என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, October 26, 2017

இருவேறு உலகம் - 54

வன் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களில் அவனைப் பார்த்தவுடன் உடனடியாக ஹரிணிக்குக் கண்களில் நீர் தளும்பியது. மணீஷ் அதைக் கவனித்த போது அவன் இதயத்தில் இரத்தம் கசிந்தது. ‘உண்மைக் காதலில் ஊடல்கள் வந்தாலும் நிரந்தரமாய் விரிசல்கள் விழுவதில்லையோ’! அவன் அங்கு வந்த போது அவளும் வந்து க்ரிஷுக்காகக் காத்திருந்ததைப் பார்த்த போதே மனம் நொந்திருந்தான். அவன் வேதனையை மாணிக்கம் மட்டுமே கவனித்தார். சங்கரமணி க்ரிஷிடம் என்னென்ன மாற்றங்கள் தெரிகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்துக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார். செந்தில்நாதனும் அவன் மேல் வைத்திருந்த பார்வையைச் சிறிது கூட விலக்கவில்லை.

க்ரிஷை ஓடிப் போய் மணீஷ் கட்டியணைத்துக் கொண்டான். ”எப்படிடா இருக்கே?”

அவனால் இதெல்லாம் எப்படி முடிகிறது என்று க்ரிஷ் வியந்தான். நடிப்பும் பாசாங்குமே சிலரது வாழ்க்கை முறையாக இருந்து விடுகிறது… “ஃபைன் டா”

எல்லோரும் உள்ளே போனார்கள். சங்கரமணிக்கு உடனடியாக க்ரிஷ் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மற்றவர்களை முந்திக்கொண்டு சொன்னார். “நல்ல வேளை நீ நல்லபடியாய் வந்தே. நாங்க எல்லாருமே உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு துடிச்சுப் போயிட்டோம்…. நாங்க வேண்டாத தெய்வமில்லை…. செய்யாத பிரார்த்தனையில்லை…..”

க்ரிஷ் அவரைக் கூர்மையாய் பார்த்துக் கொண்டே புன்னகையுடன் சொன்னான். “உங்க பிரார்த்தனை என்னைக் காப்பாத்திடுச்சு தாத்தா…”

அவன் பொடி வைத்துப் பேசுவது போலத் தோன்றினாலும் அதை அலட்சியம் செய்த சங்கரமணி “உனக்கு என்ன தான் ஆச்சு…. இத்தனை நாள் எங்கிருந்தே?” என்று கரிசனமாகக் கேட்டார்.

அத்தனை பேரும் அவன் பதிலை எதிர்பார்த்து ஆவலாய்க் காத்திருப்பதைப் பார்த்த க்ரிஷ் தன் குடும்பத்திடம் சொன்ன சுருக்கமான பொய்யையே கடைசி வரை மாற்றாமல் சொல்லிக் கொண்டிருப்பது என்று முடிவு செய்தான். அந்த மலையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது காலை எதோ கடித்தது போல் உணர்ந்ததாகவும், உடனே நினைவிழந்ததாகவும் சொன்னான். பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் சொன்னான்.

“… இடையில கொஞ்சம் நினைவு திரும்பினப்ப ஏதோ காட்டுப்பகுதில இருக்கற மாதிரி தெரிஞ்சுது….. அது எங்கேன்னு தெரியல….. அரைமயக்கமா இருந்துச்சு. வீட்டுல கவலைப்படுவாங்களேன்னு தோணுச்சு. கஷ்டப்பட்டு உதய்க்கு மொபைல்ல ஒரு மெசேஜ் அனுப்புனது மட்டும் தான் தெரியும். மறுபடியும் மயக்கமாயிட்டேன்….. யாரோ காட்டுவாசிகள் என் வாய்ல ஏதோ மூலிகை சாறை விடற மாதிரி அரை மயக்கத்துல தெரிஞ்சுது. அது நிஜமா கனவான்னு கூட இப்ப குழப்பமா இருக்கு. மறுபடியும் நினைவு திரும்பினப்ப பழையபடி அந்த மலை மேல் இருக்கேன்…..”

’முழுப்பூசணிக்காயை சோத்துல மறைக்கிறானே இந்த எடுபட்ட பயல்’ என்று சங்கரமணி திகைத்த போது செந்தில்நாதன் க்ரிஷிடம் சொன்னார்.

“உங்க அண்ணாவும் அவர் ஆள்களும் அந்த மலையிலயும் சுற்றியும் உங்களைத் தேடியிருக்காங்க…. அப்புறம் நாங்களும் தேடியிருக்கோம்…. நீங்க அந்த சுற்றுவட்டாரத்திலயே இருக்கல…..”

சொல்லி விட்டு ‘இதற்கென்ன சொல்கிறாய்?’ என்பது போல அவனையே கூர்ந்து பார்த்தார். க்ரிஷ் அவர் யார் என்பதை யூகித்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவரையே பார்த்தான். செந்தில்நாதன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவரிடம் சொன்னான்.

“நான் மயக்க நிலைல இருந்ததால எங்கே போனேன் எப்படிப் போனேன்னு எதுவும் புரியல…. அதை நீங்க தான் கண்டுபிடிச்சுச் சொல்லணும்…..”

அவனை ஊடுருவிப் பார்த்தபடியே இருந்தாலும் அவரால் அவனிடமிருந்து எதையும் யூகிக்க முடியவில்லை. ஆனாலும் பார்வையை எடுக்காமல் அவர் சொன்னார். “நீங்க அனுப்பின மெசேஜ் தென்னமெரிக்கால இருந்து வந்ததா டவர் சிக்னல் சொல்லுது….”

க்ரிஷ் அலட்டிக் கொள்ளாமல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான். “அதெப்படி சார் நான் தென்னமெரிக்கா வரைக்கும் நடந்து போயிருக்க முடியும்?”

பதில் சொல்ல வேண்டியவனே சாமர்த்தியமாய் கேள்வி கேட்டு விட்ட போது செந்தில்நாதனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சங்கரமணி க்ரிஷிடம் கேட்டார். “உன் கால்ல எதோ கடிச்சுதுன்னு சொன்னியே, எது கடிச்சுது…. எங்க கடிச்சுது?”

”ஏதோ பாம்பு கடிச்ச மாதிரி இருக்கு” என்ற க்ரிஷ் தன் வலது கால் கட்டைவிரலைக் காட்ட அத்தனை பேரும் அந்தக் காலில் இருந்த காய வடுவைப் பார்த்தார்கள். சங்கரமணிக்கு வாடகைக் கொலையாளி பொய் சொல்லவில்லை என்பது இப்போது தான் உறுதியாகியது. ‘ஆனாலும் அவன் செத்துட்டான். காயத்தோட நீ குத்துக்கல் மாதிரி நிக்கறே….. என்னடா நடந்துச்சு…..’ என்று மனதிற்குள் அவர் புலம்பினார்.

சிறிது நேரம் க்ரிஷ் எல்லோரிடமும் சகஜமாய் பேசினான். அப்படிப் பேசுகையில் ஹரிணியிடம் கூட நட்பின் தொனியில் “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான். நலமாய் இருப்பதாய் வாயளவில் சொன்னாலும் அவள் கண்களில் நெருப்பு எரிந்தது. சற்று முன் அவனை முதலில் பார்த்தவுடன் கண்ணீரால் நிரம்பிய கண்கள் இப்போது எதிர்மாறாய் அவனை எரித்த போது இனி ஒரு பூகம்பத்தைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான். அவனுக்கு உதய் மீது கோபம் வந்தது. ’அவன் தான் அம்மாவிடம் உளறிக்கொட்டியதைப் போல இவளிடமும் ஏதோ சொல்லி இருக்க வேண்டும். அதனால் தான் இவள் இங்கு மறுபடி வந்திருக்கிறாள். அவன் காதல் பற்றி நிச்சயமாய் தெரிந்திருக்கா விட்டால் அவன் காணாமல் போனது தெரிந்து வருத்தப்பட்டிருந்தாலும், திரும்பி வந்தது தெரிந்து சந்தோஷப்பட்டிருந்தாலும் ரோஷமில்லாமல் இங்கு வந்திருக்க மாட்டாள்…’

எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்த பத்மாவதி ஹரிணியை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனாள். மற்றவர்கள் காபி குடித்துக் கிளம்பி விட்டார்கள்.

க்ரிஷ் தனதறைக்குப் போய் முதலில் குளித்து விட்டு வந்து தன் நாற்காலியில் அமர்ந்தான். இந்த அறையில் மாஸ்டர் வந்து சிறிது நேரம் இருந்திருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது. நிக்கோலா டெஸ்லா சொன்னது போல் அவர் இங்கு சக்தி, அலைவரிசை, அதிர்வுகளைப் படித்திருப்பாரோ? படித்து எதையெல்லாம் தெரிந்து கொண்டிருப்பார்?
அவன் யோசித்துக் கொண்டிருந்த போது அவன் அறைக்கதவு திறந்தது. திரும்பினான். ஹரிணி. அவள் கதவைத் தாளிட்டாள். அவனைச் சுட்டெரிக்கும் பார்வையால் பார்த்தபடியே அருகில் வந்தாள். மிகவும் நெருங்கி வந்தாள். அவன் அலட்சியப்படுத்திய நாளுக்குப் பிறகு அவள் ஒரு போதும் இந்த நெருக்கத்தில் வந்ததில்லை. கோபத்திலும் மிக அழகாக அவள் இருப்பதாய் அவன் மனம் சொன்னது.  

அருகே வந்தவள் அவன் எதிர்பாராத விதமாய் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தாள். “ஏண்டா அன்னிக்கு என்கிட்ட அப்படி நடந்துகிட்டே?” அழுது கொண்டே கேட்டாள்.

சிவந்த கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே க்ரிஷ் அவளிடம் என்ன சொல்வது என்று யோசித்தான்.

“பொய் சொன்னா கொன்னுடுவேன்…. நீ கண்டுக்காம இருந்தப்ப பேசாம போன ஹரிணியா நான் இப்ப இல்லை. சொல்லு. அன்னிக்கு என்கிட்ட ஏன் அப்படி நடந்துகிட்டே… உண்மையைச் சொல்லு….” கோபமும் துக்கமுமாய் அவள் கேட்ட போது அவனால் பொய் சொல்ல முடியவில்லை.

”ஹரிணி… என் ஜாதகத்துல எனக்கு கண்டம் இருக்கு…”

“நீ எப்ப இருந்து ஜாதகத்தை நம்ப ஆரம்பிச்சே?”

“அம்மா அப்பா தான் நம்பறாங்க. ஆனா அவங்க நம்பற மாதிரியே தான் நிலைமை இருக்கு…. நான் போயிட்டா நீ தாங்க மாட்டேன்னு தெரியும். அதான் இருக்கறப்பவே விலகிட முடிவு செஞ்சேன்…. அப்ப தான் நான் போன பிறகு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக்க உனக்கு சுலபமா இருக்கும்னு நினைச்சேன்…..”

“முட்டாளே, நீ இல்லாமல் எனக்கென்னடா நல்ல வாழ்க்கை…” என்றவள் அழுதபடியே அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள். அவன் மனம் ஒரு கணம் எல்லாவற்றையும் மறந்தது. அந்த முத்தத்தை ஆழமாக்கினான். அதில் அவள் கோபம் முழுவதுமாய் கரைந்து போனது.

ஒரு கட்டத்தில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு விலகி சிறு மௌனத்திற்குப் பிறகு அவள் கேட்டாள்.

“என்னடா ஆச்சு. சும்மா அவங்க கிட்ட கதையையே என்கிட்ட சொல்லாதே”

க்ரிஷ் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னான். “உன் கிட்ட பொய் பேசப் பிடிக்கல. ஆனா உண்மை சொல்ற நிலைமைலயும் நான் இல்லை…. தயவு செஞ்சு எதுவும் கேட்காதே…. இப்ப மாத்திரம் இல்லை. நானா சொல்ற வரைக்கும் எப்பவுமே கேட்காதே….. வற்புறுத்திக் கேட்டா பொய் தான் சொல்ல வேண்டி வரும் …..”

அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

அவன் கெஞ்சலுடன் சொன்னான். “ப்ளீஸ்”

அவன் காரணமில்லாமல் அப்படிச் சொல்ல மாட்டான். காதலிப்பதாலேயே எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று நினைப்பதும் சரியல்ல என்று அவளுக்குத் தோன்றியது.

அவள் மெல்லச் சொன்னாள். “சரி எனக்கு ஒரே ஒரு சத்தியம் பண்ணு”

“என்ன?”

“என்னைக்குமே நீ என்னை விட்டு விலகிப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு. சாவோட துக்கத்தை விட இருக்கறப்பவே விலகறது பலமடங்கு துக்கம்டா. ரெண்டு பேர்ல ஒருத்தர் இறந்துட்டா கூட இருக்கறப்ப எவ்வளவு நேசிச்சோம், நெருக்கமாய் இருந்தோம்னெல்லாம் நினைச்சுட்டே மீதி வாழ்க்கைய கழிச்சிடலாம். ஆனா இருக்கறப்பவே விலகிட்டா அதுக்கு கூட வழியில்லாமல் விலகின கசப்பு நம்ம வாழ்க்கைய நரகமாக்கிடும்டா”


(தொடரும்)

என்.கணேசன்

11 comments:

 1. Superb. Artham podhindha vaakkiyangal.

  ReplyDelete
 2. சுஜாதாOctober 26, 2017 at 6:47 PM

  ரொமான்ஸ்லயும் கலக்கறீங்க கணேசன் சார். முதல் தடவையா உங்க நாவல்ல ஒரு வீராங்கனை கதாநாயகி. கடைசி டயலாக் சூப்பர். கண் கலங்கி விட்டேன்.

  ReplyDelete
 3. Yes......காதல் பிரிவு பற்றிய புது expalnation...really heart touching.....
  அதேமாதிரி, நடஇப்பும், பாசாங்கும் சிலரது வாழ்க்கை முறை என்று சொல்லியது....
  செந்தில் நாதனிடமிருந்து, வழக்கமான போலீஸ் விசாரணை...
  சங்கரமணி, அவன் எப்படி தப்பித்தான் என்று அறிந்துக் கொள்ளும், curiosity...
  க்ரிஷ், அனைவரையும் சாதூர்யமாக சமாளிக்கிறான்.......
  ஆவலுடன் அடுத்த பதிவிற்கு......

  ReplyDelete
 4. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

  யாழ்பாவாணன்
  http://fliphtml5.com/homepage/mjnyg

  ReplyDelete
 5. சீக்கிரம் முடிந்தது போல் உள்ளது.நான் மாஸ்டர் Entry எப்ப வரும்னு காத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 6. தாங்களின் அனைத்து நாவல்களிலும் காதல் உணர்வு தான் உச்சம்!

  ReplyDelete
 7. Sir, the last paragraph bought tears in my eyes. These are the words of real and true love. I think that the last paragraph will bring a drastic change in many people's life.

  ReplyDelete
 8. Ecellent and more intresting. I wondered swveral times

  ReplyDelete
 9. இயல்பான காதல் வெளிப்பாடு G காதலிப்பதாலேயே ஆழ் மன மனித சுந்திரத்தை இழந்துவிட்ட முடியாது துறக்க வேண்டுமென்ற நிலை வரும் வரை இங்கு நம்பிக்கை என்பது தான் காதல் என்றாகி போகும் சாவை விட பிரிவு கொடுமைதான் இனி மனிஷ் என்ன செய்வான் கிரிஷை கொல்ல முயல்வதற்கு உதவி புரிவானா ......

  ReplyDelete
 10. Excellent and supper sir...next waiting

  ReplyDelete