சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 21, 2019

இருவேறு உலகம் – 124



மாஸ்டருக்கு விஸ்வம் போய்க் கொண்டிருந்த மலைப்பகுதியைக் கண்டுபிடிக்க நிறைய காலம் தேவைப்படவில்லை.  காரணம் விஸ்வம் போய்க் கொண்டிருந்த மலைக்குப் பின்புற மலையில் மாங்கனி போல் தனியாகத் தெரிந்த ஒரு பகுதி. அது விஸ்வத்தைத் தாண்டி அவர் பார்வையில் விழுந்திருந்தது. விஸ்வத்தோடு அவன் இணைந்திருந்த காட்சியும் அவர் பார்வையில் இருந்து மறைந்து போனாலும் அந்த மாங்கனி போல் தனியாக நீட்டியிருந்த மலைப்பகுதி அவர் மனத்திரையில் பதிந்திருந்தது. அவர்கள் இயக்கத்தின் பல உறுப்பினர்கள் இமயமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது அங்கு அடிக்கடி பயணிப்பவர்கள்…. சிலரிடம் போனில் பேசியதிலேயே அந்த வித்தியாசமான மலைப்பகுதி எங்கே இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. அதற்குப் பக்கத்து மலை ஏற எங்கே எப்படிப் போக வேண்டும் என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு விட்டு அவர் உடனே கிளம்பினார்.  

எவ்வளவு வேகமாகப் போனாலும் அந்தப் பகுதியை அடைய குறைந்த பட்சம் ஒரு நாள் ஆகி விடும் என்பதால் அவர் செல்கையில் விஸ்வம் அங்கே அகப்பட வாய்ப்பே இல்லை. காளி  கோயிலுக்கு முந்தியது போலவே இந்தத் திரிசூலம் இருக்கும் கோயிலுக்கும் விஸ்வமே முந்திக் கொண்டதை நினைக்கையில் கசந்தது. ஆனால் எல்லாக் கசப்பான அனுபவங்களும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் வருகின்றன என்று அவர் நினைவுபடுத்திக் கொண்டார். அந்தக் கசப்பான அனுபவங்கள் இல்லா விட்டால் சில பாடங்கள் படிக்க முடியாது. அந்தப் பாடங்கள் படிக்காமல் அடுத்த ஞானநிலைக்கு உயர முடியாது. எனவே எல்லா கசப்பான அனுபவங்களும் அடுத்த உயர்வுக்கே என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். ஆனாலும் அந்த மனக்கசப்பு குறைந்து விடவில்லை…

அவர் ரிஷிகேசத்தில் இருந்து ஜீப்பில் இருபது மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. அதன் பின் அந்த மலையடிவாரத்தில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மலையேற ஆரம்பித்தார். இப்போதும் உடல் வலிமை மாஸ்டருக்குக் குறைந்து விடவில்லை என்ற போதும் அவரால் விஸ்வத்தின் அளவு மிக வேகமாக மலையேற முடியவில்லை. முடிந்த வரை வேகமாக ஏறினார். பக்கத்து மலை மாங்கனிப் பகுதி அவர் கண்பார்வைக்குச் சரிமட்டத்தில் வர ஐந்து மணி நேரம் தேவைப்பட்டது. மேலும் சில அடிகள் போன பிறகு திரிசூலமும், கருப்புப் பாறையும் கண்ணுக்குத் தெரிந்தது. அதன் மேலே இருந்த பனியை விலக்கி இருக்கிறார்கள்…. பரபரப்புடன் மாஸ்டர் அந்தத் திரிசூலத்தை நோக்கி நடந்தார். அங்கே நெருங்க நெருங்க சக்தி வாய்ந்த ஆன்மிக அலைகளை அவர் உணர ஆரம்பித்தார். யோகிகள் சித்தர்கள் இருந்த இடத்தில் தான் இப்படிப்பட்ட சக்தியலைகளை உணர முடியும். இது வரை திரிசூலம் மேலே நடப்பட்ட ஏதோ சிறு கோயில் பகுதி மட்டுமே என்று நினைத்திருந்த மாஸ்டருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அருகே சென்ற போது அந்தத் திரிசூலத்திற்குக் கீழே குகைத் துவாரம் தெரிந்தது.

அந்தக் குகையிலிருந்து சக்தி அலைகள் முழுவீச்சில் வெளிப்பட்டதை உணர்ந்த மாஸ்டர் மெய்சிலிர்த்து அதன் வாசலிலேயே மண்டியிட்டு வணங்கி விட்டு தான் உள்ளே சென்றார். உள்ளே ஒரு தவசி படுத்த நிலையில் அசைவற்று இருந்தார். அவர் இடது கைப்பிடியில் ஒரு கம்பளித்துணி  இருந்தது. நெருங்கிச் சென்று பார்த்த போது அவர் இறந்து போயிருந்தது தெரிந்தது. அவரது மெலிந்த உடலில் இடுப்பில் ஒரு காவித்துணி மட்டுமே இருந்தது. அந்தத் தவசி ஒரு வெள்ளைக்காரர் என்பதைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. அவர் முகத்தில் அசாதாரணமான அமைதியும் நிறைவும் தெரிந்தது. உயர்வான வாழ்க்கையை முறையாக வாழ்ந்து விட்டுப் போன திருப்தியோ? மாஸ்டர் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

வெளியில் இருக்கும் கடுங்குளிருக்கு  எதிர்மாறாக குகையில் நிலவிய லேசான வெப்பம் இதமாக இருந்தது. உள்ளே ஒளிர்ந்த மங்கலான ஒளி இந்த தவசியின் தவவலிமையின் பலனாகவே இருக்க வேண்டும். அவர் மறைந்தாலும் இந்த மங்கலான ஒளியும், இங்கு நிறைந்திருந்த சக்தி அலைவீச்சும் குறையாமல் இருப்பதே அவருடைய தவ மகிமைக்கு அத்தாட்சி என்று தோன்றியது.  ஒரு வளர்பிறை சப்தமி நாளில் கிடைத்த அந்த வரைபடம் இங்கிருக்கும் ஏதோ ஒன்றுக்காகத் தான் அவர் கையில் கிடைத்திருக்கிறது. இந்த இறந்த மனிதரா, இல்லை இந்தக் குகைக்குள் இருக்கும் ஏதோ ஒன்றா?

மாஸ்டர் அந்தக் குகையை நிதானமாக ஆராய்ந்தார். சிறிய குகை தான். அங்கே பொருட்கள் எதுவுமில்லை. குகைச் சுவரில் ஓரிடத்தில் ஒரு முகம் செதுக்கப்பட்டிருந்தது. நெற்றியில் ஒரு சிறு முக்கோண அளவுக்கு துளை தெரிந்தது. முகத்தில் இருந்த கண்கள் பாதி மூடிய தியான நிலையில் இருந்தன. சிவனின் யோக நிலையைப் பிரதிபலிக்கும் முகம். முகத்தில் பேரமைதி. பெரும் சாந்தம். நெற்றிக்கண் இருக்கும் இடத்தில் துளை ஏன் என்பது தெரியவில்லை. முதலில் இருந்து பின் அது எடுக்கப்பட்டிருக்கிறதோ? விஸ்வம் அதைக் கொண்டு போயிருக்கக்கூடுமோ? மெல்ல அந்த நெற்றித் துளையை விரலால் மாஸ்டர் வருடினார். பெரும் சக்தி வீச்சை விரல் உணர்ந்தது. கண்டிப்பாக நேற்று வரை இந்த இடத்தில் அந்த நெற்றிக்கண் இருந்திருக்க வேண்டும்…..

மாஸ்டர் யோசித்தார். கண்டிப்பாக விஸ்வம் உளியால் தட்டி அதைப் பிரித்து எடுத்துக் கொண்டு போயிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் துளையில் கரடுமுரடு இல்லை. அந்த நெற்றிக்கண் முன்பே பொருத்தி வைக்கப்பட்டு தான் இருக்க வேண்டும். முக்கோண வடிவுக்குள் நெற்றிக் கண் மிகவும் பிரபலமான சக்திச் சின்னம். அமெரிக்க டாலரில் கூட அந்தச் சின்னம் இருப்பதாகவும், அது இல்லுமினாட்டியின் சின்னம் என்றும் யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறார். விஸ்வம் இல்லுமினாட்டிக்குப் பணம் அனுப்பி இருக்கிறான். இப்போது அந்தச் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு போய் இருக்கிறான். அவனுக்காகவே அது காத்திருந்ததோ? இல்லை அவர்கள் இயக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த சின்னத்தை அவன் எடுத்துக் கொண்டு போய் விட்டானா? இரண்டாவது சாத்தியக்கூறை நினைக்கையில் அவர் மனம் பதைத்தது. ’நான் ஏமாந்ததற்கான தண்டனையா இது குருவே’ என்று மனதிற்குள் அவர் கதறினார். மேலும் தேடிப்பார்த்தார். அங்கே வேறு வித்தியாசமான பொருட்களோ வேறு எதாவது சிற்பமோ, சின்னமோ இருக்கவில்லை…. மனம் வேதனையை உணர்ந்தது. சிவனின் யோகநிலை முகச்சிற்பத்தைப் பார்த்தார். நெற்றியில் துளையோடு இருப்பது பெரும் குறையாகப் பட்டது. அவர் முதலில் வந்திருந்தாலும் அந்த நெற்றிக் கண்ணை எடுத்துச் சென்றிருக்க மாட்டார். எடுக்க முடிந்தது என்று தெரிந்தாலும் அந்த சிலையை ஊனப்படுத்திக் கொண்டு போய் எதைச் சாதிக்க முடிந்தாலும் அதைச் செய்ய அவர் மனம் ஒத்துக் கொண்டிருக்காது. அந்த சிவனையும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய மாஸ்டர் அந்தத் தவசியின் சடலத்தை முறையாகப் புதைத்து விட்டுச் செல்வது தான்  அவருக்குத் தரும் மரியாதை என்று நினைத்தார். கையில் இருந்த கம்பளித் துணியை மெல்ல இழுத்தார். கையோடு கம்பளித்துணி வந்தது. ஆனால் அதைத் தொட்டவுடன் அவர் உடல் ஒரு கணம் கூசியது. இது விஸ்வத்தின் கம்பளித்துணி என்று உணர்ந்தார். முன் மனக்கண்ணில் கண்ட காட்சியை நினைவுபடுத்திப் பார்க்கையில் இந்தத் துணி அவன் இடுப்பைச் சுற்றி இருந்ததை அவரால் மறுபடி பார்க்க முடிந்தது. அந்தத் துணியை மடித்து ஓரத்தில் வைத்து அந்தத் தவசியைச் சுமந்து கொண்டு வெளியே வந்தார். தவசி மிக லேசாக இருந்தார். பிணக்கனம் என்று சொல்வது இவர் விஷயத்தில் உண்மையில்லை…..

அந்தத் தவசியின் உடலை குகைக்கு அருகிலேயே இருந்த சற்று தட்டையான அகலமான இடத்தில் பனியை விரல்களாலேயே தோண்டி பள்ளத்தை ஏற்படுத்தி விட்டுப் புதைத்து அந்தப் பனியை மறுபடி மூடினார். உறைபனியைத் தோண்டியதால் அவர் கைகளில் காயமாகி ரத்தம் கசிந்து வெள்ளைப் பனியோடு சிவப்பு நிறமும் கலந்தது. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.  மண்டியிட்டு அவர் வணங்கி நிமிர்ந்த போது மேலே ஒரு கருப்புப் பறவை வட்டமிட ஆரம்பித்தது. மூன்று முறை வட்டமிட்ட பின் அந்தப் பறவை அந்த சமாதியில் அமர்ந்தது. மெய்சிலிர்த்துப் போன மாஸ்டர் கைகளைக் கூப்பினார். அவர் பார்த்த அந்த வரைபடத்தில் பார்த்த பறவை இது தானோ? அந்தப் பறவை ஒரு நிமிடம் அமைதியாக அவரையே பார்த்தது. பின் பறந்து போய் விட்டது. உயர உயரப் பறந்த அது கண்பார்வையில் இருந்து மறையும் வரை மாஸ்டர் பார்த்துக் கொண்டே இருந்தார். அது வந்து போனது ஏதோ ஒரு வகை ஆசிர்வாதம் போல மனம் உணர்ந்தது. மறுபடி பார்வையைக் கீழிறக்கிய போது ஒரு கணம் சிலையாய் அவர் உறைந்தார். அந்த சமாதியின் மேல் முக்கோண வடிவக்கல் இருந்தது. அதன் நடுவே நெற்றிக் கண் இருந்தது. கிட்டத்தட்ட அந்தச் சிவனின் நெற்றிக்கண் பகுதியில் ஏற்பட்டிருந்த துளையின் அளவே அது இருந்தது. அந்தப் பறவை கொண்டு வந்து வைத்து விட்டுப் போயிருக்க வேண்டும். உடலும் மனமும் சிலிர்த்தது…. மாஸ்டர் மெல்ல அந்த நெற்றிக்கண் கல்லைக் கையில் எடுத்தார்.

(தொடரும்)

என்.கணேசன் 

2 comments:

  1. Felt as if I am with Master and felt tension and wonder.

    ReplyDelete
  2. மாஸ்டர் வந்து சென்றதற்க்கும்... விஸ்வம் வந்து சென்றதறக்கும்... எவ்வளவு வித்தியாசங்கள்..?
    விஸ்வம் இழுத்தும் வராத கம்பளி...மாஸ்டர் கை பட்டதும் நழுவி விட்டதே...!!!
    மாஸ்டர் அந்த நெற்றக்கண்ணை எடுத்து செல்வரா? இல்லை சிலையிலே பொருத்தி விடுவரா???

    ReplyDelete