மகாசக்தி மனிதர்கள் - 54
ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி
சுவாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அருணாச்சலம் கால் போன போக்கில் பல
ஊர்களுக்குச் சென்று வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார். அவர் சக்திகளை அறிந்திராத
கோயில் கணக்கர் பத்து நாட்கள் ஒரு சிகிச்சைக்குத் தான் போக வேண்டி இருப்பதாகச்
சொல்லி விட்டு, வரும் வரை அங்கிருந்து கோயில் கணக்கை எழுதி வைக்க முடியுமா என்று
அருணாச்சலத்திடம் கேட்டார்.
அருணாச்சலம் “சிவ
கைங்கர்யம் தானே. செய்கிறேன்” என்று ஒத்துக் கொண்டார்.
கணக்கு ஓலையையும், எழுத்தாணியையும் தந்து கணக்கெழுதும் பொறுப்பையும்
அருணாச்சலத்திடம் ஒப்படைத்த கோயில்
கணக்கர் நிம்மதியாக அங்கிருந்து கிளம்பினார்.
கோயிலில் கணக்கெழுத
அமர்ந்த அருணாச்சலம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வந்து தங்கள் செலவுக் கணக்கைச்
சொல்லும் முன்பே கணக்கை எழுதி வைத்து விட்டு யோக நிஷ்டையில் அமர்ந்து விடுவார். மணியக்காரர்
முதலானோர் தங்கள் கணக்குகளைச் சொல்ல வரும் போது “எல்லாம் எழுதியாகி விட்டது.
நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வார். அவர்கள்
கணக்கு ஓலைகளைப் பார்க்கும் போது எல்லாம் சரியாக இருக்கும். அவர்கள் வியந்து
போனார்கள். சொன்ன பின்னாலேயே கணக்கெழுதுவதில் பிழைகள் ஏற்படும் நிலை இருக்கையில்
சொல்லும் முன்னே சரியான கணக்கை எழுதி வைக்கும் இந்தப் புதியவர் அவர்களைத் திகைப்பில்
ஆழ்த்தினார்.
ஒரே
ஒரு நாள் மட்டும் அவர் எழுதிய கணக்குக்கும், அவர்கள் வைத்திருந்த கணக்குக்கும்
இடையே நான்கு படி பாலும் ஒரு படி தேனும் வித்தியாசம் இருந்தது. அவர்கள் கோயிலில்
அபிஷேகச் செலவாக எழுதி வைத்திருந்ததில் அதைச் சேர்த்திருக்க அவரோ அதை எழுதாமல்
விட்டிருந்தார். அவரிடம் அவர்கள் அதைச் சுட்டிக் காட்டிய போது அவர் சொன்னார். ”கோயில் குருக்கள் அதை அபிஷேகம்
செய்யாமல் வீட்டுக்குக் கொண்டு போகத் தனியாக எடுத்து வைத்திருக்கிறார்.” அதோடு நிறுத்தாமல் அதை எங்கே எடுத்து
வைத்திருக்கிறார் என்றும் அவர் அவர்களிடம் தெரிவித்தார். உடனடியாக மணியக்காரர்
சென்று பார்த்த போது அருணாச்சலம் சொன்ன அதே இடத்தில் நாலு படி பாலும் ஒரு படி
தேனும் தனியாக வைக்கப்பட்டிருந்தன.
திருட்டுத்தனமும்
ஏமாற்று வேலையும் இக்காலத்திற்கே உரியதல்ல. நேர்மை உணர்வு குறைந்து போய் ஆசைகள்
அதிகமாகும் போது எக்காலத்திலும் இது போன்ற திருட்டுத்தனங்கள் நடக்கவே செய்கின்றன
என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறிய உதாரணம். அருணாச்சலத்தின் கணக்கு அந்தக்
கோயிலில் அவ்வப்போது நடந்து வந்த திருட்டுத்தனங்களை உடனடியாக நிறுத்தியது. தயிர்,
பால், அரிசி, எண்ணெய், உண்டியல் கணக்கு, முடிப்பணக்கணக்கு ஆகியவற்றில் திருட்டுத்தனம்
நடக்க முடியாமல் போனது. பழைய கணக்கர் பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்த போது கோயிலில்
எல்லாம் ஒழுங்காய் இருந்தன. பலரும் அவரைப் பயத்தோடு பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
அருணாச்சலம்
அங்கிருந்தும் சென்று விட்டார். அவர் யாத்திரை தொடர்ந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கெல்லாம் அவர்
மூலம் வித விதமாய் அற்புதங்கள் நிகழ்ந்தன. சென்னைக்கு
அருகில் இருக்கும் திருவொற்றியூர் சென்றிருந்த போது அவர் அங்கே கடற்கரையிலும்
பட்டினத்தார் சமாதியிலுமாக தங்க ஆரம்பித்தார்.
அந்த சமயத்தில் திருவொற்றியூரில் ஒரு
பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்து அது முற்றி இருந்தது. சித்த சுவாதீனம் இல்லாத அந்தப்
பெண்ணை வீட்டில் தங்க வைக்க அவளுடைய பெற்றோரால் முடியவில்லை. எத்தனை
கட்டுப்படுத்தி வைத்தாலும் அதையெல்லாம் மீறி வீட்டிலிருந்து தப்பித்து தெருவிற்கு
ஓடி வந்து விடும் அந்தப் பெண்ணுக்கு உடைகள் அவிழ்ந்தாலும், கலைந்தாலும் கூட அந்தப்
பிரக்ஞை இருக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தெரிவில் போவோர், வருவோரைத் திட்டிக்
கொண்டும் அடித்துக் கொண்டும் பிரச்னைகளை வளர்த்து வந்தாள். வயது வந்த பெண்
இப்படிச் செய்வது பெற்றோருக்குத் தாங்கவொண்ணா கவலையை அளித்தது.
இது போன்ற சித்த சுவாதீனமில்லாத செயல்களைப்
பேய், பிசாசு அல்லது துர்த்தேவதைகள் பிடித்திருப்பதால் நிகழும் செயலகள் என்று
எடுத்துக் கொண்ட அவர்கள் பேயோட்ட மாந்திரீகர்கள் உதவியை நாடினார்கள். அதில்
குணமாகாமல் போகவே வித விதமான மருந்துகள் தந்து பார்த்தார்கள், பூஜைகள் செய்து
பார்த்தார்கள். என்ன செய்த போதும் பைத்தியம் குணமாகவில்லை.
மனம் ரணமாகிப் போன அந்தத் தந்தை கடைசியாக திருவொற்றியூரில்
இருக்கும் சிவன் கோயில் சன்னிதிக்கு வந்து இறைவனை வேண்டி நின்றார். ”இறைவனே இன்னும் மூன்று நாட்களுக்குள் என் மகளைப்
பீடித்திருக்கும் துர்த்தேவதைகள் நீங்கி அவள் பூரண குணமடைய நீங்கள் அருள் புரிய
வேண்டும். இல்லா விட்டால் நான் என் கையாலேயே என் மகளுக்கு விஷத்தை உண்ணக் கொடுத்து
விடுவேன். அதன் பாவம் தங்களையே சேரும். எனக்கு இனியும் இந்தக் கொடுமையைச்
சகித்துக் கொள்ளும் சக்தி இல்லை”
இப்படிக் கூறி
மனமுருக பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்பிய அந்தத் தந்தையின் கனவில்
திருவொற்றியூர் சிவபெருமான் தோன்றி சொன்னார். “அன்பனே. ஞான சித்தனும், ஜீவன்
முக்தனுமாகிய ஒருவன் அவதூதனாக நம் ஊரில் கடற்கரையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் பட்டினத்து அடிகள் சமாதியில் நாளை காலையில் நிஷ்டையில் இருக்கையில் அவன்
கண்பார்வை படும் இடத்தில் உன் மகளை நிற்க
வை. அவன் கடைக்கண் பார்வை பட்ட மாத்திரத்தில் உன் மகளைப் பிடித்திருக்கும்
பேய்களும், நோய்களும் அவளை விட்டு நீங்கி விடும்”
அக்காலத்தில் இது போல் கடவுள் கனவில் வந்து
சொல்லும் சம்பவங்கள் நிறையவே சொல்லப்பட்டன. இக்காலத்தில் அவை அதீத கற்பனை போல்
நமக்குத் தோன்றலாம். ஆனால் அக்காலத்தில் கடவுளே நினைவாக நாள் முழுக்க இருந்தவர்கள்
நிறைய பேர்
இருந்தனர். தங்கள் பிரச்னைகளை கடவுளிடம் சொல்லி விட்டு அதற்கான தீர்வு
கண்டிப்பாகத் தங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிற நம்பிக்கையான மனோபாவம்
அவர்களுக்கு இருந்தது. பிரச்னைகளைப் பிரபஞ்ச சக்தியிடம் தெரிவித்து விட்டு தீர்வுக்காக
நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களுக்கு பிரபஞ்ச சக்தி கனவிலே வழி காட்டி இருக்கலாம்
என்று முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.
மந்திர தந்திரங்களால் முடியாதது மகானின்
கடைக்கண் பார்வையாலாவது முடியுமா என்று பார்க்கலாம் என்று அந்தத் தந்தை மறுநாள்
மகளைக் கட்டி வைத்து ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு பட்டினத்தடிகள் சமாதிக்குச்
சென்றார். கனவில் தெரிவித்தது போலவே அங்கே அருணாச்சலம் யோக நிஷ்டையில் இருந்தார். மகளை அந்த மகானின் கண்பார்வை படும் இடத்தில்
கஷ்டப்பட்டு நிற்க வைத்து விட்டு அவர் கண் திறக்க அந்தத் தந்தை காத்திருந்தார்.
யோக நிஷ்டையில் இருந்து கண்விழித்த
அருணாச்சலத்தின் பார்வை அந்தப் பைத்தியம் பிடித்த பெண் மீது விழுந்தது. யோக
நிஷ்டையில் இருக்கும் போது யோகியின் சக்திகள் சேமிக்கப்படுகின்றன. அப்படி
மணிக்கணக்கில் சேமிக்கப்படும் சக்தி, யோகி கண் திறந்தவுடன் முழு வீச்சுடன் பெரும்
சக்தியுடன் வெளிப்படுகின்றது. அப்படி வெளிப்பட்டு விழுந்த பார்வையில் அந்தப்
பெண்ணின் பைத்தியம் குணமாகி அவள் சுயநினைவு பெற்றாள்.
முழுமையாக குணமடைந்த அவள் தன் எதிரே
அமர்ந்திருந்த மகானைச் சுற்றி வந்து பயபக்தியுடன் வணங்கினாள்.
“தெய்வமே. உங்கள் ஒரே பார்வையில் என்
உடலையும், மனதையும் பீடித்திருந்த நோய்கள் விலகி விட்டன. இதே போல என்
பாவப்பிணியையும் போக்க அருள் புரிய வேண்டும்.” என்று அவரை
வேண்டினாள்.
அருணாச்சலம்
சொன்னார். “அறியப்படுவனவாகிய ஜக ஜீவ பர கற்பனைகளை விடுத்து, அறியும் அறிவாகவே
இருந்தால் உன் பாவ நோய் முற்றிலுமாக நீங்கும்”
’உலகம்,
ஜீவன், பிரபஞ்சம் ஆகியவற்றை நாம் கற்பனையாகவே அறிந்திருக்கிறோம். அந்தக் கற்பனைகளை
விலக்கி விட்டு உண்மையாகவே அறிந்து, அந்த அறியும் அறிவாகவே நிலைத்து இருந்தால்
எல்லா பாவங்களும் நீங்கும்’ என்ற மெய்ப்பொருளில் சொல்லப்பட்ட அந்த உபதேசத்தைப்
பெற்ற அந்தப் பெண் வீட்டுக்குச் சென்று “என் குருநாதரின் உபதேசம் குறித்த
சிந்தனைத் தவத்தில் நான் ஒரு வாரம் கழிக்க வேண்டும். அது வரை எனக்கு ஆகாரமும்
வேண்டாம். தயவு செய்து யாரும் என்னைத் தொந்தரவு செய்யவும் வேண்டாம்” என்று சொல்லி ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் இட்டுக் கொண்டாள். எட்டாம்
நாள் மெய்ஞானம் பெற்று அங்கேயே உயிரையும் விட்டாள்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 28-08-2015
So Divine. Blessed to read about this great Jnani!!1
ReplyDeleteThank you sir for this precious post!!!
ReplyDeleteSuper
ReplyDelete