அமானுஷ்ய ஆன்மிகம் - 5
வூடூ சடங்குகளை நடத்தும் வூடூ ராணிகள் வூடூ வரலாற்றில் எத்தனையோ பேர்
இருந்தாலும் அந்த வரலாற்றில் அந்தப் பெயரில் நிலைத்து நின்றதும் இன்றும்
பேசப்படுவதும் ஒரே ஒரு பெண்மணி மட்டுமே. அவர் தான் அமெரிக்காவில் நியூ
ஆர்லியன்ஸில் வாழ்ந்து வந்த மேரி லாவியு.
ஒரு பணக்கார நிலச்சுவான்தாருக்கும் அவருடைய
ஹைத்திய அடிமைப்பெண்ணுக்கும் 1794 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸில் பிறந்தவர் தான்
மேரி லாவியு. தாய் ஹைத்தி நாட்டினர் என்பதாலோ என்னவோ மேரி லாவியுக்கு வூடூ மீது
சிறு வயதில் இருந்தே ஆர்வம் இருந்து வந்தது. 1819 ஆம் ஆண்டு அவரைத் திருமணம்
செய்து கொண்டவர் சில காலத்தில் மர்மமான முறையில் காணாமல் போனதாகவோ, ஓடிப்போனதாகவோ
சொல்லப்படுகிறது. 1826 ஆம் ஆண்டு மறுமணம் புரிந்து கொண்டு அவர் பதினைந்து
குழந்தைகளுக்குத் தாயானார்.
ஹைத்தியைப் போலவே அமெரிக்காவில் நியூ
ஆர்லியன்ஸிலும் வூடூ மிகவும் பிரபலமாக இருந்தது.
அங்கு வூடூ பல மாற்றங்கள் அடைந்து வூடூ சின்னங்கள் விற்பனை, வூடூ
மருத்துவம், வூடூ சூனியம் என்ற வகைகளுக்கு வந்து சேர்ந்திருந்தது. வூடூ மீது
மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மேரி லாவியு அப்போது அங்கு இருந்த பலரிடமும் வூடூவைக் கற்றார்.
கடைசியில் டாக்டர் ஜான் பாயோ என்பவருடன் சேர்ந்து வூடூ மருத்துவமும்
பார்த்தார். அந்த டாக்டர் உண்மையான வூடூ
பயிற்சியாளர் அல்ல என்றும் ஏமாற்றுக்காரர் என்றும் சொல்லப்படுகிறது. அவரிடமிருந்து
பிரிந்த மேரி லாவியு தனியாக செயல்பட ஆரம்பித்தார். மிகவும் பிரபலமும் அடைந்தார்.
1830 ஆம் ஆண்டு முதல் நியூ ஆர்லியன்ஸின்
காங்கோ சதுக்கத்தில் வூடூ நடனச் சடங்குகளை முன்னின்று நடத்தினார். ஹைத்தியில்
நடந்த வூடூ நடனச்சடங்கு போல இங்கு நடந்தது இருக்கவில்லை என்று உலகப்
பார்வையாளர்கள் பலர் கருதினார்கள். இந்த நடனங்களில் மேரி லாவியு பல நவீன
மாற்றங்களைப் புகுத்தினார். அதில் ஒன்று தம்பல்லா நடனங்களில் நிஜப் பாம்பையே
பயன்படுத்தியது. மேலும் நவீன காலத்தவரைக் கவரும்படியான சில அம்சங்களைப்
புகுத்தினார். சிலர் அவர் ஆவிகள் உலகத்திலிருந்து தூதுவராக வந்து இங்கு பிறந்தவர்
என்று கருதினார்கள். அதனால் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆவிகள் உலகில் இருந்து
பெறப்பட்டதாகவே இருக்கும் என்று கருதினார்கள். வேறு சிலர் இது கூட்டத்தை
வரவழைக்கச் செய்யும் வியாபார யுக்தி என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் ஆட்டம்,
பாட்டு, மிருகபலி எல்லாம் கலந்த அந்த நடனச் சடங்கைக் காண காலம் செல்லச் செல்ல
கூட்டம் கூடிக் கொண்டே வந்தது என்பதென்னவோ உண்மை.
காங்கோ சதுக்க நடனத்தைப் போலவே ஒவ்வொரு
வருடமும் புனித ஜானின் மாலை என்று ஜூன் மாதம் 23 ஆம் தேதி பல நாடுகளிலும்
கொண்டாடப்படும் ஒரு விழாவைத் தலைமை தாங்கி வூடூ முறைப்படி அவர் நடத்தினார். ஜீன்
23 மாலையில் இருந்து மறுநாள் அதிகாலை வரை நடக்கும் அந்த நிகழ்ச்சிக்குப் பங்கு
கொள்பவர்களிடம் இருந்து நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான
மக்களும், பத்திரிக்கையாளர்களும் அதைக் காண வந்தார்கள். நோய்களில் இருந்து
பாதுகாப்பு, மற்றவர்களின் சூனியங்களில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்கான
சடங்குகளில் கலந்து கொள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
மேரி லாவியு வூடூ நிபுணராக வலம் வந்த
காலத்திலேயே சிகை அலங்கார நிபுணராகவும் தொழில் புரிந்தார். அங்கு வரும் ஊர் வம்பு
பேசும் பெண்களிடம் இருந்து ஊரில் பலரைப் பற்றியும் அறிந்து கொண்டு
சம்பந்தப்பட்டவர்கள் தன்னை அணுகும் போது அவர்களுக்கு குறி சொன்னார் என்ற
குற்றச்சாட்டும் அவரைப் பற்றி இருந்தது.
அதே நேரத்தில் பலர் நோய்களைப் போக்கினார்,
பலரைத் தண்டனைகளில் இருந்தும், பிரச்னைகளில் இருந்தும் காப்பாற்றினார் என்ற
நிகழ்வுகளும் பேசப்பட்டன. தன் சேவைகளுக்கு பணக்காரர்களிடம் இருந்து பெருந்தொகைகள்
வசூல் செய்தாலும் ஏழைகளுக்கு எல்லாமே இலவசமாகவோ, மிகக் குறைந்த காசிலோ செய்து
கொடுத்தார் என்கிறார்கள். எதிரிகளை வூடூ
முறையிலோ, பயமுறுத்தியோ தன் பாதையில் குறுக்கிடாமல் பார்த்துக் கொண்டார் என்றும்
கூறுகிறார்கள். அதற்கு ஜே.பி.லங்க்ராஸ்ட் என்ற நியூ ஆர்லியன்ஸ் வியாபாரியை
அக்காலத்தில் உதாரணம் காட்டினார்கள்.
1850 ஆம் ஆண்டு வாக்கில் அந்த வியாபாரி
மேரி லாவியுவை ஏமாற்றுக்காரர் என்று எல்லோர் மத்தியிலும் குற்றம் சாட்டினாராம்.
அதன் மறு நாளிலிருந்து தினமும் அதிகாலையில் அவர் வீட்டு வாசலில் ஒரு சேவலின் தலை
மட்டும் கிடக்க ஆரம்பித்ததென்றும், சில நாட்கள் கழித்து ஜே.பி.லங்க்ராஸ்ட் ஊரை
விட்டே போய் விட்டார் என்றும் கூறுகிறார்கள். அவர் தினமும் அதிகாலையில் சேவலின்
தலைகளைத் தன் வீட்டு வாசலில் காணப்பிடிக்காமல் போனாரா, இல்லை அந்த சேவலின்
தலைகளில் சூனியம் வைக்கப்பட்டு அது அவரை அங்கிருந்து துரத்தியதா என்பது பற்றி
ஒருமித்த கருத்து இல்லை.
1881 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மேரி லாவியு
தன் மரணம் வரை பரபரப்பாக எல்லோராலும் பேசப்பட்டார். அவர் பெயரையே கொண்ட அவர்
மகள்களில் ஒருத்தி அவர் தொழிலைத் தொடர்ந்தார் என்கிறார்கள். அவர் மகளை இரண்டாம்
மேரி லாவியு என்றழைத்தார்கள். அவர் தாயைப் போல எல்லா துறைகளிலும் மூக்கை
நுழைக்காமல் வூடூ மருத்துவம் மட்டும் பார்த்தார் என்றும் பலரின் நோய்களைத்
தீர்த்தார் என்றும் சொல்கிறார்கள். அவருக்கு பாரம்பரிய மருத்துவம் குறித்த ஞானமும்
நிறைய இருந்தது. வூடூவை விட அதிகமாய் அந்த பாரம்பரிய மருத்துவ ஞானமே நோய்கள்
குணமாகக் காரணமாக இருந்தது என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். அவரும் 1897 ஆம்
ஆண்டு காலமானார். அவரையும் அவர் தாயின் கல்லறையிலேயே புதைத்தார்கள் என்கிறார்கள்.
மேரி லாவியுவின் கல்லறை இன்றும் மிகவும்
பிரபலமாக இருக்கிறது. அந்தக் கல்லறையில் இருந்து கொண்டும் மேரி லாவியு அற்புதங்கள்
புரிகிறார், வேண்டியதைத் தருவார் என்ற நம்பிக்கை இன்றும் பலரிடம் நிலவி வருகிறது.
அதனால் சுற்றுலாப் பயணிகள் நியூ ஆர்லியன்ஸில் இருக்கும் அவரது கல்லறைக்கு வந்த
வண்ணம் இருக்கிறார்கள்.
அவரது கல்லறையில் வந்து வணங்குபவர்களின்
கோரிக்கை நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. சிலர்
அவர் கல்லறையில் பெருக்கல் குறி வரைந்து, வலது கையை அதன் மேல் வைத்து, காலின்
பாதத்தை மூன்று முறை கல்லறையில் தேய்த்து, சில வெள்ளிக் காசுகளை ஒரு கோப்பையில்
கல்லறை மேல் வைத்து வேண்டிக் கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும் என்கிறார்கள். சிலர்
உணவு, காசு, பூக்கள் மூன்றையும் கல்லறையில் வைத்து மூன்று முறை சுற்றி,
செங்கல்லால் பெருக்கல் குறியைக் கல்லறையில் வரைந்து பிரார்த்தனை செய்தால் அந்தப்
பிரார்த்தனை நிறைவேறும் என்கிறார்கள். அமானுஷ்ய சக்திகளை வேண்டுபவர்களில் சிலர்
மதுப்புட்டியையும், மெழுகுவர்த்தியும் கூட வைத்து வேண்டுகிறார்கள். இவை எல்லாம்
எப்படி ஆரம்பித்தன என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பலன் கிடைக்கின்றன
என்பது பலரின் அனுபவமாக இருக்கிறது. எத்தனை முறை கல்லறையைத் துடைத்து வைத்தாலும்
திரும்பத் திரும்ப இப்படி அசுத்தம் செய்கிறார்கள், இப்படி எல்லாம் செய்தால் சமாதி
சிதிலம் அடைந்து விடும் என்பதைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று
கல்லறையைப் பராமரிப்பவர்கள் புலம்புவதை யாரும் லட்சியம் செய்வது போல் தெரியவில்லை.
அந்தக் கல்லறையில் மேரி லாவியுவின் ஆவி உலா
வருவதைப் பார்த்ததாகவும் பலரும் சொல்கிறார்கள்.
1998 ஆம் ஆண்டு டிஸ்கவரி சேனல் அமெரிக்காவின் ஆவிநடமாடும் இடங்கள் (America’s Haunted Houses) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பிய போது இறக்கும் வரை இளமை மாறாதிருந்த மேரி
லாவியுவின் ஆவியை 1919 ல் நடந்த ஒரு வூடூ சடங்கில் பலர் பார்த்திருப்பதாகச்
சொன்னதாகத் தெரிவித்தது. அந்தக் கல்லறைக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துப் போகும்
கைடுகளும் பல கதைகள் சொல்கிறார்கள். அவற்றில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பார்த்த
ஒரு நிகழ்ச்சியைப் பலரும் நம்புகிறார்கள்.
ஆப்பிரிக்க அமெரிக்கரான எல்மோர் லீ
பேங்க்ஸ் (Elmore Lee
Banks) என்பவர் மேரி லாவியுவின் கல்லறை உள்ள பகுதியில்
ஒரு மருந்துக் கடையில் மருந்து வாங்கச் சென்ற போது ஒரு மூதாட்டி கடைக்குள்ளே
நுழைய, அதைப் பார்த்து பயந்து போய் கடையின் பின் வாசல் வழியாக கல்லாவில் இருந்த
பெண்மணி ஓடியிருக்கிறார். அந்த மூதாட்டி சத்தமாகச் சிரித்தபடி திரும்பிப் பார்த்து
பேங்க்ஸிடம் “என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டாராம். “தெரியவில்லை” என்று யதார்த்தமாக ஒத்துக் கொண்ட பேங்க்ஸை அந்த மூதாட்டி கோபத்துடன்
அறைந்து விட்டு குதித்து ஆவியாக மாறி ஒரு அமானுஷ்ய ஒலியுடன் வெளியேறி தூரத்தில்
தெரிந்த கல்லறைத் தோட்ட வழியாகச் சென்று மறைய பேங்க்ஸ் மயங்கி விழுந்திருக்கிறார்.
அவரை எழுப்பிய மருந்துக்கடை பெண்மணி “நாம் பார்த்த கிழவி மேரி
லாவியு”
என்று பயம் குறையாமல் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
இனி வூடு மூலம் நோய்கள் குணமாகும்
சுவாரசியத்தகவல்கள் பார்ப்போமா?
-என்.கணேசன்
நன்றி - தினத்தந்தி - 4.4.2017
நன்றி - தினத்தந்தி - 4.4.2017
வூடு... உண்மையிலே வித்தியாசம்
ReplyDelete