சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 9, 2018

இருவேறு உலகம் – 95

ரிணி காணாமல் போனதை கிரிஜா அக்கம்பக்கத்தினருக்குத் தெரிவிக்கவில்லை. திருமணமாக வேண்டிய பெண் என்றால் ஒரு தாய்க்கு எத்தனையோ யோசிக்க வேண்டி இருக்கிறது. அனாவசியக் கேள்விகள், வம்புப் பேச்சுக்கள் என்று ஊர் வாய் எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கும். அவள் திரும்பி வந்தாலும் ஊர் வம்பு வேறுபல பிரச்னைகளைக் கிளப்பி விடும் என்ற எண்ணத்தில் அவள் எச்சரிக்கையாக இருந்தாள். ஆனால் மகள் வராமல் கடிகார முட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் தனிமையில் உட்கார்ந்து கொண்டிருப்பது கொடுமையானது என்று அவள் உணர்ந்தாள். சொல்லி அழவாவது நேசிக்கும் ஒரு ஜீவன் இது போன்ற சூழ்நிலைகளில் இருந்தால் அதுவே பெரிய ஆசுவாசமாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. நல்ல வேளையாக கடவுளே அனுப்பியது போல் உதயும் பத்மாவதியும் நள்ளிரவில் அங்கு வந்து சேர்ந்தார்கள். பத்மாவதியைப் பார்த்ததும் துக்கம் பீறிட அவளைக் கட்டிக் கொண்டு கிரிஜா அழுதாள். “ஒன்னும் கவலைப்படாதீங்க. ஹரிணி பத்திரமா வந்து சேர்வாள்” என்று பத்மாவதி உறுதியாகச் சொன்னாள். தைரியம் சொல்வது வேறு, உறுதியாகத் தெரிந்து சொல்வது வேறு. பத்மாவதி இரண்டாவது வகையில் சொன்னது கிரிஜாவை ஆச்சரியப்படுத்தியது.

உதய் கேட்டான். “யாராவது போன் பண்ணினாங்களா?”

”இல்லை” என்று கிரிஜா கவலையோடு சொன்னாள்.

பத்மாவதி கிரிஜாவிடம் மஞ்சள் துணி எதாவது இருக்கிறதா என்று கேட்டாள். கிரிஜாவுக்கு அவள் ஏன் கேட்கிறாள் என்று புரியவில்லை. ஆனால் எடுத்துக் கொடுத்தாள். பத்மாவதி அந்தத் துணியை மூன்றாய் கிழித்தாள். தன் பர்ஸில் இருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளையும் மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்களையும் எடுத்து மூன்று நூற்றி ஒரு ரூபாய்களாக மூன்று துணிகளிலும் வைத்துக் கட்டினாள். பின் “சாமி ரூம்” இருக்கா என்று கேட்டாள்.

கிரிஜா “அலமாரியில தான் நாங்க சாமி படம் வச்சிருக்கோம்” என்று சொல்லிக் காட்டவே அந்த அலமாரியில் இருந்த கடவுள்களைக் கண்மூடிக் கும்பிட்டு அந்த மூன்று மஞ்சள் துணிகளையும் வைத்து விட்டு பத்மாவதி திரும்பினாள். “ஒன்னும் கவலைப்படாதீங்க. கடவுள் கிட்ட விஷயத்தை வச்சாச்சு. அவர் பார்த்துக்குவார்”

உதய்க்கு அந்த நேரத்திலும் சிரிப்பை அடக்கக் கஷ்டமாய் இருந்தது. அம்மாவின் உலகம் எளிமையானது. எல்லாவற்றையும் சரிசெய்ய அவளுக்குக் கடவுள் இருக்கிறார். அவர் சரி செய்வார் என்ற நம்பிக்கை அவளுக்குப் பரிபூரணமாய் இருக்கிறது. அதற்கு மேல் அவள் சிந்திப்பதில்லை…..

உறுதியாக நம்பிக்கை சொன்ன பத்மாவதியிடம் கிரிஜாவுக்கு அழத்தான் தோன்றியது. “உங்க அளவு தைரியம் எனக்கு வரமாட்டேன்கிறது” என்று அழுது கொண்டே சொன்னாள்.

“அது உங்க தப்பில்லை. தாய் மனசு அந்த மாதிரி. க்ரிஷ் காணாமல் போனப்ப நானும் உங்க மாதிரி தான் உடைஞ்சு போனேன். அழுதேன். கடவுள் மேல எல்லா பாரத்தையும் போட்டேன். அவன் காப்பாத்தி என் பிள்ளையைத் திருப்பிக் கொடுத்தான்….. அப்புறம் தான் நம்பிக்கை வலுவாச்சு. இனிமே அவன் காணாமல் போனாலும் நான் அவ்வளவா பயப்பட மாட்டேன்….”

வெகுளியாய் பத்மாவதி சொல்ல கிரிஜா அந்தத் துக்கத்தினூடேயும் எழுந்த புன்னகையை அடக்கிக் கொண்டாள். உதய் தாயை முறைத்தான். அப்போது தான் தன் பேச்சின் தவறு பத்மாவதிக்குத் தெரிந்தது. கன்னத்தில் தட்டிக் கொண்டபடி சொன்னாள். “இன்னும் யாரும் காணாமல் போக வேண்டாம். நான் சொல்ல வந்தது என்னன்னா என் பையன் திரும்பி வந்த மாதிரி ஹரிணியும் திரும்பி வந்துடுவா. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அவ திரும்பி வந்தவுடனே வேண்டிகிட்ட மூணு கோயில்களோட உண்டியல்ல இந்த மஞ்சத் துணியோட காசைப் போட்டுடணும். அதை நானே போய் என் கையால போட்டுடுவேன்… நீங்க கவலைப்படாதீங்க…”

ஹரிணி பல முறை கிரிஜாவிடம் பத்மாவதியைப் புகழ்ந்திருக்கிறாள். “ஸோ ஸ்வீட்” என்று சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் க்ரிஷின் தாய் ஆனதால் புகழ்கிறாள் என்று தான் கிரிஜா நினைத்திருக்கிறாள். முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் போது பத்மாவதி பேசிய விதத்தில் அவளுக்கும் பிடித்துப் போயிருந்தது. ஆனால் இப்போதோ அந்த “ஸோ ஸ்வீட்”டின் அர்த்தம் பூரணமாகப் புரிந்தது.

பத்மாவதி உதயிடம் சொன்னாள். “உன் தம்பிக்கு ஒரு போன் போடு”

“எதுக்கு? அவனும் இப்பவே கவலைப்பட ஆரம்பிக்கவா? வரட்டும். பின்னே சொல்லிக்கலாம்”

“அதுக்கில்லைடா. அவன் ஆராய்ச்சி எதையாவது இவ கிட்டயும் சொல்லி இவளும் அவன் மாதிரியே எங்கயாவது ஆராய்ச்சிக்குப் போயிருப்பாளோ…”

“உன் சின்னப் பையன் மாதிரி லூஸாய் யாருமே நடந்துக்க மாட்டாங்க. சும்மா இரு”

க்ரிஷை லூஸ் என்று அவன் சொன்னதில் சின்னக் கோபம் வந்தாலும் அவன் சொன்னதில் தவறில்லை என்றே அவளுக்கும் தோன்றியது. அவள் மகன் மாதிரி விசித்திரமாய் யாரும் நடந்து கொள்ள மாட்டார்கள்.

“ஏண்டா. மாஸ்டர் சுவாமியைப் போய் பார்த்தா என்ன?”

“அப்பவே போன் செஞ்சுட்டேன். அவர் திருவனந்தபுரம் போயிருக்காராம். நாளைக்குக் காலைல தான் வருவார்…… காலைல அவர் கிட்ட போலாம்” என்று சொன்ன உதய் பத்மாவதியை கிரிஜாவின் துணைக்கு விட்டு விட்டு அவன் மட்டும் வீட்டுக்குக் கிளம்பினான். போவதற்கு முன் கிரிஜாவிடம் சொன்னான். “யாராவது போன் பண்ணிப் பேசினா முழுசும் கேட்டுக்கோங்க. எதாவது வேணும்னு கேட்டா எதையும் மறுக்காதீங்க. சரின்னு மட்டும் சொல்லுங்க”

கிரிஜா பரிதாபமாய்த் தலையசைத்தாள். உதய் போன பிறகு பத்மாவதி மாஸ்டர் சுவாமியைப் பற்றி அவளிடம் சொல்ல ஆரம்பித்தாள். “அவரு ஒரு மகான்….. என் பிள்ளை காணாமல் போனப்ப அவன் எங்க இருக்கான்னு அவருக்கு முதல்லயே தெரிஞ்சு போச்சு. சில நாள்ல வருவான் கவலைப்படாதீங்கன்னு சொல்லி என் வயித்துல பால் வார்த்தார். அப்படியே க்ரிஷ் வந்து சேர்ந்தான்…. அவரைப் பார்த்து ஆசிர்வதம் வாங்கிட்டு வாடான்னு அனுப்பிச்சு வச்சேன்….. அவனும் போய்ட்டு வந்தான்…… பிறகு அடிக்கடி போய்கிட்டும் இருந்தான். ஆனா நான் போகலை….. அது எதாவது குத்தமாயிடுச்சோ என்னவோ தெரியலை…… இப்ப என் மருமக காணாம போயிட்டா…..”


ரவு இரண்டரை மணியளவில் ரோந்து போலீசார் ஒரு சுடுகாட்டுப் பகுதியில் ஹரிணியின் ஸ்கூட்டியைக் கண்டுபிடித்தார்கள். அது இரவு எட்டு மணியிலிருந்தே அங்கு நின்று கொண்டிருப்பதாக அறிந்தார்கள். யார் எப்போது அந்த வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.


ரிணி காணாமல் போனதைக் கேள்விப்பட்ட போது அது எதிரியின் வேலையே என்பதை மாஸ்டர் உணர்ந்தார். எதிரிக்கு அவனைப் பற்றி செந்தில்நாதன் விசாரித்து வருவதும்,  க்ரிஷ் அமெரிக்கா போய் விசாரித்ததும் தெரிய வந்திருக்க வேண்டும்…. க்ரிஷைத் தடுத்து நிறுத்த அவன் ஹரிணியைக் கடத்தியிருக்கிறான்…. சுடுகாட்டுப் பகுதியில் அவள் ஸ்கூட்டியை அவன் விட்டுப் போயிருப்பது கூட க்ரிஷுக்கு எதிரி அனுப்பி இருக்கும் அர்த்தமுள்ள எச்சரிக்கை தான்….

உதய் அவரிடம் வந்து ஹரிணியின் தாயை அழைத்து வரட்டுமா, ஹரிணி இருப்பிடத்தை அவர் மூலமாக அறிய முடியுமா என்று கேட்ட போது மாஸ்டர் சொன்னார். “எதிரி அல்லாமல் வேறு யார் கடத்தி இருந்தாலும் அவள் இருப்பிடத்தை என்னால் ஓரளவாவது கண்டுபிடித்திருக்க முடியும் உதய். ஆனால் சக்திகள் விஷயத்தில் அவன் என்னையும் விட நிபுணன். அதனால் அவன் கண்டிப்பாக அவளைச் சுற்றி ஒரு சக்திச் சுவரை எழுப்பியிருப்பான். அதனால் அலைவரிசைகள் மூலம் என்னாலும் அவளைக் கண்டுபிடிக்க முடியாது”

உதய்க்குப் புரிந்தது. இது வரை செந்தில்நாதன் மூலமாக எதிரியைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாமே அசாதாரணமானவை. அந்த அளவு சக்தி படைத்தவன் எதிரியாக அமைந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? உதய் தர்மசங்கடத்தோடு சொன்னான். “அம்மா ஹரிணியோட அம்மா கிட்ட உங்களைப் பத்தி ரொம்பவே பெருமையா சொல்லியிருக்காங்க. க்ரிஷ் காணாமல் போனப்ப நீங்க கண்டுபிடிச்சு சொன்னதையும் சொல்லியிருக்காங்க. அதுல இருந்து ஹரிணி அம்மாவும் உங்களை வந்து பார்க்கத் துடிக்கறாங்க. அதுமட்டுமல்ல. எங்கம்மாவுக்கு க்ரிஷ் திரும்பி வந்த பிறகு அவங்க உங்களை நேரில் வந்து பார்க்காத குற்றத்தால தான் ஹரிணி காணாமல் போயிட்டாளோன்னு வேற சந்தேகம் இருக்கு. அதனால அவங்களும் வந்து மன்னிப்பு கேட்கணும்னு ஒரே ரகளை. அதனால ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு வர்றேன். எதாவது ஆறுதல் வார்த்தையாவது சொல்லுங்க மாஸ்டர். ரெண்டு பேரும் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பாங்க…”

பத்மாவதியின் குற்றவுணர்ச்சி மாஸ்டர் முகத்தில் சின்ன முறுவலை வரவழைத்தது. சரியெனத் தலையசைத்தார். உதய் மெல்லக் கேட்டான். “இனி நமக்கு என்ன வழி மாஸ்டர்?”

“உன் தம்பி தான் ஒரே வழி” என்றார் மாஸ்டர்.

உதய் திகைத்த போது மாஸ்டர் சொன்னார். “எதிரியின் சக்தி ஊடுருவ முடியாத ஒரே இடம் உன் தம்பி தான். எதாவது செய்வதானால் அவன் மூலமாகத் தான் செய்ய வேண்டும். அவன் வரட்டும். யோசிப்போம்…….”

(தொடரும்)
என்.கணேசன் 




6 comments:

  1. எதிரியை எதிர் கொள்ளப் போகும் ஓரே ஆயுதம்....க்ரீஷ் மட்டும் தான்
    மாஸ்டர் உறுதியாக நம்புகிறார்....
    கடவுளை மட்டுமே நம்பும், வெகுளியான பத்மாவதி அம்மா...
    தன்னைத்தானே நம்பி செயல்படும் மர்ம மனிதன்...
    இருவேறு உலகம்.....

    ReplyDelete
  2. dhik, dhik, dhik . Very very interesting

    ReplyDelete
  3. பத்மாவதி அம்மாவின் இறை நம்பிக்கை வேடிக்கையாக இருந்தாலும்... அது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று....
    மாஸ்டர் க்ரிஷ் மூலம் என்ன திட்டம் போடப் போறார்....???
    மர்ம மனிதன் கடத்தி வைத்திருப்பது எப்படி???

    ReplyDelete
  4. சோ ஸ்விட் நிஜமாத்தான் இப்படி கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு நினைவால் கட்டுவது மிக பெரிய விடுதலை உணர்வு
    என்னால்தான் முடியும் என்பதும் ......
    ஐயோ என்ற பரபரப்பு
    ஏதாவது செய்வேண்டும் என்று மண்டை குடைச்சல் இதெல்லாம்தான் நம்பிக்கையை பரீட்சித்து பார்க்கும் செயகைகள் பெரிய தலைவலி கிரிஷ், மாஸ்டர், உதய் ,மர்மமனிதன் இவர்களை எல்லோரையும் விட பத்மாவே நிம்மதியா வாழ்பவர் இல்லையா G.......

    ReplyDelete
  5. நான் தங்கள் பரமன் ரகசியம் புக் லிருந்து தீவிர வாசகன்.

    இரண்டு முறை சென்றும் என்னால் தங்கள் புத்தகத்தை கண்டு புடிக்க முடியவில்லை.

    தாங்கள் அரங்க எண் சொன்ன பின் தான் எளிதாக இருந்தது.

    குறிப்பு :-
    தங்கள் புத்தகத்தை தெரியும் படி வைக்க சொல்லவும்.

    ReplyDelete