சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 12, 2017

இருவேறு உலகம் - 51


ர்ம மனிதனை சதாசிவ நம்பூதிரியின் ’ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், எத்தனை காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்’ என்கிற வாசகம் நிறைய யோசிக்க வைத்தது.  அர்த்தமுள்ள வார்த்தைகள்! ஜோதிடனுக்கு வாக்குப் பலிதம் மிக முக்கியம். அதற்கு ஜோதிட ஞானம் மட்டும் போதாது. அதனுடன் வலிமையான உள்ளுணர்வும் சேர்ந்தால் மட்டுமே அவன் சில தீர்மானங்களை எட்ட முடியும். சதாசிவ நம்பூதிரி அப்படி எட்ட முடிந்தவர். “அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா சாதாரணமா இருந்துட மாட்டான்” என்கிற அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்வது புத்திசாலித்தனம் அல்ல….

அப்போது அவசரமாக மனோகர் வந்து தயக்கத்தோடு நிற்க மர்ம மனிதன் அவனைக் கேள்விக்குறியோடு பார்த்தான். மனோகர் ஒரு சீட்டை நீட்டினான். மர்ம மனிதன் அந்தச் சீட்டை வாங்கிப் படித்தான்.

“க்ரிஷ் அந்த மலையிலிருந்து போன் செய்து குடும்பத்திடம் பேசி இருக்கிறான். குடும்பம் முழுவதுமே அவனை அழைத்து வர அந்த மலைக்குப் போயிருக்கிறது”

சலனமே இல்லாமல் படித்து விட்டு அந்தச் சீட்டைச் சட்டைப்பையில் வைத்துக் கொண்ட மர்ம மனிதன் மெல்லத் தலையசைக்க மனோகர் போய் விட்டான். ஒன்றுமே நடக்காதது போல மர்ம மனிதன் சதாசிவ நம்பூதிரியைக் கேட்டான்.

“சரி ஐயா. இந்தப் பையனுக்கு இன்னும் அபாயங்கள் காத்திருக்குன்னு சொன்னீங்களே. அது எந்த மாதிரியாய் இருக்கும். அதுல இருந்து பையன் தப்பிச்சுடுவானா மாட்டானா…”

“எதையுமே நிச்சயமா சொல்றதுக்கில்லை. உயிருக்கு அபாயம் இருக்கு, எதிரி வலிமையா எதிர்ப்பான்னு இருக்கு. சரிசமமா நல்லதும் இருக்கறதால 50-50 சான்ஸ் சொல்லலாம்…..”

ஒரு நிச்சயமான பதிலை அவர் தராதது அவனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆனால் அதில் அவர் தவறு ஏதுமில்லை. ஜாதகமே அப்படித்தான் இருந்தது. அவனும் அறிந்தது தான். ஆனால் அவர் கூடுதலாகவோ நிச்சயமாகவோ ஒரு முடிவைச் சொல்வார் என்று தான் அவன் எதிர்பார்த்து இங்கு வந்தான். அவர் கூடுதலாகச் சொன்னது இந்த விதை உவமானம் தான். அந்த உவமானம் அவனுக்குக் கசந்தது. விதை விருட்சமாக அனுமதித்தால் அல்லவா அது காடு ஆவதற்கு. அவன் அனுமதிக்க மாட்டான்….. அனுமதிக்கவே மாட்டான்….

மர்ம மனிதன் உடனே எழுந்தான். இனி இங்கு நேரம் வீணாக்குவதில் அர்த்தமில்லை. க்ரிஷின் மறுவரவு அடுத்து திட்டமிட வேண்டிய அவசரத்தை ஏற்படுத்தி விட்டது. “ரொம்ப நன்றி ஐயா. நான் கிளம்பறேன்…” என்று அவன் கைகூப்பினான்.

சதாசிவ நம்பூதிரியும் கை கூப்பினார். “முகம் தெரியாத அடுத்தவங்க ஜாதகங்கள் மேல நீங்க இவ்வளவு அக்கறை காட்டினது ஆச்சரியமா இருக்கு. ஒருவேளை அவங்க யாருன்னு தெரிய வந்ததுன்னா அவங்கள ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க. அவங்க ஜெயிக்கணும்னு என்னோட ஆசிர்வாதம். நல்லவங்க நல்லா இருக்கணும். ஏன்னா அதுல தான் லோக க்‌ஷேமம் அடங்கி இருக்கு…”

முகம் மாறாமல் கேட்டுக் கொள்வது மர்ம மனிதனுக்குக் கஷ்டமாய் இருந்தது. ஆனாலும் அதைச் சாதித்து விட்டு விடை பெற்றான்.


க்ரிஷ் குரல் போனில் கேட்டதுமே உதய் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. கண்கள் தானாகக் கலங்கின. தொண்டை அடைத்தது. சரியாய் வார்த்தைகள் கிடைக்கவில்லை… கடைசியில் கேட்டான். “எங்கடா இருக்கே.?”

“அதே மலையில் தான். நீ வந்து கூட்டிகிட்டு போ”

“உனக்கு…. உனக்கு…. எதுவும் ஆயிடலயே?”

“நல்லா தான் இருக்கேன். சீக்கிரம் வந்து சேரு”

”வெய்ட் பண்ணு. ஒரு மணி நேரத்துல வந்து சேந்துடுவேன்….”

“அப்டியெல்லாம் பறந்து வரணும்னு இல்லை. ஒழுங்கா பாத்து வா”

க்ரிஷ் அழைத்ததை உதய் சொன்னவுடன் கமலக்கண்ணன் மகனுடன் தானும் கிளம்பினார். கண்கலங்கிய பத்மாவதி “இருங்க. நானும் வந்துடறேன்…” என்று சமையலறைக்கு வேகமாகப் போனாள்.

“வர்றதுன்னா உடனடியா வரணு.ம். எங்க போற…”

“குழந்தைக்கு சாப்ட ஏதாவது எடுத்துகிட்டு வர்றேன்…”

“அதை அவன் வந்தவுடன குடு….. இப்ப வா. இல்லாட்டி உன்னை விட்டுட்டே போயிடுவோம்” என்று உதய் எரிச்சலுடன் சொன்னான். தம்பியைப் பார்க்கத் தாமதமாவதில் அவனுக்குச் சம்மதமில்லை”

“இருடா தடியா. உனக்கென்ன. நீ நேரா நேரத்துக்கு நல்லா சாப்டுட்டு இருக்கே. அவன் என்ன சாப்பிட்டானோ, எப்ப சாப்பிட்டானோ…” என்று சொன்ன பத்மாவதி ஐந்து நிமிடத்தில் ஒரு ஃப்ளாஸ்க், பெரிய அடுக்கு டிபன் பாக்ஸோடு வந்து சேர்ந்தாள்.

உதய் சிரித்தான். “என்ன மினி கிச்சனே வர்ற மாதிரி இருக்கு.”

“நீ இப்படி கண்ணு வெச்சு வெச்சு தான் குழந்தை நோஞ்சானாவே இருக்கான். சும்மா இளிச்சிட்டு நிக்காம கிளம்புடா சீக்கிரம்” என்று பத்மாவதி திட்டி அவசரப்படுத்தினாள்.

காரில் போகும் போதே கமலக்கண்ணன் இளைய மகனுடன் போனில் பேசினார். “எப்படிடா இருக்கே. ஒன்னும் பிரச்னை இல்லயே”

“இல்லப்பா. நல்லா தான் இருக்கேன். கவலைப்படாதேப்பா”

அதற்கு மேல் கணவர் பேச பத்மாவதி அனுமதிக்கவில்லை. அவரிடமிருந்து பலவந்தமாய் செல்போனை வாங்கியவள் ”குழந்தே எப்படிடா இருக்கே….. என்னடா ஆச்சு…..?’

“நல்லா இருக்கேம்மா. இப்ப பேச செல்லுல சார்ஜ் இல்ல. நேர்ல சொல்றேன்…” என்று முடித்துக் கொண்ட க்ரிஷ் அவர்கள் வந்து சேர்வதற்குள் என்ன சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துத் தயார்ப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது என்பதை அவன் கண்டிப்பாகச் சொல்லப்போவதில்லை. சொன்னால் அதை நம்புவது யாருக்குமே சுலபமாகவும் இருக்காது. சில சமயங்களில் ஜீரணிக்க முடியாத உண்மைகளை விட ஜீரணிக்க முடிந்த எளிமையான பொய்களே கேட்பவர்களுக்கு நிம்மதி!

மலையடிவாரத்தில் காரை நிறுத்தி மின்னல் வேகத்தில் முதலில் இறங்கி அங்கு காத்து நின்றிருந்த க்ரிஷை ஓடிப்போய் உதய் இறுக்கமாய் கட்டியணைத்தான். அவன் கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீரை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனைத் தொடர்ந்து வந்து அன்பு மழை பொழிந்த பெற்றோரின் கண்ணீரும் சேரவே க்ரிஷும் கண்கலங்கினான்.

என்ன ஆனது என்பதை அறிய ஆவலாய் இருந்த அவர்களிடம் க்ரிஷ் சொன்னான். “காலை எதோ கடிக்கிற மாதிரி இருந்துது. அப்பறம் மயங்கி விழுந்துட்டேன். என்ன ஆச்சுன்னே தெரியல. இடையில எப்பவோ கொஞ்சம் நினைவு திரும்புனப்ப பார்த்தா ஏதோ காட்டுக்குள்ளே இருக்கேன். அங்கே எப்படி போனேன்னு தெரியல. ரொம்ப வீக்கா ஃபீல் பன்னேன்னாலும் நீங்க கவலைப்படுவீங்கன்னு கஷ்டப்பட்டு செல்லுல மெசேஜ் அனுப்பிச்சேன்….. அப்புறம் பழையபடி மயக்கமாயிட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல…. யாரோ காட்டுவாசிகள் என் வாய்ல ஏதோ மூலிகை சாறை விட்டது மட்டும் அரை மயக்கத்துல தெரிஞ்சுது. பிறகு என்னாச்சுன்னு தெரியல. மறுபடி நினைவு வந்தா பழையபடி மலை மேல இருக்கேன்….. என்ன நடந்துச்சுன்னே ஒன்னுமே புரியல….. யோசிச்சுப் பார்த்தாலும் வேற எதுவும் ஞாபகத்துக்கு வரல. … ”

அவன் சொன்னதை முழுமையாக நம்பியவள் பத்மாவதி தான். கமலக்கண்ணன் என்னவாகியிருக்கும் என்று குழப்பத்துடன் யோசித்தார். உதய் தம்பியை சந்தேகத்தோடு பார்த்தான். க்ரிஷ் வெகுளித்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு அண்ணனைப் பார்த்தான். என்ன தான் மாறி மாறி யார் கேட்டாலும் இதையே  சொல்வது என்று தீர்மானித்திருந்தான்….

க்ரிஷ் வலது கால் கட்டை விரலில் கருத்துப் போய் ஆறியிருந்த காயத்தை முதலில் பார்த்தவள் பத்மாவதி தான். அங்கேயே அப்படியே அமர்ந்து மகன் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு மனம் பதைக்க அந்த வடுவைப் பார்த்தாள். பிறகு தான் மற்ற இருவரும் அந்தக் காயத்தைக் கவனித்தார்கள்.

“ஏதோ விஷ ஜந்து கடிச்சிருக்கற மாதிரி தெரியுது. விடு. கடவுள் அருளால எல்லாம் சரியாயிடுச்சே அதே போதும்…… உனக்குப் பசிக்குதா…… என்ன சாப்டறே…… அம்மா ஏதோ கொஞ்சம் கொண்டாந்துருக்கேன்….” என்று ஆரம்பித்த பத்மாவதி மகன் இத்தனை நாள் பட்டினி இருந்ததை அந்த நேரத்திலேயே அந்த இடத்திலேயே நிவர்த்தி செய்ய ஆயத்தமானாள். க்ரிஷ் மறுப்பையோ, உதய் கேலியையோ அவள் சிறிதும் பொருட்படுத்தாமல்  மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். “போதும்மா வாந்தி வர்ற மாதிரி இருக்கு”ன்னு க்ரிஷ் சொன்ன பிறகு தான் நிறுத்தினாள்.

காரில் வீடு திரும்பும் போது பத்மாவதி, கார் ஓட்டிக் கொண்டிருந்த உதயிடம் சொன்னாள். “உதய். ஹரிணிக்குப் போன் பண்ணி உடனே சொல்லுடா”

காரில் பின்சீட்டில் அவள் அருகே அமர்ந்திருந்த க்ரிஷ் முகம் சுளித்தான். “அதெல்லாம் வேண்டாம்….”

“சரிதான் சும்மா இருடா. எல்லாம் உதய் என்கிட்ட சொல்லிட்டான்…” என்று பத்மாவதி இளைய மகனின் வாயை அடைத்தாள்.

க்ரிஷ் பார்வையாலேயே அண்ணனைச் சுட்டெரிக்க, உதய் மறந்தும் கூட கண்ணாடி வழியாகவோ, பின்னால் திரும்பியோ தம்பியைப் பார்த்து விடக்கூடாது என்று உறுதியாயிருந்தான். தெருவிலேயே மிக கவனமாய் இருந்தான். ‘இந்த அம்மாவுக்கு விவஸ்தையே கிடையாது. இப்படியா போட்டு உடைக்கிறது” என்று மனதில் பத்மாவதியைத் திட்டினான்.

அந்த நேரத்தில் எதிரில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று ப்ரேக் பிடிக்காமல் அவர்கள் காரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. தெரு அகலம் அந்தப் பகுதியில் குறைவாக இருந்ததால் அந்த லாரியைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையை உதய் திகைப்புடன் உணர்ந்தான்…..


(தொடரும்)
என்.கணேசன்

(தீபாவளி போனஸாக வரும் 17 ஆம் தேதி மாலை அடுத்த அத்தியாயம் வெளிவரும். 
-என்.கணேசன்)

12 comments:

  1. Super update. Thanks for Bonus. Eagerly waiting for next the bonus.

    ReplyDelete
  2. தீபாவளி போனசுக்கு நன்றி சார். அதனால தான் இந்த மாதிரி ஒரு திகிலான இடத்துல தொடரும் போட்டதுக்கு நான் உங்களை மன்னிக்கிறேன். ரொம்ப விருவிருப்பா போகுது நாவல்.

    ReplyDelete
  3. ayyo..why again lorry attack? this family seems really nice when it comes for the family bonding..please dont break this till the end as it makes me to feel good and to build my family like this. Please dont kill anyone in this family sir.

    ReplyDelete
  4. Sir, congratulations for 10 years of blogging:-)))

    ReplyDelete
  5. வேகமாக வரும் ப்ரேக் இல்லாத லாரி ...மர்ம மனிதனின் அடுத்த முயற்சியில் எப்படி தப்பிக்க போகிறாய் க்ரிஷ் ..?

    எழில். S

    ReplyDelete
  6. #சில சமயங்களில் ஜீரணிக்க முடியாத உண்மைகளை விட ஜீரணிக்க முடிந்த எளிமையான பொய்களே கேட்பவர்களுக்கு நிம்மதி!#
    அருமை.இப்படியெல்லாம் உங்களால் மட்டுமே எழுதமுடியும்

    ReplyDelete
  7. Mr. Ganeshan.. Unga fans uyir mela ungalukku konjam kuda akkarai illa.... oru happiness kuduthu suddena twist vachi... enna poguthonu padhara vachi thodarum potirkinga.... Konjam weak hearted personsa patha pavama theriyalaya ungaluku?

    ReplyDelete
  8. ரொம்ப ரொம்ப நல்லவங்களும் உலகத்தில் இருக்காங்கனு சாட்சி நம்பூதிரியின் கடைசி டயலாக் ரொம்ப ரொம்ப கெட்டவனிடம் .......இனி கிரிஷை அழிப்பதே அவனின் தலையால தண்ணி குடிக்கும் வேலையாக போகிறதா ? இப்போ லாரியின் கதி என்னவாக போகிறது ?

    ReplyDelete
  9. Emotional family reunion....with lighter moments....

    Mr.MM ன் எதிரிகள் வெற்றிப்பெற, ஆசிர்வதிக்கும் நம்பூத்திரி...அவர்களின் வெற்றியில்
    தான் உலக நலனும் இருப்பதாக உரைக்கும் நம்பூத்திரியின் கூற்று,அவனுக்கு உவப்பாக இல்லை
    அதன் விளைவு, விதையின் அழிவுக்கு திட்டமிடுகிறான்...ஆவலுடன் அடுத்த பதிவுக்கு...

    ReplyDelete
  10. என்ன ஒரு அருமையான குடும்பம்...

    ReplyDelete
  11. பத்மாவதி அம்மா அருமை....

    ReplyDelete