என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 12, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 72பேரன் இந்த அளவு மனம் உடைந்து போய் என்றுமே பார்த்திராத மரகதம் கவலையுடன் பேரனின் முதுகை வருடி விட்டு பாசத்தோடு கேட்டாள். “என்னடா நடந்தது?

முகத்தில் இருந்து கைகளை எடுக்காமலேயே வருண் நடந்ததைச் சொன்னான். திகைத்துப் போன மரகதம் மெல்லக் கேட்டாள். “அந்தப் புகைப்படம் எப்படிக் கிடைத்தது என்று இன்னொரு தடவை அவளிடம் கேட்டிருக்கலாமேடா.

முதலில் இவன் தான் உன் அப்பனா என்று சொல், பிறகு எப்படி கிடைத்தது என்று சொல்கிறேன் என்கிற மாதிரி பேசுகிறவளிடம் இன்னொரு தடவை எப்படிக் கேட்பது...

அக்‌ஷயின் மகன் அல்ல என்று சுட்டிக் காட்டுகிற எதையுமே தாங்க முடியாத பேரனை மரகதம் வருத்தத்துடன் பார்த்தாள்.

இன்றைக்குப் பதில் சொல்லாமல் வந்து விட்டாய் சரி. நாளைக்கு அவளிடம் பேசப் போகும் போதாவது பதில் சொல்லித்தானேடா ஆக வேண்டும்

“இனி மேல் பேசப் போனால் தானே?சொல்லும் போது குரலில் சகிக்க முடியாத வலி தெரிந்தாலும் சொன்ன விதத்தில் உறுதி இருந்தது.

ஆமாம் அது என் அப்பா தான். இறந்து போய் விட்டார்என்று உண்மையைச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்று தோன்றினாலும் அவளுக்கு அதை வாய்விட்டுக் கேட்கும் தைரியம் வரவில்லை.

வருண் மெல்ல பாட்டியிடம் சொன்னான். “இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிய வேண்டாம் பாட்டி.... நமக்குள்ளேயே இருக்கட்டும்......”. 

மரகதம் தலையசைத்தாள்.

சேகருக்கு மகன் முகத்தை மறைத்துக் கொண்டு தலையைக் கவிழ்த்து அமர்ந்திருந்ததால் அவன் பேசியது என்ன என்று தெரியவில்லை. மரகதம் பேசியதையும் தெளிவாக இது தான் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மரகதம் முகத்தில் வருத்தம் தெரிந்த்தைக் கவனித்தான்.

இத்தனை வருடங்களில் சஹானாவும், அவன் அம்மாவும் நிறையவே மாறி விட்டிருந்தார்கள். சஹானா ஆரம்பத்திலேயே கர்வம் பிடித்தவள். இப்போதும் அது குறையவில்லை என்பதை இத்தனை நாட்களில் கணித்திருந்தான். அவன் தாய் அந்தக் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் முடங்கி இருப்பாள். ஆனால் இப்போது தன்னம்பிக்கையும் தைரியமும் அவளிடம் கூடுதலாகத் தெரிந்தது. இருவருமே இப்போது மிகவும் சந்தோஷமாகத் தெரிந்தார்கள். அது தான் அவனுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. சஹானாவின் இப்போதைய கணவன் அதிகமாய் சுதந்திரம் கொடுப்பான் போல் இருக்கிறது. பெண்டாட்டி தாசனாக இருக்கலாம்....  

எல்லாவற்றையும் விட அவனுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது இது தான் உன் அப்பாவா வருண்என்ற ஒரு கேள்வியைக் கேட்டதற்குப் பதில் கூடச் சொல்லாமல் மகன் ஓடிய விதம். அந்தக் கேள்வியே கேட்கக் கூடாத கேள்வி போல் வருண் கூசியது போலத் தான் கீழ் வீட்டில் பேசிக் கொண்டார்கள்.  அப்படி வெறுக்கும் அளவு அத்தனை சின்ன வயதில் அவனிடம் நடந்து கொண்டதாக அவனுக்கு நினைவில்லை. சஹானா தான் அப்படி வெறுப்பு விதைகளை வருண் மனதில் விதைத்திருக்க வேண்டும்…..

சேகர் மனதில் ஆத்திரம் பொங்கி வந்தது. எப்பாடுபட்டாவது வருணைத் தன் பக்கம் இழுத்து விட வேண்டும் அல்லது அந்தக் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியாதபடி நிரந்தரமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்று அவன் உறுதியாகத் தீர்மானித்தான்.


வாங் சாவொவின் ஜீப் அந்தக் கிராமத்தில் நுழைந்தது. ஜீப்பில் வாங் சாவொவின் அருகில் அமர்ந்திருந்த உள்ளூர் போலீஸ்காரன் அந்தக் கிழவரின் வீட்டை அடையாளம் காட்டினான். வாங் சாவொ அந்தப் போலீஸ்காரனையும், தன் ஆட்களையும் ஜீப்பிலேயே இருக்கச் சொல்லி விட்டு இறங்கினான். வீட்டின் வெளியே ஒரு மர பெஞ்சில் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அந்தக் கிழவர் விழித்துக் கொண்டு ஜீப்பில் இருந்து மிடுக்குடன் இறங்கி வரும் ஆளைக் கூர்ந்து பார்த்தார். இன்றென்ன புதுப்புது ஆளாய் இந்தக் கிராமத்துக்கு வருகிறார்கள்?என்று எண்ணிக் கொண்டார்.

ஜீப்பில் உள்ளூர் போலீஸ்காரனும் தெரியவே வந்திருப்பவன் போலீஸ் அதிகாரியாகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தார். இந்த ஆள் அந்தத் தீவிரவாதிகளைத் தேடி வருபவனோ என்னவோ? அது பற்றிக் கேள்வி கேட்பானோ...?

வாங் சாவொ அருகில் வந்தவுடன் கிழவர் மரியாதையுடன் எழுந்து குனிந்து வணக்கம் தெரிவித்தார். வாங் சாவொ தன் வழக்கமான இறுக்கமான முகத்துடன் கிழவரை ஆராய்ந்தான். முதுமையுடன் வறுமையும் தன் அடையாளங்களை அந்தக் கிழவரிடம் எல்லா விதங்களிலும் பதித்திருந்தது.

இந்தக் கிராமத்திலேயே நீங்கள் தான் அதிக வயதானவரா?என்று கேட்கவே வந்திருக்கும் ஆள் சென்சஸ் அதிகாரி என்று நினைத்து கிழவர் சற்று நிம்மதி அடைந்தார். “ஆமாம் ஐயாஎன்று பணிவாகப் பதில் சொன்னார்.   

“எத்தனை வயதாகிறது?

“சென்ற மாதம் தான் 92 முடிந்தது...

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் எங்கிருக்கிறார்கள்?

“மூன்று பிள்ளைகள்.... மூத்தவன் இங்கு தான் இருக்கிறான்.... இரண்டாவது மகன் இறந்து விட்டான்... மூன்றாவது மகன் சீனாவில் இருக்கிறான்....

வீட்டின் உள்ளே இருந்து சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் வெளியே வந்தார். ஜீப்பில் இருந்த உள்ளூர் போலீஸ்காரனும், புதிதாக வந்து இருந்த பெரிய அதிகாரியின் தோற்றத்தில் இருந்த மனிதனும் அவர் மனதில் பயத்தைக் கிளப்பினார்கள். அவரைக் காண்பித்த கிழவர் “இவன் தான் என் மூத்த மகன்....என்று சொன்னார்.

கிழவரின் மூத்த மகன் வாங் சாவொவிடம் “என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் ஐயா?என்று மெல்லக் கேட்டார்.

வாங் சாவொ இறுக்கமான முகத்துடனேயே பதில் சொன்னான். “உங்கள் அப்பாவிடம் சிறிது பேச வேண்டும். நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்

அப்படிச் சொல்லியும் கிழவரின் மூத்த மகன் தயக்கத்துடன் அங்கேயே நிற்கவே வாங் சாவொ முறைத்தான். அவர் அதற்கு மேல் அங்கே நிற்க பயந்து போய் நகர்ந்தார். போன வேகத்திலேயே ஒரு மர நாற்காலியைக் கொண்டு வந்து மரியாதையுடன் வைத்து விட்டுப் போனார்.

வாங் சாவொ அந்த நாற்காலியில் அமர்ந்தபடியே கிழவரிடம் கேட்டான். “உங்கள் இரண்டாம் மகன் எப்போது எப்படி இறந்து போனார்?

கிழவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. வந்திருக்கும் ஆள் சென்சஸ் அதிகாரி அல்ல என்பது புரிந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்து போனான்... சொல்லும் போது அவர் குரல் கரகரத்தது. அவர் தளர்ச்சியுடன் அந்த மர பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.

“இந்தப் பகுதியில் விஷ நாகங்கள் இருக்கின்றனவா?வாங் சாவொ கூர்ந்து அவரைப் பார்த்தபடியே கேட்டான்.

“பொதுவாக இல்லை.... ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் ஏதாவது பக்கத்து மலையில் இருந்திருக்கலாம். மரணம் ஒரு மனிதனை எடுத்துப் போக நிச்சயித்து விட்டால் அதற்கு எத்தனையோ வழிகள்...!

“சிலர் பக்கத்து மலையில் இருக்கும் ஒரு ரகசிய குகைக் கோயிலைப் பற்றி உங்கள் மகன் அதிகம் பேசிக் கொண்டிருந்ததால் கொல்லப்பட்டார் என்று சொல்கிறார்களே?

கிழவர் கண்ணை மூடிக்கொண்டார். “உண்மை என்ன என்பது அந்த இறைவனுக்குத் தான் தெரியும்

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கிழவர் பதில் சொல்லவில்லை.

“அந்த ரகசியக்குகைக் கோயில் உண்மையாகவே அந்த மலையில் இருக்கிறதா? நீங்கள் பார்த்ததுண்டா?

கிழவர் அதற்கும் பதில் சொல்லவில்லை.

வாங் சாவொ அமைதியாகச் சொன்னான். “உங்களுக்கு காவல் நிலையத்தில் பதில் சொல்வது வசதியாக இருக்குமானால் நாம் அங்கேயே கூடப் போய்ப் பேசலாம்

ஆயாசத்துடன் கிழவர் பேச ஆரம்பித்தார். “பக்கத்து மலையில் நீலக்கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் பொதுவாக நாங்கள் யாரும் அதிகமாக அங்கே போவதில்லை. சில சமயங்களில் எங்கள் ஆடுகள் அங்கு போய் விடும். அந்த ஆடுகளைப் பிடித்து வரக்கூட ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தான் போவோம். கிடைத்தால் பிடித்துக் கொண்டு வந்து விடுவோம். கிடைக்கா விட்டால் அதற்கு மேல் போவதில்லை. ஆடுகள் தானாகத் திரும்பி வருவதுண்டு, வராமலும் இருப்பதுண்டு. வந்தால் எங்கள் அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொள்வோம். வராவிட்டால் விட்டு விடுவோம்.... ஆனால் எல்லாரும் இந்த பொது வகையில் சேர்வதில்லை. என் இரண்டாம் மகன் அந்த மாதிரி. அவன் நீலக்கரடிக்குக் கூட பயப்படுவதில்லை. நீலக்கரடிகள் தீப்பந்தங்களுக்குப் பயப்படும். அதனால் தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டு மலையில் நிறைய தூரம் போவான்.... அப்படிப் போன போது அவன் கண்ணில் ஏதோ ஒரு சமயம் ரகசியக் குகைக்கோயில் இருப்பதைப் பார்த்ததாகச் சொன்னான். அடுத்த முறை போன போது அப்படி ஒரு குகைக் கோயில் இருந்த சுவடே அங்கில்லை. ஆனாலும் அது பற்றி விடாமல் பேசி அடிக்கடி போய் வந்தான். ஒருநாள் இறந்து விட்டான்.... அவன் மரணத்திற்கும் அந்தக் குகைக்கோயிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது....

“உங்கள் அபிப்பிராயம் என்ன? அங்கே அப்படி ஒரு குகைக்கோயில் இருக்கிறதா?  

நான் பார்த்தது இல்லை

“சில நேரங்களில் சில வித்தியாசமான மனிதர்கள் இந்த மலைக்கு வருவதாக நான் கேள்விப்பட்டேன். நீங்கள் பார்த்ததுண்டா

என் சிறு வயதில் நீங்கள் சொன்னது போல ஆட்கள் இங்கே வருவதுண்டு. யாரையும் நேராக அவர்கள் பார்க்க மாட்டார்கள். பேச மாட்டார்கள். துறவிகள் போலவோ, சாதுக்கள் போலவோ இருப்பார்கள். என் தந்தை எங்களிடம் அது போன்ற ஆட்களிடமிருந்து எப்போதுமே விலகி இருக்கச் சொல்வார். அதே போலத் தான் ஊர்ப் பெரியவர்கள் தங்கள் வீட்டார்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஏன் எதற்கு என்று கேட்கிற பழக்கம் அந்தக் காலத்தில் எங்களிடம் இல்லை. அவர்களைப் பார்த்தாலே நாங்கள் தூரப் போய் விடுவோம்....

“அவர்கள் வருவது அந்த ரகசிய குகைக்கோயிலுக்கா?

“அது தெரியாது. ஆனால் காலப் போக்கில் அது மாதிரியான ஆட்கள் வருவது குறைந்து விட்டது. இப்போதெல்லாம் மலை ஏற்றத்தில் ஆர்வம் இருப்பவர்கள் பல நாடுகளில் இருந்து வருவார்கள். அவர்களில் பல தரப்பட்டவர்கள் வருவதைப் பார்க்கிறோம்....

“அவர்களில் யாராவது அந்தக் குகைக் கோயில் பற்றி பேசியதோ, விசாரித்ததோ உண்டா?

“இல்லை

வாங் சாவொ தன் பலத்த சந்தேகத்தைக் கேட்டான். “அவர்கள் மட்டும் நீலக்கரடிகளால் தாக்கப்படாமல் இருப்பது எப்படி?

“நீலக்கரடிகள் எல்லா காலங்களிலும் இந்த மலையில் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில காலங்களில் வேறு சீதோஷ்ணம் தேடிப் போய் விடும். அந்தக் காலங்களில் தான் மலையேற்ற ஆட்கள் வருவார்கள்

“அது போன்ற காலங்களில் உங்கள் கிராமத்தவர்களும் மேலே போய்ப் பார்க்கலாமே. அப்படி நீங்கள் போனதுண்டா?

கிழவர் தாழ்ந்த குரலில் சொன்னார். “முன்பெல்லாம் போய்க் கொண்டிருந்தோம். என் மகன் இறந்த பிறகு இந்தக் கிராமத்தில் இருந்து யாரும் போவதில்லை.....

அதை அந்த உள்ளூர் போலீஸ்காரன் முன்பே சொல்லி இருந்தான். அந்த மலையை  அந்தக் கிராமத்து மக்கள் சைத்தான் மலை என்றழைப்பதாகவும் சொல்லி இருந்தான்...  

“இப்போதைய காலம் நீலக்கரடிகள் மலையில் இருக்கும் காலமா?வாங் சாவொ கேட்டான்.

“ஆமாம்.....

“நீலக்கரடிகள் மலையின் மேற்பகுதியில் தான் இருக்கின்றன என்கிறார்களே. அது உண்மையா?

“ஆமாம். ஆனால் இரவு நேரங்களில் கீழ்ப்பகுதிக்கு வருவதுண்டு.....

வாங் சாவொ எழுந்தான். இன்று என்ன ஆனாலும் சரி இந்த மலையில் ஒரு ரகசிய குகைக்கோயில் இருக்கிறதா இல்லையா என்று அறிந்து கொள்ளாமல் அவன் திரும்பப் போவதில்லை. அதற்கான முழு ஏற்பாட்டுடன் தான் அவன் வந்திருக்கிறான்.

போவதற்கு முன் ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றியது. “இந்த இரண்டு நாட்களில் யாராவது புது ஆட்கள் இந்தப் பக்கம் வந்திருந்தார்களா?

கிழவர் சொன்னார். “ஆமாம். ஒரு ஆட்டிடையன் வந்திருந்தான்.....

(தொடரும்)

என்.கணேசன்  

4 comments:

 1. சரோஜினிNovember 12, 2015 at 6:25 PM

  நான் கடந்த நாற்பதாண்டு காலமாக கதைகள் வாசித்து வருபவள். உங்கள் நாவல்களில் பரமன் ரகசியமாகட்டும், புத்தம் சரணம் கச்சாமி ஆகட்டும் அடுத்தது இன்னது தான் ஆகும், இப்படித்தான் திருப்புமுனை இருக்கும் என்பதை என்னால் இது வரை ஊகிக்க முடிந்ததில்லை. (அமானுஷ்யன் நாவல் கூட ஓரளவு ஊகித்திருக்கிறேன்). ஒவ்வொரு வியாழனும் எதிர்பார்ப்புடன் படிக்க வைக்கிறது இந்த நாவல்.

  ReplyDelete
 2. அர்ஜுன்November 12, 2015 at 6:43 PM

  சூப்பர்ஜி.

  ReplyDelete
 3. சும்மா தெறிக்க விடறீங்க அண்ணா. . .:):)
  சூப்பர்...
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. Akshay Mara Lee meeting shortly ????

  ReplyDelete