவ்வொரு கணமும் உயிரையும், ராஜ்ஜியத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயம் அவனைப் பற்றிக் கொண்டே இருந்தது. முகலாயத் தலைநகர் சூழல் மாறியிருக்கவில்லை என்றால் அவன் இன்னேரம் இரண்டில் ஒன்றையோ, இரண்டையுமேயோ இழந்திருக்கலாம்… 

அவனையும், அவன் தாயையும் காண வந்த அப்சல்கானிடம் அவன் முகலாயத் தலைநகரின் தற்போதைய நிலவரத்தைக் கேட்டான். “இப்போது தான் தகவல் கிடைத்திருக்கிறது அரசே. சக்கரவர்த்தியின் படை இரண்டாம் மகன் ஷா ஷூஜாவின் படையைத் தோற்கடித்து விட்டதாம். ஷா ஷூஜா உயிருக்குப் பயந்து தப்பியோடி இருப்பதாகத் தெரிகிறது…..”

அலி ஆதில்ஷா தன் நிலையையும், ஷா ஷூஜா நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அலி ஆதில்ஷா தந்தைக்கு ஒரே மகன். அப்படியும் பாதுகாப்பாக அரசாள முடியவில்லை. ஷா ஷுஜா சக்தி வாய்ந்த முகலாயச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மகன். பதவிக்கு ஆசைப்பட்டதால் அவனும் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. உயிருக்குப் பயந்து எங்கேயோ ஓடிப்போய் விட்டான்…..

மகனின் பெருமூச்சைப் பார்த்து அவன் தாய் கேட்டாள். “என்ன யோசிக்கிறாய் மகனே?”

“அரச குடும்பத்தில் பிறந்தாலும் ஒருவனுக்கு விதி அனுகூலமாக இல்லா விட்டால் தீராத பிரச்னை தான். யோசித்துப் பார்த்தால் சாதாரணமான குடிமகன் அதிர்ஷ்டக்காரன் போல் தோன்றுகிறது தாயே. அரண்மனை சுகங்கள் அவனுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் ஒவ்வொரு கணமும் உயிருக்குப் பயந்து வாழத் தேவையில்லையே…”

”உண்மை தான் மகனே. ஆனால் சாதாரணக் குடிமகனால் என்றைக்கும் ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை. நாம் கஷ்ட காலங்களைக் கடந்து விட்டோமானால் பின் குறைவில்லாத சந்தோஷத்தை அனுபவித்து வாழலாம். அதை மறந்து விடாதே. இப்போது நாமும் கஷ்ட காலத்தைக் கடந்து விட்டோம். இனி நீ ஆக வேண்டிய காரியங்களை யோசிக்க வேண்டும்….”

அப்சல்கான் சொன்னான். “முக்கியமாய் சிவாஜி. ஔரங்கசீப் போன பிறகு அவன் இப்போது நம்முடைய கொண்கன் பிரதேசத்தின் சில பகுதிகளைப் பிடித்து விட்டான்…”

அலி ஆதில்ஷாவின் தாய் உடனடியாகச் சொன்னாள். “ஆம் மகனே. அவனை அடக்கி வைக்க வேண்டும், அல்லது முடித்து விட வேண்டும். இல்லா விட்டால் அவனிடம் நம் ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு பகுதியாக இழக்க வேண்டி வரும்….”

அலி ஆதில்ஷா இருவரையும் பார்த்துக் கேட்டான். “என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?”

அப்சல்கான் சொன்னான். “அடக்கி வைக்க வேண்டும் என்றால் அன்று செய்தது போல் அவன் தந்தை ஷாஜாஜியைக் கைது செய்ய வேண்டும். இப்போது சிவாஜி முகலாயர்களுக்குச் சொந்தமான ஜுன்னார், அகமது நகர் இடங்களில் கொள்ளையடித்து விட்டிருப்பதால் அவன் உதவிக்கு முகலாயர்கள் வர மாட்டார்கள். மேலும் அவர்களுக்குள்ளேயே நிறைய பிரச்னைகள் வேறு இருக்கின்றன. அவர்களுக்கு அடுத்தவர்களைக் கவனிக்கக் கூட நேரமில்லை….”

அலி ஆதில்ஷா உறுதியாகச் சொன்னான். “ஷாஹாஜி அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று தந்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவர் நமக்கு எதிராக இயங்க மாட்டார் என்றும் கர்னாடகத்தைப் பிரச்னை இல்லாமல் கவனித்துக் கொள்ள அவருக்கு இணையான ஆட்கள் நம்மிடம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்.”

அப்சல்கானும், அலி ஆதில்ஷாவின் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பெரும்பாலும் குழப்பத்தில் இருக்கும் அலி ஆதில்ஷா ஒருசில விஷயங்களில் உறுதியாகவும் இருக்க முடிந்தவன்.

அப்சல்கான் சொன்னான். “அப்படியானால் சிவாஜியைச் சிறைப்பிடிப்பதோ, கொல்வதோ தான் ஒரே வழி. அவனை அலட்சியப்படுத்த முடியாது. வேகமாக வளர்ந்து வரும் விஷ விருட்சம் அவன். அவன் பரவும் இடங்களில் மற்றவர்கள் யாரும் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் இருக்க முடியாது”

“அதை எப்படிச் செய்யலாம். யாரை அனுப்பலாம்?” அலி ஆதில்ஷா கேட்டான்.

“அடியவனை ஒரு பெரும்படையுடன் அனுப்பி வையுங்கள் அரசே, அவனை உயிரோடோ, பிணமாகவோ கொண்டு வந்து உங்கள் காலடியில் போடுகிறேன்” அப்சல்கான் அடக்க முடியாத வெறுப்புடனும், பெரும் உறுதியுடனும் சொன்னான்.

அலி ஆதில்ஷா சம்மதித்தான்.    


(தொடரும்)

என்.கணேசன்

3 comments:

  1. Brilliant Sivaji. He used every situation to his advantage. Eager to know how he is going to face Afzal khan.

    ReplyDelete
  2. அப்சல்கானை விதி அழைக்கிறது..

    ReplyDelete
  3. முகலாயர்களின் பிரச்சனை.... இப்போது நம் நாட்டில் உள்ள அரசியல் சூழலுடன் ஓரளவு ஒத்துப் போகிறது...
    'எப்போதுமே அரசியல் என்றால் ஒரே செயல் தான்..காலம் மட்டும் தான் வேறு,வேறு போல'...

    ReplyDelete