என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, October 9, 2017

நேரில் சந்திக்க முடியாத மகாகாலா!
மிகத் தந்திரமாக மயானத்தில் சவ சாதனாவைச் செய்ய வைத்தும் முடிவில் தன்னை ஏமாற்றி மயான தாரா உதவியால் மாயமாய் விமலானந்தா மறைந்ததை ஜீனசந்திர சூரியால் தாங்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து அவர் விமலானந்தாவைப் பார்க்க வந்தார். நடந்த நிகழ்வில் பாதிக்கப்படாதவர் போலத் தன்னைக் காட்டிக் கொண்ட அவர் விமலானந்தாவிடம், “நீ வெற்றிகரமாக சாதித்து விட்டாய் தம்பி. உன் ஜாதகம் பார்த்த அன்றே உன்னால் இது முடியும் என்று கண்டுபிடித்து விட்டேன். அதனால் தான் இதில் உன்னை ஈடுபடுத்தினேன். இனி நீ நான் சொன்னபடி எல்லாம் கேட்டால் மகாராஜாக்களிடமும், பெரும் செல்வந்தர்களிடமும் நாம் ஏராளமான செல்வத்தை சம்பாதித்து விடலாம்என்று சொன்னார்.

விமலானந்தா கோபத்துடன் மறுத்தார். “நீங்கள் சொல்வது போல் எல்லாம் என்னால் செய்ய முடியாது. நீங்கள் வஞ்சக எண்ணத்துடன் சவ சாதனா செய்ய என்னை கட்டாயப்படுத்தினீர்கள். சுயலாபமே உங்கள் குறிக்கோளாக இருந்தது. அந்த வஞ்சகத்திற்காகவே உங்களை இங்கிருந்து கழுத்தைப் பிடித்து தள்ளவோ, உங்களுக்குத் தண்டனை வாங்கித் தரவோ நான் முற்பட்டிருக்க வேண்டும். ஆனால் நோக்கம் வஞ்சகமானாலும் மயான தாராவின் அறிமுகம் இந்தப் பிறவியில் உங்களால் தான் எனக்குக் கிடைத்தது. அந்த ஒன்றிற்காகவே நான் உங்களை மன்னிக்கிறேன்.

ஜீனசந்திர சூரி அவரிடம் சிறிது நேரம் பேசித் தன் வழியில் இழுக்கப் பார்த்தார். அது முடியாமல் போகவே “உன் சவத்தின் மீதே நான் சவ சாதனா நடத்துகிறேனா இல்லையா என்று பார்என்று கோபத்துடன் சவால் விட்டார்.  

விமலானந்தா வாய்விட்டுச் சிரித்தபடி சொன்னார். “மயான தாரா அன்னையின் மடியில் நான் இருபத்தி நான்கு மணி நேரமும் இருக்கின்றேன். அதனால் உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது.

மயான தாராவின் சக்தியை எல்லோரைக் காட்டிலும் அதிகமாய் அறிந்திருந்த ஜீனசந்திர சூரி பயமுறுத்துவதை விட்டு விட்டு “நீ என் யந்திரத்தை திருப்பிக் கொடுஎன்று கேட்டார். 

“நான் எதையும் திருப்பித் தர முடியாதுஎன்று சொல்லிய விமலானந்தா அவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்.

நாற்பதாண்டு காலம் யந்திரத்தை வைத்துப் பூஜித்தாலும், எல்லா முறைகளையும் அறிந்திருந்தாலும், மனத்தூய்மை இல்லாததால், தானே சவ சாதனா செய்து, மயான தாராவின் தரிசனத்தை ஜீனசந்திர சூரியால் பெற முடியவில்லை. ஆனாலும் கூட அவர் முயற்சியைக் கைவிடவில்லை. சிறிது காலத்தில் இன்னொரு இளைஞனைக் கண்டுபிடித்து அவன் மூலம் சவ சாதனாவை அரங்கேற்றப் பார்த்தார். ஆனால் அந்த இளைஞன் பாதியிலேயே மயானத்தில் மூர்ச்சையாகி விழுந்து விட்டான். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும், பலமாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் பின் அதில் இருந்து மீளவே இல்லை.

ஜீனசந்திர சூரி சில வருடங்களில் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு அதனால் தன்னிடம் இருந்த அபூர்வசக்திகளையும் இழந்து போனார். எல்லாம் இழந்த போதும் அவருடைய ஜோதிடப் புலமையும், யந்திரங்கள் செய்யும் திறமையும், சில சடங்குகள் மூலம் புதையல் இருக்கும் இடம் குறித்த திறமையும் அவரிடம் இருந்தது. அதனாலேயே சிறிது காலத்திற்குப் பின் அவரிடம் விமலானந்தா மறுபடியும் தொடர்பில் இருந்தார். 

மயான தாராவின் தரிசனத்தை மூன்று வருடங்கள் தொடர்ந்து பெற்று வந்த விமலானந்தாவுக்கு மகாகாலா என்றழைக்கப்படும் சிவனை நேரில் சந்திக்கும் ஆசை எழுந்தது. ஒரு நாள் மயான தாராவிடம் “அம்மா உங்களைச் சந்தித்து விட்டேன். எனக்கு தந்தையையும் காண வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கான பிரத்தியேக வழிகளை எடுத்துரைத்து விட்டு மயான தாரா மறைந்தாள்.

மகா காலா என்றழைக்கப்படும் சிவனை, சக்தி மூலம் தான் ஒருவன் அடைய முடியும். எனவே தான் அகோரிகள் முதலில் சக்தியின் அனுக்கிரகம் பெற்று சக்தியை வசப்படுத்திக் கொண்ட பின்னர் தான், பிரபஞ்ச ஆத்மசக்தியான மகாகாலாவின் அருளுக்கு முயற்சிகள் செய்வார்கள்.  மகாகாலாவை வரவழைக்கும் சடங்குகள் மயான தாராவுக்கான சடங்குகளை விட பலமடங்கு நீண்டவை. அவற்றில் கட்டுப்பாடுகள் அதிகம். அந்த சடங்குகளை விமலானந்தாவால் வோர்லி மயானத்தில் செய்ய முடியவில்லை. எனவே அந்தச் சடங்குகளைச் செய்ய கல்கத்தாவின் ‘நீம்டொல்லா காட்டிற்குச் சென்ற விமலானந்தா அங்கும் சரிப்படாமல், பின்  காசியின் ‘மணிகர்ணிகா காட்டிற்கு வந்தார்.

காசியின் மணிகர்ணிகா காட் மகா மயானம் என்றழைக்கப்படுகிறது. அங்கு என்னேரமும் ஒரு பிணமாவது எரிந்து கொண்டிருக்கும். பல இடங்களில் இறப்பவர்களின் உடல்கள் கூட எரிப்பதற்கு அங்கே கொண்டு வரப்படும். இப்படிக் கால காலமாக இடைவிடாது பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் அந்த காட்டில் சில சமயங்களில் பிணங்கள் ஏராளமாக வந்து குவிந்து விடும். ஒவ்வொன்றையும் முழுவதுமாக எரிக்கவும் கூட நேரமிருக்காது. பாதி வெந்த பிணங்களை கங்கையில் வீசி விட்டு புதிய பிணங்களை எரிக்க ஆரம்பிப்பார்கள்.

அந்த மணிகர்ணிகா காட்டில் விமலானந்தா பத்து மாதங்கள் தங்கி மயான தாரா கூறிய சடங்குகள் செய்து தவ வாழ்க்கை வாழ்ந்தார். ஒவ்வொரு நிமிடமும் பிணம் எரிந்து கொண்டிருப்பதைக் காணும் எவனும் வாழ்க்கையின் அநித்தியத்தையும், என்னேரமும் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்ற உண்மையையும் உணர்ந்தே ஆக வேண்டும் அல்லவா? பத்து மாதங்கள் அங்கு தங்கி இரவு பகலாக மகாகாலாவை வேண்டிக் கொண்டிருந்த  விமலானந்தாவுக்குச் சில மாதங்கள் வரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தான் செய்து கொண்டிருக்கும் சடங்குகள் சரிதானா என்று கூடத் தெரியவில்லை. ஒரு இரவின் சில மணி நேரங்களில் மயான தாராவைக் காண முடிந்த விமலானந்தாவுக்கு மாதக்கணக்கில் சிவன் அருள் புரியும் சுவடே தெரியவில்லை. ஆனாலும் விமலானந்தா தான் ஆரம்பித்ததை விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்து வந்தார்.
.
ஒரு நாள் அவர் காதருகே யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது. பின் அந்தக் குரல் சொன்னது. “முட்டாளே! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிந்திருக்கிறாயா? நீ என்னை நேரில் கண்டால் இறந்து விடுவாய்.   யாரும் என்னை நேரில் காண்பது ஒரே ஒரு முறை. அது அவர்களின் மரணத்தின் போது மட்டுமே

விமலானந்தா அசரவில்லை. அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். “எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும். எப்போதோ சாவதற்கு இப்போதே செத்து விட்டுப் போகிறேன். என்ன ஆனாலும் சரி நான் உன்னைக் கண்டே ஆக வேண்டும்.

அதற்கு மறுமொழி இல்லை. விமலானந்தா தொடர்ந்து தன் சாதனையைச் செய்தார். சில நாட்கள் கழிந்தன. கடைசியில் இன்னொரு நாள் மீண்டும் அந்தக் குரல் அவர் காதருகே சொன்னது. “ நான் சொல்வதைக் கேள். இது விளையாட்டல்ல. நீ உன் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளாய்

விமலானந்தா உறுதியாகச் சொன்னார். “நான் சாகத் தயார். என் வாழ்க்கையில் பெரிதாக அர்த்தம் எதுவுமில்லை. நான் உன்னைச் சந்தித்தே ஆக வேண்டும்....

அந்த மன உறுதிக்கு மெச்சிய மகாகாலாவின் குரல் சொன்னது. “சரி நான் வருகிறேன். ஆனால் உன் முன் நிற்க மாட்டேன். நீ இறக்கும் போது மட்டுமே என்னைக் காண முடியும். நான் உன் பின்னால் வந்து நிற்கிறேன். நான் என்றும் உன் பின்னால் இருப்பேன்....

அந்தக் கணத்திலிருந்து விமலானந்தா மரண பயத்திலிருந்து முற்றிலும் விலகியவராக வாழ்ந்தார். காலனே நித்தமும் தன் பின்னால் இருப்பதாக உணர்ந்த ஒருவருக்கு மரணபயம் எப்படி இருக்க முடியும்.

சக்தியின் பல வடிவங்களில் எப்படி மயான தாரா ஒரு வடிவமோ, அதே போல் சிவனின் பல வடிவங்களில் மகா காலா ஒரு வடிவம். இரண்டுமே சுடுகாடு, மரணம் ஆகியவற்றின் அதிபதிகள்.  மற்ற எல்லா ஞானத்தையும் விட சுடுகாட்டில் கிடைக்கிற ஞானம் மகத்தானது. சரிவரப் பெற்றால் அது வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடிந்த ஞானம். அந்த ஞானத்தைப் பெற்ற விமலானந்தா பல சமயங்களில் சுடுகாட்டில் இறைவனின் வேறுபாடில்லாத நிலையைக் கண்டு வியந்திருக்கிறார்.

ஒரு முறை அவர் மும்பையின் வனகங்கா மயானத்தில் அமர்ந்திருக்கையில் மும்பை கவர்னர் கிரிஜாசங்கர் பாஜ்பாயின் தகனம் நடந்து கொண்டிருந்தது. குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் கவர்னரின் உடல் எரிக்கப்பட்ட போது சற்று தள்ளி ஒரு வண்ணானின் சவம் எரிந்து கொண்டிருந்தது. இன்னொரு முறை ஒரு மயானத்தில் ஒரு வயதான ஜெயின் சுவாமிஜியின் பிணம் எரிந்து கொண்டிருக்கையில் சற்று தள்ளி ஒரு சிறுமியின்  பிணம் எரிந்து கொண்டிருந்தது. இப்படி அந்தஸ்தோ, வயதோ வேறெந்த வித்தியாசமோ காலனைப் பொருத்த வரை இல்லை என்று விமலானந்தா எண்ணிக் கொண்டார். ஆனால் இந்த ஞானம் அனைத்தும் சொந்த வீட்டில் நெருங்கிய பாச உறவின் மரணத்தின் போது அவருக்கு உதவியதா? அடுத்த வாரம் பார்ப்போம்....

(தொடரும்)
என்.கணேசன்      
நன்றி: தினத்தந்தி 4.7.2017 

2 comments:

  1. இதை படிக்கும் போதுக்கூட மரணம் பற்றிய உண்மை நியாபகத்திற்கு வருகிறது...

    ReplyDelete
  2. மகாகாலன்,மயான தாரா......சிவன் மற்றும் சக்தியின் மற்றொரு வடிவம் என்ற தகவல் இதுவரை கேள்விப்பட்டதில்லை....அருமையான தகவல்...விளக்கம் அற்புதம்.

    ReplyDelete