சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 6, 2018

சத்ரபதி – 32



மிகவும் நேசிப்பவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது மனதைக் கனக்க வைப்பது. அந்த மனக்கனத்தை சிவாஜி உணர்ந்தான். தாதாஜி கொண்டதேவ் அவனுக்கு வெறும் ஆசிரியர் மட்டுமல்ல. இன்று அவன் பெற்றிருக்கும் எத்தனையோ சிறப்புகளுக்கு அவரே காரணகர்த்தா. அதை அவன் மறந்து விடவில்லை. எத்தனையோ விஷயங்களில் அவன் நடவடிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. எதிர்த்திருக்கிறார். புத்திமதிகள் சொல்லியிருக்கிறார். அவனைக் குறித்து அவன் தந்தையிடம் புகார் கூடக் கூறியிருக்கிறார். ஆனால் அத்தனையும் அவன் நன்மைக்காகவே ஒழிய எதுவும் அவருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்திருக்கவில்லை.

அவன் உயர்வுகளில் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தவர் அவர். சொந்த மகனைப் போல அன்பு காட்டியவர் அவர். அவன் வாழ்க்கைக்கு உதவக்கூடியது எதையும் அவன் அறிந்து விடாமல் இருந்து விடக்கூடாது என்று யோசித்து யோசித்து ஒவ்வொன்றையும் அறியவும், அதில் சிறக்கவும் வேண்டியன எல்லாவற்றையும் செய்தவர் அவர். அவர் சொல்லிக் கற்றதை விட அவரைப் பார்த்து அவன் கற்றது அதிகம். ஒழுக்கத்திலும், நேர்மையிலும், அறிவார்ந்த அணுகுமுறையிலும், உறுதியான கட்டுப்பாட்டிலும், ஒழுங்கான வாழ்க்கைமுறையிலும் அவனுக்கு அவரைத் தவிர சிறந்த உதாரணம் பார்க்கக் கிடைத்ததில்லை.

அவனுடைய சிறு வயதில் அதிகாலை விழித்தெழுந்து அவருடன் சென்று ஆற்றில் குளித்து, அவர் ஜபம் செய்கையில் நீரில் நீந்தி விளையாடி, அவருடன் சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்வதில் நாளை ஆரம்பித்து இரவு வரை அவருடனேயே அதிகம் இருந்து முடிவில் அவருடைய கதைகளையும், தத்துவங்களையும், சரித்திரங்களையும் கேட்டு உறங்கப் போன நாட்கள் சிவாஜிக்குப் பசுமையாக நினைவிருந்தன.

படுத்த படுக்கையாய் அவர் ஆன பிறகு அதிக நேரத்தை சிவாஜி அவருடனேயே கழிக்க ஆரம்பித்தான். டோரணா கோட்டைக்கும் மூர்பாத்தில் நடைபெறும் கோட்டை நிர்மாணப்பணிகளை மேற்பார்வைக்கும் செல்வதைக்கூட அவன் குறைத்து விட்டான். அவன் நண்பர்களே அதிகம் அவற்றைப் பார்த்துக் கொண்டார்கள். கூடுமான வரை தன் ஆசிரியரின் அந்திம காலத்தில் அவருடன் இருக்க அவன் எண்ணினான். படுத்த நிலையிலிருந்தே அவர் தன் நிர்வாகக் கடமைகளை அவன் மூலம் செய்ய வைத்தார். அவன் செய்வதில் திருத்தங்கள் தேவையானால் அதைச் சொன்னார். அதனுடன் அப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் சொன்னார். அந்த சமயங்களில் அவருடைய ஆழமான அறிவையும் தொலைநோக்கையும் அவனால் நிறையவே கவனிக்க முடிந்தது.

ஒருநாள் சிவாஜி வாய்விட்டே ஆச்சரியத்துடன் சொன்னான். “உங்களுக்குத் தெரியாததோ முடியாததோ இல்லவே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது ஆசிரியரே!”

அவர் சொன்னார். “எத்தனையோ முடிந்த எனக்கு உன்னை அடக்கவோ, சமாளிக்கவோ முடிந்ததில்லையே சிவாஜி”

சிவாஜி அதைக்கேட்டு வருத்தப்பட்டான். “நான் உங்கள் விருப்பத்துக்கு எதிராக சில சமயங்களில் நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ஆசிரியரே!” என்று அவன் வருத்தத்துடன் சொன்ன போது அவர் அவனைத் தட்டிக் கொடுத்து அன்பாகச் சொன்னார். “நான் விளையாட்டாகச் சொன்னேன் சிவாஜி. என் சிந்தனைகளில் கூட அடிமைத்தனம் வந்து விட்டிருக்கிறது. உரிமைக்காகப் போராடுவது கூட தவறாகத் தோன்றுகிறது. அதை இப்போது நான் உணர்கிறேன். உன் சிந்தனைகளில் தவறில்லை. நீ போகும் வழியிலும் தவறில்லை…. யுத்தத்தில் தந்திரமும் ஒரு அங்கமே. அதுவும் வீரத்திற்கு இணையானதே. இதைச் சாணக்கியர் சொல்லியிருக்கிறார்….”

அதோடு நிறுத்தாமல் ஒரு நாள் இரவில் அவனிடம் மகாபாரதத்தின் சாந்தி பர்வ சுலோகங்களை அர்த்தத்துடன் சொல்லி விளக்கினார். பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன ராஜ தர்மங்களை கஷ்டப்பட்டுச் சொன்னார். சொல்லிக் கொண்டே வந்தவர் களைப்பின் காரணமாக இடையே சிறிது ஓய்வும் எடுத்துக் கொண்டார்.

சிவாஜி அவர் படும் கஷ்டத்தைக் கண்டு சொன்னான். “ஆசிரியரே இவ்வளவு கஷ்டப்பட்டு ராஜதர்மத்தை எனக்கு ஏன் விளக்குகிறீர்கள். நான் ஒன்றும் அரசன் அல்லவே”

பேரன்புடன் அவர் சொன்னார். “நீ ஒரு நாள் பேரரசனாவாய். அந்த சமயத்தில் நான் இருக்க மாட்டேன். அதற்காக இப்போதே சொல்கிறேன்….”

சிவாஜியும், சற்று தள்ளி அமர்ந்திருந்த ஜீஜாபாயும் கண்கலங்கி விட்டார்கள். அவர் அவனிடம் தொடர்ந்து சொன்னார். “முக்கியமாய் ஒன்றை நினைவு வைத்துக் கொள். அரசனாவது பெரிய வெற்றியல்ல. தகுதியே இல்லாமலும் அரசனானவர்கள் ஏராளமாய் இருந்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. உன் ஆட்சியில் குடிமக்கள் சுபிட்சத்தையும், பாதுகாப்பையும் உணர வேண்டும். அது தான் உனக்கு வெற்றி. அது தான் உனது தர்மம். குடிமக்களின் கண்ணீர் அரசனை ஏழேழு பிறவிகளிலும் துன்பக் கடலில் மூழ்கடித்து விடும்….”

அதன் பின் அவர் கூறிய அறிவுரைகளையும், சுலோகங்களையும் சிவாஜி மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டான். மக்கள் பணியே மகேசன் பணி, ஏழை எளிய மக்களின் நலன் காப்பதே ஒரு அரசனின் மிகப்பெரிய தர்மம் என்பதைப் பல விதங்களில் வலியுறுத்திச் சொன்னார்.

அதன் பின் நான்கு நாட்கள் தாதாஜி கொண்டதேவ் உயிரோடிருந்தார்.  அந்த நான்கு நாட்களும் சிவாஜி மட்டுமல்லாமல் ஜீஜாபாயும் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். சிவாஜியின் சேவையை ஏற்றுக் கொள்ள முடிந்த தாதாஜி கொண்டதேவ் ஜீஜாபாய் தனக்குப் பணிவிடை செய்வதில் சிறு சங்கடத்தை உணர்ந்தார். எஜமானியம்மாள் என்ற நிலையிலேயே அவர் அவளை வைத்திருந்தார். அந்த மரியாதையையே என்றும் அவர் அவளுக்குத் தந்து வந்திருந்தார். அதனால் அவர் அவளிடம் சொன்னார். “தாயே எஜமானியாகிய நீங்கள் எனக்குப் பணிவிடை செய்து என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள்”

ஜீஜாபாய் சொன்னாள். “ஆசிரியரே…… நீங்கள் என் மகனுக்குக் கற்றுத் தருகையில் தள்ளி இருந்து காதால் கேட்டே நான் பெற்ற ஞானம் ஏராளம். அந்த வகையில் எனக்கும் நீங்கள் ஆசிரியரே. மேலும் எனக்கு என் தந்தைக்கும், என் சகோதரனுக்கும் சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லை. இந்தச் சிறு சேவை செய்யும் நிறைவை எனக்குத் தயவு செய்து மறுத்து விடாதீர்கள்…..”

இரு கைகளையும் கூப்பி தாதாஜி கொண்டதேவ் அவளை வணங்கி கண்களை மூடிக் கொண்டார். ஜீஜாபாய் தன் வாழ்க்கையில் உதவி செய்தவர்களை என்றைக்கும் மறந்ததில்லை. சாதாரணமாய் மற்றவர்களிடம் கம்பீரமாய் விலகியே நின்ற அவள் இப்போதும் சத்யஜித்தை சகோதரனே என்ற அழைப்பை விட்டு வேறு விதமாய் அழைத்ததில்லை. இனி என்றைக்கும் அவன் உதவி தனக்குத் தேவைப்படாது என்ற நிலைக்கு வந்து விட்ட போதும் அந்த பழைய அன்புக்கடனை அவள் மறக்கவில்லை. அதே போல தாதாஜி கொண்டதேவ் வெறும் பணியாளராய் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தவர் என்பதால் அவளிடம் தனிமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக சிவாஜியின் பண்புகளையும், திறமைகளையும் அவர் செம்மைப்படுத்திய விதத்திற்கு ஒரு தாயாக அவள் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கிறாள்….

ஒரு நாள் சிவாஜியிடம் தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “பக்கத்துப் பிராந்தியங்களை நிர்வகித்து வரும் என் உதவியாளர்களை வரவழை. கணக்கோடும், அதிலிருக்கும் பணத்தோடும் என்னை வந்து பார்க்கச் சொல்”

சிவாஜி அவர் ஆணையை ஆட்களிடம் சொல்லியனுப்பினான். சுபா பகுதியை நிர்வகித்து வரும் பாஜி மொஹிடே, சாகன் பகுதியை நிர்வகித்து  வரும் ஃபிரங்கோஜி நர்சாலா இருவரைத் தவிர மற்றவர்கள் கணக்குகளுடனும், தொகைகளுடனும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கணக்குகளைச் சரிபார்க்க சிவாஜியைப் பணித்த அவர் அந்தத் தொகைகளை வாங்கி கஜானாவில் வைத்துப் பூட்டிச் சாவியைத் தன்னிடம் தரச் சொன்னார். சிவாஜி அப்படியே செய்தான்.

அனைவரிடமும் அவர் சொன்னார். “இனி சிவாஜி தான் உங்கள் தலைவன். அவன் சொன்னபடியே நடந்து கொள்ளுங்கள். அவனுக்கு எல்லா விஷயங்களிலும் உறுதுணையாகவும், விசுவாசமாகவும் இருங்கள்.”

கடைசியில் கணக்குப் புத்தகங்களையும், கஜானா சாவியையும் அவர் சிவாஜியிடம் தந்துவிட்டு அவன் தலையைத் தொட்டு ஆசி வழங்கும் பாவனையில் சொன்னார். “நீ நம்பும் இறைவன் உன்னை உன் கனவுகளின் உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்….”

அவர் காலைத் தொட்டு வணங்கி அவன் நிமிர்ந்த போது அவருக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது. அவர் மரணம் நெருங்கி விட்டதைப் புரிந்து கொண்ட சிவாஜி கலங்கிய கண்களுடன் அவர் தலையைத் தன் மடியில் இருத்திக் கொண்டான். சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்தது.

மரணத்திலும் அவர் பாடம் நடத்தி விட்டுப் போனதாய் சிவாஜி உணர்ந்தான். வாழ்க்கைக் கணக்கைக் கச்சிதமாய் முடித்து விட்டுப் போவது எப்படி, தன் பொறுப்புகளை, கடமைகளை நிறைவேற்றி விட்டுப் போவது எப்படி என்றெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். சிவாஜி தன் வாழ்நாளில் அது வரை அழுதிராத அழுகையை அழுதான்.

அவரது அந்தக் கடைசி வார்த்தைகளை அவன் உயிர் உள்ள வரை மறக்க மாட்டான். அவன் எத்தனையோ கனவுகள் கண்டிருக்கிறான். அதை யாரிடமும் அவன் வாய் விட்டுச் சொன்னதில்லை. அவனும், அவன் இறைவனும் மட்டுமே அறிந்த கனவுகள் அவை என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அதை அவரும் யூகித்திருந்தார் என்று அவர் கடைசி ஆசி அவனுக்குத் தெரிவித்தது…… கண்ணீருடன் சிவாஜி அவர் முகத்தை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு அவர் நெற்றியில் பேரன்புடன் முத்தமிட்டான். “நன்றி ஆசிரியரே. நன்றி”

(தொடரும்)
என்.கணேசன் 

4 comments:

  1. Touching and beautiful update. Super ji.

    ReplyDelete
  2. சுஜாதாAugust 6, 2018 at 6:38 PM

    தாதாஜிக்கும் சிவாஜிக்கும் இடையே உள்ள அன்பு அபிப்பிராய பேதங்களை மீறி ஜொலிப்பதை அற்புதமாகக் காட்டி இருக்கிறீர்கள். ஜீஜாபாயும் நன்றி மறக்காமல் சேவை புரிவது மிக அருமை. மிக உருக்கமான வரலாற்றுக் காட்சியை கண்முன் இன்று கண்டேன்.

    ReplyDelete
  3. மிகவும் அருமை... குரு,சிஷ்யன் உறவையும்...அதன் முடிவையும் அருமையாக கூறினீர்கள்...

    ReplyDelete