சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 13, 2018

சத்ரபதி – 33



தாதாஜி கொண்டதேவின் மரணம் சிவாஜியின் மனதை நிறையவே பாதித்தாலும் கூட சில விதங்களில் அவன் பரிபூரண சுதந்திரத்தை உணர்ந்தான். பூனாவை அடுத்துள்ள, அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிராந்தியங்களில் பாராமதி, இந்திராபூர் இரண்டின் நிர்வாகிகளும் தாதாஜி கொண்டதேவின் மரணத்தின் போது உடன் இருந்தவர்கள். தாதாஜி கொண்டதேவ் சிவாஜியை அவர்களது புதிய தலைவனாக அறிவித்த போது அதை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வரிவசூல் கணக்குகளைத் தொகைகளுடன் ஒப்படைத்தவர்கள். அதனால் அவர்களால் அவனுக்குப் பிரச்னையில்லை. ஆனால் சுபா பகுதியின் பாஜி மொஹிடேவும்,  சாகன் பகுதியின் ஃபிரங்கோஜி நர்சாலாவும் அழைத்தும் தாதாஜி கொண்டதேவின் மரணத்தின் போது அங்கு வரவில்லை. அவர்கள் செலுத்த வேண்டிய தொகையும் இது வரை செலுத்தப்படவில்லை என்பதால் சிவாஜி அந்த இரண்டு பிராந்தியங்களைப் பிரச்னையாக உணர்ந்தான். இரண்டு நிர்வாகிகளுக்கும் உடனடியாக கணக்குகளையும் நிதியையும் ஒப்படைக்க ஆணையிட்டு அதைத் தெரிவிக்க வீரர்களை அனுப்பி வைத்தான்.

அவன் அனுப்பிய வீரர்கள் வந்து சேர்வதற்குள் ஷாஹாஜி பெங்களூரில் இருந்து கொண்டு அனுப்பிய ஆட்கள் வசூலுக்காக அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த காரணம் அறிந்த போதும் சிவாஜி அறியாதது போலவே காட்டிக் கொண்டு தந்தை, சகோதரர்கள், சிற்றன்னை ஆகியோரின் நலன் குறித்து விசாரித்து விட்டு அவர்களுக்கு உணவளித்து உபசரித்து விட்டுக் கடைசியில் அவர்கள் வந்த காரணம் கேட்டான்.

“வழக்கமாய் இப்பகுதியிலிருந்து வரவேண்டிய தொகையை வசூலிக்கவே வந்திருக்கிறோம் இளவலே” என்று வந்தவர்களில் தலைமை அதிகாரி சொன்னான்.

சிவாஜி அமைதியாகச் சொன்னான். “இந்தப் பகுதி தற்போது நீங்கள் இருக்கும் கர்நாடகப் பகுதியைப் போல் வளமை மிக்கதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் விளைச்சல் நன்றாக இல்லை. இருக்கும் விளைச்சலில் நாங்கள் வசூலிக்கும் சிறுபகுதி எங்கள் நிர்வாகத்திற்கும், பராமரிப்புக்குமே போதவில்லை. ஏற்கெனவே சுபிட்சமான பகுதியில் இருக்கும் நீங்கள் அங்கு கிடைக்கும் வளங்களிலேயே உங்கள் ஆடம்பரத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அப்படியிருக்கையில் இங்கே இருந்தும் வசூல் செய்து கொண்டு போய் அங்கே செலவு செய்வது இங்கிருப்பவர்களுக்கு இழைக்கும் அநீதியாக நான் நினைக்கிறேன்…”

அந்த அதிகாரி சிவாஜியின் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகபாவனையிலேயே தெரிந்தது. அவன் சொன்னான். “இது வரை தாதாஜி அவர்கள் சரியாகச் செலுத்திக் கொண்டு இருந்தார்கள்….”

“இங்கு நடக்க வேண்டிய எத்தனையோ நற்பணிகளை நிறுத்தி விட்டே அவர் உங்களுக்கு அந்தத் தொகையை அளிக்க வேண்டியிருந்தது. நியாயமாக யோசித்துப் பார்த்தால் சுபிட்சமான பகுதிகளில் இருந்து வசூலிக்கும் தொகையில் ஒரு பகுதியை நீங்கள் இது போன்ற வறண்ட பகுதிகளின் வளர்ச்சிக்காக அனுப்பி வைக்க வேண்டுமே ஒழிய இங்கேயிருக்கும் வறண்ட பகுதியிலிருந்து கிடைப்பதையும் உங்கள் தேவைக்காகக் கொண்டு போய் விடக்கூடாது என்பது என் உறுதியான கருத்து…..”

அதிகாரி தயக்கத்துடன் இழுத்தான். “அப்படியானால் தங்கள் தந்தையாரிடம் நான்  என்ன சொல்ல?”

“நான் சொன்னதை அப்படியே சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்”

அவர்களிடம் தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் பரிசுப் பொருள்களை சிவாஜி தந்தனுப்பினான்.

சிவாஜிக்கும் பாஜி மொஹிடேயிடமிருந்து இல்லை என்ற பதிலே வேறு விதமாக வந்தது. சிவாஜி அனுப்பிய வீரனிடம் பாஜி மொஹிடே எகத்தாளமாய் கேட்டான். “வீரனே, தாதாஜியின் பதவிக்கு சிவாஜியை அவன் தந்தை நியமித்து விட்டாரா?”

“ஐயா, தாதாஜி அவர்களே மரணத்திற்கு முன்னால் அனைத்தையும் சிவாஜி அவர்களிடம் ஒப்படைத்து இனி அவரே தலைவர் என்று அனைவருக்கும் தெரிவித்து விட்டுத் தான் கண்மூடினார்.”

“வீரனே. ஒரு ஊழியன் தனக்குப் பின் இவன் தான் என்று யாரையும் நியமிக்க முடியாது. எஜமானன் தான் ஒரு ஊழியனின் மரணத்திற்குப் பின் இன்னொரு ஊழியனை நியமிக்க முடியும். தாதாஜி கொண்டதேவ் போன்ற அறிவு மிக்க ஒருவர் தனக்கு இல்லாத அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தினார் என்பது எனக்குப் புரியவில்லை…”

சிவாஜியின் வீரன் சொன்னான். “இன்னொரு ஊழியனை தாதாஜி நியமிக்கவில்லை ஐயா. தலைவரின் மகனே அங்கிருந்ததால் அதற்கு அவசியமும் இருக்கவில்லை. தலைவரின் மகனுக்குத் தலைமை தாங்கும் உரிமை இருக்கிறது அல்லவா? அதனால் தாதாஜி தலைமைப் பொறுப்பை உரியவரிடம் தான் ஒப்படைத்து விட்டுப் போனார்….”

“தலைவர் உயிரோடு நலமாக இருக்கையில் தலைவரின் மகன் தலைமைக்கு உரிமை கொண்டாட முடியாது வீரனே. அதனால் இந்த விஷயத்தில் தலைவரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன் என்பதை சிவாஜியிடம் தெரிவித்து விடு. அவர் என்ன உத்தரவிடுகிறாரோ அதன்படியே செய்கிறேன் என்று சொல்.”

பாஜி மொஹிடே அந்த வீரனின் முகம் மாறிய விதத்தை உள்ளுக்குள் ரசித்தான். அந்த வீரன் சென்று சிவாஜியிடம் அவன் சொன்னதைத் தெரிவிக்கும் போது சிவாஜியின் முகம் எப்படி மாறும் என்று யோசிக்கையில் மேலும் இனிமையாக இருந்தது.

அவனுக்கு சிவாஜியைச் சிறிதும் பிடிக்கவில்லை. அவன் சாம்பாஜியைப் போல அனுசரணையானவன் அல்ல. இந்தச் சிறு வயதில் அவனுக்கு இருக்கும் திமிர் அவன் தாயின் திமிருக்கு இணையானதே. ஜீஜாபாய் பீஜாப்பூருக்கு மகனுடன் வந்து இருந்த சில நாட்களில் துகாபாய் அவளுக்குப் பயந்து நடமாடியதை பாஜி மொஹிடே பார்த்திருக்கிறான். அவள் ஏதோ ஒரு பணிப்பெண் போல் அனைத்து வேலைகளும் செய்ய ஜீஜாபாய் அதிகாரத்தோடு சும்மா உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறாள். ஜீஜாபாய் பற்றி அவன் நிறைய கேள்விப்பட்டிருக்கிறான். அதில் எதுவுமே அடக்கமான குடும்பப்பெண்ணாய் அவளைச் சித்தரித்திருக்கவில்லை. அவனை நேரில் பீஜாப்பூரில் அவள் பார்த்த போது ஏதோ ஒரு வேலைக்காரனைப் பார்க்கும் பாவனையையே அவன் அவளிடம் கண்டிருக்கிறான். அவன் வணக்கம் தெரிவித்த போது கூட மகாராணி ஒருத்தி சேவகம் புரியும் ஊழியனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் தலையசைவையே அவளிடம் பார்த்தான். அப்போதே அவன் ஆத்திரம் அடைந்திருந்தான்.

பீஜாப்பூரில் சிவாஜி நடந்து கொண்ட முறையையும் பாஜி மொஹிடே ரசிக்கவில்லை. சுல்தானைக் கூட வணங்க மறுத்த அவனை எல்லோருமே கொண்டாடிய விதம் அவனை எரிச்சலடைய வைத்தது. ’சிறுவர்கள் சிறுவர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும்…. சிவாஜி எப்போதுமே தாயைப் போலவே அகம்பாவமாக நடந்து கொள்வான். அறிவுள்ளவனாம்… வீரமுள்ளவனாம்….’ சுல்தான் கூட அவனுக்கு அதிக மரியாதை கொடுத்தது எரிச்சலாய் இருந்தது. அப்படிப்பட்ட சுல்தானை ஏமாற்றி சிவாஜி டோரணா கோட்டையைக் கைப்பற்றிய விதம், தந்திரமாக இன்னொரு கோட்டை கட்டிக் கொண்டு இருக்கிற விதம் எல்லாம் ஒழுங்காக வளரும் பிள்ளையின் லட்சணமாகத் தெரியவில்லை. ’செய்து வரும் இத்தனை அனர்த்தங்கள் போதாதென்று என்னிடமே வசூலுக்கு ஆள் அனுப்புகிறான். உறவு முறையில் மாமன் என்கிற நினைப்பு சுத்தமாக அவனிடம் இல்லை.  தாதாஜி வாழ்கையில் நீதிபதி போல கண்டிப்புடன் எல்லா விஷயங்களில் நடந்து கொண்டாலும் கடைசி காலத்தில் புத்தி பேதலித்த ஆள் போல எல்லாவற்றையும் சிவாஜியிடம் ஒப்படைத்துப் போயிருக்கிறார். நியாயத்தில் ஷாஹாஜியின் மனைவியின் சகோதரன், வயதிலும் மூத்தவன் என்ற முறையில் என்னிடம் எல்லாவற்றையும்  ஒப்படைத்திருக்க வேண்டும். இந்த ஆள் இப்படி ஒரு முட்டாள்தனம் செய்வார் என்று யூகித்து அவர் அழைத்தும் மற்றவர்கள் போல போய் மாட்டிக் கொள்ளாதது நல்லதாய் போயிற்று. அந்த ஆளிடம் மறுக்கவும் முடிந்திருக்காது…..”

இப்படியாக அவனுடைய சிந்தனைகள் சிவாஜியைச் சுற்றியே இரவு வரை ஓடின. இரவில் உறங்கப் படுக்கைக்குப் போன பின்னும் இனி அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி எடுப்பது உத்தமம் என்றே பாஜி மொஹிடே யோசித்துக் கொண்டிருந்தான். ஷாஹாஜியிடம் பக்குவமாய் பேசி தாதாஜி கொண்டதேவின் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டான். ’உங்கள் மகனின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி வைக்க என்னை அந்தப் பதவிக்கு நியமியுங்கள். இல்லா விட்டால் சிவாஜி தானும் அழிந்து உங்களையும் அழித்து விடுவான். ஏற்கெனவே பீஜாப்பூர் சுல்தான் அவன் மீது கோபமாக உள்ளார். அவனைச் சுதந்திரமாக விட்டால் அவனுக்கு நீங்கள் மறைமுக ஆதரவு தருவதாக அவர் நம்பும் ஆபத்து இருக்கிறது….” என்று அவரிடம் சொன்னால் அவர் புரிந்து கொள்வார். அவனுக்குத் தெரிந்து அந்தப் பதவிக்கு அவனளவு பொருத்தமானவர், நம்பிக்கையானவர் யாருமில்லை….. அவரது மனைவியின் சகோதரனை விட அவர் நலன் மீது வேறு யாருக்கு அதிக அக்கறை இருந்து விட முடியும்?

இந்த சிந்தனைகளில் அவன் இருந்த போது வெளியே ஏதோ சலசலப்பு கேட்டது. பாஜி மொஹிடே தன் காவலுக்கு இருந்தவர்களை அழைத்தான். “யாரங்கே?”

காவலாளிகளுக்குப் பதிலாக சிவாஜி உள்ளே நுழைந்தான். “நான் தான் மாமா”

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Excellently the novel is moving sir. You make us to know everyone's feelings and their way of thoughts. This makes us to see the people, feel the feelings and witness the events. Amazing.

    ReplyDelete
  2. அருமை. அதிலும் நான் தான் மாமா என்று சிவாஜி உள்ளே நுழைவது சினிமாவில் பரபரப்பு காட்சியைப் பார்ப்பது போல் உணர வைத்தது.

    ReplyDelete
  3. சிவாஜி உள்ளே வர நேரத்துல போயி... இப்படி (தொடரும்) போட்டுடிங்களே...!

    இந்த வார தொடர்... சிவாஜியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு..ஒரு ஆரம்பமாகவே தோன்றுகிறது...

    ReplyDelete
  4. Yesterday i went to sivaji mahal in srisailam. i was able to corelate our story with the one that is displayed there in mahal. My daugheter aske d the story. i said i will tel you what happenend exactly. Waiting for ur sir

    ReplyDelete