மகாசக்தி மனிதர்கள்-56
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
சுவாமிகளை நாடி வந்து வணங்கிய அன்பர்கள் அதிசயிக்கத்தக்க பலன்களை அடைந்தார்கள்
என்பதைப் பார்த்தோம். அப்படிப் பலனடைந்தவர்களில் சிலர் அவருடைய பரம பக்தர்களாக
மாறி அவரை வழிபடவும் ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலரைப் பார்ப்போம்.
நாகப்பட்டினத்தைச்
சேர்ந்த சுப்பப்பிள்ளைக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் பிறக்கவில்லை.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி கேள்விப்பட்ட அவர் தன் மனைவியுடன் சேர்ந்து சுவாமிகளை
ஒவ்வொரு வியாழனும் வணங்கி வந்தார். சில மாதங்களில் மனைவி கருத்தரிக்கவே அவருக்கு
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சக்திகள் மீது பூரண நம்பிக்கை ஏற்பட்டது.
வியாபாரியான அவர் அதன் பின் எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சுவாமிகளை மனதார நினைத்து
வணங்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.
ஒரு சமயம் வியாபார
நிமித்தம் நிறைய பணம், பொருளுடன் முத்துப்பேட்டை என்கிற ஊருக்குச் சென்றிருந்தார்.
ஊரை அடைவதற்கு முன் நன்றாக இருட்டி விட்டது. வழியில் காட்டுப்பகுதியில் வழிப்பறிக்
கொள்ளையர் அவரை இடைமறித்து அடித்து உதைத்து அவருடைய பணத்தையும் பொருளையும் களவாடப்
பார்த்தார்கள். அவர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளை மனதில் நினைத்து தன்னைக்
காப்பாற்ற வேண்டிக் கொண்டார்.
அந்த நேரத்தில் ஸ்ரீ
தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருவாரூர் மடாலயத்தில் நித்திரையில் இருந்தார். திடீரென்று
எழுந்து வெளியே வந்தவர் “அடே வீரா, சுப்பன் திருடன் கையில் அகப்பட்டுக் கொண்டான்.
சீக்கிரம் போடா” என்றார். சொல்லி விட்டுத்
திரும்பப் போய் படுத்துக் கொண்டார். அங்கே இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதே நேரம் அந்தக்
காட்டுப்பகுதியில் பக்கத்தில் இருந்த பனை மரங்களில் இருந்து கள் இறக்குபவர்கள்
போல் தோற்றம் அளித்த பன்னிரண்டு பேர் சுப்பப்பிள்ளையைச் சூழ்ந்து கொண்டிருந்த
கொள்ளையர் மீது குதித்து அவர்களை நன்றாக அடித்து விரட்டினார்கள். கொள்ளையர்கள் உயிர்
பிழைத்தால் போதும் என்று ஓடிப் போனார்கள். சுப்பப்பிள்ளை தன்னைக் காப்பாற்றிய
ஆட்களுக்கு மனமார நன்றி தெரிவித்தார். தங்களை தட்சிணாமூர்த்தியின் ஏவலாளர்கள்
என்று சொல்லிக் கொண்ட அவர்கள் முத்துப்பேட்டை வரை வந்து அவரைப் பத்திரமாய்
சேர்த்து விட்டுப் போனார்கள். முத்துப்பேட்டையில்
வியாபாரத்தை முடித்துக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்த பிறகு சுப்பப்பிள்ளை தன்
அனுபவத்தைச் சொல்ல, அந்த சம்பவ நேரத்தில் நித்திரையில் இருந்து எழுந்து வெளியே
வந்து சொன்னதை அங்குள்ளவர்களும் சொல்ல சுப்பப்பிள்ளை பிரமித்துப் போனார். ”என் உடல், பொருள், ஆவி மூன்றும் இனி
சுவாமிகளுக்கே அர்ப்பணம்” என்று மனமுருகி தீர்மானித்த அவர்
வடக்கு ரத வீதியில் சுவாமிகள் பெயரில் ஒரு மடத்தைக் கட்டி அந்த மடத்தில்
சுவாமிகளின் திருவுருவச் சிலையையும் அமைத்து அவரை வழிபட ஆரம்பித்தார்.
திருவாரூரில்
வசித்து வந்த அருணாச்சலம் பிள்ளை என்பவரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் பரமபக்தர். அவர் பெரிய பெரிய
பந்தல்களை அமைத்து சிறப்பாக அலங்காரம் செய்வதில் கைதேர்ந்தவர். அவர் வைகுண்ட
ஏகாதசியின் போது ஸ்ரீரங்கம் கோயிலில் பெரிய பந்தலை அமைத்து அலங்கரிக்கச்
சென்றிருந்தார். அங்கே மிக உயரமான இடத்தில் சாரத்தில் நின்று கொண்டு அலங்கரித்துக்
கொண்டிருந்த போது தவறிக் கீழே விழுந்து விட்டார். விழும் போது அவர் வாய் தானாக
“தட்சிணாமூர்த்தியே அபயம்” என்று பிரார்த்தித்தது.
அந்த சமயத்தில் ஸ்ரீ
தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருவாரூர் கமலாலயத்தின் மேல்கரையில் அமர்ந்திருந்தார்.
“தட்சிணாமூர்த்தியை நம்பினால் தட்சிணாமூர்த்தி என்ன செய்வான்?” என்று சொன்ன சுவாமிகள் வலது கையால்
கனமான ஒரு பொருளைத் தாங்கிக் கீழே வைப்பது போல் சைகை செய்தார். ”எங்கேயோ ஒரு அற்புதம் நடந்திருக்கிறது” என்பது மட்டும் அருகில்
இருந்தவர்களுக்குப் புரிந்தது.
பனையளவு
உயரத்தில் இருந்து தவறி விழுந்த அருணாச்சலம் பிள்ளை தன்னை யாரோ தாங்கிப்
பிடித்துக் கொண்டு கீழே வைப்பது போல் உணர்ந்தார். ஆபத்து சமயத்தில் யாரை அழைத்தாரோ
அவரின் அருட்செயலே இது என்று உணர்ந்து பிரமித்த அருணாச்சலம் பிள்ளை பின் தன்னை
சுவாமிகளின் சேவைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.
ஏனங்குடி
புத்தகரம் என்ற சிற்றூரில் சுவாமிநாத செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார்.
தூய்மையான ஆன்மிகவாதியான அவருக்கு விசாலாட்சி என்ற ஒரு மகள் இருந்தாள். அவள்
திருமண வயதை எட்டும் முன்பே அவளுக்கு மேக ரோகம் என்னும் தோல் வியாதி ஏற்பட்டு கடுமையாக
வாட்டியது. தோல் முழுவதும் கருத்து பாறை போல் தடித்துப் போனது. நாளுக்கு நாள் சொரியும் உணர்வு அதிகரித்து அவள்
கைகளாலும் செங்கல்லாலும் தோலை அங்கங்கே சொரிந்து கொண்டே இருந்தாள். சில சமயங்களில்
மரம், சுவர் ஆகியவற்றிலும் உடம்பைத் தேய்த்து உடம்பெல்லாம் காயங்கள் ஆகி இரத்தம்
அங்கங்கே வடிய ஆரம்பித்து, புண்களில் சீழ் பிடித்து துர்நாற்றமும் வீச
ஆரம்பித்தது. எல்லாவிதமான வைத்தியங்களையும் செய்து பார்த்தும் அந்த நோயைக்
குணப்படுத்த முடியவில்லை. இருக்கும் செல்வம் கரைந்தது தான் மிச்சம்.
மகள்
படும் துன்பத்தைக் காண சகிக்காமல் மனம் உடைந்து போன சுவாமிநாத செட்டியார் ஒரு
சிவனடியாரை அழைத்து தன் துக்கத்தை வெளிப்படுத்தி இதற்கு ஏதாவது நிவர்த்தி
இருக்கிறதா என்று கேட்டார்.
அந்தச்
சிவனடியார் இது முன்பிறவியின் பாவத்தின் விளைவு என்றும் பாவத்தின் விளைவை மருந்து
கொடுத்து குணமாக்க முடியாது என்றும் சொன்னார். பின் வேறென்ன வழி என்று சுவாமிநாத
செட்டியார் கேட்ட போது ”ஒரு லட்சம் சிவனடியாருக்கு
அன்னதானம் தந்தால் அந்த கர்மவினை குறைந்து நோய் குணமடைய வாய்ப்பு உள்ளது” என்றார்.
”ஒரு லட்சம் பேருக்கு
அன்னதானம் செய்யும் வசதி என்னிடம் இல்லையே ஐயா” என்று வருத்தத்துடன் சுவாமிநாத செட்டியார் சொன்னார்.
அவருடைய
நிதி நிலைமையை உணர்ந்த சிவனடியார் யோசித்து விட்டு திருமூலரின் திருமந்திரத்தில்
இருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டி வேறொரு வழி சொன்னார். அந்த
செய்யுள்கள் இவை தான் -
தண்டறு சிந்தை தபோதனர் தாமகிழ்ந்
துண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.
துண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.
(பொருள்: சிவனிடத்தில் இருந்து நீங்காத சிந்தை
உடைய உண்மையான தவயோகிகள் மனமகிழ்ந்து உண்ட உணவு மூன்று உலகத்தில் உள்ளோரும் உண்டது
போலத்தான். அது போல அவர்கள் பெற்றுக் கொண்ட பொருள் மூவுலகத்தினரும் பெற்றுக்
கொண்டதற்கு இணையானது தான் என்று நந்தியே சொல்லியிருக்கிறார்)
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடில்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடில்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
(பொருள் : திருத்தமாகிய வேடத்தையுடைய தவயோகி
அருந்திய உணவு, உருத்திரன் பிரமன் திருமால் ஆகிய மூவரும்
அருந்திய பெருமையுடையது. சித்தம் தெளிந்த பிரம்மஞானி உண்டதன் மிச்சத்தை உண்டால்
முத்தி உண்டாகும் என்று திருமூலன் மொழிந்த உண்மையாகும்.)
நந்தி சொன்னதும், திருமூலன் சொன்னதும்
வைத்துப் பார்க்கையில் ஒரு உண்மையான பிரம்ம ஞானிக்கு உணவு படைத்தால் ஒரு லட்சம்
பேருக்கு மட்டுமல்லாமல் மூவுலகத்தில் உள்ளோருக்கு உணவு படைத்த புண்ணியம்,
மும்மூர்த்திகளுக்கு உணவளித்த பெருமை உருவாகிறது என்பதால் ஒரு உண்மையான பிரம்ம
ஞானியைக் கண்டு உணவளிக்க அந்த சிவனடியார் அறிவுறுத்தினார்.
“அப்படிப்பட்ட ஒரு உண்மையான பிரம்மஞானியை
நான் எங்கே காண்பேன்?” என்று திகைப்புடன் சுவாமிநாத செட்டியார் கேட்டார். உதடுகளுக்கு
எட்டிய சிவன் உள்ளத்திற்கும் உண்மையாகவே எட்டுவது இன்றைக்கு மட்டுமல்லாமல்
அன்றைக்கும் அரிதாகவே இருந்திருப்பதால் அக்காலத்திலேயே உண்மையான தவயோகிகளைக்
காண்பது கஷ்டமாகத் தான் இருந்திருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.
சிவனடியார் அப்போது திருவாரூரில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருமந்திரத்தில்
சொல்லப்பட்ட பிரம்ம ஞானிக்கான எல்லாத் தகுதியும் இருப்பவர் என்று சொன்னார். அன்று
முதல் விரதம் இருந்து அடுத்த வியாழக்கிழமை அன்று திருவாரூரில் குளத்தில் குளித்து
விட்டு இறைவனைத் தரிசித்து கனிவகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீ
தட்சிணாமூர்த்தி சுவாமிகள் முன் சுவாமிநாத செட்டியார் நின்றார்.
சித்திரத்தில் வரைந்த
தீபம் போல் அசைவில்லாமல் தியான சமாதியில் அமர்ந்திருந்த சுவாமிகளைப் பார்த்தவுடன்
சுவாமிநாத செட்டியாருக்கே அவர் பிரம்ம ஞானி என்பது ஆத்மார்த்தமாகப் புரிந்தது.
கண்களில் ஆனந்தக்கண்ணீர் மல்க ”வாயினால் வாழ்த்தி நெஞ்சால்...” என்று ஆரம்பிக்கும் ஒரு நீண்ட
பதிகத்தைப் பாடினார்.
கண்விழித்துப்
பார்த்த சுவாமிகளிடம் தன் மகள் பற்றிச் சொல்லி அழுத சுவாமிநாத செட்டியார் அவருக்கு
உணவு படைத்து மிஞ்சியதைத் தாங்களும், உண்டு அங்கிருந்த சிவனடியார்களுக்கும் தந்து
நேர்த்திக்கடன் செய்தார். அன்று முழுவதும் அவரும், மனைவியும், மகளும் சுவாமிகள்
அருகிலேயே தங்கினார்கள். இரவு முடிந்து காலை எழுந்த போது அவர் மகளின் உடம்பில்
இருந்த கரும் படைகள் எல்லாம் பொடிப் பொடியாய் உதிர்ந்திருந்தன. அவள் குளித்து
முடித்து வந்த போது அந்த நோய் இருந்த அறிகுறியே அவள் உடலில் இருக்கவில்லை!
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 11.9.2015
(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
Wow!!! Arputhamaana pagirvu. Blessed to read such a divinely post!!! Thanks Ganeshan sir for your continuous effort to post like this !!!
ReplyDeleteReally fantastic .. Thanks for your great work.
ReplyDeleteI am in an eager to visit Thatchinamurthy Swamigal's place if I get a chance to go to Thiruvarur.
ReplyDeleteGanesan Sir, your articles are wonderful, fantastic and gives a real life experience while reading the article.
நான் அந்த சன்னிதிக்கு சென்று சேவித்திருக்கிறென். அந்த பரவஸத்தை உணர முடிந்தது. அஙகெ தேங்காய் கூட சன்னிதிக்கு வெளியில் தான் உடைக்க்கிறார்கள் மிகவும் அமைதியாக்..பெரிய ஆச்சரியம்...
ReplyDeleteஷ்ரிராம் சென்னை