சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 4, 2017

இருவேறு உலகம் – 28



நாகர்கோவிலில் அன்றைக்கு அந்த ஆள் நுழைந்த நான்காவது ஆஸ்பத்திரி அது. யாரைப் பிடித்தால் வேலை முடியும் என்பதை தோற்றத்தை வைத்தே எடை போட முடிந்த சாமுத்திரிகா லட்சணம் படித்தவன் அவன். புதுடெல்லி அதிகாரியை சர்ச்சில் பாவமன்னிப்புக்கூண்டில் சந்தித்த மர்ம மனிதனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் அவன். அவனுடைய உண்மையான பெயர் மனோகர்.  ஆஸ்பத்திரியை ஒரு முறை வலம் வந்து அவன் தேர்ந்தெடுத்தது நர்ஸ் சகாயமேரியை. சட்டைப் பையில் வெளியே நன்றாகத் தெரிகிற மாதிரி ஐநூறு ரூபாயை வைத்துக் கொண்டு விட்டு அவன் சகாயமேரியை நெருங்கினான்.  தன் தேவையைச் சொன்னான்.

அவள் ஆயாசத்துடன் சொன்னாள். “23 வருஷத்துக்கு முன்னால பிறந்த குழந்தைகளோட ரெகார்டெல்லாம் பார்க்கறது கஷ்டம் தான். அது எங்கே கிடக்குதோ

மனோகர் தன் சட்டைப்பையில் இருந்த ஐநூறு ரூபாயை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். “பார்த்து சொன்னீங்கன்னா உதவியாய் இருக்கும்

அவன் கையில் இருந்த பணத்தைப் பார்த்துக் கொண்டே சகாயமேரி சொன்னாள். “சரி மூணு நாள் கழிச்சு வாங்க

அவன் சொன்னான். “எனக்கு இன்னைக்கே கிடைச்சா உதவியாய் இருக்கும்

“இன்னைக்கு கஷ்டமாச்சே

அவன் இன்னொரு ஐநூறு ரூபாயையும் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.

“முயற்சி பண்றேன்என்றாள் அவள்.

அவன் இரண்டு ஐநூறுகளையும் அவளிடம் அவன் நீட்டினான். அவள் வாங்கிக் கொண்டே கேட்டாள். “குழந்தையோட அம்மா பேர் என்ன சொன்னீங்க?

“பத்மாவதி. அப்பா பேரு கமலக்கண்ணன்... ரெகார்டுல குழந்தை பிறந்த நேரமும் இருக்குமா?

“இப்பவெல்லாம் டைமும் சேர்த்து தான் எழுதறோம். அப்ப எல்லாம் எப்படின்னு தெரியல.... பார்க்கலாம்


ங்கரமணிக்கு என்னேரமும் தன் தலை வெடித்து விடும் போலத் தோன்ற ஆரம்பித்தது சிறிதும் குறையவில்லை. யோசிக்க யோசிக்க எல்லாப் புதிர்களும் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகினறனவே ஒழிய தெளிவான விடை கிடைக்கிற வழி தெரியவில்லை. மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட அந்த அலட்டல் மகான், க்ரிஷ் இந்த தேசத்தில் இல்லை என்றும், தொலைதூரத்தில் இருக்கிறான் என்றும் சொன்னது உதய் சொன்ன தகவலுக்கு ஒத்துப் போவதாகவே இருந்தது. ஆனால் அதற்கு முன்னால் அவர் செல்போனிற்கு வந்த மர்ம அழைப்புகள் பற்றி வந்த தகவலோ அந்த அழைப்புகள் அவர் வீட்டுப் பகுதியிலிருந்தே அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது. அப்படியானால் வாடகைக் கொலையாளியின் செல்போனில் இருந்து பேசிய நபரே க்ரிஷ் செல்போனில் இருந்து செய்தி அனுப்பவில்லை என்றாகிறது. அப்படியானால் வாடகைக் கொலையாளியின் செல்போன் வைத்திருப்பவன், க்ரிஷ் அல்லது அவனுடைய செல்போன் வைத்திருப்பவன் என்று இரண்டு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ன?  குழப்பமாக இருந்தது.  

சங்கரமணி தன் தலையைப் பலமாக ஆட்டி கண்களை கசக்கி விட்டுத் தெளிவாக யோசிக்கப் பார்த்தார். மாணிக்கமும் குழப்பத்திலேயே இருந்தாலும் மாமனின் செய்கைகள் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. என்ன இவர் பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்கிறார்!

“என்ன ஆச்சு மாமா?என்று வாய் விட்டுக் கேட்ட மருமகனைப் பார்த்து சங்கரமணி சொன்னார். “பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல. கூடிய சீக்கிரம் அதுவும் நடந்துடுமோன்னு பயமாய் இருக்கு.

ஏன் என்று மாணிக்கம் கேட்கவில்லை. சங்கரமணி தானாகவே சொன்னார்.

வாடகைக்கொலையாளி போன்ல இதே ஏரியால இருந்து பேசியிருக்கற ஆள் கண்டிப்பா க்ரிஷ் போன்ல தென்னமெரிக்கால இருந்து பேசியிருக்க வாய்ப்பில்ல. அதனால ரெண்டு செல்போனும் வேற வேற ஆள்க கிட்ட தான் இருக்கணும். இது வரைக்கும் ஒருத்தன் தான் பிரச்னைன்னு நினைச்சிட்டிருந்தோம்.... இப்ப இதுல ரெண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரியுது. அந்த ஆள் வெளிநாட்டுல க்ரிஷ் இருக்கறதா சொன்னப்ப நான் நம்பலை. அப்படி வெளிநாட்டுல இருந்தாலும் ஏதோ பக்கத்துல இருக்கற ஸ்ரீலங்காவோ, சிங்கப்பூர் மலேசியாவோ இருக்கலாம்னு நினைச்சேன். இப்ப க்ரிஷ் செல் போன்ல இருந்து தகவல் வந்தது தென்னமெரிக்கால இருந்துன்னு சொல்றானுக. அதுக்குள்ள க்ரிஷ் எப்படி தென்னமெரிக்கா போயிருக்க முடியும்? என்ன நடக்குதுன்னு ஒரு இழவும் புரிய மாட்டேங்குது. நீ உடனடியா நட்ராஜ் கிட்ட பேசு. அந்த மாஸ்டர் கிட்ட இருந்து எல்லாத்தையும் முழுசா கேட்டுத் தெரிஞ்சுக்கற வழியப் பார்....

“நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் நட்ராஜ்கிட்ட பேசிட்டேன். அந்த மாஸ்டர் ரிஷிகேசம் போயிருக்காராம். நாளைக்குத் தான் வருவார்னு மாஸ்டரோட உதவியாள் சொல்லியிருக்கான். வந்தவுடனே அப்பாயின்மெண்ட் குடுக்கச் சொல்லி நட்ராஜ் கேட்டிருக்கார்...

தங்கள் குழப்பத்தை முழுவதும் தீர்க்காமல் வெளியூர் சென்று விட்ட அந்த மாஸ்டர் மீது சங்கரமணிக்குக் கோபம் வந்தது. அந்த மாஸ்டர் என்ன லூசா? பேசப் பேச திடீர்னு ரூமுக்குள்ள போயிடறார். அப்புறம் பார்த்தா திடீர்னு ரிஷிகேசம் போயிருக்கார்ங்கிறாங்க. ஒரு இடத்துல அந்த ஆள் ஒழுங்கா இருக்க மாட்டார் போலருக்கே.... எதுக்கும் உளவுத்துறைல சொல்லி இந்த ஆளைப்பத்தியும் விசாரிச்சு வெக்கிறது நல்லதுன்னு தோணுது



மாஸ்டர் டேராடூன் விமான நிலையத்திலிருந்து தன் குருவின் இருப்பிடம் நோக்கி வேகமாக ஜீப்பில் போய்க் கொண்டிருந்தார். சென்னையிலிருந்து அவர் தன் கவனத்தைக் குவித்து குருவின் சடலம் பார்க்க முடிந்ததே தவிர மற்ற விவரங்களை அறிய முடியவில்லை. பலமுறை அவர் முயன்றும் அங்கு வேறு யாரும் இல்லை என்பதைத் தவிர மற்ற எதையுமே அவரால் உணர முடியவில்லை. காரணம் குருவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அலைத்தடயங்களையும் அழித்து விட்டுப் போயிருந்தார்கள். அது அவ்வளவு சுலபமல்ல. யோகசக்தியை பரிபூரணமாய் அறிந்தவர்களுக்கே சாத்தியப்படும் வித்தை அது. அந்த அளவு சக்தி படைத்தவர்கள் இதில் இறங்கி இருக்கிறார்கள் என்றால் தற்போதைய நிலவரம்  மிக ஆபத்தானது தான்.....

ஜீப்பை ஒரு இடத்தில் சற்று மறைவாக நிறுத்தி விட்டு, மாஸ்டர் காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தார். சத்தமில்லாமல் மிக வேகமாக நடந்த அவருக்கு, தனக்கு இணையாக தன்னுடன் இந்தக் கரடுமுரடான காட்டுப் பாதையில் வேகமாக குருவும் நடந்த பழைய நாட்கள் நினைவுக்கு வந்து சுமையாக மாறின. எப்படிப் பட்ட ஞானி அவர், எப்படிப்பட்ட மனிதர் அவர் என்று மனம் கதறியது....

அரை மணி நேரம் நடந்த பின் அவர் தன் குருவின் சிறிய குடிலை அடைந்தார். அங்கு எந்த அசம்பாவிதமும் நடந்த அறிகுறி குடிலுக்கு வெளியேயும் இல்லை, உள்ளேயும் இல்லை. உள்ளே குரு தரையில் சாய்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தவர் மாரடைப்பால் அப்படியே சாய்ந்தது போலத் தான் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது.  பிரேத பரிசோதனை செய்தாலும் அதே முடிவைத் தான் மருத்துவர்களும் சொல்வார்கள். குருவின் உடலில் காயங்களோ, இரத்தக் கறையோ இருக்கவில்லை. அந்த அளவு கச்சிதமாக எதிரி அல்லது எதிரிகள் இயங்கி இருக்கிறார்கள். மிக அமைதியாகவும் கவனமாகவும் அந்த இடத்தை துல்லியமாக அலசி விட்டு மாஸ்டர் எதிரிகள் என்ற சொல்லை விட்டு எதிரி என்ற சொல்லில் தங்கினார்.

எதிரி அதிக நேரம் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவருடைய அனுமானமாக இருந்தது. அதிகபட்சமாய் ஏழெட்டு வினாடிகள் தான் குருவைத் தாக்க எதிரி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். குரு தன்னைக் காத்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்தது போல் தெரியவில்லை. அந்த ஏழெட்டு வினாடிகளே குருவுக்கு அதிகம் தான். அவரிடம் இருந்த சக்திகளுக்கு அவர் அந்த ஏழெட்டு வினாடிகளில் எத்தனையோ செய்திருக்க முடியும். அப்படி இருந்தும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் அதற்கு எதிரியின் சக்திக்கு முன் தன் எந்த முயற்சியும் பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்....   ஆனாலும் அந்த முகத்தில் பயம் தெரியவில்லை. மரணம் குறித்த துக்கம் தெரியவில்லை. நிலைமையை ஏற்றுக் கொண்டு அவர் விடைபெற முடிவெடுத்தது போலத் தான் தோன்றியது. மரணத்தைக் கூட ஞானியாகவே அவர் சந்தித்திருக்கிறார். மாஸ்டரின் கண்கள் ஈரமாயின.

மறுபடியும் அந்தக் குடிலை மாஸ்டர் ஆராய்ந்தார். எதுவும் அங்கு இடம் பெயர்ந்திருக்கவில்லை. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த மாஸ்டர் மர அலமாரியில் புத்தகங்கள் வைக்கும் இடத்திற்கு வந்த போது ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். அது என்ன என்று உடனடியாகப் புரியவில்லை.  மறுபடியும் கூர்ந்து பார்த்தார். எப்போதுமே அந்த அலமாரியில் குருவின் பழங்காலத்துப் பேனா ஒன்றிருக்கும். அதன் கீழ் சில வெள்ளைத் தாள்கள் எப்போதும் இருக்கும். இப்போது வெள்ளைத் தாள்கள் இருந்தாலும் அந்தப் பேனா மட்டும் இல்லை. குரு எதையும் மறந்து வேறெங்கோ வைத்து விடுபவர் அல்ல. கொல்ல வந்த எதிரியின் சக்திகளைப் பார்க்கையில் அவனைப் பேனாத் திருடனாக நினைப்பதும் அபத்தமாக இருந்தது.

மாஸ்டர் அமைதியாக தரையில் அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். எதிரி அதன் தடயத்தையும் வேண்டுமென்றே அழித்திருக்காத பட்சத்தில் அதன் இருப்பிடத்தை அறிவது அவருக்கு மிக எளிதான ஒன்று. அந்தப் பேனாவைக் கண்டுபிடித்து ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றாலும் ஏன் என்ற கேள்வியை அறியாமல் அங்கிருந்து போக அவர் விரும்பவில்லை. அவர் கவனத்தைக் குவித்த போது மனத்திரையில் குடிலுக்கு வெளியே ஒரு மரத்தடியில் வெள்ளைக் காகிதம் சுற்றப்பட்டு விழுந்து கிடந்தது தெரிந்தது.

ஆச்சரியத்துடன் மாஸ்டர் வெளியே வந்தார். அந்த மரம் குடிலுக்கு சில அடிகள் தான் தள்ளி இருந்தது. அந்த மரத்தடியில் வெள்ளைக் காகிதம் சுற்றப்பட்டு விழுந்து கிடந்த பேனாவை எடுத்தார். வெள்ளைக் காகிதத்தில் குரு ஏதோ எழுதியிருப்பது தெரிந்தது. பிரித்துப் பார்த்தார்.

‘பிரிய சிஷ்யனே, எதிரி உள்ளே ஊடுருவி விட்டான்...என்று மட்டும் குரு எழுதியிருந்தார். காகிதத்தில் மேலே முதல் வரியாக எழுதப்பட்டிருந்தது அந்த வாக்கியம். ஒரு நீண்ட கடிதத்தை எழுத நினைத்திருந்ததால் தான் அவர் அவ்வளவு மேலே இருந்து எழுத ஆரம்பித்திருக்க வேண்டும். பின் ஏன் அத்துடன் நிறுத்தி விட்டார் என்று மாஸ்டர் யோசித்துப் பார்த்தார். மரத்தடியில் நின்று கொண்டு குடிலைப் பார்க்கையில் குடிலின் ஜன்னல் வழியே குரு இதை வீசி இருக்கலாம் என்று தோன்றியது. விரிவாக எழுத ஆரம்பித்த அவர் எதிரி வரவை உணர்ந்து பேனாவுடன் காகிதத்தைச் சுற்றி ஜன்னல் வழியே வீசியிருக்கலாம்.....

குருவுக்கு பிரிய சிஷ்யன் என்றால் மாஸ்டர் தான். அவசரத் தகவல்களை குரு எப்போதும் மானசீகமாகவே அவருக்கு  அனுப்புவது வழக்கம். பேனாவும் காகிதமும் மற்றவர்களுக்குக் கடிதம் எழுத மட்டுமே குரு பயன்படுத்துவார். அப்படி இருக்கையில் ஏன் குரு அவருக்கு இந்தக் கடிதம் எழுத ஆரம்பித்தார்?

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Plot is thickening and incidents are happening in front our eyes beautifully. Finding it difficult to wait for one week.

    ReplyDelete
  2. சுஜாதாMay 4, 2017 at 6:37 PM

    த்ரில்லர் சினிமா பார்க்கிற மாதிரி இருக்கு சார். ஆனா முக்கியமான இடத்துல தொடரும் போட்டது தான் பிடிக்கவில்லை.

    ReplyDelete
  3. குரு-மாஸ்டர் படைப்பு கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.

    ReplyDelete
  4. க்ரிஷ் போன்ல தென்னமெரிக்கால இருந்து பேசியிருக்க வாய்ப்பில்ல.
    -இங்கு தென்அமெரிக்கா வார்த்தை (சொல்) சிறப்பாக இருக்கும்
    கணேசன் சார்,
    நன்றி

    ReplyDelete
  5. மாஸ்டர் அங்குள்ள தடயங்களை ஆராய்ந்து ..என்ன நடந்திருக்கும்..என்று அனுமானிப்பது....அருமை...

    ReplyDelete
  6. அடுத்தது என்ன என்று காத்திருக்க முடியாத அளவுக்கு பிரஷரை ஏற்றுகிறீர்கள்.. தலையே வெடித்து விடும் போலிருக்கிறது

    ReplyDelete